செவ்வாய், 6 நவம்பர், 2018

காத்திருந்த கண்கள் #12

காத்திருந்த கண்கள் #12

குதிரைகள் வரும் திசையை நோக்கி சங்கிலி கறுப்பர் திரும்பி பார்க்க..
குமரனும், முத்து வீரனும் வந்துக்கொண்டிருந்தார்கள்..
  குமரன், கறுப்பரின் குதிரை சிப்பியின் மீது வர.. முத்து வீரன் புதிதாக ஒரு குதிரையின் மீது..
இருவரும் பனை மரத்தின் அருகே. வந்து நின்றார்கள்..
குமரன் சிரித்தபடியே, கறுப்பரை பார்த்து புருவத்தை தூக்கி கண்ணசைக்க. கறுப்பர் தன் கைவிரல்களை மடக்கி காண்பித்தார்..
அப்பொழுது முத்து வீரன் வந்த குதிரை,
கீழே மயங்கியிருந்தவனை தனது தலையினால்  தடவிக்கொண்டு இருக்க..
"கந்தப்பா.. பாத்தியா  .. இந்த குதிரைக்கு சொந்தக்காரன் இவன் தான்.. இவன் பித்து பிடிச்சவனே இல்ல..
சீக்கிரமா இவனை சாவடியில் ஒரு அறையில் கவனமா அடைச்சி வை.. மயக்கம் தெளிந்ததும் சொல்லியனுப்பு" என்று கறுப்பர் சொல்ல.. கந்தப்பனும் அவனது ஆட்களும் மயங்கியவனை தூக்கிச் சென்றார்கள்..
நல்லத் தண்ணி குளத்தை விட்டு அனைவரும் கலைந்து சென்றார்கள்..
ஊர்த்தலைவர், பெரிய சங்கிலி, தர்மகர்த்தாவும் ஒன்றாக சென்றார்கள்..

குமரன் என்ன நடந்தது என்று கேட்க சங்கிலி நடந்தவற்றை சொல்லி முடித்தார்..

"நீ போன காரியம் என்னாச்சு குமரா?" என சங்கிலி கேட்க..

"அண்ணே நீங்க சொன்னபடியே நடந்தது.. நஞ்சப்பனின் நண்பன் காசி தப்பிச்சி காட்டுக்குள்ள வடக்குப் பக்கமா போனான்..ஏற்கனவே நீங்க கொடுத்த களிம்பு மைய அவன் முதுகுல தடவிட்டேன்.. அப்பறமா நம்ம குதிரை சிப்பி மூக்கு பக்கத்திலையும் தடவி, அதோட சேணத்தை கழட்டிவிட்டு முன்னாடி அனுப்பிட்டு, நானும் முத்துவீரனும் பின் தொடர்ந்தே போனோம்" (இனி காட்சியாக)

இரவு நேரம்,
காட்டின் வடக்குப் பக்கமாக காசி வேகமாக நடந்துக் கொண்டிருந்தான்..
சற்று இடைவெளி விட்டு விட்டு குதிரை சிப்பியும், குமரனும் , முத்துவீரனும் பின் தொடர்ந்து சென்றனர்..
காசிக்கு பழக்கப்பட்ட பாதை போல வெகு சாதாரணமாக விரைவாக நடந்துச் சென்றான்..
இவன் நடையின் வேகத்தாலும், சலசலப்பினாலும் புதர்களில் இருந்த முயல்களும், சின்னஞ்சிறு விலங்குகளும் பயந்து ஓட ஆரம்பித்தன..
வேகமாக சென்ற காசி திடீரென நின்றான்.. தனக்கு பின்புறமும் யாரோ பின்தொடரும் ஓசை கேட்டதும், மெல்ல பக்கத்தில் இருந்த மரத்தின் பின்புறம் மறைந்துக் கொண்டான்..
அங்கிருந்து எட்டிப்பார்க்க ஒரு குதிரையின் உருவம் போல் தெரிந்தது..
'குதிரையில் யாரோ நம்மல பின்தொடர்ந்து வராங்களா' என நினைத்தப்படி,பக்கத்தில் ஏதோ ஒன்றைத் தேடி..அங்கிருந்த காய்ந்த மரக்கம்பை கையில் எடுத்து வைத்துக்கொண்டான்..
குதிரை பக்கத்தில் வந்ததும், அதை கூர்ந்து கவனித்தான்.. அதன்மீது சேணமும், கடிவாளமும் இல்லாததை பார்த்து
"சேய்.. இது காட்டு குதிரை.. இதுக்கா பயந்தோம்.." என்று கையிலிருந்த கட்டையை கீழே போட்டுவிட்டு..
மீண்டும் நடக்க ஆரம்பித்தான்..
சிறிது தூரம் நடந்ததும் ஒரு மேடான பகுதியில் ஏறி அந்தப்பக்கம் இறங்கிவிட்டான்..
குதிரை சிப்பி அந்த மேட்டின் அருகே நின்றுவிட குமரனும், முத்து வீரனும் வந்துவிட்டனர்..
முத்து வீரன் சுற்றிலும் பார்த்துவிட்டு ''அய்யய்யோ.. அந்த ஆள தப்ப விட்டுடோமே ணே" என பதட்டத்தோட கேட்க..
"பதறாத முத்து வீரா.. அதுக்குத்தான் நம்ம கறுப்பண்ண குதிர சிப்பி இருக்கே.. இப்ப பார் அதுவே நம்மல கூட்டிட்டுப் போவும்" என்று சொல்லிவிட்டு இடுப்பிலிருந்த குப்பியை எடுத்து அதிலிருந்த மையை கொஞ்சமாக மீண்டும் சிப்பியின் மூக்கருகே தடவ..
சிப்பி அந்த மேட்டின் மீது ஏற..
தொடர்ந்து குமரனும், முத்துவீரனும் சென்றனர்..
மேட்டின் அந்தப்பக்கம்..
பெரிய பெரிய பாறைகள் ஆங்காங்கே இருக்க சிறிய பள்ளத்தாக்குப்போல் பாதை..
அதன் வழியாக நடக்க..
ஒரு பெரிய பாறையின் அருகே பாதை குறுகி ஒரு குகையின் வாசலில் முடிந்தது..
இரவு நேரம் என்பதால் குகைக்குள் மிக இருளாக இருந்தது..
"முத்துவீரா.. இந்த பாதையை தவிற வேறு வழி இங்க இருக்குற மாதிரி தெரியல.. இந்த வழியாத்தான் காசியும் போயிருக்கான்.. உள்ள ஆளுங்களும் இருக்க வாய்ப்பு இருக்கு.. அதனால நாம ரொம்ப எச்சரிக்கையா தான் இருக்கனும்.. எந்த நேரத்துல எதுவும் நடக்கலாம்.. .. நீ ஒரு தீப்பந்தத்த தயார் செய்" என்று குமரன் சொல்ல..
முத்துவீரன் பக்கத்திலிருந்த ஒரு மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்து தீப்பந்தம் செய்ய.. அதன் மீது ஏதோ ஒரு பொடியை குமரன் தூவ தீப்பொறி உருவாகி பந்தம் எரிய ஆரம்பித்தது..

"முத்துவீரா..சிப்பி முன்னாடி போகட்டும்... நான் வேல் கம்ப முன்பக்கமா புடிச்சிகிட்டுப் போறேன் .. நீ பின்னிருந்து வெளிச்சம் வரா மாதிரியே வா" என்று குமரன் சொல்லிவிட்டு குதிரையை தட்டி முன்னே அனுப்பி, பின்னே வேல்கம்பை நீட்டியபடி நடக்க.. முத்துவீரன் பின் தொடர்ந்தான்..
  மூன்று தப்படி நடந்ததும் திடீரென குதிரை நின்றது தொடர்ந்த குமரனும் நின்றான்..
முத்து வீரன் 'என்ன'னு சைகையில் கேக்க, குமரன் தன் வேல் கம்பை நீட்டி எதையோ தூக்கி திருப்ப ஒரு கடுமையான விசப்பாம்பு..
அதை தூக்கி தூர எறிந்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்..

சில வளைவுகளுக்குப் பிறகு ஓரிடத்தில்  தீ்பந்தங்கள் எரியும் ஒளி தெரிந்தது..
அங்கு ஆட்கள் இருப்பதை, அங்கிருந்து வந்த பேச்சுக்குரல் உணரத்தியது..
குமரன் 'தீப்பந்தத்தை அனைச்சிடு' என்று சைகையால் சொல்ல முத்துவீரன் அனைத்துவிட்டு தனது வேல்கம்பையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டான்..

"முத்து வீரா நீயும், சிப்பியும் இங்கேயே இருங்க.. நான் முன்னாடி போய் நிலவரம் எப்படி இருக்குனு பாக்குறேன்.. ஒரு சீட்டி (விசில்) அடிக்கும் போது வந்துடு" என சொல்லிவிட்டு மெதுவாக நகர்ந்து ஒரு வளைவில் தூண்போல் தெரிந்த ஒன்றில் மறைந்துக்கொண்டு லேசாக தலையை நீட்டிப்  பார்க்க...

அங்கே..

காசி, ஒருவனுடன் பேசிக்கொண்டு இருந்தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக