காத்திருந்த கண்கள் 6
செங்கோடனின் கோபமான பேச்சின் அதிர்ச்சியில் மரத்திலிருந்த பறவைகள் அச்சத்தோடு பறந்த சில வினாடிகளில்..
வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான இருளை படரவிட..
சட்டென்று ஒரு மின்னல் வெட்டி இடி முழங்க.. மின்னல் தாக்கியதில் பறவைகள் பறந்த பச்சை மரம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க..
"வா.. அஞ்சப்பா போகலாம்.. அந்த காளியே நமக்கு வரத்தை தந்துவிட்டாள்..இனி ஆக வேண்டியதை பார்ப்போம்" என வேகமாக நடந்து செங்கோடன் வீட்டிற்குள் செல்ல.. அவனை பின்தொடர்ந்து அஞ்சப்பனும் சென்றான்..
செங்கோடன்.. அவனைப் பற்றி சிறிது பார்ப்போம்..
கள்ளர்காடு மற்றும்
கொள்ளையர்களின் தலைவன்..
கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவன்..
அச்சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய பெரிய பணக்காரர்களை எப்பொழுதும் அச்சத்திலேயே வைத்திருப்பவன்..
ஒரு இடத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்துவிட்டால் எப்படி பட்ட பாதுகாப்பாக இருந்தாலும் தகர்தெறிந்து கொள்ளையிடுவான்..
அதற்காக சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் பல கொலைகளை செய்துள்ளான்.. குழந்தைகளைத் தவிற..
பாதுகாப்பிற்கு இருக்கும் வேட்டை நாய்களை கழுத்தை கடித்தே கொன்றுவிடுவான்..
இதுபோதும் மற்றதை போகப்போக பார்த்துக்கொள்வோம்..
சங்கிலிபுரம்..
ஊருக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை அடுத்து ஊர்க்காவல் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை சங்கிலியார் தன் தந்தை பெரிய சங்கிலியிடம் சொல்ல அவரும் சரியென்று தலையாட்டி விட்டு, இருவரும் ஊர்த்தலைவர் நந்தியப்பர் வீட்டுக்குச் சென்றனர்..
அங்கு நந்தியப்பரிடம் பெரிய சங்கிலி "தலைவரே.. அடிப்பட்ட கொள்ளை கும்பலின் சகாக்கள் எப்படியும் கடுமையான கோவத்தில் இருக்க வாய்ப்பு இருக்கு..எப்படியும் திரும்ப வர முயற்சிப்பாங்க.. அதனால நம்ம ஊர் இளவட்டங்கள்ல கொஞ்ச பேர தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து ஊர்க்காவல் குழு ஒன்றை உருவாக்கலாம்..னு ஒரு ரோசன.. அதான் உங்கள கேட்டு முடிவெடுக்கலாம்னு வந்தோம்" என்று சொன்னதும்,
"ஆமாங்க பெரிய சங்கிலியாரே..நானும் இது சம்மந்தமா பேசலாம்னு இருந்தேன்.. நம்ம ஊர் வாலிப பசங்களுக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்.. பொறுப்பும் அதிகமாகும்.. அதனால உடனே ஆரம்பிச்சிடலாம்ங்க பெரிய சங்கிலியாரே" என்று நந்தியப்பர் பேசி முடிக்கவும், அவர் மகன் குமரன் உள்ளிருந்து வந்து
"அய்யா..அய்யா.. என்னையும் சேத்து விடுங்க அய்யா.. சங்கிலி கறுப்பண்ணனோட சேர்ந்து நானும் பழகிக்கிறேங்க அய்யா" என்று தந்தை நந்தியப்பரின் கைகளை பிடித்தபடி கேட்க.. அவரும் சிரித்தபடியே
"பெரிய சங்கிலியாரே உங்கள் முதல் மாணவனாக எனது மகன் குமரனை சேத்துக்கங்க.. அவனுக்கும், நம்ம ஊர் பிள்ளைகளுக்கும் எல்லா பயிற்சியையும் கொடுக்கும் குருநாதரா நீங்களே இருங்க.. இப்பவே தண்டோரா போட்டு விவரத்த சொல்லிடுவோம்" என்று நந்தியப்பர் சொன்னதும்,
"குறுக்கிடுறதுக்கு மன்னிக்கனுங்க தலைவரய்யா.. தண்டோராலாம் போட வேண்டாம்ங்க.. எப்படியாவது தகவல் கொள்ளையருங்களுக்கு போக வாய்ப்பு இருக்கு அதனால.. நானே கொஞ்சம் ஊர்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து பயிற்சிய ஆரம்பிச்சிடுரோம்ங்க அய்யா" என்று சங்கிலி கறுப்பர் சொன்னதும் , தலைவர் சிரித்தபடியே தலையாட்டினார்..
குமரன் ,சங்கிலி கறுப்பரின் கைகளை பற்றிக்கொண்டு "அண்ணே.. நம்ம மண்ணுக்காக எந்த தியாகமும் செய்ய தயாருங்கண்ணே.. இது நம்மூர் அய்யன் (சிவன்) மேல ஆணைங்க ணே" என்று கம்பீரமாக சொன்னதும்,
பெரிய சங்கிலியார் குமரனையும், பெரிய கறுப்பரையும் இரு கைகளாலையும் கட்டி அணைத்து இருவருக்கும் நெத்தியில் முத்தமிட்டார்..
"இந்த வீரந்தான் குமரா நம்ம மண்ணோட பொக்கிசம்.. உன்னைப் போல மண்ணை நேசிக்கிற பாசக்கார பிள்ளைகள் இருக்கும் வரை நம்ம மண்ண எந்த கேடுகெட்ட நாயும் ஒன்னுஞ்செய்ய முடியாது" என்று பெரிய கறுப்பர் சொல்ல..
நந்தியப்பரும் பெருமை பொங்க பார்த்தார்..
மறுநாளிலிருந்து தகுதியான இளவட்டங்களை சங்கிலி கறுப்பர் தேர்ந்தெடுத்து கூட்டி வர...
கோவில் உள்புறம் இருக்கும் பெரிய திடலில் அவர்களுக்கு சிலம்ப பயிற்சியை தொடங்கினார் பெரிய சங்கிலி..
அதே நேரம்..
கள்ளர்காட்டில்..
செங்கோடன் தன் சகாக்கள் சிலரை அழைத்து சதிஆலோசனையில் இருந்தான்..
அப்பொழுது ஒரு பெரியவர் வர அனைவரும் எழுந்து நின்று மரியாதை கொடுத்து , ஒரு உயரமான ஆசனத்தை காட்டி "அமருங்கள் குருதேவா" என்க
" என்ன செங்கோடா.. என்ன சிக்கலான பிரச்சினை..மிக முக்கியமான ஆலோசனை என்றால் தானே அழைப்பு வரும்.. அப்படி என்ன முக்கிய சேதி" என தன் சடை முடியை லேசாக கோதியபடி பேச்சை ஆரம்பிக்க..
"குருநாதா.. கொள்ளையடிக்க போன இடத்தில்" என்று ஆரம்பித்து முன்பு நடந்த விவரங்களை முழுவதும் சொல்லி முடித்தான் செங்கோடன்..
"எந்த ஊர் செங்கோடா?" என குருநாத கிழவர் கேட்க..
"சங்கிலிபுரம்ங்க குருநாதா" என்றதும்..
குருநாத கிழவர் முகத்தில் சற்றே அதிர்ச்சியிடன் கூடிய அமைதி.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக