உயிர்பெறும் நல்வாழ்வு
~~~~~~~~~~~~~~~~~
பொழுதை வீணாய்க் கழித்தேதான்
அழுது நின்றால் விடியாதே
தொழுது தினமும் முயன்றாலே
பழுதே ஆகா உன்வாழ்வே!
நிறைவை வாழ்வில் கண்டாலே
குறையும் உன்னை அண்டாதே
மறையும் துன்பம் தன்னாலே
பிறைபோல் இன்பம் வளர்ந்திடுமே!
தீங்கு யார்க்கும் நினையாமல்
தாங்கு(ம்) நிலமாய் இருந்தாலே
பாங்காய் உமது நற்பெயரே
ஓங்கி உயரும் மண்மீதே!
பிஞ்சுக் குழந்தை பார்த்திட்டால்
கொஞ்சி மகிழத் தோன்றிடுமே
வஞ்சம் மனதில் மறைந்திடுமே
நெஞ்சம் அமைதி கொண்டிடுமே!
சுரித்த முகம்தான் காட்டிட்டால்
பிரித்து விடுமே உறவுதனை
சிரித்தே இதழ்தான் பூத்திட்டால்
மரித்த மனமும் உயிர்பெறுமே!
அன்பே வைத்தே வாழ்ந்திடுவீர்
பண்பை என்றும் மறவாதீர்
அன்னை மொழியைப் போற்றிடுவீர்
கண்ணாய்த் தமிழைக் காத்திடுவீர்!
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக