காத்திருந்த கண்கள் 3
குதிரையில் சங்கிலி கறுப்பு கிளம்பவும் , கோவில் தர்மகர்த்தா வீட்டிலிருந்து
ஒரு முக்காடு போட்ட உருவம் வெளியே வந்து , கோவிலை பார்த்து வேகமாக
நடக்க ஆரம்பித்தது ..
கோவில்..
கோபுரம் மேல்பக்கம் பிறை வடிவ நிலா இருப்பதை பார்க்க ,
கோபுரத்தில் ஒட்டிவைக்கப்பட்ட நிலவு துண்டாக இருந்தது..
கோவிலின் பக்காவாட்டு சுற்றுச்சுவர் நிறைய மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தது..
மரங்களில் குஞ்சுப் பறவைகள் தூக்கத்தில் போடும் சத்தமும், சுவர் பூச்சிகளின் கிரீச் கிரீச் ஒலியும் இணைந்து ஒரு விசித்திர இசையை தருவது போல இருந்தது..
சற்று தள்ளி ஒரு குளம் இருந்ததால்
இடையிடையே தவளையின் குரலும்..
தூரத்தில் இருந்து பார்க்க, பாதி இருளில் ஒரு ராட்சாசனின் உருவம் போல் தெரிந்தது அடர்ந்த மரங்களின் கூட்டம்..
அந்த அடர்ந்த பகுதியை நோக்கி அந்த முக்காடிட்ட உருவம் சென்று ஒரு மரத்தின் அருகே நின்று, முன்று முறை மெல்லிய விசில் அடிக்க..
தீடீரென மரங்களுக்கு தலைகள் முளைத்தது போல, ஆறு தலைகள் ஒவ்வொரு கிளையிலிருந்தும் எட்டிப் பார்த்து ஒவ்வொன்றாக கீழே குதித்தனர்..
ஆறு பேரும் உடம்பில் கண்ணங்கரேலென்று கருப்பு மைப்பூசியிருந்தார்கள்.. முகத்திலும் தான்..
"ம்ம்ம்.. பரவாயில்லையே .. சரியா எல்லாரும் சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே" என்று முக்காடு போட்டவன் கேட்க..
அந்த ஆறுபேரில் ஒருவன் முன்னால் வந்து, "வணக்கம்.. ஐயா.. நீங்க தந்த அடையாளத்த வச்சி ஒரு பொய் சாவி தயாரிச்சாச்சுங்க.. இந்தாங்க" என்று ஒரு அடி நீள சாவியை நீட்ட..
"ஆகா..சபாஷ்.. சரியாகத்தான் இருக்கு..
இன்னும் ஒரு நாழிகை கழித்து நம் வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்.. அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கிலி கருப்பன் வந்திடுவான்.. அவன் இங்க பார்வையிட்டுட்டு , அடுத்து ஊர் எல்லைக்குப் போயிடுவான்.. அந்த சமயத்துல காரியத்த கனகச்சிதமா முடிச்சிடனும்" என்று அந்த முக்காடு உருவம் பேசிக்கொண்டு இருக்கும் போதே குதிரையின் லேசான குளம்படி ஓசை கேட்க..
"சங்கிலி.. வந்திட்டாப்ல.. எல்லாரும் மறைஞ்சிக்கோங்க " என்று சொல்ல அனைவரும் அடர் மரக்கிளைகளில் தாவி மறைந்துக்கொண்டார்கள்..
குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்தபடி சங்கிலி கறுப்பன் கோவிலருகே வந்தார்..
குதிரையை விட்டு இறங்கி கைத்தடியை கையில் எடுத்துக்கொண்டு கோவிலின் முன் வாசல் கதவு வரை நடந்து போய் பார்வையிட்ட படியே கோவில் சுற்றுச்சுவரை சுற்றி வந்தார்.. அங்கங்க விளக்கு தூண்களில் பெரிய திரி அகல்கள் எரிந்துக்கொண்டு இருந்தன..
சில தூண்களில் தீவட்டிகள் எரிந்தன..
தீவட்டிகளில் ஒன்றை கையில் எடுத்து இருளான பகுதிகளில் ஒளியை பாய்ச்சி நோட்டமிட்டபடி கடைசியாக மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வந்தார்..
மரங்களின் அடர்த்திக்கும், குளத்து பகுதியிலிருந்து வந்த லேசான காற்றிற்கும் அவருக்கு சற்று குளிர்ச்சியாக, தன் இடுப்பு பகுதியிலிருந்து ஒரு சுருட்டை எடுத்து, அதை கொஞ்சம் பிரித்து அதற்குள் சில *மூலிகைப் பொடிகளை வைத்து மூடி, தீவட்டியால் பற்ற வைத்துக்கொண்டு ஒரு ஆழ்ந்த இழுப்பில் "ஈசனே'' என்று கண்கள் மூடி வாய் முனக..
வெளிவிட்ட புகையில் மூலிகை வாடை அப்பகுதியில் பரவியது..
நேரம் நடுநிசையை தாண்ட..
சிறிது நேரம் சுருட்டை புகைத்து தீர்த்துவிட்டு..
" தென்னாட்டுடைய சிவனே போற்றி..
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" என கோவில் கோபுரத்தை பார்த்து கைகளை மேலே கூப்பி வணங்கிவிட்டி அங்கிருந்து நகர.. அவரின் அருகில் குதிரையும் வர அதில் தாவி அமர்ந்து ஊர் எல்லையை நோக்கி விரட்டினார்..
சங்கிலி கறுப்பர் நகர்ந்து சில மணித்துளிகள் கழித்து..
அடர் மர இருளில் இருந்து அந்த முக்காடு நபரையும் சேர்த்து ஏழு பேர் வெளியே வர..
அந்த நேரத்தில் தூரத்தில் நாயோ, நரியோ ஊஊஊஊஊ என ஊழையிட..
லேசாக தெரிந்த நிலவொளியை கரு மேகங்கள் மூட..
அந்த ஏழு பேரும் மெல்ல மெல்ல கோவிலின் பின்புறம் நோக்கி நகர்ந்து சென்றனர்..
அங்கே ஒரு பெரிய ஆலமரத்தை ஒட்டியபடி இருந்த சில மரத்துண்டுகளை எடுத்து நகர்த்தி வைக்க.. ஒரு சிறிய குகை போன்ற அளவுள்ள சந்தில் நுழைய,..
ஒரு பழைய தடித்த மரக்கதவு தென்பட்டது..
ஒருவன் சிறிய தீவட்டியை தயார்செய்ய..அந்த ஒளியில் கதவில் இருந்த சாவித் துவாரம் கண்ணுக்குத் தெரிய.. முக்காடு நபரின் முகத்தில் ஒரு பேராசை சிரிப்பு.. மற்றவர்களும் தங்களுக்குள் அமைதி சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள்..
தன் கையில் இருந்த சாவியை, துவாரத்தில் விட்டு லேசாக அசைத்து, அசைத்து திருப்ப..
'சடக்' என்ற ஓசையோடு பூட்டுத் திறந்துக்கொள்ள..
கதவை மெல்லத் தள்ளித் திறந்து அனைவரும் உள்ளே நுழைய
அந்நேரம் பார்த்து வானில் ஒரு மின்னல் வெட்ட.. அதன் ஒளியில் ஒரு உருவம் எதிரில் தெரிய ..
'சடார்' என்ற இடியோசையில் அனைவரின் இதயமும் நிற்கும் படி திகைத்து நின்றனர்..
எதிரில்..
சினம் கொதிக்கும் சிவந்த கண்களோடு
முறைத்தபடி படுபயங்கரமாக சங்கிலி கறுப்பர் நின்றிருந்தார்..
தொடரும்..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக