வியாழன், 28 டிசம்பர், 2017

குமாரின் அலறல்

#குமாரின்_அலறல்..
(பண்ணையாரும் குமாரும்)

"பண்ணையார்..பண்ணையார்.. பண்ணையார்.." என்று கத்திக்கொண்டே பின்னங்கால் பொடறில தட்டுற அளவுக்கு குமாரு கத்திகிட்டே ஓடி வந்தாரு..
அந்த நேரம் பார்த்து நம்ம பண்ணையார் காபி குடிக்க வாய்கிட்ட கொண்டு போக..
குமாரு கத்துன கத்துல காபி டம்ளர விட 'படீர்'னு கீழே விழுந்து காபி கொட்டிடுச்சு..
பண்ணையார்: (மனசுக்குள்ள) பாவி மனுசா எப்ப பாரு நம்மல பதட்டப்படுத்தி பீபிய ஏத்துறதுக்குனே வரான்..

"அய்யய்யோ.. என்னங்க பண்ணையார் காபிய குடிக்காம கீழ கொட்டிட்டீங்க?"

"யோவ்.. நீ் கத்துன கத்தல்ல தான் காபி டம்ளர கீழ போட்டுட்டேன்.. ஏன்யா எப்பவுமே திக்கு திக்குனு நெஞ்சு அடிச்சிக்கிறா மாதிரி தான் வருவீயா. இன்னைக்கி என்னத்த ஒரண்டைய இழுத்திட்டு வந்தீரு"

"அயம் வெரி சோரிங்க பண்ணையார்.. இன்னைக்கி ரொம்ப ரொம்ப முக்கியமான பிரச்சினை.. அதை கேட்டா உங்களுக்கே..."

"எனக்கே"

"கோபம் பொத்துகிட்டு வந்திடும்"

"ம்க்கும்.. இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. சொல்ல வந்தத சொல்லி தொலையும் குமாரே"

"நம்மலுக்கு எதிராக பெரிய சதியே நடக்குதுங்க பண்ணையார்"

"யோவ்.. தலையும் புரியல வாலும் புரியல.. படுத்தாம சொல்லும்மைய்யா"

"தண்ணி குடிக்கக் கூட சமையல் கட்டு பக்கம் நுழையாத நம்மல.."

"நம்மல.."

"எப்படியாவது நம்ம சமைக்க வச்சிடனும்னு ஒரு கும்பலே சதி செய்யுதுங்க பண்ணையார்"

"அய்யய்யோ.. இது யாரோட சதி குமாரே?"

"வேற யாரு நம்ம பெரிய நாட்டாமக்காரம்மா கோயம்புத்தூரும், அவருக்கு அடுத்த நாட்டமக்காரம்மா ஆஸ்திரேலியாவும், சின்ன நாட்டாமக்காரம்மா சென்னையும், அதற்கு உடைந்தையாக புதுசா டிஸ் செய்யுறேனு அடிக்கடி கிளம்பும் அரியானாவும் தான் பண்ணையார்.."

"ஆகா.. இந்த முப்பெரும் தேவியருமாஆஆஆ.. அது நமக்கு நல்லதில்லையே... ம்ம்ம்.. சரி..
இந்த விசயத்த நம்ம மாஸ்டர்கிட்டேயும், ஈகே கிட்டேயும் சொல்லிட்டீரா?"

"ரெண்டு பேருக்கும் போன் போட்டேன் சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு.. அப்படியே நம்ம தாஸ் அண்ணனுக்குப் போட்டேன்.. அவரு எடுத்து பேசுனாரு.. 'காய்கறிய நறுக்கச் சொன்னா அங்க போன்ல என்ன பேச்சு'னு அவங்க வீட்டம்மா குரலு கேட்டுச்சு.. உடனே அவரு போன கட் பண்ணிட்டாருங்க பண்ணையார்"

"அய்யய்யோ.. நம்ம தாஸு மாட்டிக்கிட்டாரா.. அப்ப உடனே வண்டிய எடு குமாரு... மாஸ்டரையும், ஈகேயையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோம்" னு பண்ணையார் சொல்ல, குமாரு பண்ணையாரோட வண்டிய உதைக்க அது 'டர்ர்ர்னு' சத்தத்தோட ரெண்டு பேரையும் சுமந்துகிட்டு ஓட ஆரம்பிச்சிடுச்சு..

"முதல்ல செல்வபுரம் விடுங்க குமார்" என்றதும் வண்டி செல்வபுரம் ஆலமரத்து பஸ்டாப்ப தாண்டி வலது பக்கம் ஒரு கடையை தாண்டி இடதுபக்கம் ஒரு முட்டுச்சந்து கடைசி வீட்டாண்ட நிற்க.. அங்கே ஒரு கார் மட்டும் நின்னுகிட்டு இருந்துச்சு.. மாஸ்டரோட புல்லட்ட காணோம்..

"அடடே.. மாஸ்டர் இல்லைபோல தெரீதே பண்ணையார்.. இப்ப என்ன செய்யலாம்?"

"வீட்டுக்குள்ள மாஸ்டர் வீட்டம்மா இருப்பாங்க அவங்க கிட்ட கேப்போம் வாங்க" னு மாஸ்டர் வீட்டு காலிங் பெல்ல அழுத்த,.. சில வினாடிகளில் கதவு திறக்க.. "அடடே.. பண்ணையாரண்ணாவா.. வாங்க..
அட குமார் தம்பி நீங்களுமா வாங்க" னு மா.வீட்டம்மா வெளிய வந்தாங்க..

"மாஸ்டர் இல்லைங்களா?" னு குமாரும் , பண்ணையாரும் கோரசாக கேட்க..

"அவங்க ஏதோ மூலிகை பறிக்கப் பேறேன்னு காலையிலேயே புல்லட் வண்டிய எடுத்துகிட்டு கூட பேத்தியையும் கூப்ட்டுகிட்டு போயிட்டாங்களே.. ஏதாவது முக்கியமான விசயங்களா.. நான் வேணும்னா போன் செய்யட்டுமா?" என்று அவங்க கேட்க..

"நான் போன் போட்டேனுங்க மா.. சுவிட் ஆஃப்னு வந்துச்சு.. அதான் நேர்ல பாக்கலாம்னு வந்தோம்.." குமாரு சொல்ல..

"அடடே.. ஆமா மறந்தே போச்சு.. காலையில  போன்ல சார்ஜ் இல்லைனு சார்ஜ் ஏத்திவச்சிட்டு போயிட்டாங்க.. ஆன் பண்ணல அதான்.. எதாவது முக்கியமான விசயம்னா சொல்லுங்க நான் வந்தவுடனே சொல்றேன்" னு மாஸ்டரம்மா சொல்ல...

"ஒன்னுமில்லங்க மா நம்ம பண்ணையாருக்கு திடீர்னு காலுல சுளிக்கீடுச்சி.. அத ஒரு வர்ம தட்டு தட்டுறதுக்கா தான் வந்மோம்" னு குமாரு, பண்ணையார பார்த்துச் சொல்ல..

பண்ணையாரும் குமார பார்த்து வாய்க்குள்ள என்னமோ முனகியபடி.."ஆ..ஆமா..மா.. எ.்எனக்கு.. கால்ல இளனி விழுந்த வேகத்துல கால் சுளிக்கிடுச்சு"னு சொல்ல..
குமாரும், பண்ணையாரும் மண்டைய ஆட்டுனாங்க..

"அடடே.. அப்படியா.. அவுங்க வந்தவுடனே உங்களுக்கு போன் செய்ய சொல்றேன்.. கொஞ்சம் உக்காருங்க .. டீ எடுத்துட்டு வரேன்" னு மாஸ்டரம்மா வீட்டுக்குள்ள போக..

"யோவ்.. என்னயா.. திடீர்னு ஒரு பொய்ய சிரிக்காம சொல்லிட்டீரு.. "

"எனக்கு வேற வழிதெரியல அதான்.. அடிச்சிவுட்டேன்..இன்னொரு விசயம் கவனிச்சீங்களா அந்த சமையகட்டு சமையல் விசயம் இவங்களுக்குத் தெரியல.. அதனால மாஸ்டர் தப்பிச்சாங்க பண்ணையார்.."

"நல்லா அடிச்சி விட்ட .. சரி..சரி.. இப்ப மாஸ்டரு தப்பிச்சிட்டாரு.. டீய குடிச்சிபுட்டு அடுத்தது ஈகேய பார்க்கப் போரோம்" னு சொல்லும் போதே மாஸ்டரம்மா டீயோட வர.. ரெண்டு பேரும் குடிச்சிட்டு எழுந்து நடக்க..
அதுல பண்ணையாரு கொஞ்சம் வேகமாக நடக்க..
"பண்ணையார் பாத்து பொறுமையா நடங்க.. வலி அதிகமாகப் போவுது" னு குமாரு சொல்ல..

"அட ஆமால்ல..
சரிமா வரோம்" னு நொண்டிப்போல பாவலா காட்டி பண்ணையார் பைக்ல உக்கார குமாரு வண்டிய பேரூருக்கு விட்டாரு...

அங்க போனாஆஆஆஆ..
ஈகேயோட இளைய மகள் பட்டாம்பூச்சி பின்னாடியே ஓடி பிடிச்சி விளையாண்டுகிட்டு இருந்துச்சு..

"ஹாய்.. பாப்பா அப்பா இல்லையா" னு குமாரு கேக்க..
அவரையும், பண்ணையாரையும் ஏறயிறங்க பார்த்துபுட்டு..
"நீங்க யாருங்கோ.. எங்க அப்பாவ பத்தி கேக்குறீங்கோ" னு அந்த வாண்டு கேட்க..

"நாங்க உங்கப்பாவோட பிரண்டுங்க மா.. நான் பண்ணையார், இவரு குமாரு.. அப்பா இருக்காங்கலாமா?"

"ஓ.. நீங்க தானா அது.. ஒரு தடவ மூனு கோழி குட்டிங்கள படம் புடிச்சி போட்டிருந்தீங்களே.. இப்ப அது எப்படிங்க தாத்தா இருக்கு"

"மம்ம்.. ரொம்ப நல்லாயிருக்கு பாப்பா.. இப்ப அதெல்லாம் பெருசா வளந்துடுச்சுங்க மா... அப்பா இருக்காரா மா" பண்டையார்..

"இருங்க தாத்தா சொல்றேன்..
இவரு பேரு என்னச் சொன்னீங்க குமாரு தானே.. "

"ஆமா மா.. அப்பா இருக்காராமா"

"இருங்க தாத்தா ஏன் அவசரப்படுறீங்க..
இவரு தானே சும்மா சும்மா தத்துவம் னு சொல்லிகிட்டு லொட லொட னு உளறுவாரே.."

"சாட்சாத் அந்த புண்ணியவானே தான்.."என்று பண்ணையார் சொல்லி அடுத்து சொல்ல வாயெடுக்க.. குமாரு குறுக்கிட்டு

"தயவு செய்து அப்பா இருக்காராமா சொல்லிடு இல்லைனா பண்ணையார் அழுதேபுடுவாரு" னு சொல்ல..

"இப்ப தான் நான் பட்டாம்பூச்சி புடிக்கிறத படம் புடிச்சிகிட்டு இருந்தாரு..
உள்ளயிருந்து அம்மா கூப்புடுறாங்கனு அக்கா குரலு வந்துச்சா.. உள்ள போயிட்டாங்க தாத்தா" என்று சொல்லிய படியே மறுபடியும் பட்டாம்பூச்சிக்கூட விளையாட போச்சு அந்த பாப்பா..

"அம்மா.் தாயே இப்பையாவது சொன்னீயே" னு பண்ணையார் சொல்லியபடியே வீட்டுக்குள்ளாற போயி "ஈகே" னு குரல் கொடுக்க,

உள்ளயிருந்து கையில கத்தியோட ஈகே வெளீல வந்தாரு..
"அடடே.. பண்ணையாரா வாங்க..
அது யாரு.. ஓ குமாரா வாங்க வாங்க என்ன விசேசம்... எலியும் பூனையும் ஒன்னா வந்திருக்கீங்க" ஈகே.. கேக்க..

குமாரு அந்த முப்பெரும் தேவியரோட செயலைப் பற்றிச்சொல்ல..

"டூ..லேட் .. பண்ணையார்.. ஏற்கனவே என் வீட்டம்மாவும், அந்த முப்பெரும் தேவியரும் பேசி நம்மல சமைக்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க..
இப்ப என்னால  சமையல தவிற வேரொன்னும் செய்ய முடியாது.. ஏன்னா நான் எஸ்கேப் ஆயிடுவேன்னு என்னோட கேமராவ வேற எடுத்து ஒளிச்சி வச்சிபுட்டாக.. உங்களுக்கேத் தெரியும் என்னோட உசுரு அந்த கேமராவ்ல தான் இருக்கு்னு.. விடுங்க எல்லாம் தலை விதினு போக வேண்டியது தான்" னு ஈகே கத்தியோட உருளைக்கிழங்கை நறுக்க ஆயத்தமானாரு..

அப்போ குமாலோட போன் ரிங் அடிக்க..
"ஆங்.. சொல்லுமா.. இப்ப நான் பண்ணையாரோட ஈகே வீட்டில் இருக்கேன் மா..
என்னாது வரும்போது வெங்காயம் வாங்கிட்டு வரனுமா.. முடியாதுன்னா.. என்னாது ஒரு மாசம்பூரா தக்காளி சட்னியா .. அய்யய்யோ.. இந்த உடம்பு தாங்காதுமா.. வாங்கிட்டு வந்து உறிச்சே தந்துடுறேன்மா.. சரி மா.. சரிமா.. போன வச்சிடு" னு குமாரு தன்னோட தலையில அடிச்சபடியே,
"அந்த முப்பெருந்தேவியர் அவங்க வேலைய நம்ம வீட்டிலையும் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க பண்ணையார்" னு சொல்ல..
"போயா போ.. ஆளும் நீயும், இப்படியா பயப்படுவாங்க..ச்சேய்" னு சொல்லும் போதே பண்ணையாரோட போனும் அடித்தது..
"குமாரு, பண்ணையாரம்மா தான் போடுறாங்க.. இப்ப பாருங்க நான் எப்படி பேசுறேன்" னு சொல்லிபுட்டே போன லவுட் ஸ்பீக்கர்ல போட..
"அலோ.. எங்கங்க இருக்கீங்க.. பிரியாணி செய்யுறதுக்கு எல்லாத்தையும் தயார் நிலையில் வைக்கச் சொல்லிபுட்டு எங்க போனீங்க? அந்த குமார் தம்பியோட சேர்ந்து ஊர் சுத்துறதா கேள்வி பட்டேன்.. ஒரு நாளைக்கி அந்த மனுசனுக்கு வக்கிறேன் கச்சேரி..
பிரியாணி செய்யுறதுல 'நான் அப்படி, இப்படி'னு பெருசா சொன்னீங்க.. உடனே வந்தீங்கனா பிரியாணி செஞ்சி சாப்புடலாம்.. இல்லைனா மொத்தத்தையும் கலந்து எதையாவது செஞ்சி வச்சிடுவேன்.. அப்பறம் அத முழுசா நீங்க தான் திங்கோனும்" என்று பண்ணையார பேச விடாம பண்ணையாரம்மா படபடனு பேசிபுட்டு லைன கட் பண்ணிட்டாங்க..

"ம்க்கும் .. அங்கேயும் அப்படித் தானா" னு குமார் கேட்டு பேய் முழு முழிக்க..

"ஹெஹ்ஹஹே" னு பண்ணையாரு அசடு வழிஞ்சாரு...

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக