புதன், 26 செப்டம்பர், 2018

லிமரைக்கூ

லிமரைக்கூ..

யாவரையும் மனதார வாழ்த்து
யாரிடமும் முறைத்த முகம் காட்டாமல்
அன்பால் பகைமையை வீழ்த்து.!

மரம் வெட்டுவதில் வேகம்
மனிதா உன்னால் மழை தராமல்
ஓட்டம் எடுக்கிறதே மேகம்!

செய்ய வேண்டாம் பாதகம்
சேர்ந்தே நின்று காத்து வந்தால்
இயற்கை நமக்கு சாதகம்.!

கடலில் கலந்த மழை
காக்க மறந்த நீர் நிலைகள்
மக்கள் செய்த பிழை.!

நல்லா இருந்த ஊரும்
நடிகனையும் மிஞ்சி நடித்து நாட்டை
நாசமாக்கிய சில பேரும்.!

பசுமையான புல்லின் நுனி
பார்க்க மகிழ்வை தரும் அதில்
படர்ந்த துளிப் பனி.!

கையில் பிடித்தார் மதுபாட்டில்
கைவிட மனமின்றி நாளும் தொடர
கைவிடப் பட்டார் சுடுகாட்டில்.!

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
தலையேப் போனாலும் சரி என்றே
தன்மானம் இழந்து கெஞ்சான்.!

வாழ்க்கைப் பாடம் படி
வாழ்ந்து நாளும் வரும் அனுபவத்தால்
வெற்றிச் செயல்களை முடி.!

வீணாக்க விரும்பாது பசி
விருந்து வைத்து ஆடம்பர ஆட்டமாடி
வீணடிக்க வைக்கும் ருசி.!

ஓடி வரும் ரயில்
ஓட்டை வழியே வேகமாக வெளியேறி
இரசிக்க வைக்கும் வெயில்.!

எனக்கு கிடைத்த வரம்
என்றும் நம்மை கைவிடாத நண்பன்
ஓங்கி வளர்ந்த மரம்.!

தெருவுக்குத் தெரு குடி
தெருவில் குடும்பம் நின்றால் என்ன
தினமும் குடித்து மடி.!

அன்பால் ஆகட்டும் உலகு
அந்த அன்பை அழிப்போர் யாரோ
அவரை விட்டு விலகு.!

பிறர்க்கு என்றும் உதவு
பகலிரவு என்று பாராமல் மூடாது
பாசத்தின் இதயக் கதவு.!

இயற்கையை விலக்குகிறாய் தூரம்
இதயம் இல்லா மானிடா உன்னால்
கூடுகிறதே மனதின் பாரம்.!

ஏழைக்கேட்டால் வாயில குத்து
ஏய்ப்பவர் கேட்டால் வங்கியே வழங்கும்
வெளிநாட்டில் சொகுசான சொத்து.!

நல்ல நட்பின் பாலம்
நாட்கள் பல கடந்தாலும் இனிதே
நீடிக்கும் வெகு காலம்.!

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக