திங்கள், 11 டிசம்பர், 2017

பூவுடன் குரங்கு (பண்ணையாரும் தலயும்)

#பூவுடன்_சேர்ந்த_குரங்கும்..
(பண்ணையாரும், தலயும்)

நம்ம பண்ணையாரு அவரு வளர்க்கும் அந்த குரங்கையே ரொம்ப நேரம் பாத்துகிட்டே இருந்தாரு..
அந்த நேரம் பார்த்து தல அந்தப்பக்கமா வந்தாரு..
"வணக்கம்.. பண்ணையார்.. என்ன.. உங்க குரங்க வச்சக் கண்ணு வாங்காம பாக்குறீங்க.. என்னாச்சு"

"அட வாங்க தல..
அது வேற ஒன்னுமில்ல.. எப்பவுமே உங்கள போல துறுதுறு னு இருக்கும்..
(இத கேட்டதும் தல தன்னோட மண்டைய பரட்டு பரட்டு னு சொரிஞ்சிகிட்டே குரங்கையும் பண்ணையாரையும் மாறி மாறி பார்த்தார்)
அதோ அந்த மரத்துக்கு கீழ இருக்குற புள்ளையார் சிலைக்கிப் போடுற மாலைய எடுத்து, ஒவ்வொரு பூவா எடுத்து கசக்கி பிச்சிப் போட்டுடும்..
இது ரொம்ப நாளா நடந்துட்டு வருது..
ஆனாஆஆஆ.. இன்னைக்கி என்னடானா ஒரே ஒரு பூவ வச்சிகிட்டு திருதிருனு முழிச்சிகிட்டு உக்காந்திருக்கு.. அத தான் பார்க்கிறேன் தல"

"ஓ.. அதுவா.. 'குரங்கு கைல  கிடைச்ச பூமாலை' னு ஒரு பழமொழி இருக்குல அத கொஞ்சம் யோசிச்சிகிட்டு இருந்தேனா.. அந்த நேரம் பார்த்து ஒரு பூ நம்ம மேல வந்து விழுந்துச்சா.. சுத்தியும் முத்தியும் பார்த்தேன் ஒரு ஆளும் இல்லையா.. கடைசியில மேல பார்த்தா, அது அந்த மரத்து பூ .."

"யோவ்.. இதுக்கு அந்த குரங்கே தேவல.. நா ஒன்னு கேட்டா நீ ஒன்னு உளறிகிட்டு இருக்க.. ச்சேய்.."

"கிகிகி (சிரிப்பு தான் வேறென்ன) கோவிச்சிக்காதீங்கோ பண்ணையார்.. கொஞ்சம் விலாவாரியா சொன்னா உங்களுக்கு புரியுமேனு தான்.."

"ம்ம்ம்.. நல்லா விளக்குறய்யா வெலாவாரியா..சட்டுபுட்டுனு சொல்ல வந்தத சொல்லித் தொல.. நான் வேற கேமராவ தூக்கிகிட்டு படம் புடிக்கப் போவனும்"

"ஆங்ங்ங்.. நா எதுல விட்டேன். ஆஆஆஆ.. அந்த மரத்துப்பூவுல..
அந்த பூவ கையில வச்சிகிட்டு முளிச்சிகிட்டு இருந்தப்ப தான்.. நீங்க கொரங்கு.. ச்சேய் நீங்க வளக்குற கொரங்கு பூமாலைய பிச்சி போட்டுகிட்டு இருந்துச்சு..
நான் பூவ பார்க்க உங்க குரங்க பார்க்க..
பூவ பார்க்க குரங்க பார்க்க..
பூ.. குரங்கு.."

"அய்யோ இந்த மனுசன் நம்ம பீப்பிய ஏத்தாம போக மாட்டாரு போல இருக்கே ஆண்டாவா" னு மேல கையை தூக்கி கத்த..

"கோச்சி..கோச்சி..கோச்சிக்காதீங்க பண்ணையார் இந்தா சுருக்கா முடிச்சிடுறேன்"

"சுருக்கா முடிச்சா நல்லது"

"யாருக்குங்க பண்ணையார்?"

"எனக்குத்தான் .. இந்தா உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன்ல.. காலையிலேயே பண்ணையாரம்மா சொல்லுச்சு.. தெற்கே போகாதீங்க இன்னைக்கி அந்த பக்கம் சூலம்னு, நான் கேட்டேனா..
போம்மா.. சூலமாவது , மூலமாவதுனு சொல்லிட்டு வந்ததுக்கு நல்லா மாட்டிக்கிட்டேன்.. மூலத்தக்கூட தாங்கிகலாம் போல உம்ம இம்சைய தாங்க முடியலையே.."

"பண்ணையார்..பண்ணையார் கோச்சிக்காதிங்க பண்ணையார்.. இதோ முடிச்சிடுறேன்...
பூவையும் குரங்கையும் மாறிமாறி பார்த்தேனா.. சட்டுனு ஒரு யோசன வந்துச்சு.. பூ மாலையா இருந்தா தானே இந்த குரங்கு பிச்சிப்போடுது.. ஒரே ஒரு பூவ மட்டும் கொடுத்தா என்னனு,
அந்த பூவ மோந்து பாத்துகிட்டே குரங்கு கிட்ட போனேனாஆஆஆஆஆ..."

"குரங்கு உம்மகிட்ட இருந்த பூவ புடிங்கிடுச்சா?"

"அது தான் இல்ல.. அதுகிட்ட இருந்த மாலைய புடிங்கிட்டேன்"

"அதானே.. நீங்க தான் அதையும் மிஞ்சின ஆளாச்சே.. என்ன.. வால் தான் இல்ல"

"கிகிகி.. போங்க பண்ணையார் .. என்ன ரொம்ப புகழாதீங்கோ"

"(அய்யோ.. ராமா.. நாம ஒன்னு சொன்னா இந்த கிறுக்கு ஒன்னு நினைக்கிதே'னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே நெத்தியில தட்டிகிட்டே)அப்பறம் என்னாச்சுவோய்?"

"அது கையில இருந்த மாலைய புடிங்கிட்டு என கையில இருந்து பூவ மோந்து பாத்துகிட்டே கொடுத்தேனா..
அப்ப தான் ஒரு விசயத்த கண்டுபிடிச்சேன்.."

"ஆமா.. இவரு பெரிய ஒலக விஞ்ஞானி.. அப்படி என்னவோய் கண்டுப்பிடிச்சீங்க?"

"மாலைய பிச்சிப்போடத் தெரிஞ்ச குரங்கால பூவ பிச்சிப்போட முடியாதுங்கிற விசயத்த தான்..
அதான் அப்பத்துல இருந்து உங்க குரங்கு அந்த பூவயே மோந்து பாத்துகிட்டு இருக்கு..இதுல இருந்து என்ன தெரியுது?"

"இனம் இனத்தோட வேலைய தான் செய்யுங்கிறது புரியுது"

"புரியலையே பண்ணையார்"

"அதான்யா.. நீர் அந்த பூவ மோந்து பாத்தீர்ல.. அததான் அதுவும் தொடர்ந்து மோந்து பாக்குது"

"அதான்.. இல்ல.. பூவுடன் சேர்ந்த குரங்கும்.."

"குரங்கும்?"

"பூவ மோந்துப்பார்க்கும் னு"

"அய்யோ.. இந்த ஆளோட இம்சை தாங்கலைடா சாமீ" னு பண்ணையார் கத்த.. அவர் துண்டு கீழே விழுக.. அத எடுக் அவரு கீழே குனிய..
'எங்கே.. நம்மல தான் அடிக்க கல்ல எடுக்குறாரோ" னு தல தலைதெரிக்க ஓட..
"அப்பாடா.. தப்பிச்சோம்டா சாமீ..ஆளு ஓடிட்டாருப்பா.." னு சொல்லியபடி பண்ணையார் அந்த இடத்த விட்டு நகர..
அந்த குரங்கு பூவை மோந்து பாத்துகிட்டே இருந்துச்சு..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக