சனி, 6 மே, 2017

திகில் காடு 2

"இல்லாத ஒன்றை எப்படி ஆராய்ச்சி செய்வார்கள்..
இருப்பதனால் தானே..
இல்லை என்று தள்ளிவிடவில்லை..
ஏதோ ஒரு சூட்சுமம் நிச்சயம் உண்டு.
அந்த சூட்சுமத்தை அறியும் வரை ஓயப்போவதில்லை மனம்"

திகில் காடு
    
                            2

திடீரென பதறியெழுந்த சரவணன்,
முகத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு சுற்றியும் பார்த்துவிட்டு.
"ச்சே.. என்ன ஒரு பயங்கரமான கனவு..
ஆனா.. இது அடிக்கடி வருதே.. ஒன்னும் புரியலயே" என்று சொல்லிக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தான்..அதிகாலை மணி 4:30 மறுபடியும் அதிர்ந்தான்..
'ஆமா..இதுக்கு முன்னாடி கனவு வந்தப்போவும் இந்த நேரந்தான் .. ஒன்னும் புரியலையே..ம்ம்..' என்று மறுபடியும் படுத்தான் .. அதே காட்சி கண்முன் வர உருண்டு புரண்டு பார்த்தான் ம்ஹூம் தூக்கம் வர அடம்பிடித்தது..

  எழுந்து சன்னலை திறந்து பார்த்தான்..
தெரு விளக்கு லேசாக தூறும் பனியில் மங்களாக தெரிந்தது..

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த லேப்டாப்பை  இயக்கி ஏதோ எழுதினான்..
மணி 5 ஆனதும் லேப்டாப்பை மூடிவிட்டு , குளியலறை சென்று பல் தேய்த்து முடித்து , தன் ஜாகிங் போகும் உடைக்கு மாறி, வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினான்.

'சரவணன்' இவரு  தாங்க இந்த கதையோட கதாநாயகன்..
இவனபற்றி சுருக்கமா சொல்லிடுறேன்..
அப்பா அம்மா கிடையாதுங்க ..
சின்ன வயசுல நடந்த ஒரு விபத்துல அவங்க ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டாங்க.. இவனை வளர்த்தது , படிக்க வச்சது எல்லாம் அவங்க அத்தை தாங்க.. அவங்களுக்கு ஒரு பையன்.. அவங்க மதுரையில இருக்காங்க..
நம்ம ஆளு இங்க சென்னையில ஒரு பெரிய பத்திரிக்கையில வேலை பார்க்கிறார்.. கை நிறைய சம்பளம்..
சரி.. இதுக்கு மேல அவரு புராணம் போதும்.. போகப்போக பார்க்கலாம்..

மணி 6:30
வீட்டுக்குத் திரும்பிய சரவணன்
கடகடவென தனது காலைக்கடன்களை முடிச்சிட்டு, உடை மாற்றினான்..

மணி 8:00
செல்ஃபோன் சினுங்கியது..
சிரித்துக்கொண்டே அதனை எடுத்து,
"வணக்கம்...
சொல்லுங்க அத்த..
ம்ம்..
கிளம்பிட்டேன்..
ம்ம்..ம்ம்..
இனிமேல் தான்..
சரிங்க அத்த..
சரிங்க அத்த..
ஆஆ.. சரி. வச்சிருங்க அத்த"

தினமும் சரியாக காலை எட்டு மணியென்றால் அத்தையின் அழைப்பு தவறாது வந்துவிடும்.. சென்னைக்கு வந்த மூன்று வருடங்களாக இப்படித்தான்..

தனது அலுவலக பையில் லாப்டாப்பை திணித்து, தனது பைக் சாவியை எடுத்து, வீட்டைப் பூட்டிக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி, கீழிருந்த ஆச்சி மெஸ்ஸுக்கு வந்தான்..

சுடச்சுட வீட்டு டிபன்.. சிரித்துக்கொண்டே பரிமாறினார் பொன்னம்மா ஆச்சி..
(நம்ம மனோரமா ஆச்சி சாயல்ல இருப்பாங்க)

பக்கத்தில் ஆச்சியின் கணவர்
ராமசாமி அய்யா.. அவருடைய மெஸ் பையனிடம்
"டேய்..செல்லப்பா.. தம்பிக்கி தண்ணி வையி"..என்று சொல்லி விட்டு பேப்பர் படித்துகொண்டிருந்தார்.

" வணக்கமுங்கணே. வேலைக்கு கிளம்பிட்டீங்களா?" செல்லப்பா.

"ஆமா.. செல்லப்பா.. கொஞ்சம் சட்னி கொடுப்பா" என்று சரவணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
போலீஸ் ஏட்டு மெஸ்ஸுக்குள் நுழைந்தார்..

"வாங்க ஏட்டைய்யா.. என்ன நைட்டு சாப்புட வந்தவுக.. விருட்டுனு கிளம்பிட்டிங்க..என்னாச்சு?" ராமசாமி அய்யா.

"அதயேங் கேக்குறீங்க அய்யா.. நேத்து நைட்டு நம்ம ஊரு சுடுகாட்டுல ஒரு பயங்கரம் நடந்துடுச்சுங்க.." என்று சொன்னதும்,

சாப்பிட்டிட்டு இருந்த சரவணன் அதிர்ச்சியாக தலையை தூக்கி இருவரையும் பார்த்தான்....

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

முந்தைய அத்தியாயம்

http://vijayakumarvelmurugan.blogspot.in/2017/05/blog-post_31.html?m=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக