கொடுவாள் மீசை அய்யனார்..
நடுநிசியில் திடீரென முழிப்பு வந்தது வைரவனுக்கு.. எழுந்தவனுக்கு ஒன்னுக்கு போக தோன்றியதால்
வீட்டின் கொல்லைப் பக்கம் சென்றான்..
அங்கிருந்து பார்த்தால் அவனது வயற் காட்டினை ஒட்டியுள்ள கொடுவா மீசை அய்யனார் கோவில் தெரியும்..
சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ, ஆல மரத்தினோடு பின்னிப் பிணைந்து பரந்த வேப்ப மரத்தின் அருகில் அய்யனார் மிக பெரிய அளவில் கையில் வாளுடன் உக்கிரமாக பார்த்துக்கொண்டு இருப்பார்..
அதற்கும் கொஞ்சம் தள்ளி..
தலையை அலங்கோலமாக விரித்து போட்ட மாதிரி தோன்றும் எட்டி மரம்..
அதில் வௌவால்கள் தலை கீழாக தொங்கி கொண்டிருக்கும்..
இயற்கை உபாதையை கழித்து முடித்து எழுந்தவனுக்கு, அய்யனார் கோவிலின் சூழல் ஏதோ விசித்திரமாக தெரிந்தது..
அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் ஆனதால் வானில் நிலவும் இல்லை..
ஊருக்கு ஒதுக்கு புரம் என்பதால் அங்கு தெரு விளக்குகளும் கிடையாது.. அந்த பகுதியே இருளாகத்தான் இருந்தது..
திடீர் திடீர் என வெளிச்சம் வந்து வந்து போவது போல இருந்தது..
வெளிச்சம் வரும் பொழுது எட்டி மரத்தின் தோற்றம் மிக பயங்கரமாக இருந்தது.. மரம் முழுவதும் சிறு சிறு ஒளி புள்ளிகள் அதாவது கண்கள் போல தோன்றி மறைந்தது..
கொஞ்சம் துணுக்குற்ற வைரவன்...
'அங்க இன்னியாரம் என்னவா இருக்கும்.. இதற்கு முன்னாடி அங்க சாராயம் காய்ச்சி வித்த கோவிந்தன் திடீர்னு ரத்த வாந்தி எடுத்து செத்துட்டான்.. அன்னையில இருந்து அங்க யாரும் ராத்திரி வேளையில போறதில்ல.. வேற யாராச்சும் புதுசா சாராயம் காய்ச்ச வந்துட்டானுங்களா.. என்னனு தெரியலையே.. ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடுவோமா' என்று தனக்குள்ளே பேசிகிட்டு.. வீட்டின் வாசல் பக்கம் வந்து திண்ணையில் கிடந்த சிலம்பம் தடிய எடுத்துக்கொண்டு மெல்ல ஓசைப்படாமல் வீட்டின் வேலிக்கதவை திறந்து வெளியே சென்றான்.. பழக்கப்பட்ட பாதை என்பதால் இருட்டில் சாதரனமாக நடந்து சென்றான்..
இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது அமாவாசையன்று கோடாங்கி சொன்னதும் நினைவுக்கு வந்தது " நம்ம ஊருக்கு ஏதோ நடக்கப்போகுது.. ஆனா..அது நம்ம கொடுவா மீச அய்யனாரால தடபட போவது..இருந்தாலும் ஊரு மக்கா சூதானமா இருங்க..இருங்க..' னு சொன்னது காதில் கேட்பது போல இருந்தது.. உடனே அவனுக்கு உள்ளூற திக் கென இருந்தது.. இருந்தாலும்..
மனசுல 'கொடுவா மீச அய்யனாரும், எங்குரு நாதர் தந்த இந்த சிலம்ப தடியும் இருக்குற வர எனக்கு பயமில்ல' னு மனசில் அய்யனாரை கும்பிட்ட படியே சென்றான்..
அந்த இருள் வேளையில் சுவர் கோழியின் "கிரீச்..கிரீச்' சத்தத்தை தவிர வேறு எந்த ஓசையும் கேட்கல..
தூரத்துல கேக்கும் நரியோட ஊளை சத்தம் கூட கேட்காமல் படு அமைதியாக இருந்தது..
அய்யனார் கோவிலை நெருங்கி வந்ததும்.. ஏதேதோ வித்தியாசமான ஓசைகள் கேட்டன..
ஏதோ இரு பெண்கள் கோவத்தோடு உருமுவதை போல கர்ண கொடூரமான குரல் சத்தம் கேட்டது..
திகைத்துப் போன வைரவன் அங்கிருந்த ஆலமரத்துடன் இணைந்திருந்த வேப்ப மரத்தருகே ஒளிந்து கொண்டான்..
ஒளிந்திருந்து சற்று எட்டிப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விடும்போல ஒரு அதிர்ச்சி..
கர்ண கொடூரமான, மிகவும் பயங்கரமான உருவங்கொண்ட பெண் அல்ல அல்ல பிசாசு ...
கையில் ஒரு ஆயுதத்துடன்..
எதிர் புரம்..
நம்ம அய்யனார்.. மிகவும் கோபமான குரலில் " மரியாதையாக இங்கிருந்து போய்விடு.. நான் இருக்கும் வரையில் இந்த ஊரையோ.. என் பிள்ளைகளையோ உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. பெண் பிசாசு என்பதால் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.. இல்லையென்றால் என் வாளுக்கு எப்பொழுதோ நீ பலியாகிருப்பாய்..
ஒழுங்கு மரியாதையாக இங்கிருந்து போய்விடு.. இல்லை என்றால் என் வாள் தான் பேசும்" என்றார் இடி இடிக்கும் குரலில்.. அதற்கேற்றார் போல அவர் கையிலிருந்த வாளும் அந்த இருளிலலும் மின்னியது.. அந்த ஒளியில் தான் எட்டி மரத்திலிருந்த வௌவால்களின் கண்கள் மின்னின..
அந்த பிசாசும் தன் ஆயுதத்தை வேகமாக ஆட்டி "முடியாது.. ஒரு மனிதனின் இரத்தத்தையாவது குடிக்காமல் போக மாட்டேன்" என உறுமியது..
அய்யனாரோ.. "உனக்கு கோழியோட இரத்தம் கூட கிடைக்காது போகிறாயா இல்லையா " என கோவமாக சொல்லும் பொழுதே ஆவேசமாக அந்த பிசாசு அய்யனாரை தாக்க வந்தது..
சாமி தன் கையிலிருந்த வாளால் அதன் ஆயுதத்தை தடுத்து சண்டையிட ஆரம்பித்தது..
சண்டை மிக உக்கிரமாக நடந்தது..
அந்த சண்டையின் சத்தத்தை கேட்டு எட்டி மரத்திலிருந்த வௌவால்கள் அனைத்தும் கீச் கீச் என்று கத்திக்கொண்டே பறந்து வானத்தில் வட்டமடித்தன..
அதனை பார்க்க இன்னும் பயங்கரமாக இருந்தது..
திடீரென அய்யனார் மிக ஆக்ரோசமாக தாக்க, பிசாசின் கையிலிருந்த ஆயுதம் கீழே ஆலமரத்தின் அருகே விழுந்தது..
உடனே அதனை எடுக்க பாய்ந்த பிசாசு,
அங்கிருந்த வைரவனை பார்த்து விட்டது...
உடனே.."ஹா ஹா ஹா ஹா.. எனக்கு ஒரு கோழிக்கூட கிடைக்காது என்றாயே..இப்பொழுது எனக்கு ஒரு மனிதனே விருந்தாக கிடைத்துவிட்டான்..ஹா ஹா ஹா ஹா ஹா " என சிரித்துக்கொண்டே வைரவனை பிடிக்கச் சென்றது..
உடனே "எங்குல சாமி அய்யனாரே காப்பத்துய்யாஆஆஆ.." என்று கத்தியபடியே ஓடினான் வைரவன்..
தன் நீளமான கைகளால் ஓடியவனின் காலை பிடித்து இழுக்க, கீழே விழுந்தான்..
அதே நேரத்தில் கொடுவா மீச அய்யனார் தன் வாளை வேகமாக சுழற்றி பிசாசின் தலையை வெட்ட..
திடீரென போர்வையை விலக்கி அலறியபடி எழுந்தான் வைரவன்..
பின்பு சுற்றியும் பார்த்தான் கயிற்று கட்டிலிலிருந்து கீழே விழுந்திருந்தான்..
ச்சேய்.. கனவா..? அப்படியே நேரில் நடந்த மாதிரி இருக்கே என்று கட்டிலை சாய்த்து வைத்துவிட்டு திண்ணையில் உட்க்கார்ந்தான்.. அங்கே பார்த்தால் அவனது குருநாதர் கொடுத்த சிலம்பம் தடி இல்லை..
யோசித்த படியே எழுந்து வரட்டி சாம்பலில் பல்லை துலக்கிவிட்டு..
முகம் கால் கழுவி உடை மாற்றி,
அய்யனார் கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தான்...
அங்கே ஆலமரத்தை அடைந்து பார்த்தால்......
அவனது சிலம்பம் அங்கிருந்தது..
அதிர்ச்சியோடு அதனை எடுத்துக்கொண்டு அய்யனார் சிலையருகே சென்று அண்ணார்ந்து பார்த்தான்..
சிலை எப்பொழுதும் போல் இருந்தது..
பின் திரும்பி நடந்தான்.. நான்கடி நடந்ததும் திடீரென திரும்பி சிலையின் கையிலிருந்த வாளை பார்த்தான்..
அதில்...
சிவப்பாக ரத்தக்கறை..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக