வெள்ளி, 6 அக்டோபர், 2017

சுடுகாட்டில் மரம்

"சுடுகாட்டுல இத்தன மரங்கள நட்டு வக்கிறீங்களே எதுக்குண்ணே?"

"அதுவொன்னுமில்ல ணே.. நான் ஒரு வேள மண்டைய போட்டுட்டேனா என்னோட உடம்ப இங்க ஏதாவது ஒரு மரத்துக்கு கீழ புதைச்சிடுவீங்கள அதுக்கு தான் ணே"

"அச்சச்சோ.. ஏன்ணே இப்படி அபசகுனமா பேசுறீங்க?"

"ஹா ஹா ஹா ஹா..என்னணே.. ஒரு வெட்டியானா இருந்துகிட்டு அபசகுனம்கிறீங்களே.. எப்படி இருந்தாலும் ஒரு நாள் சாவத்தான் போறோம்... அப்ப நீங்க தான் எரிக்கவோ, பொதைக்கவோ போறீங்க.."

"அண்ணே.. அது மத்தவங்களுக்கு, நான் பொதைக்கிறதெல்லாம் மண்ணோடு மண்ணா மக்கி போயிடும்.. ஒன்னுத்துக்கும் உதவாம போயிடும்.. ஆனா.. நீங்க புதைக்கிறது இருக்கே.. இல்ல இல்ல.. விதைக்கிறது இருக்கே.. அது மரமா வளந்து எத்தன மனுசங்களுக்கு நிழல் தருது.. அதவிட பெரிய விசயம் எத்தன பறவைங்களுக்கு அது கூடாக, வீடாகவோ இருக்கும் தெரியுமா.. அப்படி பட்டவரு நீங்க அது போலலாம் சீக்கிரமா மண்டைய போடக்கூடாதுங்க ணே"

"ஹா ஹா ஹா ஹா ஹா... அட விடுங்க ணே.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுகிட்டு.. நீங்களும் மர நட ஆரம்பிங்க ணே"

"நிச்சயமா ணே, நாளைக்கே ஆரம்பிச்சுடுறேன்...
ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம் ணே?"

"சொல்லுங்க ணே"

"உங்கள இங்க தான் புதைப்பாங்க னு என்ன நிச்சயம்?"

"அண்ணே.. இந்த 30 கிமீ சுத்துவட்டாரத்துல இருக்குற எல்லா சுடுகாடுகள்லையும் மரங்கள நட்டு வச்சிருக்கேன்ணே.. அங்க இருக்குற ஆளுங்க கிட்டையும் சொல்லி வச்சிருக்கோம்ல"

"ஹா ஹா ஹா.. சூப்பருங்கணே.."

"இந்தாங்கணே.. இன்னைக்கி என்னோட மகனுக்கு முத கல்யாண நாளு.. சுவீட் வாங்கிக்கோங்க.. அதனால் தான் ணே இன்னைக்கி இந்த மரக்கன்றுகள் நட்டுறுக்கேன்"

"ஆகா..ஆகா.. அசத்தலுங்க ணே.. எப்போல இருந்து ணே இப்படி?"

"அது என்னோட 12 வயசுல ஆரம்பிச்சதுணே.. அது படிப்படியா வளந்து என்னோட பிறந்த நாளு, அப்புறம் எங்குழந்தைங்க பிறந்த நாளுனு நட ஆரம்பிச்சு இவ்ளோ தூரம் வந்தாச்சு ணே... இன்னும் இருக்குற காலம் வரைக்கும் முடிஞ்ச அளவுக்கு நட்டுட்டு போயிட்டே இருக்கனும் ணே"

"ஆகா.. உங்க நல்ல மனசுக்கு ரொம்ப வருசம் நல்லாயிருப்பீங்க ணே"
என்று முன்பு, இறந்தவரும் இவரும் பேசிக்கொண்டதை நினைத்துக்கொண்டு பிணத்தின் அருகே கண்ணீரோடு அமர்ந்திருந்தார் அந்த வெட்டியான்..

விஜயகுமார் வேல்முருகன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக