செவ்வாய், 16 மே, 2017

திகில்காடு 4

மனம் தேடும் வரையில் சூட்சுமத்திற்கான விடைகள் கிடைக்காது..
உன்னில் நுழைந்து உன்னை அறியும் ஆவல் என்று மோலோங்குகிறதோ அப்பொழுதே சூட்சமத்திற்கான முடிச்சுகள் அவிழ்த்துவிடப்பட ஆரம்பிக்கின்றன..
அப்படி உன்னில் நீ நுழையவே சரியான வழி காட்டுபவரே குரு.. அத்தகைய குரு கிடைக்கும் வரையில் தேடுதலை நிறுத்தாதே
மனமே..

திகில் காடு

                             4

  ஒரு பெண் தான் இதை செய்ததா என ராமசாமி அய்யா கேட்டதும்,
சரவணனுக்கு முன் தினம் வந்த கனவில் ஒரு பெண் எரியும் பிணத்தை சாப்பிடும் காட்சி தான் நினைவிற்கு வந்தது.. முகம் மாறியது..
அப்போது..
'சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ..
சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ..'
என சங்கர் மகாதேவன் சரவணனின் மொபைல் போனில் பாடினார்..
"ஹலோ... ம்.. சொல்லுடா சிவா..
அப்படியா..
"_ _ _ _"

"நீ எங்க இருக்க?"

"------------"

"சரி.. நான் கிளம்பிட்டேன்..
நீ அங்கேயே இரு..
வந்துடுறேன்.." என்று போனை வைத்துவிட்டு, "என் கூட ஆபீஸ்ல வேலை செய்யுற நண்பன் சிவா.. அவனோட பைக் பஞ்சர் ஆகிடுச்சாம் அய்யா.. நான் கிளம்புறேன் .. இரவுல வந்து பேசுறேனுங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

"சரி.. நானும் கிளம்புறேன் .. ஸ்டேசன் போயிட்டு என்னனு விசாரிக்கனும்.. இரவு சந்திப்போம்" என்று ஏட்டய்யாவும் கிளம்பினார்..

சரவணன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்..
போகும் வழி முழுவதும்,
கனவினை பற்றிய சிந்தனையும்,
ஏட்டைய்யா சொன்ன தகவல்களும் மாறி மாறி கண்முன்னே நடப்பதை போன்ற உணர்வுடன் வண்டியை மெதுவாக தான் ஓட்டிச் சென்றான் ..
அப்பொழுது
திடீரென ,
ஒரு பையன் குறுக்கே ஓடி வந்தான்..
சரவணன் பிரேக்கை அழுத்து முன் அவன் மீது பைக் மோதிவிட்டது..
அவன் கீழே விழுந்தான்..
சரவணன் சற்று தடுமாறி, சுதாரித்து பின்பு நின்று வண்டியை நிறுத்தி விழுந்தவனை தூக்கினான்..
அதற்குள் நான்கைந்து பேர் கூடிவிட்டனர்..
அதில் ஒருவர் "ஏம்பா.. பைக்கு பாத்து வரமாட்டியா" னு கேட்க..

உடனே கீழே விழுந்த பையன் "அண்ணே..அண்ணே.. அண்ணே..
ஏம்மேல தான் தப்பு .. நாந்தான் ட்ரெய்ன புடிக்க போற அவசரத்துல இந்த அண்ண பைக்ல வந்தத கவனிக்கலைங்கணே.. நீங்கலாம் போங்க.. எனக்கு ஒன்னும் அடியில்ல" என்று கூடியவர்களை விலக்கினான்..

பின்பு சரவணனை பார்த்து
"அண்ணே.. சாரிங்கண்ணே.. இன்னும் அரை மணி நேரத்துல ஊருக்குப் போற ட்ரெய்ன புடிக்கனும், நண்பர்கள்லாம் காத்துகிட்டு இருப்பாங்களேனு அவசரத்துல ஓடி வந்தேங்கண்ணே..
கவனிக்கலை.. மறுபடியும் சாரிங்கண்ணே" என்று வெள்ளேந்தியாக பேசுன அவனை பார்த்து சிரித்துவிட்டு,
"சரி..நீ எந்த ரயில்வே ஸ்டேசனுக்குப் போகனும்?"

அவன் " நான் எக்மூருக்கு போகனும்ணே.. இப்படியே நான் பார்க் ஸ்டேசனுக்கு போயிட்டேனா .. அங்க எலக்ட்ரிக் ட்ரெயின புடிச்சிட்டு எக்மூருக்கு போயிடுவோம்னு ஓடி வந்தேண்ணே.."..

"அப்படியா சரி.. நான் எக்மூர் வழியாதான் போறேன் வா உன்ன இறக்கிவிட்டுட்டுப் போறேன்.." என்று சரவணன் சொன்னதும்,

"ரொம்ப நன்றிங்கண்ணே" என்று தன் பையை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான்..

"சரி... அடி எதுவும் பலமா பட்டுச்சா"

"அடியெல்லாம் ஒன்னும் படலைங்கண்ணே.. ஏம்பேக்கு மேல விழுந்துட்டேன்.. அதனால அடிப்படல"

"உன் பேரென்ன.. எந்த ஊருக்குப் போற"

"ஏம்பேரு சேதுபாண்டி ணே.. கன்னியாக்குமரி பக்கத்துல ஆரல்வாய்மொழி.. அங்க இருந்து கொஞ்சந்தள்ளி 'திடீர்காடு'ங்கிற ஊருக்குணே.. . அங்க  கோவில் திருவிழாக்குப் போறேண்ணே..."என்றான்..

"கன்னியாக்குமரிங்கிற.. ஆனா மதுர பேச்சு பேசுற?"

"அண்ணே.. அது என்னோட பிரண்டு ஊருண்ணே.. எனக்கு மதுரை தான்ணே.. பக்கத்துல பசுமலைண்ணே..நீங்களும் மதுரையாணே?"

"ஆமாம்பா.. மதுரை திருமங்கலம்"
என்று இருவரும் பேசிக்கொண்டு வரும்போதே எலும்பூர் ரயில் நிலையம் வந்தது..

"ரொம்ப நன்றிங்கணே.. . அண்ணே ஊருக்கு வந்தா பசுமலைக்கு வாங்கண்ணே.. அங்க பஸ் ஸ்டாண்டுல சிலம்பம் சேதுபாண்டி அய்யா வீடுன்னு கேட்டா யாரு வேணும்னாலும் சொல்வாங்கண்ணே.. அது எங்க தாத்தா பேருண்ணே..போயிட்டு வரண்ணே.." என்று சொல்லிவிட்டு சேதுபாண்டி இறங்கி சென்றான்..

சரவணனும் அவனுக்கு சிரித்தபடியே தலையசைத்து விட்டு வண்டியை எடுத்து கொஞ்ச தூரம் சென்றான் ..
அங்கே அவனது நண்பன் சிவா நின்றிருந்தான்..

"ஏம்பா சரவணா.. இது தானா நீ சொன்ன கொஞ்ச நேரம்?" சிவா கேட்டான்..

"இல்ல சிவா.. வர வழியில ஒரு சின்ன விபத்து" என்று நடந்ததை கூறினான்..

"அதானே.. நடந்து போறவங்க மேல தப்பு இருந்தாக் கூட, உடனே பைக்ல வரவன தான் எகிறுவானுங்க..
உன்னோட நல்ல நேரம் பையன் மாத்தி சொல்லல.. சொல்லியிருந்தா உனக்கு கஞ்சி தாண்டி" என்றான் சிவா..

"சிவா.. மதுரக்காரவங்க தப்பு செஞ்சா ஒத்துப்பாங்க.. மத்தவங்கள தேவயில்லாம கோத்து விடமாட்டாங்க"

"தோடா.. ஆரம்பிச்சிட்டாருப்பா நாட்டம..
வண்டிய சீக்கிரம் கிளப்பு.. லேட்டாச்சு...
மேனஜரு வீங்குன வாயன் வாசிக்க ஆரம்பிச்சிடுவான்"

"ஹா ஹாஹா...
சரி சீக்கிரம் வண்டில ஏறு..
அப்பறம் சிவா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்" என்று சரவணன் சிவாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்...
அப்பொழுது...
அவர்களை நோக்கி ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது

(தொடரும்)
 

முந்தைய பதிவினை படிக்க..
~~~~~~~~~~~~~~~~~~~~~

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக