காத்திருந்த கண்கள் 10
காசியை, சங்கிலி கறுப்பர் ஒரு சிறிய வீட்டில் அடைத்து வைத்து குமரனை பார்த்துக்கொள்ள சொல்லி கிளம்ப..
குமரன் காசியை கட்டிப்போட்டுவிட்டு வெளியே மரத்தடியில் முத்து வீரனுடன் உக்காந்திருந்தான்..
சிறிது நேரம் கழிந்தது..
வீட்டின் பின்பக்கம் ஏதோ சத்தம் கேட்க..
குமரன் "அந்த துளை வழியே என்ன நடக்குதுனு பார்த்து வா" என்று முத்து வீரனிடம் மெதுவாக சொல்ல..
முத்து வீரனும் சென்று அதில் எட்டிப்பார்க்க..
காசி தன்னை கட்டிப்போட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, பின்பக்க கதவை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி திறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்..
வேகமாக திரும்பி வந்த முத்து வீரன் "அண்ணே.. அந்த ஆளு தப்பிக்க முயற்சி செய்யுறாரு.. நான் போய் பிடிக்கவா?" என்று குமரனிடம் சொல்ல..
குமரன் வேண்டாம் என்பதை போல தலையாட்டி , வீட்டின் பின்புறம் சற்று தள்ளியிருந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி அதன் மேல் ஏறி மறைந்துக்கொண்டு காசி வெளியே வந்ததும் எந்த திசை நோக்கி போகிறான் என்பதை கவனிக்கும்படி மெல்லச் சொல்ல, முத்து வீரனும் மெதுவாக நடந்துச் சென்று மரத்தின் மீது சத்தமின்றி ஏறி அடர்ந்த கிளை ஒன்றில் அமர்ந்துக்கொண்டான்..
குமரன், சங்கிலி கறுப்பர் குதிரை 'சிப்பி'யின் கடிவாளம் , சேணம் போன்றவற்றை கழட்டி, ஒரு துணியில் வைத்து தன் முதுகோடு சேர்த்து கட்டிக்கொண்டான்..
காசி அவ்வீட்டின் கதவை ஒரு வழியாக உடைத்துவிட்டு வேகமாக வெளியேறினான்.. இதை கவனித்த முத்து வீரன் மெல்ல மரத்தை விட்டு இறங்கவும், குமரனும் அவன் அருகே வரவும் சரியாக இருந்தது..
"என்ன முத்து வீரா கவனித்தாயா.." என்றதும்..
"அந்தாளு வடக்குப் பக்கமாக ஓடுனாருங்க ணே" என அந்த பக்கம் கைகாட்டிச் சொல்லவும்..
தன் இடையிலிருந்து ஒரு சின்ன குப்பியை எடுத்து, அதிலிருந்து கறுப்பு மைப்போன்ற களிம்பை எடுத்து குதிரையின் மூக்கில் லேசாக தடவி,
அதன் முதுகில் லேசாக தட்டிக்கொடுத்துவிட்டு வடக்குப் பக்கம் நோக்கி அனுப்ப குதிரை வேகமாக நடக்க ஆரம்பித்தது..
குதிரையை தொடர்ந்து இருவரும் நடக்க ஆரம்பித்தனர்..
அதே நேரம் கோவிலில்..
பெரிய சங்கிலியும், சங்கிலி கறுப்பரும்
கோவிலில் சுவற்றில் உள்ள சிறு சிறு சந்துகளில் சிலம்ப தடிகளை மறைத்து வைத்துபடி இருந்தனர்..
சிறிது நேரத்தில் வேலை முடிந்ததும்,
நந்தியப்பர், தர்மகர்த்தா, பூசாரி இவர்களோடு ஆலோசனை மண்டபத்தில் மீண்டும் சேர்ந்தார்கள்..
"இனி எப்பொழுதும் போல அவங்கவங்க வேலைய பார்க்கலாம்..
கோவிலுக்கு புதிதாக வரவங்கள நோட்டம் பார்த்து வைத்து என்னிடமோ, சங்கிலி கறுப்பிடமோ சொல்ல வேண்டியது பூசாரி அய்யா பொறுப்பு.." என்று பெரிய சங்கிலி சொல்லவும்,
ஊர்த்தலைவர் நந்தியப்பரும்,
தர்மகர்த்தா நீலகண்டரும், பூசாரியும் ஆமோதிப்பதாய் சொல்ல..
ஆலோசனை முடிந்து அனைவரும் கிளம்ப சங்கிலி கறுப்பர் மட்டும் கோவில் வாசலில் நின்றுக்கொண்டார்..
என்னவோ இன்று கோவிலின் மண்டபத்தில் உறங்க வேண்டும் என்ற எண்ணம் சங்கிலி கறுப்பருக்கு வர..
விறுவிறு என்று கோவிலை ஒருமுறை சுற்றிவந்து பார்த்துவிட்டு கோவில் மண்டபம் நோக்கி நடந்துச்சென்றார்..
மண்டபத்தின் ஒரு ஓரமாக தனது மேலங்கி, வேல்கம்பு மற்றும் சிறு ஆயுதங்களை வைத்துவிட்டு,
படுத்துக்கொண்டார்.. மண்டபத்து கற்தரையின் குளிர்ச்சியும், மிதமான காற்றின் தாலாட்டும், அக்காற்றில் கலந்து வந்த மூலிகை மணமும் அவரை ஏதோ இனம்புரியாத மகிழ்வு நிலையை தந்தது.. அப்படியே படுத்தபடியே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்..
இருளில் பல மின்மினி பூச்சிகளை அள்ளித் தெளித்தது போல இருந்தது வானமும், விண்மீன்களும்..
சுற்றிலும் கேட்கும் சில்வண்டுகளின் ஒலி என்னமோ அந்த விண்மீன்களிலிருந்து வருவதைப்போலவே இருந்தது..
சில விண்மீன்கள் அதிக ஒளியையும், சில விண்மீன்கள் மந்தமான ஒளியையும் தெளித்துக்கொண்டு இருந்தன..
அப்பொழுது திடீரென வானத்தில் மூன்று விண்மீன்கள் வடக்குப்பக்கம் வேகமாக நகர்ந்து மறைந்தன..
அதைக்கண்டதும் சங்கிலி கறுப்பர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தார்..
அவர் முகத்தில் லேசான மர்ம புன்னகை எழ.. வானிலிருந்து சட்டென்று ஒரு ஒளிக்கீற்று உருவாகி சங்கிலி கறுப்பரின் நெஞ்சில் பதிந்து மறைந்ததும் சங்கிலி கறுப்பின் முகத்தில் மேலும் மர்ம புன்னகை அதிகரிக்க அப்படியே சாய்ந்து உறங்கிப்போனார்..
கிழக்கில் எழும் செங்கதிர்களால்
இரவின் கருமை மெல்ல கரைந்து கொண்டிருந்தது..
கரைகின்ற இருளிலும் கரைக்கின்ற ஒளியிலும் இரைத்தேட கிளம்பும் பறவை கூட்டங்கள்..
பாவையர் கைவளையல்கள்
எழுப்பும் இன்னிசை ஒலியோடு
வீட்டின் வாசலில் கோலங்கள் வரைந்தனர்..
கோலத்தின் அழகைக் காண
ஆதவன் உதிக்கவே கோர்வையாய்ப் பொழுதும் விடிந்தது..மறுநாள்..
சங்கிலி கறுப்பு தன்னோட காவல் பணியை முடித்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
அப்பொழுது குழந்தையின் விடாத அழுகை ஒலியை கேட்டவர் சட்டென்று வலப்பக்கம் திரும்பியவர் கண்களுக்கு ஒரு பெண்மணி தனது அழும் குழந்தையை சமாதானம் படுத்த முயற்சி செய்துக்கொண்டு இருக்க.. அவர் அருகே சென்று "என்ன தாயி.. பிள்ளை அழுகிறான்.. என்னாச்சு?"என கேட்க..
" என்னனு தெரியலைங்க ணே.. விடிஞ்சதுல இருந்து அழுதுகிட்டே இருக்கு.. நானும் என்னனவோ செய்து பாத்துட்டேன்.. ஒன்னும் ஆகல.. அதான் வைத்தியர்கிட்ட போகலாம்னு கிளம்புறேனுங்க ணே" என்று அந்த பெண்மணி சொல்ல..
சங்கிலி கறுப்பரும் சிரித்துக்கொண்டே "அடடே.. ராசா.. கண்ணு,, அய்யா.. இந்த மாமாகிட்ட வாங்க..வாங்க" என்று கைநீட்டி அந்தம்மாவிடம் இருந்து குழந்தையை வாங்க..
அந்த குழந்தையும் லேசாக அழுகையை நிறுத்தியபடி அவரிடம் சென்றது..
அந்த குழந்தையை கொஞ்சியபடி அதன் வயிற்றுப் பகுதியை தடவிவிட்டு, முதுகை லேசாக தட்ட , அந்த குழந்தை லேசாக 'ஏவ்' என்று ஏப்பம் விட்டதும் அழுகையை நிறுத்தியது..
"பிள்ளை நேத்து சாப்பிட்டது செமிக்கில தாயி.. அதான்.. இப்ப சரியாகிடுச்சு" என்று சொல்லியபடி தன் இடையில் இருந்து பையில் சிறிது மூலிகை திருநீறை எடுத்து குழந்தையின் நெற்றியில் பூசி, சிறிதளவை எடுத்து "தாயி இதை பிள்ளைக்கு தண்ணீரில் கலந்து கொடு" என்று அந்த பெண்மணியின் கையில் கொடுக்க அதை வாங்கிகொண்ட அந்தம்மா சங்கிலி கறுப்பரின் காலில் விழுந்து கும்பிட்டு குழந்தையை வாங்கிச் சென்றார்..
சங்கிலி கறுப்பரின முகம் லேசாக மாறியது..
விறுவிறுவென தன் வீட்டிற்குச் சென்றவர் பெரிய சங்கிலியை பார்த்து "அய்யா.. நம்ம ஊர் குடிதண்ணீர் குளத்தில் யாரோ மருந்தை கலந்திருக்காங்க.. உடனே நாம அங்க போயாகனும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே..
சங்கிலி கறுப்பர் வீட்டை நோக்கி ஒருவர் வேகமாக ஓடிவந்துக்கொண்டு இருந்தார்..
அப்பொழுது...
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
முந்தைய பதிவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக