திங்கள், 26 அக்டோபர், 2015

திக் திக்..

சித்தரவர் மொழியிலே
சித்தனிவன் உரைப்பதை
சிந்தை தெளிய
சிந்தித்து கேட்பீரே
சித்தம் குளிர்ந்து
சிந்தை தெளிந்து
சினமதை நினைக்க
சினப்பீரே..
சினத்தில் ஆவது
சிந்தையின் சீர்கேடு
சிவனவனருளை
சிந்தையில் கலந்தால்
சித்தம் தெளிந்து
சித்தனாவீரே
சிவபித்தனிவன்
சிந்தையென்றும்
சிவபித்தே.."

கோவை மாநகரையே குளிர் ஆட்சி செய்துகொண்டிருந்தது.
நேரம் இரவு 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.
சாலையோர விளக்குகள் பனியுடன் வெளிச்சத்தையும் பொழி்ந்துக்கொண்டிருந்தன..
என்றும், சென்னையிலிருந்து சீக்கிரம் வந்துச் சேரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் இன்று ஏனோ மிகவும் தாமதமாக வந்துச்சேர்ந்து பயணிகளை உமிழ்ந்துக்கொண்டிருந்தது..

பயணிகள் இறங்கி வேகமாக  இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர். பெரும்பாலானோரை அழத்துச் செல்ல அவர்களுடைய உறவினர்கள் கார்களையும், ஆட்டோக்களையும் எடுத்து வந்திருந்தனர். விரைவிலேயே இரயில் நிலையம் வெறிச்சோடியது.
     கடைசி ஆளாக திவ்யா தனது தோள் பைய்யை மாட்டிக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் சில்லென்ற குளிர் அவளை நடுங்க வைத்தது..
உடனே தன் பையிலிருந்த ஜெர்கின் உடையை எடுத்து மாட்டிக் கொண்டாள்..

திவ்யா..
கோவையில் பிறந்து வளரந்தவள்.
சென்னையில் கல்லூரிப் படிப்பு.
இப்பொழுதுக் கூட கல்லூரித் தேர்வு முடிந்ததும் விடுமுறைக்காக கோவைக்கு வந்துள்ளாள். அவள் வீடு கோவை நகரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நரசீபுறம். அழகிய மலையடிவார கிராமத்தில் உள்ளது.
ஆனால் இப்பொழுது நேரம் 11 ஐ நெருங்குவதால் அவள் ஊருக்கு எந்த வண்டியும் கிடையாது. கடைசி பஸ் இரவு 9.30 க்கே சென்றிருக்கும்.

இரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அவள் 7 மணிக்கேச் சென்று சேர்ந்திருப்பாள். திடீரென்று சென்று இன்ப அதிர்ச்சி தரலாம் என்றிருந்தவலுக்கு, இரயில் துன்ப அதிர்ச்சி தந்துவிட்டது. வீட்டிற்கும் தகவல் தரவில்லை. 9 மணிக்குள்ளாக வந்திருந்தால், அவளது மாமன் மகன் சக்தியையாவது பார்திருக்கலாம்.
காந்திபுரத்தில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்துள்ளான். அவனுடனாவது சென்றிருக்கலாம்.
செல்லில் தொடர்புக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஊரில் சிக்னல் பிரச்சினை.

"ஒழுங்கா வீட்டுக்குச் சொல்லிட்டு வந்திருக்கலாம்.ஆளாவது வந்திருப்பாங்க..என்னத்துக்கு சஸ்பென்ஸ்..இருந்தாலும் இவ்வளவு பிடிவாதம் ஆகாது.. இப்ப யார் அவதிப்படுறது..." என்று மனதின் ஒரு ஓரத்தின் புலம்பல்.

"இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும். சென்னையிலிருந்து அவதி அவதியா தான் இரயில புடிச்சி வந்தோம்..
ஜோலார்பேட்டை வரை வண்டி நல்லா தான் வந்துச்சு.. ஸ்டேசன் வந்ததும்
இன்ஜின் கோளாருனு சொல்லி இவ்வளவு நேரம் ஆக்கிட்டாங்க.
அதுக்கு என்னச் செய்ய முடியும்" மனதின் மறுபுறத்தின் ஆறுதல்..

"அங்க தான் அவ்வளவு நேரம் நிண்டுச்சே. அப்பவாது சக்திக்கு போன் செஞ்சிருந்தா அவனாவது இருந்திருப்பானே.." னு மனதின் ஒரு ஓரத்தின் கோபம்.

"அய்யய்யோ, இப்படியே நினைச்சிட்டு இருந்தோம்..பைத்தியமாயிடுவோம்..
ஆக வேண்டியத பார்க்கனும்" என்று
தனக்குள்ளையே பேசிக்கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். அருகிலிருந்த பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு சிலரும் உள்ளூர் பஸ் வந்ததும் அதில் ஏறிச் சென்றுவிட்டார்கள். அப்பகுதியே வெறிச்சோடியது. தூரத்தில் ஒரு ஆட்டோ ரிக்சா மட்டும் இருந்தது.
அதன் ஓட்டுனரும் குளிருக்கு அடக்கமாக போர்வையை போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தான்.

திடீரென்று பஸ் நிறுத்தத்தின் பின்புறமிருந்து ஒரு பிச்சைக்காரனா பைத்தியக்காரனோத் தெரியவில்லை, 'கிகிகிகி' என்று இளித்துக்கொண்டே திவ்யாவை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்..

திவ்யாவிற்கு "திக்'' என்றது....

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக