வெள்ளி, 23 அக்டோபர், 2015

கீதாரி தாத்தா

  "வருவோரும் போவோரும் பார்த்துக்கொண்டு தான் செல்கிறார்கள்.
யாரும் அவரை பொருட்படுத்தவில்லை.
அவரும் யாரையும் எதிர் பார்ப்பதில்லை.
கோவை பூ மார்க்கெட் பக்கத்திலுள்ள பழைய முருகன் கோவில் மண்டப வாசல் தான் அவரின் இருப்பிடம்.
சிறிது பருத்த உடல். வெண்மையும் அழுக்கும்  நிறைந்த தாடி மீசையுடன்,
மஞ்சள் நிற வேட்டியும், அழுக்கடைந்த தோள் பையுடன், சட்டைப் போடாத உருவம் தான் கீதாரி தாத்தா.

  யாரிடமும் பிச்சைக் கேட்டு கையேந்தமாட்டார். யாரும் சாப்பிட எதுவும் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்.
தினமும் நான் அவரை முருகன் கோவில் மண்டப வாசலில் தான் பார்ப்பது. காலையிலிருந்து மதியம் வரை அங்கிருப்பார்.
பிறகு பையை தோளில் மாட்டிக்கொண்டு பொடி நடையாக நடந்து காந்தி பார்க் சென்றுவிடுவார்.

மாலையில் அங்கு விளையாட வரும் பிள்ளைகளின் விளையாட்டை ஏக்கத்தோடு பார்த்து ரசிப்பார்.
யாருடனும் பேசுவதும் கிடையாது.
பிள்ளைகள் சிரித்தால் சிரிப்பார்.
அழுதால் மனம் கலங்குவார்.
மாலை ஆறுமணிக்கு மேல் மறுபடியும்
பூ மார்க்கெட் கோவில் மண்டபத்திற்கு வந்துவிடுவார். இது தான் இவரின் தினசரி வழக்கம்.

அன்றும் அப்படி தான் அவர் மண்டப வாசலில் அமைதியாக உட்காந்திருந்தார். கோவிலுக்கு வந்த ஒரு குடும்பத்தினர் சாமி கும்பிட்டு, பொங்கல் பிரசாதத்தை தங்கள் குழந்தையிடம் கொடுத்து அவருக்கு கொடுக்கச் சொன்னார்.. குழந்தையும்
"தாத்தா! இந்தாங்க ச்சாமி பிரசாதம்" னு கொடுக்க,
தாத்தா தன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டு 'நீ.. நல்லாயிருக்கனும் தாயி'னு வாழ்த்தினார்.
நான் அப்பொழுதுதான் முதல் முதலாக அவர் குரலினைக் கேட்டேன்.

என் அருகிலிருந்த ஒருவரிடம் தாத்தாவைப் பற்றி விசாரித்தேன்.
அவர் "தெரியலைங்க தம்பி நானும் அவர இங்க பல வருசமா பாத்துட்டு வரேன்..இப்படியேதான் இருக்கார்.
எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சாரோ.. இப்படி கெடக்குறாரு..
இப்படி அமைதியா இருக்குறவங்கள நம்பவேக் கூடாது.. குடும்பத்துல என்ன தில்லுமுல்லு செஞ்சாரோ.. வெரட்டி விட்டுட்டாங்க.." என்று சொன்னார்.

நான் "அய்யா!அடுத்தவங்களப் பத்தி முழுசாத் தெரிஞ்சிக்காம அவங்கள வாய்க்கு வந்த படி பேசக்கூடாதுங்க..
அவங்களுக்கு என்ன மனக்கஷ்டமோ" என்று சொல்லிவிட்டு அவரின் முகத்தைக்கூடப் பார்க்காமல், தாத்தாவை நோக்கி நடந்தேன்.

தாத்தா சூடானப் பொங்கலை ஊதி ஊதி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவர் அருகில் சென்றதும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தலையைத் தூக்கி, 'என்ன' என்பதைப் போல தலையை ஆட்டி, 'சாப்புடுறியா' னு சைகையால் கேட்டார்.
நானும் வேண்டாம் என சைகையால் தலையசைத்தேன்..
'இந்த பிச்சக்காரன் கையால  என்னத்த சாப்புடுறதுனு நினைக்கிறியா தம்பி.. நான் பிச்சக்காரன் கெடையாதுப்பா' என்று பொங்கலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"அப்படிலாம் இல்லைங்க தாத்தா
இப்பதான் சாப்டு வந்தேன் அதான்" என்றதும் என்னைப் பார்த்து ஒரு அமைதி சிரிப்பு சிரித்துவிட்டு சாப்பிட்டு முடித்தார்.
"தாத்தா உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்"
'என்ன' என்பதைப் போல பார்த்தார்.
"நீங்க யாரு? உங்க பேரு என்ன?
எந்த ஊரு? ஏன் யாருகிட்டயும் பேச மாட்றீங்க?"

மறுபடியும் சிரித்துக் கொண்டே " ஒன்னு கேக்குறேனு வரிசையா கேக்குறியேப்பா..
எனக்கு எங்க ஆயி அப்பன் வச்சப்பேரு கீதாரி..
நான் சேதுபதி மவராசன் ஆண்ட ஊரச் சேர்ந்தவன்..
நான் யாருட்டையும் பேசுறதில்லனு யாருச் சொன்னா.. அதோ உள்ள இருக்கானே முருகன் அவன்ட்ட பேசுவேன்.. இதோ மரத்துக்கிட்டப் பேசுவேன்..மரத்து மேல இருக்குற பறவைங்க கிட்ட பேசுவேன்.
அதுக்காக என்ன கிறுக்கன்னு நினைச்சிக்காத..
மனுசங்க யாரும் எங்கிட்ட பேசுறதில்ல..
அதனால நானும் அவங்க கிட்டப் பேசுறதில்ல.. இப்ப நீ எங்கிட்டப் பேசுற..
நா உங்கிட்டப் பேசலையா இதான் வேறென்ன?"
"உங்களப்பத்தி நீங்க சொல்லுங்களேன் தாத்தா"
"என்னப் பத்தி சொல்ல என்னப்பா இருக்கு.. நீ வார்த்தைக்கு வார்த்தை தாத்தானு சொல்றது எம்மனசுக்கு எவ்ளோ சந்தோசமா இருக்குத் தெரியுமா? உன்வயசுல எனக்கு ரெண்டு மூனு பேரப்பிள்ளைங்க இருக்காங்க..
அவங்க ஞாபகம் தான் வருது..
எனக்கு பிள்ளைங்க மூனுமே பய்யனுங்க தான்.
ஊர்ல வெவசாயந்தான்.. வானம் பார்த்த பூமியா இருந்தாலும் அதுக்கு தக்கன வெவசாயம்.
நல்ல வசதியான குடும்பம். எங்க அப்பா அத்தப்பக்கத்துலேய பெரிய மனுசரு. எங்கூடப் பொறந்ததுங்க நாலு தங்கச்சிமாருங்க. எங்க அய்யன் எங்கள சூதுவாதுத் தெரியாம வளத்துபுட்டாங்க".

" பாட்டி?

"பூமயிலுனுப் பேரு, வாயில்லாப்பூச்சி.
வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைக்கிறவ..புள்ளைங்க எல்லாம் பொறந்து வளத்து ஆளாக்கி, கல்யாணங்காட்சி செஞ்சி வச்சி பேரமார்கள பாக்குறதுக்கு முன்னாடி கண்ணமூடிட்டா புண்ணியவதி.
அவ போயிட்டப் பெறவு எனக்கு சீவனமே வெறுமன போச்சு.
புள்ளைங்க...அவங்கள பற்றி என்னத்த சொல்றது..எங்கெரகம் சரியில்ல"

"ஏன் தாத்தா? அவங்க உங்கள பாத்துக்கலையா.. ஒன்னுக்கு மூனுப் பிள்ளைகள் இருந்தும் இப்படியா..
எல்லாரும் இருந்தும் அனாதையா இருக்கீங்களே?

"என்னப்பா செய்யிறது..
நாங்கல்லாம் எங்கப்பா அம்மா சொன்னத மீறுனது இல்ல..கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும், எந்த நல்லது கெட்டதா இருந்தாலும் அவங்களோட கலந்துக்காம செஞ்சது இல்ல..
அவங்கப் பேச்சுக்கு மறுப்பேச்சு இல்ல.
எங்கப்பா கிட்ட இருந்து நிறைய விசயங்கள கத்துக்கிட்டேன்.
ஆனா பிள்ளைங்கள எப்படி வளக்கனும்னு மட்டும் தெருஞ்சுக்காம விட்டுட்டேன்.
அதான் இப்படி அலையுறேன்...ம்ம்ம்.." என்று யார் மீதும் குறைச் சொல்லாமல், தன்னையே நொந்துக்கொண்டு ஒரு நமட்டுச் சிரிப்புடன் காந்திப் பார்க்கை நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினார் கீதாரி தாத்தா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக