வியாழன், 21 டிசம்பர், 2017

மச்சான் படும் பாடு

#மச்சான்_படும்_பாடு...

"டொக்..டொக்..டொக்..
டொக்..டொக்..டொக்.." யாரோ கதவை தட்ட.. 'டொடக்'..கதவை திறந்தேன்..
யாரோ ஒருத்தர் தலையில குரங்கு குல்லாய மாட்டிகிட்டி, முகத்துல துண்ட கட்டிகிட்டு கண்ணு மட்டும் தெரிய..
"அய்யய்யோ.. முகமூடித் திருடன்..திருடன்" னு நான் அலற..

"அய்யோ.. மாப்ள.. நாந்தான்..நாந்தான்"  அவரு அலறிகிட்டே துண்ட கழட்ட..
அட நம்ம மச்சான்..

"அடடே.. மச்சானா.. என்ன இந்த நேரத்துல.. நைட்டு பத்து மணிக்கு மேல.. அதுவும் இந்த குளிர்ல..வாங்க உள்ளே" னு கூப்ட்டுட்டுப் போய் மனுசன நாற்காலில உக்கார வச்சிட்டு.. அவர் முகத்தைப் பார்க்க..
பரிதாபமா இருந்துச்சு..

"என்னாச்சுங்க மச்சான் சொல்லுங்க.."

"மாப்ள.. எதாவது சாப்ட இருக்கு?" கேட்ட விதத்தில் முகத்தில் அப்பாவி ரேகை..

"அய்யோ.. ஒன்னும் சாப்டலையா இருங்க வரேன்" னு சமையக்கட்டுக்குள்ள போனா நாலு சப்பாத்தியும், குருமாவும் இருந்துச்சு..
அதை எடுத்து வந்து வச்சிட்டு, பக்கத்துல இருந்த ஃபிரிட்ஜ திறந்து ஆப்பிள், வாழைப்பழம் எடுத்துட்டு வந்து பார்த்தா..
மனுசன் ஒரே லபக்குல அந்த  சப்பாத்தியையும் குருமாவும் காலி செஞ்சிட்டாரு...
"என்ன மச்சான் பசி எக்கச்சக்கமோ" னு கேக்க..

"ஆமா மாப்ள.. அதில்லாம செத்துப்போன நாக்குல கொஞ்சம் டேஸ்ட் பார்த்தவுடனே முழுங்கிட்டேன் ஏவ்வ்வ்..(ஏப்பந்தான்).. அவ்ளோ தானா.. அதென்ன கையில ஓ.. ஆப்பிளா கொடு..கொடு.." னு வாங்கி அரக்கப்பரக்க கடிக்க..

"மச்சான் எல்லாமே உங்களுக்குத் தான்.. கொஞ்சம் பொறுமையா சாப்புடுங்க.. யாரும் புடிங்கிற மாட்டாங்க" னு சொன்னத காதுல வாங்காம நாலு ஆப்பிள், மூனு வாழைப்பழத்த தின்னு முடிச்ச பொறவுதான் அமைதியா ஆனாரு..
பாவம் மனுசன்.. ருசியா சாப்ட்டு நாளாகிருக்கும் போல..

"ஆகா.. மாப்ள.. ரொம்ப நாளைக்கி அப்பறம் நல்ல சாப்பாடு சாப்புட்டுருக்கேன்.. ரொம்ப நல்லாயிருய்யா நீ..
ஆமாம்.. தங்கச்சி புள்ளைங்க எல்லாம் எங்கே ஒரு ஆளையும் காணோம்" னு கேட்க..

"பள்ளிக்கூடம் லீவுல்ல.. அதான் அவங்க பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க..
சொல்லுங்க மச்சான்.. ஏன் முகத்துல ஒரு வாட்டம்.. வாட் கேப்பனிங்.."

"அந்த கொடுமைய ஏம்மாப்ள கேக்குற.. ஓந்தங்கச்சி இருக்காளே ஏம்பொண்டாட்டி.. இம்சை தாங்க முடியலையப்பா"

"ஏன்.. அடிக்கடி சண்ட போடுதா, இல்ல வீட்டு வேலை செய்ய சொல்லுதா?"

"அப்படி இருந்தாக்கூட பரவாயில்லையே"

"அடிச்சிப்புடிச்சா"

"அய்யோ.. அப்படி அடிச்சாக்கூட பரவாயில்லையே.. தாங்கிட்டுப் போயிடலாமே.. அதுக்கும் மேல கொடுமையாவுல இருக்கு"

"மச்சான் தெளிவ்வ்வா கொழப்பாம சட்டுன்னு சொல்லுங்க.. மண்ட காயுது"

"தெனமும் புதுசு புதுசா சமைக்கிறேன்னு நம்ம உசுர எடுக்குது மாப்ள..
இந்த ஆராய்ச்சி செய்யுறவங்க எப்படி அவங்க கண்டுபிடிச்ச மருந்த எலிகளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணுவாங்க அத போல , அது சமைக்கிறத நம்மல வச்சு டெஸ்ட் பண்ணுது"

"அடடே.. அப்படியா.. அப்ப புள்ளைங்க கதி?".

" புள்ளைங்க உசாரானதுங்களாச்சே..
அவங்கம்மா புதுசா எதாவது சமையல் செய்யுறேனு சொன்ன உடனே.. 'அப்பா பிரண்டு வீட்ல ஒரு புக்கு வாங்கனும்பா.. நாங்க போயி வாங்கிட்டு வந்துடுறோம 'னு எஸ்ஸாயிடுதுங்க.. நாந்தான் எலிப்பொரியில சிக்குன எலியாட்டாம் ஒந்தங்கச்சிகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன்.."

"அய்யோ.. பாவம்.. அப்பறம் மச்சான்?"

"அப்பறம் ..வேறென்ன.. பெருங்கொடுமதான்.
நேத்து இப்படித்தான் .. ஏதோ புதுசா ஒரு பலகாரம்னு, பாகட்டியோ, சாகட்டியோ வாயில  நொழையாத மாதிரி ஒரு பேர சொல்லி, ஒரு கிண்ணத்த தலைகீழா கவுத்த 'லொபக்'குன்னு கண்ணங்கரேல்னு ஒன்னு வந்து விழுந்துச்சு.."(இத சொல்லும்போது அவர் முகத்த பார்த்த எனக்கு சிரிப்பு பொத்துகிட்டு வந்துச்சு.. அடக்கிகிட்டு அவரையே பாத்துகிட்டே இருந்தேன்)..

" அப்பறம் மச்சான்?"

"'லொபக்குனு வந்து விழுந்துச்சா.. ஒரு ஸ்பூன கையில கொடுத்து.. அத சாப்புட சொன்னா.. அத சாப்ட்டாஆஆஆ..
நம்ம ஊரு கருகுன பனியாரங்கூட நல்லா டேஸ்டா இருக்கும்..
அது அவ்ளோ மகா மட்டம்..
ஏற்கனவே ஒரு தடவ கேக் இட்லினு ஒன்னு செஞ்சி கொடுத்து சாப்ட்டு மூனு நாளா மோசன் போகாம அவஸ்தப்பட்டேன்..
இப்ப என்னடானா அந்த 'லொபக்க' சாப்புட்டதுல இருந்து, பின்னாடி பிச்சிகிட்டுப் போவுது.. அப்பறம் டாக்டர  பார்த்து ஊசி, குளுக்கோசெல்லாம் ஏத்தி ஒரு வழியா உடம்ப தேத்தி வந்தேன்.. "

"அய்யய்யோ.. அந்த அளவுக்கா மோசமா இருக்கு அந்த புள்ள சமையலு"

"மாப்ள.. நார்மலா செய்யுற சோறு கொழம்புல ஒன்னும் அவ்வளவு மோசமில்ல.. சமாளிச்சிக்கலாம்..
ஆனால்..  ஸ்பெசலா செய்யிறேன்.. டிஃபரண்டா செய்யுறேன்.. புது மாதிரி டிரை பண்ணிருக்கேன்னு சொல்லும்போது தான் நம்ம வயிறு கலங்குற சத்தம் நம்ம காது வரைக்கும் கேக்கும்"

"ஓகோ.. அதுக்கு நம்ம வீட்டு தக்காளி சட்னி கதையே பரவாயில்லாமயிருக்கும் போலையே மச்சான்"

"ஆமாம்பா ஆமா.. இன்னைக்கிக்கூட ஏதோ புது மாதிரியா சமைக்கப்போறேன்னு சொல்லிட்டு சமையல்கட்டுக்குள்ள போச்சு.. நான் சொல்லிக்காம இந்தப்பக்கமா மூச்ச கைய்யில புடிச்சிகிட்டு ஓடியாந்துட்டேன்.." னு சொல்லிட்டு இருக்கும் போதே மச்சான் போன் ரிங்காச்சு.. "அய்யய்யோ.. மாப்ள ஓந்தங்கச்சி தான் கால் பண்ணுது.. இந்தா, நாந்தூங்குறேனு எதையாவது சொல்லி சமாளி.."னு போன லவுட் ஸ்பீக்கர்ல வச்சி கொடுக்க..

"அலோ.. ஆச்சி நாந்தாமா பேசுறேன்.. மச்சான் நம்ம வீட்டுக்குத்தான் வந்தாரு.. நானும் அவரும் ஒன்னாதான் சாப்ட்டோம்.. அசதியில தூங்குறாருமா.. காலையில  கூப்டு வந்து விட்டுடுறேன்மா.."னு நான் சொல்ல..

"அடடே.. அப்படியாணே.. சரிங்கணே.. அவருக்காக ஸ்பெசலா ஒரு டிஸ் செஞ்சேன்.. அவரு அங்க வந்துட்டாரா.. சரி..சரி.." னு ஆச்சி சொல்ல..

மச்சான் சைகையிலேயே ரொம்ப மெதுவான குரலில் 'என்ன டிஸ்னு கேளு மாப்ள"னு சொல்ல..

"ஓகோ.. அப்படியா.. அப்படி என்ன ஸ்பெசல் டிஸ்மா?"

''ஓ.. அதுவாங்கணே..
முட்டை சாம்பாரும், மிளகாய்ப்பொடி ரசமும் ணே"

''என்னது முட்டை சாம்பாரா? ஓ.. சாம்பார் வச்சிபுட்டு முட்டைய பொரிச்சிட்டியாமா"னு நாம கேட்க..

"அது இல்லைங்க ணே.. பருப்பு சாம்பார் வச்சிபுட்டு அதுல முட்டைய உடைச்சி ஊத்திடனும்.. ரசத்துல மிளகாயோட சேர்த்து ஒரு கரண்டி மிளகாய் தூளையும் சேர்த்து கரைச்சா அருமையான டிஸ் தயார்" னு சொல்லிபுட்டு போனை கட்பண்ண..

"அய்யய்யோ இது 100 பேதி மாத்திரைக்கு சமம்"னு நான் சொல்ல..

இப்ப மச்சான் மயக்கப்பட்டு விழ..
அவரோட வயிறு கலக்கிய சத்தம் நம்ம காது வரைக்கும் கேட்டுச்சு..

பாவம்.. மச்சான்.!

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக