திங்கள், 12 அக்டோபர், 2015

என்னத்த சொல்லுவேன்

என்னத்த சொல்லுவேன்..!

என்னத்த சொல்லுவே(ன்)
ஏதுன்னுதான் சொல்லுவே(ன்)
நல்லாதான் நானிருந்தேன்
நாலுதட்டு சோறுதிம்பேன்
உன்னப் பார்த்த பின்னாலே
ஒன்னும் செய்ய தோனலையே
கண்ணமூடி சிரிச்சேதான் ஏ(என்)
நெஞ்ச திறந்து நொழைஞ்ச புள்ள..!

வரப்புமேட்டு மேல நீயும்
வந்து வந்துப் போகும்போது உன்
வாசம் நின்னுப் போகுதடி
வம்பா எம்மனச இழுக்குதடி
வரப்புமேல நடக்குறேனு
வயலுமேல நடக்குறேன்டி
வண்டிமாடு இல்லாம
வண்டியோட்டிப் போகுறேன்டி.!

தட்டுலதான் சோறிருக்க
தரைய நானும் தடவுரேன்டி
தாழ்வாரத்து நெலமறந்து
தலையைக் கொண்டு மோதுரேன்டி
பரட்டத் தலையா கெடந்தவன
படிஞ்சத் தலையா மாத்துனேன்டி
எதுக்க நீயும் நின்னபோதும்
எனக்குள்ள நானே பேசுறேன்டி..!

சீனிக்கரும்ப சிரிச்சி சிரிச்சி
நீயும் கடிக்கும்போது
செதிலு செதிலா சிதறுரேன்டி
சிக்குவிழுந்த முடிக்குள்ள சிக்கிகிட்ட
சீப்பப்போல உங்கிட்டதான் சிக்குனேன்டி
சீயக்காயா நெனச்சுக்கிட்டு
மொளகாய தேச்சுட்டேன்டி
மனசுக்குள்ள உன்ன நெனைக்க
மொளகாயும் சில்லுங்குதேடி..!

மழப்பெஞ்சி வர மண்ணுவாசம் போல
மனசுக்குள்ள நீயும் புதைஞ்சிபுட்ட
மந்தையிலப் போகும் ஆட்டப்போல நானும்
மயங்கி தெனம் உம்பின்னால
வந்து நிக்கிறேன்டி
புத்தியும் கெட்டுப் போயி
பையித்தியமா நா(நான்) ஆறதுக்குள்ள
பக்கம் வந்து நின்னா என்னடி
பாக்கு வெத்தலை மாத்தனுமோடி..!

வெதச்ச நெல்லும் நல்லா வெளஞ்சிருக்கு
பச்சபசேலுனு பூமியும் நெறஞ்சிருக்கு
அறுவடதான் முடியட்டுன்டி
ஆயிஅப்பன கூட்டிவந்து
பரிசம் நானும் போடுறேன்டி..!

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக