புதன், 7 அக்டோபர், 2015

ஆ.கலாம் ஆகலாம்.


அன்பினில் ஆகலாம்-நல்
அறிவால் ஆகலாம்-தன்னை
அர்ப்பணித்தே ஆகலாம் கலாம்!

ஆற்றலால் ஆகலாம்-சிறந்த
ஆளுமையில் ஆகலாம்-வீண்
ஆடம்பரம் விட்டே ஆகலாம் கலாம்!

இன்முகம் காட்டி ஆகலாம்-தினம்
இனியவைப் பேசியே ஆகலாம்
இனிதே நடந்தே ஆகலாம் கலாம்!

ஈர்த்திடும் பேச்சில் ஆகலாம்
ஈரத்தின் நெஞ்சால் ஆகலாம்
ஈட்டியென பாயும் சொல்தவிர்த்து ஆகலாம் கலாம்!

உறுதியுடன் உழைத்தால் ஆகலாம்
உள்ளத்தில் தேசம் நினைத்தால் ஆகலாம்
உணர்வில் நேசம் கொண்டால் ஆகலாம் கலாம்!

ஊனமனதை விட்டே ஆகலாம்
ஊக்கம் பிறர்க்களித்தால் ஆகலாம்
ஊரென்று பாராதுழைத்தே ஆகலாம் கலாம்!

எளிமையை நினைத்தால் ஆகலாம்
என்றும் உண்மையாய் நடந்தால் ஆகலாம்
எண்ணித் துணிந்தால் ஆகலாம் கலாம்

ஏணியாக நினைத்தால் ஆகலாம்
ஏக்கம் உடைத்து உழைத்தே ஆகலாம்
ஏற்றம் நாடுபெற நினைத்தே ஆகலாம் கலாம்!

ஐயம் போக்கி உரைத்தால் ஆகலாம்
ஐம்புலனையும் அடக்கியே ஆகலாம்
ஐவிரல் ஒன்றுபட்டால் ஆகலாம் கலாம்..

ஒன்றும் நன்றாய் செய்தால் ஆகலாம்
ஒற்றுமையை கடைபிடித்தால் ஆகலாம்
ஒவ்வொருவரையும் மதித்தால் ஆகலாம் கலாம்!

ஓடியே அறிவைத் தேடினால் ஆகலாம்
ஓய்ந்திடாமல் முயற்சிகள் செய்தால் ஆகலாம்
ஓதியே நூல்பல கற்றால் ஆகலாம் கலாம்!
ஔடதமாய் கலாம் வழி பின்பற்றி
எஃகு வலிமையுடன் ஆகலாம் கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக