#சொப்பன_சுந்தரி_கார்
நள்ளிரவு நாலு மணிக்கு..
'உலகம் சமநிலைப் பெற வேண்டும் ஏற்றத்தாழ்வில்லா நிலை வேண்டும்'உலகம் சமநிலைப் பெற வேண்டும் ஏற்றத்தாழ்வில்லா நிலை வேண்டும்' (வேற ஒன்னுமில்ல போன் ரிங் டோன் தான்)
"அ..ல்..லோ' பாதி தூக்கத்தில் பேசுனா இப்படித்தான்..
" அலோ.. விஜய்.. நான் மாஸ்டர் பேசுறேன்"
"ஆங்.. அலோ.. அலோ..சொல்லுங்க மாஸ்டர்.. என்ன இது நடுராத்திரியில போன் செஞ்சிருக்கீங்க.. எதுவும் அவசரமா?"
"என்னாது.. நடுராத்திரியா.. தம்பி இப்போ அதிகாலை நாலு மணிப்பா.. என்ன நைட்டு ரொம்ப நேரம் போனையே நோண்டிகிட்டு இருந்தீங்களா? "
"ஹி ஹி ஹி.. ஆமாங்க மாஸ்டர்.. "
"நல்லாவே இளிக்கிறீங்க.. சரிசரி.. விசயத்துக்கு வரேன்.. ஒரு அஞ்சி மணிக்கு காந்தி பார்க்குக்கு வரமுடியுமா.. ஒரு முக்கியமான விசயம் பேசனும்.."
"ஓ.. வந்துடுறேனுங் மாஸ்டர்.."
"அப்பறம்.. சின்ன வேல இருக்கு.. பெரிய வேல இருக்குனு சொல்லிடாதிங்க.. வந்துடுங்க..வந்துடுங்க..வந்துடுங்க.. டொடக்" போன வச்சிட்டாரு மாஸ்டர்..
'அய்யய்யோ.. என்ன விசயம்னு தெரியலையே.. அவசரமா கூப்புடுறாரே..கூப்புடுறாரே."னு பொலம்பியபடி இருக்க..
"என்னங்க.. பொலம்புரீங்க.. கனவு கினவு கண்டீங்களா" வீட்டம்மா கேட்க..
"இல்லம்மா.. மாஸ்டர் ஏதோ அவசரமா கூப்ட்டாங்க.. அதான் கிளம்புறேன்" என்று துணியை மாட்டிய படி சொல்ல..
"அதுக்கு ஏங்க பாவாடைய எடுத்து மாட்டுறீங்க.. உங்க கைலி அங்க இருக்கும் பாருங்க"
"அய்யோ..எத்தன தடவ சொல்லியிருக்கேன் கைலியையும், பாவாடையையும் தனித்தனி செல்புல வைய்யினு" என்று சொல்லியபடி இன்னொரு துணிய எடுக்க..
"ஏங்க.. அது நைட்டி.. "
"அய்யோ.. முடியல"
"நான் தனித்தனி செல்புல தான் வச்சிருக்கேன்.. நீங்க தான் கொழப்பத்துல என்னோட செல்புல மாத்தி எடுத்துகிட்டு இருக்கீங்க இருங்க வந்து எடுத்து தரேன்" னு அவங்க வந்து
செல்ப திறக்க..
"எனக்கு கைலி வேண்டாம் .. லோயர், பனியனே போட்டுக்கிறேன்" னு அத எடுத்து மாட்டிகிட்டு தன்னோட பைக்க எடுத்துகிட்டு விஜய் கிளம்புனாரு..
குளுரு வேற.. வண்டிய பொறுமையா
ஓட்டிகிட்டு போயி,
ரெண்டு மூனு தெருக்கள்ல திரும்பி, வளைஞ்சி நெளிஞ்சி கடைசியா காந்தி பார்க்கு வந்து சேரவும்..
மாஸ்டரும் அவரோட புல்லட்டுல வந்து இறங்குனாரு..
"வணக்கங்க மாஸ்டர்"
"வணக்கம்.. விஜய்.. வாங்க..வாங்க."
"சொல்லுங்க மாஸ்டர் .. என்ன விசயம்?"
மாஸ்டரின் முகம் சற்றே மாறியது..
"நம்ம தாஸ் ஒரு தகவல் சொன்னாரு.. அதபத்தி தான்"
"என்ன தகவல்ங்க மாஸ்டர்"
"சொல்றேன் விஜய்"..
"சொல்லுங்க மாஸ்டர்..என்ன விசயம்?" னு விஜய் கேட்க..
மாஸ்டரின் முகம் மாறியது..
"விஜய்.. நம்ம தாஸ்கிட்ட இருந்த சொப்பன சுந்தரி கார் திருடு போயிடுச்சாம்?"
"என்னாது... கார் திருடு போயிடுச்சாஆஆஆ.. என்ன மாஸ்டர் சொல்றீங்க?"
"யோவ்.. நான் தமிழ்ல தான சொல்றேன்.. அப்பறம் என்ன திருடு போயிடுச்சானு எக்கோ?"
"கோச்சிக்காதிங்க மாஸ்டர்.. நம்ம நண்பரோட காராச்சேனு ஒரு ஆதங்கந்தான்.."
"இப்ப.. அந்த கார் திருடு போனதுக்கூட கவலையில்ல.. அதுல ஒரு முக்கியமான பொருள் வச்சிருந்தார்.. அதனாலதான் மனுசன் ரொம்ப பொலம்பிகிட்டு இருக்காரு விஜய்"
"அடடே.. அப்படி என்னங்க மாஸ்டர் முக்கியமான பொருளு?"
"ஒரு கிலோ பேரிச்சம் பழமும்.. அரைக்கிலோ பனவெல்லமும்"
"மாஸ்டர்.. விளையாடாம சொல்லுங்க"
"விஜய்.. உண்மைதாம்பா.. அந்த பேரிச்சம் பழமும், பனவெல்லத்தையும் சொப்பன சுந்தரி தான் அவங்க காரை கொடுக்கும் போது சேர்த்துக் கொடுத்தாங்களாம்.. அதான் அந்த காரு காணம போன விசயத்த போலீஸ்ல கூட சொல்லல.."
"ஏனுங்க மாஸ்டர் அவ்வளவு சீக்ரெட்டா?"
"அது தான் இல்ல.. அந்த வண்டிக்கு எந்த டாக்குமெண்டும் கிடையாது.. போலீஸ்க்கு போனா நாம தான் தண்டம் அழனும்"
"அடப்பாவமே.. இப்படி ஒரு கெரகமா.. சரிங்க மாஸ்டர்... இப்ப நாம என்ன செய்யனும்"
"வேற என்ன.. இப்ப அந்த கார நாம தான் கண்டுபிடிக்கனும் விஜய்"
"காரோடு சேர்த்து ஒருகிலோ பனவெல்லத்தையும், அரைக்கிலோ பேரீச்சம் பழத்தையும்"
"ம்க்கும்.. விளங்கிடும்.. ஒருகிலோ பேரீச்சம்பழம், அரைக்கிலோ பனவெல்லம்யா.. எப்ப பாரு ஏதோ ஒரு கொழப்பத்துல இருந்துகிட்டு"
"சாரி பார் த டிஸ்டபன்ஸ்ங்க மாஸ்டர்"
"இந்த இங்கிலீசுக்கு மட்டும் கொறைச்சல் இல்ல.. உடனே கிளம்புங்க விஜய்"
தாஸ் அண்ணனோட சொ.கார் (சொகுசு கார் இல்லைங்க.. சொப்பன சுந்தரி கார்) காணாமல் போனத கண்டுபிடிக்கனும்னு மாஸ்டர் சொன்னதுனால விஜய் அவரோட பைக்க எடுத்துகிட்டு,
ரோடு ரோடா.. தெருத் தெருவா.. நகர் நகரா.. ஊர் ஊரா..
("யோவ்.. நிப்பாட்டுயா"னு நீங்க திட்டுறது காதுல கேக்குது.. அதனால ஊர் ஊராவோட நிப்பாட்டிக்கிறேன்) லோலோனு சுத்த ஆரம்பிச்சிட்டாரு..
"அய்யய்யோ.. இந்த மனுசன் காரு எங்க இருக்குனு தெர்லயே.. மாஸ்டர் வேற.. ஒரு பக்கம் தேடுறாங்க.. நாம வேற பச்சத் தண்ணி பல்லுல காட்டாம வந்துட்டோம்..என்ன செய்யலாம்" னு
விஜய் பொலம்பிகிட்டே வரும் போது நாலஞ்சி தென்னமரங்கள பாத்த உடனே அவரு கண்ணுல ஒரு ஒளி வந்துச்சு..
"ம்ம்ம்.. அவர்ட்ட கேட்டா ஏதாவது ஐடியா தருவார்" னு தன்னோட மொபைல் போன்ல 'பண்ணையார்' நம்பருக்கு போன் போட்டாரு 'டொய்ங்..டொய்ங்..டொய்ங்.. டூட்.டூட்..டூட்.டுன்..கிளிக்..
நீங்கள் டயல் செய்த சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்.. சிறிது நேரங்கழித்து முயற்சி செய்யவும்.. டுடுக்' என லைன் கட்டாக...
"இந்த நேரம் பார்த்தா மனுசர் தொடர்பு எல்லைக்கு வெளியே போவாரு.. ம்ம்ம் என்ன செய்யலாம் .. அவருக்குப் போட்டுப் பாக்கலாம்" னு சொல்லிகிட்டு 'EK' னு டைப் செய்து அந்த நம்பருக்குப் போட.. "நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.. பிறகு முயற்சிக்கவும்" னுசொல்லிபுட்டு அந்த பெண் குரல் நின்னுபோச்சு..
"என்னடாயிது.. அவரு வெளிய போய்ட்டாரு.. இவரு ஆப்பன்னிப் போட்டாரு இப்ப என்ன செய்யலாம்" னு மண்டைய சொறிஞ்சிகிட்டே அப்படி இப்படி பார்க்க.. எதிர்ல ஒரு பழக்கடை தெரிஞ்சது..
"சரி.. பசி வேற எடுக்குது.. சாப்ட்டா தான் மூளை வேலைச் செய்யும்.. ரெண்டு வாழப்பழத்த தின்னுபுட்டு யோசிப்போம்" னு அந்த கடைய பார்த்து பைக்க நகர்த்துனாரு விஜய்..
கடைகிட்ட வண்டிய நிப்பாட்டிபுட்டு ரெண்டு வாழப்பழத்த வாங்கி தோல் உறிச்சி கடிச்சிகிட்டே, ஏதோ சிந்தனைல பொலம்பிகிட்டே அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்க.. அந்த பழக்கடையில ஒரு டிவி.. ஏதோ ஒரு பழையப்படம்.. அதுல ஒரு சீன் வர.. விஜயோட கண்ணு பிரகாசமாக.. தலையில ஒரு லைட்டு எரிஞ்சது..
"ரைட்டு.. நல்ல ஐடியா.. இதற்கு 'நந்திபிரியர் பிள்ளை' தான் சரியா வருவார்.. விஜய் ஒனக்குக்கூட அப்பப்ப மூளை வேலை செய்யிதுடா சபாஷ்" னு தன்னோட கன்னத்தை கிள்ளி அவரே முத்தம் கொடுத்துகிட்டாரு..
மறுநாள் காலை 10:30 மணி..
மாஸ்டரோட போன் மணியடிச்சது..
"ஆலோ.. சொல்லுங்க..விஜய்.. இப்பதான் உங்கள பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன்..
ஓ.. அப்படியா.. கண்டுபிடிச்சிட்டீங்களா வெரிகுட்..வெரிகுட்.. இப்ப எங்க இருக்கீங்க.. காந்தி பார்க் கிட்டயா.. இதோ கிளம்பிட்டேன்.. ஓ..சரி.. வரும்போது தாஸையும் கூட்டிட்டு வந்திடுறேன்" என்று மாஸ்டர் பேசிவிட்டு தன்னோட புல்லட்டை எடுத்து கிளம்பினார்..
ரெண்டு ரைட்டு, ஒரு லெப்ட்டு, மறுபடியும் ஒரு ரைட்டு , அப்பறம் ஸ்ட்ரெய்ட்டா போயி ஒரு ரைட்டு.. தாஸண்ணே வீடு வந்திடுச்சு..
மாஸ்டர் காலிங்க பெல்லை அமுக்க .. உள்ளே குருவிகள் இன்னிசை..
கதவு திறக்கும் சத்தம்.. திருமதி.தாஸ் கதவை திறந்தபடியே..
"வாங்க ணே.. உள்ள வாங்க" என்று அழைக்க..
"தாஸ் இருக்காப்லையா மா" என கேட்டபடி உள்ளே போக..
"இருக்காங்க ணே.. நீங்களே வந்து பாருங்க.. எப்படி இருக்காங்கன்னு" என்று சொல்லியபடியே "என்னங்க.. மாஸ்டர் அண்ணே வந்திருக்காங்க" என்று குரல் கொடுக்க..
சோகமே உருவெடுத்து.. முகமெல்லாம் அழுது வடிஞ்சி.. தாடியும் பெருசா வளர்ந்து நம்ம பிரபுதேவா மாதிரி இருந்தாப்ல..
"அய்யய்யே.. என்னங்க தாஸ் சின்னப்புள்ள மாதிரி அழுதுகிட்டு.. நிப்பாட்டுங்க.. முகத்த துடைங்க" மாஸ்டர் சொல்ல..
"மாஸ்டர்..மாஸ்டர்.. என்னோட சொப்பன சுந்தரி என்னைய விட்டுட்டு.. ச்சேய்.. சொப்பனசுந்தரி காரு என்னைய விட்டு போயிடுச்சேஏஏஏ.. மாஸ்டர்.. நான் என்ன்ன்ன செய்வேன்..மாஸ்டர்" னு சிவாஜி பாணியில பேசுனாரு..
"தாஸ்..கவலைப்படாதிங்க.. உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி..
உங்க சொப்பன சுந்தரி கிடைச்சிடுச்சு.. ச்சேய்.. உங்களோட சேர்ந்து நானும் உளர்றேன்.. உங்க காரு கிடைச்சிடுச்சு.."
"ஆகா.. என்னாது என்னோட காரு கிடைச்சிடுச்சா.. எங்கே? எப்போங்க மாஸ்டர்"
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விஜய் போன் செஞ்சாரு.. கார் இருக்குற எடத்த கண்டுபிடிச்சி எடுத்துட்டு வந்திருக்காரு..இப்ப நாம காந்தி பார்க் போறோம்.. சொப்பன சுந்தரிய ஓட்டிட்டு வரோம்"
"மாஸ்டர்.." தாஸ் அதிர்ச்சியாக..
"சாரி..சாரி.. சொப்பன சுந்தரி கார ஓட்டிட்டு வரோம்னு சொல்ல.. பங்கு ஸ்லிப்பாயிடுச்சு.. ஹே ஹே"
"ஏஏஏஏ.. என்னோட காரு கிடைச்சிடுச்சேஏஏ" னு தாஸ் கத்திகிட்டு, குதிச்சிகிட்டு டான்ஸ் ஆட..
அவர அப்படியே கைய புடிச்சி கூட்டிட்டுப் போய் புல்லட்ல உக்கார வச்சி மாஸ்டர் வண்டிய ஓட்டிட்டுப் போனார்..
காந்தி பார்க்..
விஜய், ஜூஸ் காலியான கண்ணாடி டம்ளர்ல இருந்த நுரையக்கூட விடாம "டொர்..டொர்..டொர்ர்ர்" உறிஞ்சிகிட்டு இருந்தாரு..
மாஸ்டரும், தாஸும் புல்லட்ல வந்து இறங்குனத பார்த்துட்டு அவங்களை நோக்கி போனாரு..
தாஸ் துள்ளி குதிச்சி ஓடி வந்து விஜய கட்டிப்புடிச்சி தூக்கி ஒரு சுத்து சுத்துனாரு.. 'நன்றி..நன்றி..விஜய் ரொம்ப நன்றி' என சொல்லிகிட்டே சுத்த.. கொஞ்ச தள்ளி நின்னுகிட்டு இருந்த காரை பாத்ததும் தாஸ் கைய விலக்க.. தரையில 'தொபகடீர்' விஜய் விழ.. "அய்யய்யோ"னு அவர் கத்த..
அத கண்டுக்காம தாஸ் ஓடிப்போயி கார்மேல படுத்துகிட்டாரு..
மாஸ்டர் வேகமாக வந்து விஜய கையை புடிச்சி தூக்க.. விஜய் இடுப்ப பிடிச்சிகிட்டே " அய்யோ..அம்மா"னு மொனகிகிட்டே எந்திரிச்சி நின்னாரு..
"வெல்டன்..விஜய்.. வெல்டன்.. சொன்ன வேலைய எந்தவித சொதப்பலும் இல்லாம கரெக்டா முடிச்சிருக்கீங்க.. வெல்டன் மை பாய்" என்று கையை குலுக்கி முதுகில் தட்டிக் கொடுத்தார்..
"ஆமா.. விஜய்.. கார் எங்க இருந்துச்சு.. எப்படி கண்டிபிடிச்சீங்க" மாஸ்டர் கேட்க..
"அது ஒரு பெரிய கதைங்க மாஸ்டர்"
"விஜய்.. ஏற்கனவே கதை ஜவ்வா இழுத்துகிட்டு போவுது .. கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க" மாஸ்டர் சொல்ல..
"சரிங்க மாஸ்டர்.. சொல்லிடுறேன்.. கார் திருட்டுப் போக நீங்களும் ஒரு காரணம்" விஜய் சொல்ல..
"என்ன விஜய் சொல்றீங்க" மாஸ்டர் அதிர்ச்சியாக..
"சொல்றேன் கேளுங்க..
நேத்து உங்ககிட்ட பேசிட்டு வந்தப்பொறவு.. பண்ணையாருக்கும், இகே அவருக்கும் போன் போட்டேன்.. எடுக்கல.. அப்பறம் என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது டிவில பழைய படம் போட்டிருந்தாங்க.. அதுல ஒரு மந்திரவாதி வெத்தலைல மைய தடவி காணாம்ப்போன ஒரு ஆளை தேடி கண்டுபிடிச்சு சொல்லுவாரு அத பாத்துட்டு எனக்கு ஒரு யோசன..
கோவில் கோவிலா அலைவாரே நம்ம நந்திபிரியர் பிள்ளை...அவர பார்க்க சாமியார் போலவே இருப்பாரா.. அப்பப்ப சித்தர் பாட்டுலாம் எழுதுவாரா..
அதனால அவர்ட்ட இதபத்தி கேக்கலாம்னு வண்டியை நேரா அவரு வீட்டுக்கு விட்டேன்.. அங்க அவரு இல்ல.. சரி எந்த கோயிலிலாவத நந்திகிட்ட பேசிகிட்டே இருப்பாரேனு கோவில் கோவிலா தேடிட்டுப் போனேன்.. கடைசியில நம்ம பேரூர் பட்டிஸ்வரர் கோவில்ல புளிய மரத்துகிட்டயும், நந்திகிட்டயும் மாறி மாறி பேசிகிட்டு இருந்தாரு.. நான் பேச்ச வழிமறிச்சி நம்மலோட பிரச்சினைய சொல்ல , என்னைய மேலையும் கீழயும் ஏறயிறங்க பாத்துட்டு 'ஏம்பா. விஜி என்னைய பாக்க மந்திரவாதி போலயா தெரியுறேன்.. போயா அங்கிட்டுனு வெரட்டிவிட்டுட்டு அவர் நடக்க...
நான் அவர விடாம.. கால்ல விழுந்து கொஞ்சி, கெஞ்சி, கதறி அழுவ..
'ச்சேய்..என்னயா உன்னோட பெரிய இம்சையா போச்சே'னு ஏதோ பெரிய மனசு செஞ்சி, எனக்கு உதவ..
அந்த கோவில்லையே ஒரு சாமியார பிடிக்க.. அவர்ட்ட இவரு நிலமைய சொல்ல.. அவரு ஒரு வெத்தலைய எடுத்து கண்ணங்கரேல்னு ஒரு மைய தடவ.. கண்ண மூடிகிட்டு ஏதோதோ அந்த சாமியார், மந்திரம் போல முனுமுனுக்க.. திடீர்னு வடக்குப்பக்கம் பாத்து மூனு தடவ தூ..தூ..தூ..னு துப்ப..
அப்பறம் கண்ண திறந்த அந்த சாமியாரு, "இங்கேயிருந்து வடக்கால ஒரு மூனு கல்லு தள்ளி ஒரு தோப்புல அந்த காரும், அத தள்ளிகிட்டு போனவங்களும் இருக்காங்க சீக்கிரம் போய் பாரு'ன்னு சொல்ல..
நான் வேகமாக அவருக்கு ஒரு நன்றிய சொல்லிட்டு திரும்ப.. நம்ப நந்திபிரியர் நம்மல பாத்து பெரிய கும்புடா போட்டு
"ஆள விடுடா சாமீ" னு சொல்லிபுட்டு வேகமா எஸ்கேப்பாக..
நான் நேரா வண்டிய எடுத்துகிட்டு..
சாமியார் சொன்ன தோப்புக்குப் போனாஆஆஆ..
அது நம்ம பண்ணையார் தோப்பு..
அடடே.. இங்க காரு எப்படி வந்துச்சுனு
யோசிச்சிகிட்டே போனா.. அங்க ரெண்டு பேரு நிக்கிறாங்க" னு சொல்லி விஜய் கொஞ்சம் மூச்சு வாங்க..
"யாரவந்த ரெண்டு பேரு விஜய்?" மாஸ்டர் கேட்க..
"வேற யாரு.. நம்ம பண்ணையாரும், இகேவும் தான்"
"என்னாது.. அவங்க ரெண்டு பேரா?" மாஸ்டர் அதிர்ச்சியாக..
"ஆமாங்க மாஸ்டர்.. நேரா போயி நா கேட்க.. என்னங்கங்க இப்படி செஞ்சிபுட்டீங்களே னு கேட்டேன்.. அதுக்கு பண்ணையாரு " வண்டிக்குள்ள பாரு தம்பி..னு சொல்ல.. பேரீச்சம் பழமும், பன வெல்லமும் இருந்துச்சு.. அத சொன்னேன்.. 'அப்படியே பக்கத்துல பாரு'னு சொன்னாங்க நிறைய மூலிகைங்க இருந்துச்சு.. 'இது எதுக்குத் தெரியுமா?"னு இகே கேட்டாங்க..
'தெரியலகங்களே'னு நாஞ்சொன்னேன்..
'இந்த மூலிகை, பழம், பனவெல்லாம்லாம் சேர்த்து லேகியம் செய்வாங்க.. அந்த லேகியத்த எங்க தலையில கட்ட நம்ம மாஸ்டரும், தாஸும் திட்டம் போட்டாங்க அதனால் தான் இந்த பொருளோட சேர்த்து காரையும் கடத்திட்டோம்'னு பண்ணையார் சொன்னாங்க" விஜய் மறுபடியும் நிறுத்த..
"அடப்பாவமே.. லேகியம் செய்யுறது ஒரு குத்தமாயா.. அதுக்காக காரோடையா கடத்துறது" மாஸ்டர் சிரிச்சிபுட்டார்..
"அப்பறம் அவங்க கிட்டையும் கொஞ்சி, கெஞ்சி, கூத்தாடி காரை கேட்டேன்..
அதுக்கு அவங்க.. 'அந்த லேகியப் பொருள எல்லாம் இங்கேயே வச்சிட்டுப் போனால் காரை கொடுக்குறோம்னு சொல்ல.. வேற வழியில்லாம ஒத்துகிட்டு அந்த பொருள எல்லாம் அங்கேயே வச்சிபுட்டு, பண்ணையார் வண்டிய ஓட்டிட்டு வந்து இங்க விட்டுட்டுப் போயிட்டாங்க மாஸ்டர்" னு விஜய் சொல்லி முடிச்சப்ல..
"அப்பறம்.. மாஸ்டர் இன்னொரு முக்கியமான விசயம்.."
"சொல்லுங்க விஜய்"
"அந்த சொப்பன சுந்தரியையும் கண்டுபிடிச்சாச்சு.."
"அப்படியா.. இப்ப எங்க இருக்காங்க அவங்க?"
"இந்த பதிவோட முதல் கமண்டுல இருக்காங்க.. ஆனால் ஒரு விசயம்.. அவங்கள யார் கூட வச்சிக்கிறீங்கனு நீங்களும், தாஸண்ணனும் முடிவு செஞ்சிக்கோங்க" னு சொல்லிபுட்டு விஜய் அவரோட பைக்க எடுத்துகிட்டு ஓடியேப் போயிட்டாரு..
விஜயகுமார் வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக