ஞாயிறு, 28 மே, 2017

அது

ஓங்கி அடித்ததில் எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை.
சுற்றிலும் தேடித்தேடிப் பார்த்தான்.. கிடைக்கவேயில்லை
நேரம் ஆக ஆக முகத்தில் பதற்றம் அதிகமாக தொடங்கியது..
நெஞ்சும் திக் திக் என்று அடித்தப்படியே இருந்தது..
"அய்யய்யோ என்னத்த செய்வேன்" என்று முணுமுணுப்பு..
பக்கத்தில் இருந்த செடிகளில் எல்லாம் கூர்ந்து கவனித்து தேடினான்..
ஊஹூம்..கிடைக்கவில்லை..

திடீரென முன்பக்கமாக யாரோ இரும்பு கதவை திறக்கும் சத்தம் கேட்டது..
"அய்யய்யோ.. ஆளு வந்திடுச்சுப் போலையே.. என்ன செய்வேன்" என்று மண்டையில் கையை வைத்து மேலே பாத்துவிட்டு கீழே பார்த்தான்..கண்கள் பளீரென விரிந்தது.. கல்லின் பக்கத்திலேயே "அது" இருந்தது
"யப்பாடி.. கிடைச்சுதுடா சாமி" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே கையில் எடுத்ததும்,
"என்னங்க.. துணியெல்லாம் தோச்சாச்சா..?" என்று ஒரு பெண்ணின் குரல்..
"ம்ம்ம்.. தோச்சாச்சுமா" என்று சொல்லியபடியே கையில் எடுத்ததை துணி நிறைந்த தண்ணீர் பக்கெட்டில் சட்டுனு போட்டுவிட்டு சொன்னான்..

"சரி... புதுசா வாங்குன நைட்டிய தனியா தானே தோச்சீங்க?"

"ஆமாமா.. தனியா தான்.. சரி.. நீ போமா.. பிளாஸ்க்ல டீ இருக்கு.. குடிச்சிட்டு ரெஸ்ட் எடு. துணிகள புழிஞ்சி காயப்போட்டு வந்துடுறேன்" என்று சொல்ல..

"ம்ம்ம்..புது நைட்டி பத்ரம்" னு சொல்லிட்டு போக..

உடனே "அதை" போட்ட துணி நிறைந்த தண்ணீர் பக்கெட்டில் கையை விட்டு தேடி எடுத்தான்..
கையில் .. ஒரு பெரிய அளவு 'பட்டன்'..

அலசி போட்ட துணிகளில் இருந்து ஒரு துணியை எடுத்து , அந்த 'பட்டனை' வைத்து அளவு பார்த்தான்..
"அப்பாடி .. இது இந்த புது நைட்டியோட பட்டனே தான்.. நல்ல வேள கிடைச்சிடுச்சு.. இல்ல நம்மல துவைச்சி எடுத்திருப்பா.. இனி துணிகள ஓங்கி அடிக்காம தோய்க்கனும்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நகர்ந்தான் அவன்..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக