வியாழன், 1 ஜூன், 2017

தோழியர் கதை

"சின்ன வயசுல ஆரம்பிச்சது..
சுடுகாடு போற வயசுக்கூட ஆகிடிச்சி..
கட்டிகிட்ட புருசனுங்கள புதைச்ச எடத்துல புல்லுக்கூட மரமா  வளர்ந்துடிச்சி..
இந்த சிரிக்கிங்க உசுரு தான் இன்று ஒன்னா ஒட்டிகிட்டு கெடக்கு.. எந்த சென்மத்துல என்ன புண்ணியஞ்செஞ்சோமோ..
ஒன்னுமண்ணா ஒத்தாசையா இருக்கோம்..
யாராவது இது யாருனு கேட்டா..
'என் சினேகிதகார புள்ள' னு சொல்லும் போது எம்புட்டு
சுகமா இருக்கும் தெரியுமா..

ஆத்தா, அப்பு, அண்ணந்தம்பி, அக்கா தங்கச்சிலாம் ரத்த உறவுங்கிறதுனால பாசம் வர்றது சகசந்தான்..
ஆனா.. எந்தவித உறவுமில்லாம, உள்ளுக்குள்ளார பாசம் பொத்துகிட்டு வரதுனால தான் என்னவோ சினேகிதங்கிறது ரொம்ப திடமா அமைஞ்சி போயிடுது..
எங்கிட்டு போனாலும் நாங்க இணபிரியாம போறது..
ஒரு சினேகித்த்துனால எத்தன பேரு உறவா மாறுறாங்க..
எம்புருசனும், அவ புருசனும் நல்ல சினேகிதங்க.. அத போல எங்க பிள்ளைங்களும், பேரப்பிள்ளைங்களும் சினேகமாதான் இருக்காங்க..
மனசுக்கு எவ்வளவு சந்தோசம்பு..
அந்த சாமிகிட்ட நா வேண்டுறதெல்லாம் .. உசுரு போனா  எங்கோடது ஒன்னா  போயிருன்னுஞ் சாமீன்னு தான் அப்பு" என்று வெற்றிலை பாக்க இடிச்சிகிட்டே என் கிட்ட சொல்லிபுட்டு இடிச்ச வெற்றிலைபாக்கை எடுத்து வள்ளிப்பாட்டிக்கு பாதி ஊட்டிவிட்டு தானும் வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார் மங்கா பாட்டி..
கண்களை துடைத்த படியே அவர்களின் இருவரின் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்த என்னை.. "மவராசனா இருக்கனும் அப்பு" என்று என்னை எழுப்பி இருவரும் அணைத்து ஆளுக்கொரு கன்னத்தில் எனக்கு முத்தமிட்டபோது ஒட்டிய வெற்றிலை எச்சிலில் அவர்களின் நட்பின் பாசம் எனது நெஞ்சில் அச்சாய் பதிந்தது...

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக