சனி, 6 மே, 2017

கறுப்பு அய்யனார்

கறுப்பு அய்யனார்.

  உச்சி வெயில் மண்டையை பிளக்குற அளவுக்கு இருந்தாலும், நம்ம எல்லைச்சாமி கறுப்பு அய்யனார் கோவில் பக்கம் மட்டும் எப்பொழுதும் குளுகுளுனே இருக்கும்..
  கோவிலுக்கு நேர் எதிரே கம்மாக்கரை..
கோவிலுக்கு பின்பக்கம் பசுமையான வயல்வெளி.. வலப்புறம் ஊருக்குள்ள போகிற பாதை.. இடதுபுறம் காடு..
அதனால் எப்பொழுதும் குளிர்ச்சியாக தான் இருக்கும்..
விடுமுறை நாள்கள்ல நிறைய பிள்ளைகள் வந்து அங்குள்ள ஆலமரத்தில் வந்து விளையாடுவார்கள்..
  இன்று, அங்கு ராமு தாத்தாவின் மாடுகளும், ஆடுகளும் கம்மாக்கரை ஓரமாக மேய்ந்துகொண்டிருந்தன..
காற்று கொஞ்சம் பலமாக வீசி கோயில் தோரண வாயில் மணியை அசைத்து சிறிய அளவில் 'ணங்..ணங்..' ஓசையோடு விளையாடிக்கொண்டிருந்தது..
  மாடுகள் மேய்ந்துகொண்டே மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு விலகி ராமு தாத்தா வீட்டை நோக்கி சென்றன..

  அதில் ஒரு கன்று குட்டி மட்டும் மேய்ந்தபடி காட்டின் அருகே சென்றுவிட்டது...
  அங்கு ஆட்கள் நடமாட்டமும் இல்லை..
திடீரென்று காட்டிற்குள் சலசலப்பு..
குரங்குகளும், பறவைகளும் "கீச்..கீச்' என்ற அலறல்..
  கன்றுகுட்டி இதனை கேட்டு மிரண்டு ஒன்றும் புரியாமல் அங்கேயே 'மா..மா..' னு கத்தியபடி நின்றது..
அப்பொழுது நான்கைந்து ஓநாய்கள் ஊளையிட்டபடியே காட்டுப் புதரிலிருந்து வெளி வந்தன..
அப்படியே கன்றை சுற்றி வட்டமடித்தன..
கன்றும் தப்ப முயன்று அங்கிருந்து துள்ளிகுதித்து ஓட முயன்றது.. ஊஹூம்.. ஓநாய்கள் விடுவதாக இல்லை..
இருந்தாலும் கன்று விடாமல் போராடி கறுப்பு அய்யனார் கோவிலுக்குள் வந்து விட்டது..
  திடீரென காற்று வேகமாக அதாவது புயலைப்போல வீச ஆரம்பித்து, கோவிலில் இருந்த மணிகள் எல்லாம்
" டங்..டங்..டங்.."என பலமாக சத்தம் எழுப்பி ஆடின..
அப்பொழுதும் ஓநாய்கள் அசராமல் கன்றை நெருங்குவதிலேயே குறியாக இருந்தன..
"டம்..டமார்"
திடீரென ஒரு மின்னல் வெட்டி இடியோசை கேட்டது..
சற்று குழை நடுங்கி தான் போயிருக்கும் அந்த ஓநாய்களுக்கு..
சற்று நடுங்கி பதுங்குவது போல பதுங்கி மீண்டும் ஓநாய்கள் கன்றினை நெருங்க... அதில் ஒரு ஓநாய்  கன்றினை பிடிக்க பாய்ந்து செல்ல..
அப்பொழுது..
'சர்.சர்..சர்..சர்..'என சுழன்றபடி ஒரு சிலம்பு தடி அந்த ஓநாயை தாக்க
பயங்கரமான சத்தத்துடன் அது அலறி விழுந்தது..
மற்ற ஓநாய்கள் திரும்பி பார்க்க,
அங்கே கோவில் வாசலில் நல்ல வாட்டசாட்டமான ஆறடி உயரத்தில் தலையில் துண்டும், இடுப்பில் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, சிறிது கறுத்த நிறத்தில் ஒரு இளைஞன் ஆக்ரோசமாக நின்றிருந்தான்..

அப்பொழுது ஓநாய்கள் கன்றினை விட்டுவிட்டு  இளைஞனை தாக்க கொடூரமாக உறுமியபடி பாய்ந்தன..
சற்றும் அசராத இளைஞன் தன் கால்களை வேகமாக அங்கிருந்து ஒரு கல்லில் ஊன்றி பாய்ந்து சென்று ,
ஓநாயை வீழ்த்திய சிலம்பம் இருந்த இடத்தில் குதித்து அதனை எடுத்து வேகமாகவும், லாவகமாகவும் சுழற்ற ஆரம்பித்தான்..
அவன் சுழற்றிய வேகத்தில் 'சர்சர்..டர்டர்.பர்பர்..'என காற்று கிழிப்படும் ஓசை கேட்டது..
  ஓநாய்கள் மீண்டும் திரும்பி இளைஞனை நெருங்கி பாய,
"சத்..சத்..சத்." என ஒவ்வொன்றாக சிலம்பத்தில் சிக்கி அடிபட்டு மூலைக்கு ஒன்றாக விழுந்தன..
அதில் இரண்டு உருண்டு புரண்டு எழுந்து காட்டை நோக்கி ஓடின..
மீதமிருந்த இரண்டு மீண்டும் இளைஞனை தாக்க பாய..
அவன் இன்னும் வேகமாக சிலம்பத்தை சுழற்ற
வாயில் இரத்தத்துடன் கீழே விழுந்து
அலறி இரண்டும் நொண்டியபடி காட்டை நோக்கி ஓடின..

பின்பு இளைஞன் கன்றின் அருகே சென்று அதனை தடவி கொடுத்து,
அதன் பயத்தை போக்கி திரும்புகையில், கோவில் வாசலில்
"யாருங்க தம்பியது" என்று குரல் கேட்டு திரும்புகையில், ராமு தாத்தா நின்றிருந்தார்..
"அய்யா..எம்பேரு சுடலைங்க.. பக்கத்து ஊரு தானுங்க.. ஒரு சோழியா வந்தேனுங்க.. ரொம்ப தாகமா இருக்குனு கம்மாயில இறங்கி தண்ணிய குடிச்சிட்டு எழுந்தா..
அய்யனார் சாமி கோயில்ல இருந்து கன்னுகுட்டி விடாம கத்துற சத்தம் கேட்டுச்சுங்க.. ஓடி வந்து என்னடானு பார்த்தா ... நாலஞ்சி ஓநாய்க கன்னுகுட்டிய சுத்து போட்டுச்சுங்க.." என அங்கு நடந்ததை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் இளைஞன்..

"அதோ.. பாருங்க.. மூலையில ஒரு ஓநாய் விழுந்து கெடக்குதுங்க.." என்றதும்..

"ஆகா...யேங்குலச்சாமி தான்யா.. உன்ன அனுப்பி வச்சிறுக்கு..
இது அந்த கறுப்பு அய்யனாரோட ஊரு..
அதுல இருக்குற உசுருங்களுக்கு அந்த கறுப்பு தான் காவலு, அது மனுசனா இருந்தாலுஞ்சரி, வாயில்லா சீவனா இருந்தாலுஞ்சரி..
நானும்.. என்ன்னடா.. எல்லா ஆடு மாடுகளும் வந்திடுச்சே.. இந்த செவலைய (கன்றை பார்த்து) காணோம்னு ஓடியாந்தேன் தம்பி..
நீங்க ரொம்ப நல்லாயிருக்கனும், உங்க குடும்ப மக்காவுக்கு ஒரு கொறையும் வராம இந்த கறுப்பு காப்பாத்தனும்னு வேண்டிக்கிறேந்தம்பி" என்று சொல்லும்போதே முதலில் விழுந்த ஓநாயும் எழுந்து ஓட ஆரம்பித்தது..

"பரவாலைங்க அய்யா.. இந்த கறுப்பு இருக்குற வரைக்கும் நம்ம மண்ணுக்கு ஒரு கொறையும் வராதுங்கையா..
அப்ப நான் கெளம்புறேனுங்க அய்யா.."
என்று சொல்லிய படி அந்த இளைஞன் தன் சிலம்பை கையிலெடுத்து புறப்பட்டான்..

சோமு தாத்தாவும் "மவராசனா போயிட்டு வாதம்பி" என வாழ்திவிட்டு கன்றை தன் கையோடு பிடித்து சில அடிகள் நடந்தவர் 'அடடே.. அந்த பிள்ளைய வீட்டுக்கு கூப்டு ஒரு வாய் மோரு கூட கொடுக்காம அனுப்பிட்டோமே' என நினைத்து
"ஆஆஆ..தம்பி" என அழைத்துக்கொண்ட திரும்பியவர்..
அங்கே இளைஞனை காணாமல் திடுக்கிட்டு இங்குமங்கும் தேடி கூவி அழைத்துப் பார்த்தார்.. தூரத்தில் காக்கையின் சத்சத்தத்தை தவிற ஒன்றும் கேட்கவில்லை..
அப்படியே திரும்பி கறுப்பு அய்யனாரை பார்த்து "ஆகா" என்றபடி கைத்தூக்கி கும்பிட்டார்..
அங்கே.. அந்த இளைஞனின் சிலம்பு அய்யனாரின் கைகளில் ஒன்றில் ஆடிக்கொண்டிருந்தது...

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக