திங்கள், 15 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 7

காத்திருந்த கண்கள் 7

  அமைதியான அந்த பெரியவரை பார்த்த செங்கோடன், "என்னங்க குருநாதா ஏதோ யோசனைல இருக்கீங்க.."
"செங்கோடா.. நானும் , உங்க அப்பாவும் சின்ன வயசில் நிறைய ஜமீந்தார்கள் வீடுகள்ல கனகச்சிதமாக நம்ம தொழிலை முடித்துள்ளோம்.. அரசரின் அரண்மனைகள்ல கூட கைவரிசைய காட்டிருக்கோம்.. அதனால பெரிய நிலகிழார்கள்லாம் எங்கள் பேரை கேட்டால் அலறுவாங்க..
அப்ப நீ சின்ன குழந்தை..
ஒரு தடவை இந்த சங்கிலிபுரத்தை பற்றியும், அங்க உள்ள கோவிலை பற்றியும், அதுல இருக்குற விலைமதிப்பில்லாத நகைகளை பற்றியும் யாரோ சொல்ல கேள்விப்பட்டோம்.. சரி.. அங்கையும் நம்ம வேலைய காட்டுவோம்னு நாங்க முடிவு செஞ்சி கிளம்பி நம்ம ஊர் எல்லைய நெருங்கும்போது,
உங்கம்மாவ கருநாகம் கடிச்சிடுச்சுனு தகவல் வந்துச்சு.. நாங்க திரும்பி வந்துட்டோம்.. .அப்ப உங்க அம்மா கால் செயல் இழந்து போச்சு..சரின்னு கொள்ளை திட்டத்தை தள்ளிப்போட்டோம்.. சுற்றுவட்டாரத்துலயே நம்ம தொழில  பாத்துட்டு வந்தோம்.. அப்பறம் மறுபடியும் நாங்க சங்கிலிபுரத்துக்குப் போக திட்டமிட்டு கிளம்பினோம்..
அன்னைக்கினு பாத்து பயங்கர மழை காத்து..  ஒரு மண்டபத்துல போய் ஒதுங்கினோம்.. அப்போ திடீர்னு இடிச்ச இடி மண்டபத்துல விழ.. ஒருபக்கம் தூண் சரிஞ்சி இடிஞ்சி விழுந்திடுச்சு.. அதுல எங்க ரெண்டு பேரோட குதிரைகளும் பலியாகிடுச்சு" என்று சொல்லி பெரியவர் சற்று பேச்சை நிறுத்தினார்..
செங்கோடனும், அஞ்சப்பனும் மற்றும் சிலரும் பெரியவரின் முகத்தையே பார்த்தபடி இருந்தனர்..
பெரியவர் மீண்டும் பேச்சை துவங்கினார்.. "நாங்க ஒவ்வொரு முறையும் கிளம்பும் போதும் ஏதோ ஒரு அசம்பாவதம் நடந்து கொண்டே இருந்துச்சு.. அப்பறம் நம்ம உக்கிர காளி கோவில்ல சோழிப்போட்டு பாத்ததுல..
நமக்கு நேரம் சரியில்ல அதனால இப்போதைக்கு அங்கப் போக வேண்டாம்னு முடிவு செய்தோம்..
இருந்தாலும் உங்க அய்யாவுக்கு அந்த கோவில்ல கொள்ளையடிச்சே ஆகனும்ங்கிற எண்ணம் போகவே இல்ல.. நான்கு அமாவாசைகளுக்கு  உக்கிர காளிக்கு கடுமையான பூசை செய்தார்..
ஐந்தாவது அமாவாசை நாள்..
எந்த தடங்கல்  வந்தாலும் பறவாயில்லை என்று கிளம்பி விட்டோம்..
அப்ப தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.. நான், உங்க அய்யா, இன்னும் மூனு பேரோட கிளம்புனோம்..
காட்டு வழியாகப் போய் சங்கிலிபுரம் எல்லையை அடைந்து, குதிரைகளை அங்கேயே விட்டுட்டு நடந்து,
ஊருக்குள் நுழையும் பாதை வழியாக போனோம்.. அப்போ ஒரு பெரிய மரம் தாண்டி நான் முன்னால் போக, திடீரென அந்த மரத்தின் பெரியக் கிளை உடைந்து விழும் சப்தம் கேட்டது அதை தொடர்ந்து இரண்டு பேர் அலறலும் கேட்டது.. திரும்பி பார்த்தால், உங்க அய்யாவும், நம்ம கூட்ட ஆள் ஒருவரும் அந்த மரக்கிளையின் அடியில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்" என்று பெரியவர் சொல்லி முடித்ததும் அவரது கண்களில் கண்ணீர்.. அந்த இடமே சற்று நேரம் மயான அமைதியாக இருந்தது..

அங்கிருந்தவர்கள் அவரவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..

"அப்போ.. என்ன செய்யலாம் குருநாதா?
நம் ஆட்களை சிறைக்கு அனுப்பியவங்கள பழிக்குப் பழி வாங்கியே ஆகனும் குருநாதா.." செங்கோடன் கோவமாய் பேச..

"அவசரப்படாதே செங்கோடா..  தவறு நம்மீது வைத்துக்கொண்டு அவர்களை பழிக்குப்பழி வாங்குவோம்னு பேசுவது சரியல்ல.. அதில்லாமல் உக்கிரகாளி கோவில் பக்கத்தில் ஒரு பச்சை மரம் இடி தாக்கி எரிந்ததுனு கேள்விப்பட்டேன் உண்மையா?' என பெரியவர் கேட்க..

" ஆமாங்க.. குருநாதா.. நானும் அங்கே பக்கத்தில் தான் இருந்தேன்.. நம்ம காளியாத்தா நமக்கு உத்தரவு தந்தது குருநாதா'' செங்கோடன் சொல்ல

"செங்கோடா.. அதுவும் ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
இப்போதைக்கு அவசரகதியில் எதுவும் செய்ய வேண்டாம்..
ஏற்கனவே உன் அப்பாவை இழந்த எங்களால், உனக்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்க முடியாது.. யோசிப்போம்.. யோசித்து முடிவெடுப்போம்.."

"பயப்படாதீங்க குருநாதா ஊக்கிர காளியின் அருள் இருக்க, உங்களோட ஆசி இருக்க இந்த செங்கோடனுக்கு ஒன்றும் ஆகாது குருநாதா.. எங்கய்யாவோட கனவை, லட்சியத்த நிறைவேற்றும் வரை இந்த செங்கோடனோட உயிர் இந்த உடம்பை விட்டுப்போகாதுங்க குருநாதா..
எங்கய்யானால முடியாமல் போன அந்த வேலைய கண்டிப்பா முடிச்சிக்காட்டுவேன் குருநாதா.. இது நம்ம உக்கிரகாளி மேல ஆணை" என்று செங்கோடன் ஆவேசமாக பேசினான்..

"சபாஷ் செங்கோடா.. உன் அப்பாவோட ரெண்டு மடங்கு வீரம் உனக்கு.. அவரைப் போலவே சிந்தனையும் உனக்கு.. இருந்தாலும் நீ எச்சரிக்கையாகவே இருக்கனும் செங்கோடா.. சங்கிலிபுரத்தின் காவல்காரனும் சற்றும் சளைத்தவன் இல்லை என்றே தோன்றுகிறது.. அதனால வேகமாகவும் அதோட விவேகமாகவும் செயல்படனும் செங்கோடா..
அதற்கு ஒரு யோசனை சொல்கிறேன் கேள்" என பெரியவர் சொன்னதும் அனைவரும் பெரியவரை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக