வெள்ளி, 2 நவம்பர், 2018

காத்திருந்த கண்கள் 11

#காத்திருந்த_கண்கள்_11

"ஊர் நல்ல தண்ணி குளத்தில் மருந்து கலந்திருக்குங்க ஐயா" என்று சங்கிலி கறுப்பர், பெரிய சங்கிலியிடம் சொன்னதும்..
சட்டென்று பெரியவர் எழுந்து நின்றார் "என்ன மருந்து கலந்திருக்காங்க கறுப்பா?'' என்று கேட்க,
" ஊமத்தங்காயோடு, ஆமணக்கு விதையையும் கூட வேற ஏதோ ஒன்னையும் அரைச்சி கலந்திருக்காங்க ஐயா" சங்கிலி சொல்ல
" அது செரிமான கோளாரோடு, வயித்தோட்டத்தையும்ல அதிகரிக்கும்.. உடனே கிளம்பு.. என்னோட மருந்து பையையும் எடுத்துகிட்டு, வைத்தியர கூட்டிகிட்டு நீ நல்லதண்ணி குளத்துக்கு வந்திடு.. நான் போய் நந்தியப்பர கூட்டி வந்துடுறேன்" என்று பெரிய சங்கிலி கிளம்ப நகர்கையில்..
சற்று தூரத்தில் இவர்கள் இருவரையும் நோக்கி ஒருவர் வேகமாக ஓடி வருவதை பார்த்ததும் இருவரும் நின்றார்கள்..
"வா.. கந்தப்பா என்ன அவசரமா ஓடி வர.. என்ன தகவல்" சங்கிலி கறுப்பு கேட்க
''அண்ணே நம்ம  நல்ல தண்ணி குளத்துகிட்ட, நேத்து உச்சி ராவுல ஒருத்தன் திரிஞ்சிகிட்டு இருந்தான்.. ரோந்துப்போன நாங்க அவன பிடிச்சி சாவடில கட்டி வச்சிருக்கோம்.. என்ன கேட்டாலும் பேசமாட்றான்.. பித்து பிடிச்சவன் போல இருக்கான்.. அதான் உங்க கிட்ட தகவல் சொல்ல வந்தேனுங்க ணே" என்று முத்தையா சொல்ல..
"ஆகா.. ரொம்ப நல்ல காரியம் செஞ்சீங்க.. அவன அப்படியே நல்ல தண்ணி குளத்துக்கு கூட்டி வாங்க..
நான் வைத்தியரோட அங்க வந்திடுறேன்" என்று சங்கிலி கறுப்பர் சொல்லி வீட்டுக்குள் சென்று பெரிய சங்கிலியின் மருந்து பையை எடுத்துக்கொண்டு வெளிய வந்து நடக்க ஆரம்பித்தார்..
பெரிய சங்கிலி ஊர் தலைவர் வீட்டுக்குச் செல்ல, கந்தப்பா சாவடி நோக்கி ஓட ஆரம்பித்தான்..

ஊர் நல்லதண்ணீர் குளம்..
குளத்தில் மருந்து கலந்த தகவல் ஊரில்  அனைவருக்கும் பரவ..
பெரும்பாலான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள்..

இரண்டு பக்கம் குளத்திற்குள் இறங்குவதற்காக கருங்கல் படிகள் ..
ஒருப்பக்கம் பெரிய அரசமரமும், கொஞ்சம் தள்ளி பெரிய புளியமரமும், அதனை ஒட்டியபடி முழுநெல்லி மரமும் இருக்க..
குளத்தின் கரையில் வரிசையாக பனமரங்கள் நின்றிருந்தன..
அந்த பனைமரங்களில் ஒன்றில் ஒருவனை கட்டி வைத்திருந்தனர்..
ஆள் அழுக்கடைந்த ஆடையோடும், சுருட்டையான அழுக்கேறிய தாடி மீசையோடு ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் போலவே இருந்தான்..
புளியமரத்தின் அருகே வைத்தியரும், அவருடைய உதவியாளரும் ஆட்டுரலில் மூலிகைகளைப் போட்டு அரைத்துக்கொண்டு இருந்தார்கள்..
அருகே ஊர்த்தலைவர் நந்தியப்பர், பெரிய சங்கிலி, சங்கிலி கறுப்பர் நின்றிருந்தார்கள்..
தகவல் அறிந்து தர்மகர்த்தா நீலகண்டரும் வந்துவிட்டார்..

ஊர்த்தலைவர் நந்தியப்பர் "கடந்த பத்து நாட்களா நம்ம ஊர்ல என்ன என்ன சம்பவமோ நடக்குது.. நம்ம கோவில்ல கொள்ளை முயற்சி.. இப்ப குளத்து தண்ணியில மருந்து கலந்தது.. இந்த ரெண்டையும் நம்ம சங்கிலி கறுப்பு தம்பி கவனிச்சி சேதமில்லாம ஆக்கிடுச்சு.. இனிமே ஊர் மக்கள் எல்லாரும் விழிப்புணர்வோடு இருக்கனும்.. ஊருக்குள்ள ஐயப்படுற மாதிரி யாரேனும் வந்தாலோ, செயல்பட்டாலோ நேரா சங்கிலி கறுப்பிடமோ, பெரிய சங்கிலி, தர்மகர்த்தா, என்னிடமோ வந்து சொல்லிடுங்க.. " என்று பேசிமுடித்தார்..

வைத்தியரும் மூலிகைகளை அரைத்து முடித்தார்.. அதன் சாறினை ஒரு பெரிய பானையில் போட்டு, பெரிய சங்கிலி அவர் மருந்து பையிலிருந்து சில மூலிகைப் பொடிகளையும் எடுத்து அந்த பானையில் போட்டு கலந்தார்கள்..
பின்பு ஒரு பரிசலை எடுத்து வந்து குளத்தில் இறக்கி, அதில் சங்கிலி கறுப்பரும் , வைத்தியரும் அந்த மூலிகை கரைசலை குளம் முழுவதும் சென்று தெளித்து வந்தனர்..

"ரெண்டு, மூனு நாட்களுக்கு எல்லாரும் தண்ணியை காய்ச்சி குடிங்க" என்று பெரிய சங்கிலி சொல்லியபடி,
பனை மரத்தில் கட்டியிருந்தவனை நோக்கி நடக்க, உடன் சங்கிலி கறுப்பரும் சென்றார்..
அங்கே கந்தப்பனும் இளவட்டங்கள் சிலரும் நின்றிருந்தார்கள்..
சங்கிலி கறுப்பர் மரத்தில் கட்டியிருந்தவனை கூர்ந்து கவனித்தார்..
அவன் கண்களை நேருக்கு நேராக முறைத்தபடி பார்க்க, அவனால் தலையை அசைக்க முடியவில்லை..
சங்கிலி கறுப்பர் லேசாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "என்னிடமே உன் சித்து வேலைய காட்டுறியா" என்று சொல்லிய படியே அவனது பின்னங்கழுத்தில் அழுத்தமாக கையால் ஒரு வெட்டு வைக்க, அவன் மயக்கமடைந்தான்..

"கந்தப்பா.. இவன் பித்துபிடித்தவன் இல்லை.. இன்னும் அரை நாழிகையில் முழிப்பான்..  அவன் வாயாலேயே எல்லாத்தையும் கொட்டுவான்..
அதுவரைக்கும் இவனை  சாவடியில் ஒரு அறையில் கட்டி வை.." என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே.. இரண்டு குதிரைகள் வரும் காலடி ஓசை வர..
ஒரு மர்ம புன்னகையோடு சங்கிலி கறுப்பர் அந்தப் பக்கம் திரும்பினார்..

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக