கொள்ளையர்கள் கோவிலுக்குள் யாரும் பயன்படுத்தாத பின்வாசல் வழியாக உள்ளே வர..
அங்கே சங்கிலி கறுப்பர் கோபத்தோடு நின்றதை பார்த்த ஏழுபேரும் பதைபதைத்துப் போனார்கள்..
அவருடைய பார்வை ஒவ்வொருத்தரையும் சுட்டெரிப்பதை போல பார்க்க..
கோவிலின் பின் கதவும் சடாரென்று மூடிக்கொண்டது..
அவர்களால் திரும்பி ஓடவும் முடியவில்லை..
கடுங்கோபத்துடன் முக்காடு போட்டவனின் துணியை எடுக்க..
கோவிலின் தர்மகர்த்தாவின் தம்பி நஞ்சப்பன்...
உடனே சங்கிலி கறுப்பர் "ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.." என இடிமுழக்கம்போல் சிரித்துவிட்டு "என் அய்யன் எனக்கு பச்சோந்தி மூலம் எச்சரிக்கை செஞ்சபோதே நினைத்தேனடா.. கோவில் மூலம் வயிற்றை வளர்ப்பவன் தான் இப்படி துரோகம் செய்வான்னு.. பச்சை துரோகி.. உன் அண்ணனுக்கு எவ்வளவு நல்ல பேரு ஊர்ல.. குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்பே.. இது என் அய்யன் குடியிருக்கும் என் கோவிலடா.. இங்கேயே உன் கை வரிசையை காட்ட அவ்வளவு துணிச்சல் வந்துவிட்டாதாஆஆஆ" என கர்ஜித்தப்படி நஞ்சப்பனை ஒற்றைக் கையால் தூக்கி வீசியெரிய ..
சற்றுத் தள்ளி விழுந்த நஞ்சப்பன் "என்னடா.. பார்த்துகிட்டு இருக்கீங்க.. அவன விடாதிங்கடா" என கத்தவும்..
அந்த ஆறு பேரும் தங்கள் இடுப்பினில் இருந்த கத்திகளை எடுத்துக்கொண்டு சங்கிலி கறுப்பர் மேல் பாய..
சங்கிலி கறுப்பர் தன் உடைவாளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு.. தன் சிலம்பத்தடியை கையில் எடுத்து லாகவமாகவும், படு வேகமாகவும் சுழற்ற அதனால் தரையிலிருந்த இலை சருகுகள் காற்றில் மேலெழும்பி பரவ.. ஒரு புயல் தாக்குவது போல ஆறு பேர்களையும் பந்தாடினார்..
ஆறு பேர்களின் கைகளில் இருந்த கத்திகள் கணீர்..டணீர்..பணீர்.. என மூலைக்கு ஒன்றாய் தெறித்து விழுந்தது..
ஆறு பேரும் ஆறு திக்கில் விழுந்தனர்..
சற்று தள்ளி இருந்த நஞ்சப்பன் தவழ்ந்து வந்து சங்கிலியாரின் உடைவாளை எடுக்க எத்தனிக்க ,
ஒரு தூண் மறைவிலிருந்து வந்த
குதிரை "சிப்பி" அவனின் கையை மிதித்து நின்றது..
அவனால் அவனது கை எடுக்க முடியாமல் வலியில் துடித்தான்..
தன் சிலம்பின் சுற்றலை நிறுத்தி ..
சுற்றிலும் பார்க்க.. கையையும் காலையும் பிடித்தபடி அந்த ஆறுபேரும் சுருண்டு கிடந்தனர்..
தன் மீசையை,
நடுவிரலின் பின்புறமாய் நீவியபடி ஒரு புன்னகை செய்து அருகிலிருந்த ஒரு திண்டின் மீது அமர்ந்து சிலம்பின் மீது தாங்கியபடியே இருந்தார்..
கிழக்கு சிவக்க ஆரம்பிக்க..
காலை பூசை செய்ய பூசாரி வந்து கோவிலை சுத்தம் செய்த படியே பின்புறம் வந்து பார்க்க..
கோவிலில் கொள்ளையர்கள் நுழைந்த சேதி கேட்டு ஊரே கோவிலின் அருகில் இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் கூடிவிட்டது..
ஊர் பெரியவர்கள் ஆலமரத் திண்டின் மேல் அமர்ந்திருக்க.. ஒருபக்கம் ஆறு கொள்ளையர்களுடன் , தர்மகர்த்தா தம்பி நஞ்சப்பனையும் கைகால் கட்டி உட்கார வைத்திருந்தனர்..
ஊர் தலைவர் நந்தியப்பரும், தர்மகர்த்தா நீலகண்டரும் வர கூட்டத்தில் சற்று அமைதி..
கடைசியாக வாட்.ட சாட்டமாக, வயதானாலும் கட்டுடல் தளராத சங்கிலி கறுப்பரின் தந்தை பெரிய சங்கிலியும் வந்து ஊர்மக்களுக்கு வணக்கங்களை சொல்லியபடி ஆலமரத்திண்டில் அமர்ந்தனர்..
தர்மகர்த்தாவின் முகம் கோபத்தால் சிவந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தார்..
சங்கிலி கறுப்பர் ஊர் பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மரியாதை தரும்விதமாக கைகளை கட்டி நின்றிருந்தார்..
அவரது குதிரை சற்றுத் தள்ளி நின்றிருந்தது..
சங்கிலியாரின் தந்தை பெரிய சங்கிலி தன் குரலை செறுமியவாரே பேச ஆரம்பித்தார்.. "நம்ம அய்யன் (சிவன்) கோவிலுக்கு இதுவரை எந்த களவாணி பயலுகளும் எட்டிப்பார்த்தது இல்லை.. எங்க தாத்தா காலத்தில இருந்து,எங்க அய்யா (அப்பா) காலத்திலையும் சரி , நான் காவல் காத்த காலத்திலுஞ் சரி எவனையும் கண்டதில்ல.. ஆனா.. இப்ப என்னடானா புதுசா களவாணிக தலை தெரிய ஆரம்பிச்சிருக்கு.. அதுக்கு நம்ம ஊரிலையே ஒரு ஆளு துண போயிருக்காங்கனு நெனைச்சா தான் கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கு..
இதுக்கு ஊர் பெரியவங்க என்ன செய்யலாம்னு முடிவெடுக்கனும்" என்று பேசி விட்டு அமர்ந்தார்..
தர்மகர்த்தா நீலகண்டர் எழுந்து "பரம்பரை பரம்பரையா இந்த கோவிலுக்காகவே நாம உழைத்துக்கொண்டு வரோம்..நமக்கு இந்த அய்யனும், ஊர்மக்களும் எந்த குறை வச்சதும் இல்ல.. ஆனால் எந்த தலைமுறையிலும் இல்லாத ஒரு அவமானத்த கொடுக்க என் உடம்பிறந்தவனே வந்திருக்கானேன்னு நினைக்கிம் போது நெஞ்சு குமுறல் தாங்கல..
யாராக இருந்தாலும் நீதி ஒன்னுதா..
என்ன தண்டனையா இருந்தாலும் கொடுங்க..
அத அவன் ஏத்துகிட்டே ஆகனும்" என்று பேசிவிட்டு அமர்ந்தார்..
ஊர்தலைவர் நந்தியப்பர் பேச ஆரம்பித்தார் "நம்ம ஊருக்கு இப்படி ஒரு சோதனைக்காலம் கொள்ளையர்கள் உருவத்துல வந்திருக்கு.. அத தக்கசமயத்துல நம்ம சங்கிலி கறுப்பர் முறியடிச்சிருக்காப்ல.... அவரு லேசுபட்ட ஆளு இல்ல அந்த சிவனோட அம்சம் பொருந்தியவரு.. அவரு பொறக்கம்போதே பெரிய சங்கிலியும், நானும் அப்பவே கணிச்சோம்..
அவருக்கு நம்ம வாழ்த்த சொல்லிருவோம்...
நம்ம நீலகண்டர பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும்.. அப்படிபட்ட குணவானுடன் பொறந்தவருக்கு இப்படிபட்ட குணக்கேடு வந்தது வருத்தந்தான் .. நஞ்சப்பன் அடிக்கடி வெளியூர் பயணம் போனத ரொம்ப நாளாவே நம்ம பெரிய சங்கிலி கவனிச்சுகிட்டு தான் வந்துருக்காரு..
அவரோட நடவடிக்கைகள் சரியில்லைனு எனக்கும் தோன்றுச்சு..
அது இப்ப கண்கூடாவே தெரிஞ்சிப்போச்சு.. அதனால இவரோட சேர்ந்த கொள்ளையர்களையும் நாம அரசரோட காவலர்களிடம் ஒப்படைச்சிடுவோம்.. அங்க நம்ம அரசர் இவங்களுக்கு தண்டனைய தருவாங்க..
அதற்காக அரச உயர் காவல் அதிகாரிகளை வரச்சொல்லியிருக்கு..
அவர்கள் வந்ததும் இவர்களை ஒப்படைத்து விடுவோம்.." என்று நந்தியப்பர் பேசி முடிக்க..
சங்கிலி கறுப்பர், நந்தியப்பரின் அருகே வந்து காதில் ஏதோ சொல்ல..
நந்தியப்பர் அவரை பார்த்து சிரித்தபடியே,
"நம்ம சங்கிலி கறுப்பரின் சிலம்பம் விளையாண்டதில் கொள்ளையர்கள் ஆறு பேருக்கும் கைகால்களில் எலும்பு முறிஞ்சிறுக்கு.. அதற்கு நம்ம ஊரு வைத்தியர் ஈசுவர மூர்த்தி வைத்தியம் பார்க்கட்டும்.. அவங்களுக்கு அதற்கான சிகிச்சை நடக்கட்டும்" என சொல்லியதும்.. வைத்தியர் தனது உதவியாளர்களோடு சேர்ந்து அடிப்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்..
சிகிச்சை முடிவடையவும்,, சில குதிரை வீரர்களோடு, சிறை வடிவ கூண்டு வண்டியும் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது..
நந்தியப்பர், நீலகண்டர், பெரியசங்கிலி மூவரும் இணைந்து குதிரையில் வந்த காவல் அதிகாரிகளக வரவேற்று கொள்ளையர்களை ஒப்படைத்தனர்..
கூட்டம் முடிந்ததும் ஊர்மக்கள் கலைந்து சென்றனர்.. சங்கிலி கறுப்பரும் தன் குதிரையை நோக்கி நடக்க, "சங்கிலி கறுப்பா" என பெரிய கறுப்பின் குரல் கேட்க..
பணிவுடன் கைகளை கட்டிக்கொண்டு தன் தந்தையருகில் வந்து
"சொல்லுங்க அய்யா" என நிற்க..
அவரின் தோள் மீது கையை போட்டு..
"ரொம்ப பெருமையா இருக்குடே.. மண்ணு பாசமும்,வீரமும், அய்யன் பக்தியும் உன்னோட ரத்தத்துல ஊறிப் போன ஒன்னுடே.. ஆனா ஒன்னு.. எப்ப கொள்ளயனுங்க நம்ம மண்ணுல வர ஆரம்பிச்சிட்டானுங்களோ இனி தொடர்ந்து முயற்சிப்பானுங்க... அனேகமா அவங்க ஒரு கூட்டமாத்தான் இருப்பானுங்க.. இனிமே தான் நாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்.." என்று பெரிய சங்கிலி சொல்லி நிறுத்த..
"அய்யா.. நிச்சயமா... என்ன மீறி நம்ம மண்ணுல இருந்து ஒரு துரும்பக்கூட எடுத்துட்டுப் போக முடியாதுங்க அய்யா..
என் உசுற கொடுத்து இந்த மண்ண காப்பேனுங்க அய்யா..
இது நாம கும்புடுற நம்ம அய்யன் மேல சத்தியம்ங்க அய்யா.." என ஆவேசமாக சங்கிலியார் சொல்ல..
பெரிய சங்கிலி அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார்..
ஆலமரத்தின் பின்புறமிருந்து இரண்டு கண்கள் அவர்கள் இருவரையும் கோபமாக பார்த்தபடி...
(தொடரும்)
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக