திங்கள், 8 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 5

காத்திருந்த கண்கள் 5

ஆலமரத்தின் பின்புறம் நின்று சங்கிலி கறுப்பரை எரித்துவிடும் கோபக்கனல் போல ஒரு பார்வையை வீசிவிட்டு ஒரு ஆள் வேகமாக நடக்க ஆரம்பித்தான்..
வேகவேகமாக நடந்து, அந்த ஊரின் சத்திரத்தில் (வெளியூர் பயணிகள் தங்கும் விடுதி) நுழைந்தான்..  ஒரு சிறு மூட்டையை எடுத்துக்கொண்டு, சத்திரத்தின் பின்புறம் சென்று அங்கு நிறுத்தியிருந்த ஒரு குதிரையில் ஏறி வேகமாக அதனை விரட்டி ஊரின் எல்லையை கடந்து வடக்குப்பக்கமாக பயணமானான்..
எங்கும் இடைநில்லாத ஓட்டம்..
உச்சி வெயில் பொழுதில் ஒரு சிறு ஓடை அருகே குதிரையை நிறுத்தினான்.. ஓடையில் இறங்கி கைகால் முகம் கழுவி தண்ணீரை குடித்தான்.. குதிரையையும் குடிக்க வைத்துவிட்டு, ஓடையிலேயே நடந்து அந்த கரையை அடைந்து மீண்டும் குதிரையில் ஏறி விரைய..
அடர்ந்த காடு.. அதனை அடுத்து ஒரு குன்று .. குன்றினில் ஏறி அந்தப்பக்கமாக இறங்க ...
ஒரு பெரு சமவெளி..காடுகள் நிறைந்து..
உள்ளே பயணிக்க ..
காட்டுக்கொடிகளால் வேயப்பட்ட வீடுகள்.. கள்ளர்காடு..
அதில் ஒரு பெரிய வீட்டிற்கு முன் தன் குதிரையை நிறுத்திய அவன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான்..
உள்ளே..
மொட்டைத் தலையோடு ஒருவன்..
"வா.. அஞ்சப்பா.. போன காரியம் என்னாச்சு?" என்று அவன் கேட்க..

"முத்தப்பா..அதைப்பற்றி வந்து சொல்றேன்.. இந்தா இந்த மூட்டையை பிரித்துவை.. தலைவர் எங்கே?" என கேட்டப்படியே கையிலிருந்த மூட்டையை மொட்டையனிடம் கொடுக்க..

"அவர் கோவில்ல காளி பூசையில் இருக்காரு.." என்று சொன்னதும்..
அஞ்சப்பன் வீட்டிற்குள் சென்று பின்புறம் வழியாக கோவிலை நோக்கி நடந்தான்..
ஒரு குகைப்போல் இருந்த பாதையின் வழியாக உள்ளே நுழைந்து,
அங்கிருந்த திரையை விலக்கவும், அவன் முகத்தில் ரத்த துளிகள் தெறித்து விழ திகைத்து நின்றான் அஞ்சப்பன்..
எதிரில் மொட்டைத் தலையோடு, பெரிய புருவங்களும், அதற்கு கீழ் பிதிங்கி விழக்கூடிய அளவில் முட்டைக் கண்களும், மூக்கில் சிறு வளையமும்,
கட்டையான முறுக்கு மீசையும், நல்ல பெருத்த வாட்டசாட்டமான வியர்வை வழிந்தோடும் உடலோடும்,
கையில் பெரிய வெட்டுக்கத்தியோடு ஒருவன் நிற்க.. அருகில் ஒரு ஆடு துடிதுடித்துக் கொண்டு இருந்தது..
அவனுக்கு எதிரில் உக்கிரகாளி சிலை மிக உக்கிரமாக நின்றுக்கொண்டு இருந்தது.. சிலைக்கு சற்றுத் தள்ளி நான்கு பேர்கள் கைகளை கூப்பியபடி..

அஞ்சப்பனும் முகத்தை துடைத்துவிட்டு கைகளை கூப்பியபடி, அந்த நால்வர்களின் அருகே போய் நிற்க..
அவர்கள் பார்வையாலேயே வரவேற்று நிற்க வைத்தனர்..

அந்த வாட்டசாட்டமான மொட்டை ஆசாமி.. காளிக்கு பூசைகள் செய்ய ஆரம்பித்தான்.. ஆட்டின் ரத்ததை சிறிது நெய்யோடு கலந்து அகல் விளக்கில் ஊற்றி திரி போட்டு
எரிய வைத்தான்..
தன் உள்ளங்கையில் கற்பூரம் போன்ற ஒரு பொருளை எரிய வைத்து ஆராதனை செய்தான்.. முடிந்ததும்
எலுமிச்சை பழம் ஒன்றை அறுத்து,
தன் கைகட்டை விரலை கத்தியால் கீரி அறுத்த எலுமிச்சை துண்டுகளில் விட்டு, இரு துண்டுகளையும் காளியின் சிலைக்குக்கு அருகே வைத்தான்..
ரத்தம் வடியும் விரலை குங்குமத்தில் குலைத்து ஈரத்தோடு தன் நெற்றியில் பட்டையிட்டு, தள்ளி நின்றவர்களை பார்க்க அவர்கள் வரிசையாக வர, அவர்கள் நெத்தியிலும் இரத்தம் கலந்த குங்குமத்தை தடவினான்..
சற்று கண்களை மூடி ஏதோ மந்திரம் சொல்வதைப் போல உச்சரித்து விட்டு கடைசியாக கைகளை மேல் நோக்கி நீட்டியபடி "தாயே ! உக்கிரகாளி.. எங்கள் குலத்தை காப்பவளே.. எல்லாத்தையும் காப்பாத்து" என கணீர் குரலில் கூரியபடி தரையில் விழுந்து கும்பி்ட்டு எழ.. மற்றவர்களும் அப்படியே செய்தனர்..
பூசை முடிந்தது..
அங்கிருந்தவர்களில் இருவர் அந்த வெட்டுப்பட்ட ஆட்டினை தூக்கிச் செல்ல..
மற்ற இருவரை பார்த்து "நீங்க ரெண்டு பேரும் செல்லலாம்" என்று மொட்டைத் தலையன் சொல்ல .. இருவரும் வணங்கிவிட்டுச் சென்றனர்..

"வா.. அஞ்சப்பா.. போன காரியம் என்னாச்சு? உன் முகத்துல ஏதோ வாட்டம் தெரியுதே என்னாச்சு" என கேட்க...
"தலைவரே.. நீங்க சொல்லியபடி சாத்தான்காடு ஜமீந்தார் வீட்டில் கொள்ளையடிச்சிட்டோம்.. நல்ல வேட்டை தான்" என்று அஞ்சப்பன் சொல்ல..
"அது கிடக்கட்டும்.. அந்த நஞ்சப்பன் ஊருக்கு போனீங்களே.. அந்த விசயம் என்னாச்சு?" என மொட்டையன் கேட்க..

"அது வந்து.. அது வந்து தலைவரே' என தயங்க..

" தயங்காமல் சொல்லடா" என சற்று உரத்த குரலில் மொட்டையன் சொல்ல..

"அது வந்து தலைவரே.. நம்ம ஆட்கள் சிக்கிக் கொண்டார்கள்" என சங்கிலியாண்டிபுரத்தில் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

"என்ன.. இந்த செங்கோடன் ஆட்கள் சோடை போய்விட்டார்களா.. அவமானம்.. அவமானம் பெருத்த அவமானம்.. இதுவரை சென்று கொள்ளையிட்ட இடங்களில் ஒன்றிலும் சிக்காத நம்மாட்கள்.. முதன்முறையாக கைகால்கள் உடைந்து சிக்கிவிட்டார்களா" என பெருங்கோபத்தோடு கத்தினான்..

"ஆமாம்..தலைவரே.. அந்த ஊரின் காவலாளி சங்கிலி கறுப்பன் ஒத்தையாளாக இருந்து நமது திட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டான்..
ஆள் அரக்கத்தனமாக இருக்கின்றான்..
நாம் அவனை நேரடியாக எதிர்த்து வெல்ல முடியாது.. வேறு மாற்று வழியில் தான் செல்ல வேண்டும்" என்று அஞ்சப்பன் சொல்லி நிறுத்த..

"ஓ .. அப்பேர்பட்டவனா அந்த சங்கிலி கறுப்பன்.. நிச்சயம் அவனை நான் விடுவதாக இல்லை.. அடேய் .. சங்கிலி கறுப்பா.. உன் கண் முன்னாடியே உன் ஊர் கோவிலை கொள்ளையடித்து காட்டுகிறேனடா" என கோபத்தில் பெருங்குரலில் அலற..
மரங்களின் மீதிருந்த பறவைகள் எல்லாம் பயத்தினால் கத்தியபடி பறந்துச் சென்றன..

அப்பொழுது..

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக