வியாழன், 16 பிப்ரவரி, 2023

#வான்புகழ்_கொண்ட_வள்ளுவரை#வாய்_பிளக்க_வைத்த_வந்தையாறு..

#வான்புகழ்_கொண்ட_வள்ளுவரை
#வாய்_பிளக்க_வைத்த_வந்தையாறு..

"ண்ணே.. விஜி ண்ணே..
எப்படீண்ணே இருக்கீங்க?"

"யாரு பா.. அது? ஓ.. வந்தையாறா.. வா ராசா..வா வா.. என்னது திடீர்னு இந்த பக்கம் காத்தடிச்சிறுக்கு..
எப்படி இருக்க?"

"ஆங்..நல்லாருக்கணே.. சும்மா உங்கள பாத்துட்டு, ஒரு விசயம் பேசலாம்னு வந்தேன்.. 
ஆமாஆஆ.. என்ன வீட்ல யாரையும் காணோம்?"

"உங்க அண்ணியும், பிள்ளைங்களும் பள்ளிக்கூடம் போயிட்டாங்க.. நான்.. இந்தா கடைக்கு கிளம்பிட்டேன்..
என்ன விசயம்? வாட் கேப்பனிங் டெல்லு..டெல்லு.."

"ம்ம்ம்.. இங்கிலீஸ்ல பேசி என்ன விசயம்னு ஞாபகபடுத்திட்டீங்க..
இந்த வெள்ளைக்காரனுவங்க இருந்தானுங்கள.. நம்ம நாட்ட ஆட்சி செஞ்சிகிட்டு.."

"ஆமா.. இருந்தானுங்க.. இப்ப என்ன அவிங்களுக்கு?"

"இந்த வெள்ளைக்காரனுங்க நம்ம நாட்டுல இருந்து கொள்ளையடிச்சுட்டுப் போனதுல நம்ம தமிழ்ல இருந்து நிறைய வார்த்தைகளையும் சேர்த்து கொள்ளையடிச்சுட்டு போயிட்டானுவ ண்ணே"

"என்னாது பொருள கொள்ளையடிக்கிற மாதிரி நம்ம மொழியையும் கொள்ளையடிச்சிட்டாங்களா? எப்படி சொல்ற?"

"ஆமாங்க ணே..
நம்ம திருவள்ளுவர் ஒரு குறள்ள சொல்லியிருக்காரூஊஊஊ"

"என்ன சொல்லிருக்காரூஊ?"

"#தீஞ்சொல்_வார்த்தை_செப்பிடும்_பெண்ணை
#ஏஞ்சலென_அழைக்கு_முலகு..
இதுல '#ஏஞ்சல்'ங்கிற வார்த்தையை கவனிச்சீங்களா? தேவதைகளுக்கு நாம சொல்ற இன்னொரு வார்த்த..
ஏஞ்சலீனா ஜூலி, குயின் ஏஜ்சலீன் னு..
இப்ப புரியுதா.. இந்த வார்த்தை எங்கயிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்குன்னு?"

"அட.. ஆமாபோலயே.. 
சரி.. திருக்குறள் ல இந்த குறள் எத்தினியாவுது குறளா வருது தம்பீ?"

"ஆயிரத்து முன்னூத்தி முப்பத்தி ஒன்னாவது குறளா வருதுங்க ணே"

"ஓகோ..(தலைய ஆட்டியபடி).. (திடீர்னு அதிர்ச்சியாக)எதே..
ஆ..யி..ர..த்..தி முன்னூத்தி முப்பத்தி ஒ..ன்..னா..வதா.. 
ஏலேய்.. மொத்தமே 1330 தானடே குறளே...இதுல எங்கிட்டு இருந்து முளைச்சது 31 ஆவது குறளு?"

"ணேய்.. திருவள்ளுவரு எக்கச்சக்கமா எழுத ஆசப்பட்டார்ணே.. ஆனா அவரோட வேலை பிசில நிறைய எழுத முடியலையாம்"

"எழுத முடியலையாமா? இத யார்லேய் வந்து சொன்னது உன்கிட்ட?"

"அவரே தான்"

"(அதிர்ச்சியாக) என்னது ..
நேர்ல அவரே வந்து சொன்னதா? 
என்னடே.. ஒலர்ற.."

"நேர்லனா நேர்ல இல்லைங்கணே
எங்கனவுல வந்து நேர்ல சொன்னாருங்க ணே"

"(அச்சச்சோ.. என்னாச்சுன்னு தெர்லயே இவனுக்கு.. முன்ன முத்த கவிதையா எழுதி சாவடிச்சான்.. இப்ப இல்லாத திருக்குறள இருக்குன்னு வந்து சொல்றான்.. காலங்காத்தால இவங்கிட்ட மாட்டிகிட்டோமே"-மைண்ட் வாய்ச்)

" ணே.. விஜிணே.. என்னாச்சு முழிச்சிகிட்டே தூங்குறீகளா?"

"அ..அது.. வந்து.. ஒன்னுமில்ல வந்தை.. வேலைக்கு நேரமாச்சா.. அதான் யோசன செய்யிறேன்"

"அதான்..ணே.. நா இப்ப என்ன சொல்ல வரேன்னா...."

"தம்பீ.. அண்ணனுக்கு வேலைக்கு நேரமாச்சு.. நான் போயிட்டு வந்துடுறேன்.. வந்து நிறைய கதை கதையா ச்சேய்.. குறள் குறளா பேசுவோம் பா.. வர்ட்டா?"

"ண்ணேய்.. இந்த ஒரு விசயத்த மட்டும்"

"என்ன?"

"அடுத்த குறள்ல என்ன சொல்றார்னாஆஆஆ.."

"எது? அந்த 1332 ஆவது குறள்ளயா?

" ஐ..எப்டீண்ணே.. அவ்ளோ கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க? சரி.. அதுல என்ன சொல்றாருன்னா?"

"உன்ன தள்ளி விட்டுட்டு ஓடச்சொன்னாரு..
ஆத்தாடீஈஈஈஈ. ஆள விட்றா சாமீஈஈ🏃"  ஒரே ஓட்டம்..

"ண்ணே..ண்ணேஏஏஏ.. நில்லுங்க ணேஏஏ" 🏃‍♂️.

..🏃🏃‍♂️..
அது யாருபா.. அங்கிட்டு ரெண்டு பேரு வேகமா ஓடுறது..
அட.. நம்ம Appu Senthil  அண்ணனும், பால முருகன் தம்பியும்..

"அட.. என்னங்க பா.. ரெண்டு பேரும் இவ்வளவு வேகமா எங்க ஓடுறீங்க?"

"அந்த கொடுமைய ஏங்கேக்குற தம்பி விஜி?.. காலங்காத்தால நானும், தம்பி பாலாவும் பேசிகிட்டு இருந்தோமா அந்த நேரம் பாத்து வந்தையாறு வந்தானா.."

"புரிஞ்சிடுச்சு..
வெள்ளக்காரன், கொள்ளக்காரன் னு ஆரம்பிச்சிருப்பானே"

"அட..ஆமாஆஆஆ'' இது பாலா

"தமிழ்மொழி.. குறளுன்னு சொல்லிருப்பானே"

"ஆமாந்தம்பி ஆமா.." இது அப்பு அண்ணன்..

"குறள் போலவே ஒன்னு சொல்லிருப்பானே"

"அட.. ஆமாம்பா ஆமா.. இது எப்படி உனக்கு?"

"சொன்னானே.. ஏங்கிட்டையும் சொன்னானே.. இப்பக்கூட அவந்தான் வெரட்டிகிட்டு வரான்அதான் .. நானும் ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்" 

"அச்சச்சோ" இருவரும் கோரசாக..

🏃‍♂️🏃🏃‍♂️ இப்ப மூனுபேரும் சேர்ந்து ஓடுறாங்க...

🏊‍♂️
"ஆகா.. யாரோ ஆத்தங்கரை ஓரமா மயங்கி கிடக்குறாங்க தம்பிகளா. வாங்க போயி பாப்போம்"அப்பு அண்ணன் 🏃‍♂️  🏃🏃 ..

"அடடே.. நம்ம Babu Sabapathi  அண்ணன்.."

"அண்ணே..அண்ணே.. பாபண்ணே.. எழுந்திருங்க" மூவரும் கோரசாக..

மயக்கம் தெளிஞ்சு எழுந்த நம்ம பாபு அண்ணன்.. கொஞ்சம் சுத்தியும் முத்தியும் பாத்துட்டு.. நம்மல அடையாளம் கண்டுபிடிச்சு லேசா சிரிச்சாங்க..

"என்னங்க ணே ..
என்ன ஆச்சு?"

"தம்பிகளா.. அந்த வந்தையாறு போயிட்டானா?"

"புரிஞ்சிடுச்சு.. அண்ணன் நம்மல விட ரொம்ப பலமா பாதிக்கப்பட்டிருக்காங்க.." பாலா..

"அண்ணே.. நீங்க மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு அப்படி என்ன சொன்னான்?" விஜி

"குறளுப்போல ஏதோ சொன்னாம்பா" பாபு அண்ணன்

"அண்ணே.. 1330 குறளோட கூடுதலா 2 குறளுன்னு ஏதோ உளறுனதுக்கா மயக்கம்" அப்பு அண்ணன் கேட்க..

"எதே.. வெறும் ரெண்டு உளறலா? போங்க அப்பு போங்க.. திருவள்ளுவரு நிறைய எழுத ஆசப்பட்டாராம்.. அவரால முடியலையாம்.. இவர் அத தொடர்ந்து எழுதப் போறாராமாம்.." பாபு அண்ணன்

"என்ன.. மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு பத்து-இருவது எழுதுவானா?" பாலா கேட்க..

"தம்பி.. பாலா.. அப்படி அவஞ்சொல்லியிருந்தா நான் ஏன் இங்க மயங்கி விழப்போறேன்..?
நான் விழுந்தது இங்க இல்ல.. நடு ஆத்துல போய் குதிச்சுபுட்டேன்... தண்ணி கம்மியா இருந்ததுனால அலையே என்னை தள்ளிட்டு வந்திருச்சு போல."

"அப்படி எத்தன எழுதப்போறதா சொன்னாம்ங்க ணே?" விஜய் கேட்க..

"அவன் சொன்னது.. அவன் சொன்னது" அண்ணனின் முகம் மாறியது.

"சொல்லுங்க ணே..சொல்லுங்க.. அவன் சொன்னது?"

"பதிமூனாயிரத்தி முன்னூத்தி முப்பதாம்.. (13,330)"

"என்னாஆஆதுஉஉஉஉ அவ்ளோவாஆஆஆ" மூனு பேருமே வாயை பிளந்தார்கள்..

"இதை கேட்டா வள்ளுவரே வாய பிளந்துருவாரே ..ணே"

"1330 குறள்கள்ல முழுசா 30 கூட நமக்கு நினைவுல இருக்காது.. இந்த லட்சனத்துல இவன் எழுதுனா என்னாகுறதுன்னு நினைச்சுப் பாத்தேன்.. தண்ணில ஓடி போயி குதிச்சுபுட்டேன் தம்பீகளா"
😕😕

"அடடே.. இப்புடி ஆக்கிப்புட்டானே பக்கீ" னு அப்பு அண்ணன் சொல்லிகிட்டு இருக்கும் போது..

"ஆகாஆஆ.. அண்ணன்மாருங்க நாலு பேரும் இங்க தான் இருக்கீங்களாஆஆ" கேட்டபடி வந்தையாறு வர..

பாபு அண்ணன் பின்னாடி மத்த மூனு பேரும் போயி நின்னுபுட்டாங்க..

"அண்ணே..அ..அ..ண்ணே.. வந்துட்டான்ணே.."

"பொறு பொறு.. தம்பீ விஜய்.. நமக்கும் பதட்டமா தான் இருக்கு சமாளிப்போம்" பாபு அண்ணன் கைகள புடிச்சு சொல்லிபுட்டு..

"எ.எ.என்ன ராசா.. வந்தை ராசா.. செல்லுபா.. இப்ப ..இப்ப என்ன சொல்ல போற?"

"அண்ணே.. அண்ணே.. வெள்ளக்காரன் கொள்ளையடிச்சதுல இன்னொரு தமிழ்வார்த்த இருக்கு. தெரியுமா?"

"என்னது ராசா? எதுல இருக்கு?"

"அதே திருக்குறள்ல தான்..
#ஜாங்கிரி_வார்த்தை_பேசா_மாக்கள்
#ஆங்கிரி_பேர்டென_அழைக்கப்_படும்"

"அச்சச்சோ.. ஆள விட்றா சாமீ..
நீயும், உன் குறளும்.. வள்ளுவரே எழுத்தாணிய எடுத்து உன் தொண்டையில குத்துனாத்தான் அடங்குவ" னு சொல்லிபுட்டு நாலு பேரும் 🏃🏃🏃‍♂️🏃‍♂️ ஓடுனாங்க..

🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️      🏃

பின்னாடியே வந்தையாறும் ஓடினான்.

விஜயகுமார் வேல்முருகன்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

கடல்புரத்தில் .. விமர்சனம்

#இயற்கை_சூழலியல் 2

புத்தகத்தின் பெயர்: #கடல்புரத்தில்

எழுத்தாளர்:
#வண்ணதாசன்
வகை : நாவல்
கிண்டில் பதிப்பாய் வாசித்தது..

முதன்முதலாக நான் (சு)வாசித்த வண்ணதாசன் அவர்களின் நூல்..
வாசித்தேன் என்பதை விட அதில் கரைந்தேன் என்பதே பொருத்தமானது..

கடல் இயற்கையன்னையின் அளவிடமுடிதா அருட்கொடை.. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்..
அதன் கரையினில் அதனோடே வாழ்ந்து.. அதனோடே புழங்கி.. அதனோடே கரைந்துப் போகும் பிள்ளைகளாய் மீனவர்கள்.. அவர்களின் செயல் ஒவ்வொன்றிலும் கடல் கலந்திருக்கும்..
முதன்முதலாக பிறக்கும் பிள்ளைக்கு கடலின் உவர்ப்பை உவப்பாக கொடுப்பார்கள்..
அவர்களின் காதல்.. திருமணம்.. நல்ல/கெட்ட நிகழ்வுகளெல்லாம் கடலின்றி முடியவே முடியாது..
 அத்தகைய கடற்புரத்தோடு உறவாடி வாழும் மக்களைப் பற்றிய கதை தான் இது.. 
  எனக்கும் கடற்கரையை நெருங்கிய பகுதிதான் என்பதால் மீனவ மக்களோடு நெருங்கிய தொடர்பு..
எனக்கு சிறுவயது நினைவு..
சிறுவயதில் குடும்ப கஷ்டமான சூழ்நிலை என்பதால், அம்மாவுடன் மீன் வாங்க மீன் அங்காடிக்குச் செல்வேன்.. ஒவ்வொரு கடையாக மீனின் விலையை மட்டும் கேட்கொண்டு வருவார் அம்மா..
நானும் இருப்பதிலேயே பெரிய மீனாக கையை காட்டுவேன்.. அம்மாவிடம் சொற்ப அளவு பணம் மட்டும் இருப்பதால் அதற்கு ஏற்றார் போல தான் பார்ப்பார்..
அந்த அளவுக்கு உண்டான மீன் இருக்காது..
ஒரு முறை இப்படித்தான் அம்மா விலை கேட்கும் போது அந்த மீன் விற்கும் அம்மா, என் அம்மாவை திட்டிவிட்டார்..
அம்மாவின் கண்கள் கலங்கிவிட்டது..
யாரிடமும் சத்தமாக பேசாத கிராமத்து வெள்ளேந்தி அம்மா.. 
அம்மாவின் கலக்கத்தை பார்த்து எனக்கும் அழுகை வர, அம்மாவின் கையை பிடித்து வேகமாக அழைத்துக்கொண்டு அங்காடியை விட்டு வெளியேற நடக்கத் தொடங்க..
அந்த மீன் விற்கும் அம்மாவுக்கு என்ன தோன்றியதோ எனத் தெரியவில்லை.. விறுவிறு என்று நடந்து வந்து அம்மாவின் கையையும், எனது கையையும் ஒரு சேர பிடித்துக்கொண்டார்.. ஏதோ பேசினார்.. சென்னை மீனவ பாசையில்.. அம்மாவிடம் மன்னிப்பு கேட்பது போல தெரிந்தது.. எங்கள் குடும்பச் சூழலை அறிந்த அவர்.. அம்மாவிடமிருந்த பணத்திற்கும் கூடுதலான மீன்களை கொடுத்தார்..
அன்றையிலிருந்து அந்தம்மாவும், அம்மாவும் சினேகிதம் ஆனார்கள்..
மூர்க்க குணமும் அதை விட அதிகமாக இரக்க குணமும் அதிகமுள்ளவர்கள் கடலின் மைந்தர்கள்..
ஜவ்வாக இழுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் விரைவில் முடித்து விடுகிறேன்.. எனது அனுபவத்தை ..
அந்த மீனம்மாவின் வீட்டிற்குப் போய் வரும் அளவுக்கு அம்மாவின் சினேகிதம் வளர்ந்தது..
அந்தம்மாவிற்கு திருமண வயதில் ஒரு மகள்..  என்னைவிட ஐந்து வயது கூடிய மகன்..
அந்த மகள் எனக்கு அக்காவாகிப் போனார்..
அவர்களுக்கும் ஒரு காதல் இருந்தது..
எனக்கு பத்து வயது இருக்கும்..
மதிய உணவு வேளையில் அந்தக்கா, கடற்கரையோரம் வலை பின்னிக்கொண்டிருக்கும் அவங்க அப்பாவுக்கு உணவு கொண்டு போவார்கள்.. துணையாக என்னை அழைத்துக்கொண்டு..
வலை பின்னிக் கொண்டிருக்கும் அப்பாவின் அருகில் ஒரு இளைஞன்..
அவரும் வலை பின்னிக்கொண்டிருக்க..
அவர் மீது இந்தக்கா மனதிற்குள் காதல் வலை பின்னிக்கொண்டு இருந்தது.. அந்த இளைஞனும்...
எனக்கு அது காதல் அறியா வயது..
இருவரும் சாடைமாடையாக ஏதாவது பேசிக்கொள்வார்கள்..
அதனை நானும்., சற்று தள்ளியிருந்து கடலும் பார்த்துக்கொண்டு இருப்போம்..
அந்த அக்கா ஏதாவது கொடுத்தனுப்பும் நான் அவரிடம் கொண்டு கொடுப்பேன்..
அவர் ஏதாவது கொடுப்பார் அக்காவிடம் வந்து கொடுப்பேன்.. ஏதாவது என்றால் தின்பண்டம்.. பரிசு பொருள்.. காதல் கடிதம் இப்படி..
 அதற்கு நமக்கு அன்பளிப்பாக வறுத்த சதைப்பற்றுள்ள மீனாகவோ சில்லரை காசோ கிடைக்கும்..
இவர்கள் பின்னிய காதல் வலை அந்தக்கா அப்பாவுக்குத் தெரிய.. அதற்கு தூதுன் நான் தான்னு தெரிந்து.. வலை பின்னும் கையால் என்னை பின்னி எடுத்துவிட்டார்..
மீனம்மாள் ஓடி வந்து 'நம்ம பொண்ணு செஞ்ச தப்புக்கு இந்த பச்ச மண்ண ஏ அடிக்கிற'னு தடுத்து விட்டார்..
அடியின் தாக்கம் கேவி கேவி அழுகையாக பொங்கி எழ.. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த கடல் அலைகளால் கால்களை தடவி ஆறுதல் பேசிக்கொண்டு இருந்தது தலை கோதியதைப்போல்..

நாவலுக்குள் வருகிறேன்..
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்புர கிராமமொன்றில் நிகழும் காதல்,பாசம்,அன்பு,நேசம், கோவம், குரோதம் என அனைத்தும் கலந்த வாழ்க்கையாய் நகர்கிறது கதை..
பிலோமி குட்டி கதையின் முக்கிய பாத்திரம்.. கதை முழுவதும் கடலோடு பிரியா அலையாக படர்ந்து வருகிறாள்
 அந்த வயதுக்கே உரிய காதலில் மூழ்கியுள்ளாள்.. அவளின் அப்பா  குரூஸ் மிக்கேல் தன் பாட்டன் காலத்து வல்லம் அதாவது படகு, தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பழமையான குடிசை வீடு, எந்நேரமும் சிடுசிடுப்பை கொட்டும் மரியம்மை அவளது அம்மா..
குரூஸ் மிக்கலின் வல்லத்தையும், பழைய வீட்டையும் விற்றுவிட்டு தன்னோடே பக்கத்து நகரத்தில் வந்து தங்கும்படி சொல்லும் வாத்தியார் வேலை செய்யும் செபஸ்தி..அவளுடைய அண்ணன்..
பால்ய காலத்திலிருந்தே அவளது சினேகிதியாக இருந்து வரும் ரஞ்சி..
தரகனராக வரும் ஒரு முஸ்லீம் பாய்..
பிலோமியின் அம்மாவின் சினேகிதர் வாத்தி.. ஊர் பெரியவர் பாட்டா..
ஒரு முக்கியமான ஆள விட்டுட்டேன்.. பிலோமியின் காதலன் சாமிதாஸ்.. இவர்களோடு, அவர்களின்  சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்ளும் கடலும், கடல் பறவைகளும், தென்னைமரங்களும்,கருவாடுகளும், இரவு நேர நிலுவும் என கதைகளத்தோடு பின்னிப் பிணைந்து வருகிறார்கள்..

பிலோமி என்ற பெயரை படித்ததும் 90களில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வந்த ஒரு கடற்புரம் சார்ந்த நாடகத்தின் நினைவு தான் வருகிறது..
ஒரு வேளை இந்த கதையாகக்கூட இருக்கலாம்..

நாவலில் இரு நிறைவேறாத காதல் பிலோமி,ரஞ்சி அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்..

தன் வல்லத்தையும்,வீட்டையும் இழக்க விரும்பாத குரூஸ் லாஞ்ச்களும், பைபர் படகுகளும் அதிகரித்து மற்ற நாட்டுப்படகு, வல்லங்கள் வைத்திருப்போரின் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு கடல் விதிகளை மீறும் செயல்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து சண்டையிடுகிறார்..
இன்றும் அதைப்போன்ற சண்டைகள் தென்மாவட்ட கடற்கரை ஊர்களில் அவ்வபோது நடைபெறும் செய்திகளை செய்திகளில் பார்க்கலாம்..

பிலோமியின் காதல் கனவு பொருளாதார வேறுபாட்டால் நிராசையாகிவிடுகிறது..
பிலோமி சாமிதாசிடம்  உணர்வின் மயக்கத்தால் தன்னை இழந்திருந்தாள்..
இருந்தாலும் சாமிதாசின் மீது வெறுப்போ கோபமோ படாமல் தன் நெஞ்சில் போட்டு பூட்டிவிட்டாள்..
அந்த நினைப்பின் வேதனை தோழி ரஞ்சியின் மூலம் தீர்க்கப்பட்டு வாழ்வின் அர்த்தங்களை மெள்ள மெள்ள புரியவைக்கிறது..
அதே நேரத்தில் பிலேமியின் அம்மாவின் மரணமும் அவளை நிலைகுலைய செய்தாலும் மனதினை பக்குவப்படுத்தும் நிலைக்கு அவளை அழைத்துச் செல்கிறது வாழ்க்கை..
மனைவியின் மீது எப்பொழுதும் கோபத்தோடே இருக்கும் குரூஸ் அவள் இறந்தப் பிறகு ஆளே தடுமாறி விடுகிறார்.. தன் மனவையின் மீது இதயத்தின் எங்கோ ஆழத்தில் புதைந்திருந்த அன்பு பீறிட்டு எழுகிறது..
எந்த நிலை வந்தாலும் வல்லத்தையும்,வீட்டையும் விற்க இயலாது என்ற பிடிவாதத்தில் இருந்தவர் அவற்றை விற்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்.. அப்படி விற்று விட்டு வந்து வல்லம் கைவிட்டுப் போனதையும், இதுவரை தான் குழந்தையாய் தவழ்ந்த கடலுக்குள்ளும் போகமுடியாது என்ற நிலையில் சித்தம் கலங்கி போய் தன்னை சுற்றியுள்ளோரை அடையாளம் தெரியாமல் மறதி நோயில் தள்ளப்படுகிறார்.. அவர் மனதில் வெறும் கடலைத் தவிர வேறெதுவும் இல்லை..
படிக்கப்படிக்க மனது நெகிழ்ந்து விழி கசிய செய்கிறது..

அதே போல தந்தையின் சொத்தை விற்றேத் தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆடிய பிலோமி அண்ணன் செபஸ்தியையும் மனம் மாறச் செய்துவிட்டது, தாயின் இறப்பும், தந்தையின் நிலையும்..

வாழ்க்கைத்தான் எத்தனை சாமர்த்தியங்களையும், ரகசியங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது ஒரு கடலைப் போலே..

பிலொமிக்கும் தன்மீது அக்கறையுள்ளவரை அடையாளம் காணும் மனநிலை வந்துவிடுகிறது..
எத்தனை ஆழமான உணர்வுகளை தாங்கிக்கொண்டு நகர்கிறது கதைகளம்..

அளவுகடந்த காதலின் பாசத்தால் தன்னை யாரிடம் பறிகொடுத்தோமோ அந்த சாமிதாஸ் தன் திருமணத்திற்கு அவளை அழைக்கிறான்.
அதற்கு பிலோமியும் மௌனத்தோடு தலையசைத்து சம்மதிக்கிறாள் அமைதிநேர கடலைப்போல.. இப்படியாக முடிகிறது கதை..
நிகழும் நிகழ்வுகள் அனைத்துக்கும் சாட்சியாக அமைகிறது கடற்கரை..

மணமாலையில் முடிந்த காதல்களையும்
பிணமாலையில் முடிந்த காதல்களையும்  அந்த கடல் மட்டுமே அறியும் ரகசியங்கள்..

இன்னும் நிறைய எழுதலாம்.. ஆனால் அதற்குள் எனக்கு அவசர வேலை வந்ததால் நிறைவு பெருகிறேன்..

கடைசியாக..

மனிதர்களுள் அசல் , போலி என்பதெல்லாம் அதற்குத் தெரியாது..
அதற்குத் தெரிந்ததெல்லாம் தன் கரையில் அமர்ந்திருப்போருக்கு அமைதியை தரவே மீண்டும் மீண்டும் கரைக்கு தன் அலைகளை அனுப்ப மட்டுமே தெரியும் அந்த கடலுக்கு.!

விஜயகுமார் வேல்முருகன்

சனி, 11 ஜூலை, 2020

அர்த்தமுள்ள அந்தரங்கம் விமர்சனம்

#அர்த்தமுள்ள_அந்தரங்கம்
எழுதியவர்: உளவியல் நிபுணர் டாக்டர்.ஷாலினி..

விகடன் பதிப்பகம் வெளியீடு.

"மீனை சாப்பிடுவதைப் போல புத்தகங்களை வாசிக்க வேண்டும்..
மீனில் நல்லதை (சதையை) எடுத்து,
தேவையில்லாததை (முள்ளை) விடுப்பதைப் போல" சொன்னவர்..
வேறு யாருமில்ல நாந்தேன்..

என்னடாயிது தலைப்பே ஒரு #மாதிரியா இருக்கே ஒரு வேள இது "அந்த" மாதிரியான புத்தகமா இருக்குமோனு நினைச்சீங்கனா அந்த நினைப்ப அழிச்சிபுடுங்க..

மனித இனம் பிறக்குறதுக்கு முன்னமே, கண்ணுக்கேத் தெரியாத , ஓரறிவு, ஈரறிவு உயிரனமா இருக்கும் போதே ஜீன்கள் என சொல்ற மரபணுக்கள் பல ஜித்து, தில்லாலங்கடி வேலைகள செஞ்சு தன்னோட தலைமுறை நீட்டிப்ப இதுநாள் வரைக்கும் செஞ்சுகிட்டு வருது..

பேருக்கு எலும்பும், தோலுமா போத்தி அலையுற நாம, ஒரு சுயநல ஜீனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளோம்..
நாம மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற எல்லா சீவராசிகளும்.. மரம்,செடி, பூச்சி,ஊர்வன, உருள்வன, பறப்பன, தாவுவன இப்படி எல்லாத்தையும் மரபணுக்கள் தான் தன் இஸ்டத்துக்கு ஆட்டி வைக்கிது..

சரி..மேட்டருக்கு வரேன்..

என்ன மேட்டருனா, "மேட்டரு" தான் இப்ப தகவலே..
இன விருத்திக்கான காரணங்கள் என்ன? எதற்காக இது யுகம் யுகமா நடந்துகிட்டு வருது?
ஒவ்வொரு உயிரினத்தோட இனவிருத்தியும் எப்படி நடக்குது? இதைப் பற்றி அக்கு வேறா.. ஆணி வேறா பிச்சிப்போட்டு விலாவாரியா விவரிச்சிருக்காங்க..
மனுச பக்கிகள தவிர மத்த சீவராசிகளுக்கு கலவி அதாங்க உடல் உறவு வெறும் சடங்குகாக.. அதாவது இன்ன பருவம் வந்தவுடன், உணர்ச்சி வந்தவுடன் தன்னோட சோடியோட சேரணும்.. தன்னோட இனத்த பெருக்குறதுக்கு ஏற்பாடு செஞ்சிபுட்டு போயிடனும்.. அவ்ளோதான் அதோட வேல..

ஆனா.. மனுச பயலுவலுக்கு அப்படி செய்யாம கலவி என்பத ஒரு சுகமாக அனுபவிக்கனும்.. அடிக்கடி ஈடுபடுத்த வைக்கனும்.. அதன் மூலம் சோடி இணைபிரியாம இருக்கணும்னு மரபணு வழிமுறைய செஞ்சு வச்சிருக்கு..
அது என்னென்ன வழிமுறைனு பார்த்தா..
காமம்..
அந்த காமத்தை 12 விதமாக பிரிச்சி வச்சி ஒவ்வொன்னுக்கும் ஒரு அடிப்படை காரணத்தையும் குறிச்சி வச்சிடுச்சு..
முதல்ல பருவம் வந்ததும் #இனக்கவர்சி ங்கிற காமத்துல ஆரம்பிச்சி.. கடைசி இணையோட (குடும்பம்) கூடுற காமம் வரைக்கும் தெள்ளத் தெளிவாக அதே நேரத்தில் முகம் சுழிக்காம படிக்கிற மாதிரி சின்னச்சின்ன கதையா சொல்லிருக்காங்க..
அதி ஆரம்ப காலத்துல பெண் என்ற ஒரு இனம் மூலமாக தான் சீவராசிகளின் பரிணாமங்கள் ஆரம்பிச்சது..
அப்பறம் அதுல இருந்த சிக்கலை தீர்க்க ஜீன்கள் என்ன செஞ்சுதனுனா பெண்ணோட மரபண ரெண்டா பிரெஞ்சு ஆணுங்கிற இன்னொரு மரபணா பிரிஞ்சது.. ரெண்டுக்கும் வேறுபாட உண்டுபண்ண ஜீன் என்ன செஞ்சிதுனா பெண்ணோட தோற்றம் மொழுக்கடீனு இருக்குற மாதிரியும்.. ஆணோட தோற்றத்த அந்த பெண்ண வசீகரிப்பதுக்காக எக்ஸ்ட்ரா பிட்டிங்கா சிலத கொடுக்க ஆரம்பிச்சது..
என்னத்த கொடுத்தது?
பறவைகள்ளையும், விலங்குகளையும் பாத்தாலே தெரியுமே..
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை..
சேவலுக்கு கொண்டை..
ஆண் சிங்கத்திற்கு பிடரி முடி..
ஆண் யானைக்கு நீண்ட தந்தம்..
ஆண் மனிதனுக்கு அதிகமான வலிமை..
இப்படி பெண்ணை வசீகரிக்கவே அனைத்து ஏற்பாடுகளும்..

அப்பறம் கலவிக்கப்பறம் குட்டிப் போடுதா.. 
விலங்குகளுக்கு அது பிறந்ததும் இன்ன இன்னது செய்யனும்.. இப்படி நடக்கனும் அப்படி போகனும்னு மூளையில எல்லாத்தையும் பதிஞ்சி வச்சு, அதுகள மட்டும் முழு மூளை வளர்ச்சியோட பிறக்க வச்சிடுது.. அதனா தான் விலங்குகளோட குட்டிகள் பொறந்த உடனே எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுது..

ஆனா மனசனுக்கு அப்படி செய்யல..
ஏன்னா.. விலங்குகள் நாலு கால்கள்ல நடக்குறதுனால அது குட்டிப் போடுறதுக்கு ஏத்தா மாதிரி அதோட உடலோட அமைப்பை வச்சது ஜீன்..
இங்க ரெண்டு கால்கள்ல நடக்குறதுனாலயும், குழந்தை பிறக்கற இடம் குறுகலாக இருக்குறதுனாலயும் மனுச குழந்தையை பாதி மூளை வளர்ச்சியோட பிறக்க வச்சி .. வெளிய வந்தப்பறம் மீதி மூளைய வளர செய்யுது..
முழு மூளையும் உள்ளயே வளந்துட்டா மண்ட பெருசா ஆகிடும்.. அப்பறம் அம்மாகிட்ட இருந்து வெளியே வரமுடியாதுங்கிறதுனால இப்படி ஒரு அமைப்ப உருவாக்கி வச்சிது மரபணு..

அதனால தான் ஆணோட நடையைப்போல இல்லாமல் பெண்ணோட நட கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்..

இன்னும் நிறைய விசயங்கள் இருக்கு..
எழுதுனா உங்களுக்கு ரொம்ப போரடிச்சிடும்..
அதனால கடைசியா ஒரு தகவலை சொல்றேன்..

ஆதிகாலத்தில இருந்து மரபணுக்கள் தங்களோட தொடர் வாழ்வுக்காக உயிரினங்கள்ல வெர்சன் அப்கிரேட் செஞ்சிகிட்டே வந்திருக்கு..
தன்னோட இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒரு பெண் பல ஆண்களோடும்.. ஏனென்றால் அக்காலகட்டத்தில் மருத்துவம்லாம் இல்ல.. நிறைய குழந்தைகள் பிறந்தவுடன் நோயினாலோ, விலங்குகளாலோ இறந்து போயிடுங்க..
பத்து பொறந்தா ஒன்னோ ரெண்டோ தான் பிழைக்கும்.. அதோட பிள்ள பெக்குற பெண்கள் கூட இறந்து போயிடுவாங்க .. அதனால ஒரு இனம் குறைஞ்சி பேலன்ஸ் இல்லாம போயிடக்கூடாதேனு ஒரு பெண் பல ஆண் என்ற நிலை..

அப்பறம் அது மாறி ஒரு ஆண் பல பெண்கள் இப்படியும் நிலை..(ராஜாக்கள் கதைகளை படிச்சா தெரியும்.. ஏனென்றால் பிள்ளைகளை உருவாக்கி போரிட.. ஆட்சி பிடிக்க அவங்களுக்குள் சண்டையிட..எக்செக்ட்ரா..எக்செக்ட்ரா)

கடைசியாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை வரை அப்கிரேட் ஆகிட்டே வந்திருக்கு..
அதோட மிக முக்கியமா..
அந்த ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுக்கூட ஒரே ரத்த உறவுக்குள்ள இல்லாம அதாவது தாய் மாமன், அத்தை மகள் என்று நெருங்கிய சொந்தத்தில் இல்லாம வெளியிடமா இருந்தா பிறக்கிற குழந்தை கூடுதல் ஆரோக்கியமா இருக்குமாம்..
இரத்த உறவுகள்ல ஏன் வேண்டாம்னு சொல்றாங்கனா.. நம்ம மரபணு அடுக்குகள்ல 10 வது அடுக்குல ஏதாவது கோளாறு 50% இருந்தால், அதே மரபணு உள்ள சொந்தத்த கல்யாணம் செய்யும்போது அந்த மரபணுவுல 10 அடுக்குல அதே கோளாறு 50% இருக்குமாம்.. அது ரெண்டும் சேரும் போது 100% முழுக்கோளாறா ஆகிடுமாம்..
அதனால தான் நெருங்கிய உறவுகள்ல கல்யாணம் செஞ்சிகிட்டவங்க குழந்தைங்க ஆரோக்கியம் இல்லாமலும், மூளை வளர்ச்சி இல்லாமலும், அடிக்கடி நோய்வாய்பட்டபடியே இருக்குமாம்..

ம்ம்ம்.. அப்பாடா ஒரு வழியா எழுதி முடிச்சிட்டேன்..
இவ்வளவு கருத்துகளும், இதுக்கு மேலையும் இந்த புத்கத்துல இருக்கு..
எல்லாமும் எளிமையான எழுதியிருக்காங்க இந்த புத்தகத்தோட ஆசிரியர்..

புத்தகம் கிடைச்சா விடாதிங்கோ..

விஜயகுமார் வேல்முருகன்

வியாழன், 9 ஜூலை, 2020

கதாவிலாசம் புத்தக விமர்சனம்

#கதாவிலாசம்..

எழுத்தாளர் #எஸ்_ராமகிருஷ்ணன்
விகடன் பதிப்பக வெளியீடு..

அரக்கப்பறக்க ஓடும் இந்த மாநகர வாழ்க்கையில் நாம் கவனிக்கப்பட வேண்டிய பலவற்றை கண்டுகொள்ளாமலே ஓட பழகிக்கொண்டோம்..
இதில் புத்தக வாசிப்பு என்பதை எத்தனையோ பேர் தவிர்த்திடுகிறார்கள்..
தள்ளி வைத்திடுகிறார்..
பலர் புத்தக வாசிப்பு என்பதை மறந்தே போய்விட்டார்கள் என்றுக்கூட சொல்லலாம்..
சரி.. இப்ப நாம சொல்ல வந்ததுக்கு வருவோம்..
தமிழில் தலைசிறந்த 50 எழுத்தாளர்களின் சிறுகதை படைப்புகளிலிருந்து, ஒவ்வொருவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றை எடுத்து அதைப்பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார்..

எப்படி?

தமது வாழ்நாட்களில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சுவைப்பட தொகுத்து அதற்கு ஏற்ப சிறுகதையை கனகச்சிதமாக பொருத்தியுள்ளார்..
விவரிக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் மனம் ஆழ்ந்து விடுகிறது..
சக மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை முறை, வாழ்வியல் நிகழ்வுகள் அவற்றை விவரிக்கும் பொழுதே நம் வாழ்விலும் அதேப் போல் ஒன்று நிச்சயம் நடந்திருக்கும்..
நடந்திருக்கிறது எனக்கும்..
நம்முடனே வாழும் மனிதர்களை பற்றியே கதை சுற்றி வருவதால் நாமும் அதில் ஒரு கதாப்பாத்திரங்களாக உள்நுழைந்து நிற்கின்றோம்..

ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும் மனம் சற்று சிந்தனையில் ஆழ்கிறது..
ஒரு கதம்ப மலர் சரம் தொடுப்பதைப் போல மெல்ல மெல்ல வாசித்தேன்..
முதலில் படைப்பாளர் தொகுக்கும் அவரது நிகழ்வு..
அடுத்ததாக நிகழ்வுக்கு ஏற்ப அவர் வாசித்த சிறுகதை.. இவ்விரண்டையும் வாசித்து முடித்ததும் கண்கள் மூடி அதே போல எனக்கு நேர்ந்த அனுபவம்.. இம்மூன்றையும் சரங்களாக தொடுக்க அது மலர் சர மாலையானது..

பீடிகை அதிகமாக போடுகின்றேனோ..
என்ன செய்வது எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் எழுத்து நடை அப்படி வசியம் செய்கிறது..

நாம் வாழ்வினுக்கிடையே நடப்பது தான் சிறுகதைகளாக வெளிவந்து நீங்கா இடங்களை பெற்றுள்ளன..

எழுத்தாளர் தொகுத்த 50 எழுத்தாளர்கள்: (வேற வழியில்ல நீங்க தெரிஞ்சிகிட்டே ஆகனும்)
மௌனி..ஆ.மாதவன்..மு.சுயம்புலிங்கம்..
தி.ஜானகிராமன்.. ஆதவன்..அசோகமித்திரன்.. ந.முத்துசாமி.. திலீப்குமார்.. கோபிகிருஷ்ணன்..பூமணி..
பி.எஸ்.ராமையா..வண்ணதாசன்.. எம்.வி.வெங்கட்ராம்.. கி்.ராஜநாராயணன்.. பா.செயப்பிரகாசம்.. கு.அழகிரிசாமி.. புதுமைப்பித்தன்.. வண்ணநிலவன்.. நகுலன்.. ஜி.நாகராஜன்.. பாவண்ணன்..மா.அரங்கநாதன்.. ச.தமிழ்ச்செல்வன்..நாஞ்சில்நாடன்..
இந்திரா பார்த்தசாரதி..கந்தர்வன்..
லா.ச.ராமாமிருதம்..கு.ப.ரா..சா.கந்தசாமி.. எஸ்.சம்பத்..சுஜாதா.. கிருஷ்ணன்நம்பி..கரிச்சான் குஞ்சு.. கோணங்கி..தமயந்தி..பிரபஞ்சன்.. பிரமீள்..நீல.பத்மநாபன்..தஞ்சைபிரகாஷ்..அம்பை..ந.பிச்சமூர்த்தி.. சுந்தரராமசாமி..அ.முத்துலிங்கம்.. ஜெயமோகன்.. சூடாமணி.. வேல.ராமமூர்த்தி.. ராஜேந்திரசோழன்..கௌரிசங்கர்..
ஜெயகாந்தன்..பாரதியார்.
ஆகிய இவர்களின் அருமையான சிறுகதைகளை அழுத்தமான நடையினில் தொகுத்து வழங்கியுள்ளார்..

எதையாவது ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லலாம் என்றால் அனைத்து கதைகளும் முண்டியடித்துக் கொண்டு வரிசைக் கட்டி நிற்கின்றன.. தேனில் முக்கிய பலாச்சுளைகளைப் போல..

அதனால் ,
வாய்ப்புள்ளவர்கள் இப்புத்தகத்தினை வாசித்து அனுபவத்தை சுவையுங்கள்..
வாய்ப்பில்லாதவர்கள் அவ்வாய்ப்பினை ஏற்படுத்தி வாசித்து சுவைத்து மகிழுங்கள்..

இறுதியாக..
இந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எனது இரவுத் தூக்கங்களை, தன் படைப்புகளால் களவாடிச் சென்றுவிட்டார்.
இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க சக மனிதர்களை இன்னும் அதிகமாக நேசிக்கும்படி செய்கிறது..

மெல்ல மெல்ல என் வாழ்க்கையும் புரிய ஆரம்பிக்கின்றது.. இவை அனைத்தும் என் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள்..

இப்படிக்கு
விஜயகுமார் வேல்முருகன்..

திங்கள், 6 ஜூலை, 2020

இருள் எனும் சாம்ராஜ்யம்

தாடையில் தந்த முத்தம்
கதகதப்பாய் தான் இருந்தது
அந்த அடர் இருளுக்கு..

தாடியின் அடர் மயிர்களுக்குள்
ஒளிந்து கொண்டிருக்குமோ
இருளில் தந்த முத்தம்..

ரகசியங்கள் பலவற்றை தின்றும்  
ஜீரணிக்காமல், கிசுகிசுப்பான காதலை
ஒட்டுக்கேட்கிறது பிசுபிசுப்பான இருள்..

புணர்தலிலும் அதிக இன்பத்தை
அள்ளித் தெளித்து விடுகிறது
தழுவிடும் உடல்களுக்கு இருள்..

பனியில் நனைந்த இரவு
கூட்டிலிருந்து விழும் இறகினை
துணையாக அணைக்கும் இருள்..

ஒளிர்தலாய் இருப்பதை விட
இருள்தலில் சிறப்பு: சோக
கண்ணீரை கரைக்கும் இருள்..

ஆழ் மனதின் தியானத்தில்
ஒளியினை தோற்றுவித்து
புன்னகை புரியும் இருள்..

அண்டத்தை ஒளிர்விக்கும் ஆதவனையும்
தன்னுளடக்கி ரகசியம் காக்கிறது
இருள் எனும் சாம்ராஜ்யம்.!

விஜயகுமார் வேல்முருகன்

புத்தகத்த படிக்கிறதுனால என்ன பிரயோசனம்?

"ஏலேய்.. கொமாரு..எப்ப பாரு எதையாவது படிச்சிகிட்டே இருக்கியே.. அப்படி என்ன தான்டா இருக்கு புத்தகத்துல?"

"நிறைய இருக்குடா கோபாலு.. புத்தகத்துல"

"புத்தகத்த படிக்கிறதுனால என்னடா பிரயோசனம்?"

"நமக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் டா .. கோபாலு"

"ம்க்கும்.. போடா.. அந்த அனுபவத்த வச்சி ஆபாயில் வாங்க முடியுமாடா.. அதனால வேற எதாவது உருப்படியா கிடைச்சாக்கூட பரவால்ல..
டைம வேஸ்ட் செஞ்சிகிட்டு.. "

'இவனக்கு எப்படி விளங்க வைக்கிறது' னு கொமாரு நினைச்சிகிட்டு வரும்போது ஒரு நாய் அவங்க ரெண்டு பேரையும் பார்த்து "கொர்ர்ர்" னு உறும ஆரம்பிச்சது..
கோபாலு சும்மாயில்லாம அதபாத்து "ச்சேய் ஓடு" னு அதட்டுற மாதிரி குரல கொடுக்க.. 
அந்த நாயி வெறி புடிச்சா மாதிரி இன்னும் கொஞ்சம் சத்தமா உறுமிகிட்டே அவங்கள வெரட்ட..
"அய்யய்யோ" னு ரெண்டு பேரும் கத்திகிட்டு ஓடுனானுங்க..

ஒடிகிட்டே இருக்கும் போது கொமாருக்கு ஏதோ ஒரு யோசன மண்டைக்குள்ள விளக்கப்போல எரிய..
திடீர்னு அவன் "ஓஓஓஓ" னு அடித்தொண்டை கிழியிறமாதிரி கர்ணகொடூரமா அலற..
கொமாரு அலறுறத பாத்து கோவாலு கதற..
இவிங்க ரெண்டு பேரோட அலறல், கதறல பாத்து விரட்டிட்டு வந்த நாயி பதறி 'வள்..வள்..ஒய்ங்..ஒய்ங்..' னு கத்திகிட்டு அது தலைதெறிக்க திரும்ப ஒட ஆரம்பிச்சது..

ரெண்டு பேரும்  "அப்பாடா .. நாயி ஓடிடுச்சுடா சாமீ" னு ஒரு மரத்துக்கு கீழ நின்னு மூச்சு விட ஆரம்பிச்சாங்க..

"ஏன்டா கொமாரு கத்துன? நாய் கடிச்சிடுச்சா?"

"இல்லையே.. ஆமா.. நீ ஏன் கத்துன?"

"நீ கத்துனத பாத்து பயந்து கத்திபுட்டேன் டா"

"ம்ம்ம்...புக்கு படிக்கிறத பத்தி நீ கேட்ட கேள்விக்கு இவ்ளோ சீக்கிரம் பதில் கிடைக்கும்னு நான் நினைச்சிக்கூட பாக்கலடா கோபாலு"

"நான் கேட்டதுக்கும்.. இப்ப நடந்ததுக்கும் என்னடா சம்மந்தம்?"

"இருக்கே.. சம்மந்தம் இருக்கே.. 
முன்ன ஒரு தடவ ஒரு புத்தகத்துல படிச்சேன்..  சில நாய்களோட குணம் எப்படினா.. அது மொதல்ல சவுண்டு விடும்.. அதுக்கு எதிரான நாயி ஓட ஆரம்பிச்சிடுச்சுனா இது இன்னும் கொஞ்சம் அதிகமா சவுண்டு கொடுத்து விரட்டிட்டு ஓடும்..
அதுவே இந்த நாய் சவுண்டோட எதிரி நாய் சவுண்டு அதிகமா இருந்தா இவரு பம்மிகிட்டே ஓடுவாரு..
அதே போல இன்னொன்னு என்னனா.. இந்த நாய் கத்திகிட்டே விரட்டும் போது அந்த நாய் ஆவேசமா ஆகி, ஓடுறத நிப்பாட்டிட்டு திரும்ப நின்னு பயங்கர சத்தமா கத்துனா  விரட்டுற நாயி அலறிகிட்டு ஓடிடும்னு படிச்சேன்..
படிச்சத பிராக்டிக்கலா செஞ்சி பத்தா எப்படினு தோனுச்சு.. 
செஞ்சோம்..
இதோ ரிசல்ட் கிடைச்சிடுச்சு.. அவ்ளோ தான்.. இதுதான் அனுபவம் கோபாலு.."

"ஆகா..சூப்பர் டா கொமாரே.. "

"இன்னும் இதுபோல நிறைய விசயங்கள் புத்தகங்கள படிக்கிறதுனால தெரிஞ்சிக்கலாம் கோபாலு..
இப்ப சொல்லு புத்தகம் படிக்கிறதுனால டைம் வேஸ்ட்டா?"

"இல்லவே இல்லடா கொமாரே.. இனிமே நானும் சும்மா இருக்குறப்ப புத்தகத்த படிக்கிறேன்டா.. உன்கிட்ட வேற ஏதாவது புத்தகம் இருக்காடா?"

"ம்ம்.. நிறைய இருக்கே.. வீட்டுல.. வா தரேன்" னு சொல்லிஎட்டு கொமாரு கோபாலோட தோளுல கையைப் போட்டு கூட்டிட்டுப் போனான்.

விஜயகுமார் வேல்முருகன்

வெள்ளி, 26 ஜூன், 2020

யாமம் புத்தக விமர்சனம்

யாமம் ..
ம்ம்ம்ம் .. படித்து முடித்ததும் இப்படி உணர்வார்ந்த பெருமூச்சு தான் வந்தது .
தூக்கத்தை ,கண்களை விட்டு பிடுங்கி சற்று தள்ளி வைத்து தான் வாசித்தேன் ..
வாசித்தேன்  என்பதை விட, சுவாசித்தேன் என்றே சொல்லலாம் ..
வாசகனை அவரது எழுத்தில் கரைந்து போகும்படி செய்திருந்தார் படைப்பாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ..
மதராபட்டணம்  (சென்னை) மாநகரம் உருவாக ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து ஆரம்பிக்கிறது நாவல் .. 
கதையின் மையமாக யாமம் என்ற அத்தர் (வாசனை திரவியம்) சுழன்று சுழன்று வருகிறது ..
இருளும், வெயிலும் , கடலும் பல படைப்பாளர்களின் எழுத்துகளில் கலந்தோ , இணைந்தோ வரும் .. ஆனால் இவரது எழுத்தில் கரைந்து வருகிறது ..
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டில் காலூன்ற ஆரம்பித்த விதம் .. அவர்கள் தாமாகவே எடுத்துக்கொண்ட ஏகபோக உரிமை இவற்றில் ஆரம்பித்து ,
வெள்ளைக்காரர்கள் காலத்தில் நடக்கும் சம்பவங்களாக எழுதியுள்ளார் ..
அத்தர் வியாபாரி அப்துல் கரீம் குடும்பம் ..
வெள்ளையரிடம் பணிபுரியும் பத்ரகிரி குடும்பம் ..
கிருஷ்ணப்ப கரையாளர் ..
சதாசிவ பண்டாரம் ... இவர்களின் மூலம் 
நிகழ்வுகள் பயணிக்கின்றன ..
அவர்களவர்கள் வாழ்வினில் ஏற்படும் 
எதிர்பார்த்து ஏமாற்றம் .. எதிர்பாராத மாற்றம் .. 
பேராசையின் விளைவுகள் .., 
மன இச்சையின் அவதிகள்.. என வாசிக்க வாசிக்க நிகழ்வுகள் நம் கண்முன்னே காட்சிகளாக ..
அத்தர் தயாரிப்பில் கொடிகட்டி பரந்த அப்துல் கரீம் குடும்பம் அவரின் குதிரை சூதாட்ட பேராசையால் சீரழிந்து, அவரது மூன்று மனைவிகள் நிலை ..
அமைதியாக வாழும் பத்ரகிரியின் வாழ்வில் அவனது தம்பி மனைவியால் வரும் நிம்மதி குழைவு ..
அளவுக்கு மீறி செல்வமிருந்து தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டு பின்பு அடங்கிப்போகும் கிருஷ்ணப்ப கரையாளர் ..
எங்கோ பிறந்து கால் நடையாகவே ஒரு நாயின் வழிகாட்டுதலால் திருவொற்றியூரில் வந்து சமாதியடையும் சதாசிவபண்டாரம் என மனதை வருடி நிகழ்வுகள் நகர்கின்றன ..
சென்னையும் ,அதன் சுற்றுவட்டாரம் அக்கால கட்டத்தில் எப்படி இருந்தன என்பதையும் நாம் உணர முடிகிறது ..
படைப்பாளர் சொல்லிய இடங்களில் பெரும்பாலும் நான் பயணித்த இடங்கள் என்பதால் , மீண்டும் அந்த இடங்களுக்கு சென்று கதையை கண்ணார காணும் ஆவலில் உள்ளேன் ..
இந்த கொரானா ஊரடங்களிலும் சதாசிவ பண்டாரம் கண்டு வழிபட்டதாக சொல்லப்படும் பட்டினத்தார் கோவிலுக்கும், அவர் நடந்து பழகிய கடற்கரையையும் கண்டு வந்தாச்சு ..
இன்னும் நிறைய எழுத ஆவல் .. அடுத்தடுத்து எழுதுவோம் ..
யாமம் (சு)வாசித்து முடித்ததும் அதன் வாசம் இன்னும் நாசியிலேயே சுத்திக்கொண்டிருக்கிறது ..