வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஓணான்

ஓணான்..
~~~~~~~~

"டேய்! நெஜமா தான் சொல்றியாடா மாரி? நீ தான் இந்த ஓணாவப் புடிச்சியா?"

"ஆமான்டா அக்பரு.. அந்த குட்ட கொரிகலிக்கா மரத்துல தெளிப்பா தலையத் தூக்கி ஆட்டிட்டு இருந்தாரா..
உடனே இந்த நூல்ல சுருக்கச் செஞ்சி அய்யாத் தலைல மாட்டிட்டேன்..ஓடப்பாத்தாரா சுருக்கு நல்லா மாட்டிக்கிச்சு" என தன் கையிலிருந்த நூலில் துள்ளிக்கொண்டு இருந்த ஓணானைப் பார்த்து அக்பர் கிட்ட சொல்லிக் கொண்டு வந்தான் மாரி..
இருவரும் நண்பர்கள்.. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

"எதுக்குடா மாரி இது?"அக்பர்.

" எதுக்கா... இவருசெஞ்ச வேலைத் தெரியுமா.. ஏசு நாதர சிலுவையில அடிச்சிப் படுக்க வச்சிருந்தப்போ..அவருக்கு ரொம்ப தண்ணித் தாகம் எடுத்துச்சா.. 'தண்ணீத் தண்ணீ'னு கேட்டுருக்காரு.. அப்ப இவரு வெறும் காலிக் கொட்டாங்குச்சிய குடுத்துருக்காரு.. அத வாங்கி குடிக்கப்போன ஏசுநாதரு,  அதுல தண்ணி இல்லையேனு பாத்துட.டு தூக்கிப் போட்டாரு..
அப்பறம் அந்தப் பக்கம் ஒரு அணில் வந்துச்சாம்.. அது குடுகுடுனு ஓடிப்போய் தென்னமரத்துல ஏறி தேங்காத் தண்ணி எடுத்துட்டு வந்து குடுத்துச்சாம்.. அத குடிச்சிட்டு ஏசுநாதரு அணில வாழ்த்துனாராம்..
ஓணாவப் பாத்து ,' நீ எனக்கு வெறும் கொட்டாங்குச்ச  தந்ததுனால உன்ன எல்லரும் கல்லால அடிப்பாங்க'னு சாபம் உட்டுட்டராம்.. ஏசு, சாமி தானே அவருக்கு இது அப்படி செய்யலாமா.."

"அப்படியா...இத உனக்கு யாரு சொன்னாங்கடா மாரி?"

"நம்ப உஸ்கூல்ல எட்டாவது படிக்கிதே..
டேவிட் அண்ணா அவ்ருதான் சொன்னாருடா..அக்பரு"

"அப்படியா.. அப்போ இந்த ஓணாவ என்னச் செய்யலாம்..கல்லால அடிச்சிக் கொண்ட்ருவோமா?"

"சாமிய ஏமாத்துன இவர அப்படிக் கொல்லக்கூடாது.. ரயில் தண்டவாளத்துல கட்டி வச்சிட்டா, ரயிலு வந்து ஏத்தி தலத் தனியா, வாலுத் தனியா துண்டாயி செத்துருவாரு.." என்றும் பேசிக்கொண்டே இரயில் நிலையம் நோக்கிப் போனார்கள்.

இரயில் நிலையம் அருகில் செல்லும்போது.. அவர்களுடைய வகுப்பாசிரியர் எதிரில் வந்தார்..
அவர்களைப் பார்த்ததும்,
"என்னங்கப்பா மாரி, அக்பர் எங்க கிளம்பிட்டீங்க? அடேய் மாரி என்னடா உன் கையில் ஓணான் எதுக்குடா அது?
என்னச் செய்யப் போறீங்க?" என்றுக் கேட்க..
உடனே அக்பர், மாரிச்சொன்னக் கதைய ஆசிரியரிடம் சொல்ல, அவரும் சிரித்துக் கொண்டே,
"ஏம்ப்பா மாரி ஏசு நாதர் யாரு?"

"சாமிங்க சார்"

"சாமின்னா ?"

"சாமின்னாஆஆ.. நம்ம முனீஸ்வரன் சாமி, அல்லாக் கோயில் சாமிப் போல ஏசு நாதரும் ஒரு சாமி சார்'' என்றான் மாரி..

" ஆஆஆ..அருமையா.. சொன்னப்பா..
ஆனா எந்த சாமியும் சாபமெல்லாம் கொடுக்காது.. நல்லது தான் செய்யும்..
உனக்கு சொன்னவன் விளையாட்டுக்காக சொல்லிருப்பான்..
அதுக்காக ஒரு உயிர கொல்றது நல்லது இல்லைங்கப்பா.. பாவம் அந்த ஓணான் எப்படித் துடிக்குது பாருங்க.. அத விட்டுடுங்கப்பா..
உண்மையா உங்க மாணவப் பருவம்தான் எந்த சமயத்தையும் பாக்குறது இல்ல.. இத நீங்க கடைசி வரைக்கும் கடைப்பிடிக்கனும்.. சரியா..
முதல்ல அந்த ஓணானை விடுங்க"

"சரிங்க சார்" என இருவரும் ஒரேக் குரலில் சொல்லி ஓணானை விடுவித்தனர்..
விடுதலையான ஓணான்..'ஆள விடுங்கடச் சாமி'னு ஒரே ஓட்டமா ஓடி முள் புதரில் மறைந்தது..

"ம்ம்.. நல்ல பசங்க"னு ஆசிரியர் அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்துச் சென்றார்..

" வாடா அக்பர் விளையாடப் போலாம்" என்று இருவரும் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு சென்றனர்...

முள் செடியின் மறைவிலிருந்து ஓணான் தலையைத் தூக்கிப் பார்த்தது..

விஜயகுமார் வேல்முருகன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக