திங்கள், 12 நவம்பர், 2018

காத்திருந்த கண்கள் 13

#காத்திருந்த_கண்கள்_13

காசியை பின்தொடர்ந்து போன இடத்தில் நுழைந்த குகையில் நஞ்சப்பன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்ட குமரனின் முகத்தில் ஒரு சிரிப்பு..

நஞ்சப்பன் யாரிடமோ பேசுவது தெரிந்தது..
மெல்ல மெல்ல சுவரில் ஒட்டியபடியே பின்பக்கம் வந்து முத்து வீரனுக்கு சைகை காட்டி குதிரையை அழைத்துக்கொண்டு சற்று முன்னோக்கி வரச்சொன்னான்..
முத்துவீரன் குதிரையை அழைத்துக்கொண்டு முன்னோக்கி வந்தான்..
நஞ்சப்பனின் பேச்சுக் குரல் தெளிவாக கேட்டது..
"அஞ்சப்பா.. என்னோட நண்பன் காசி சங்கிலிபுரத்தில், சங்கிலி கறுப்பிடம் மாட்டி, பிறகு எப்படியோ தப்பிச்சு வந்துட்டான்..  அவன் அந்த அறையில தான் இருக்குறான்.. கொஞ்சம் அவனை பாத்துக்க.. ஊர் தகவல்கள் அவனுக்கு நிறைய தெரியும்.. நம்ம வேலைக்கி ரொம்ப உதவியா இருப்பான்..
உங்க தலைவர் செங்கோடன சந்திக்க ஏற்பாடு செய்.. அடுத்தக்கட்டமா என்ன செய்யலாம்னு ஆலோசிப்போம்..
இந்த தடவ எப்படியோ காரியம் முடியாம போச்சு.. அடுத்த தடவ நிச்சயம் முடிச்சே ஆகனும்.. சீக்கிரம் தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்" என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே ஏதோ சத்தம் கேட்பது போல இருக்க.. அஞ்சப்பனை பார்த்து 'யாரோ இருக்குறா மாதிரி தெரியுது.. கத்திய கையில தயாரா எடுத்து வச்சிக்க' என்பதை போல சைகையால் சொல்லியபடி அவனும் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு,
நஞ்சப்பன் பேச்சை நிறுத்தாமல் ஏதேதோ பேசியபடி குமரன் நின்றிருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்து கத்தியை வெட்டுவது போல நீட்ட..
அங்கே..
குதிரை சிப்பி நின்றிருந்தது..
"சேய்.. காட்டு குதிரை.. எப்படியோ இந்த வழியில நுழைஞ்சி வந்திருக்குப் போல..
குதிரையும் நல்லா திடமாத்தான் இருக்கு.. அஞ்சப்பா. இங்க வா.. இந்த குதிரைய கூட்டிப்போய் , மத்த குதிரைங்களோட சேர்த்து நிப்பாட்டி வை .. பழக்கிட்டு நாம பயன்படுத்திக்கலாம்" என்று நஞ்சப்பன் சொல்ல..
"சரிங்க நஞ்சப்பா.. அப்படியே நீங்களும் கூட வாங்க.. தலைவரை இப்பவே சந்திக்க போவோம்" என்று அஞ்சப்பன் சிப்பியை அழைத்துக்கொண்டு செல்ல..

"சரி.. நீ முன்னே போ.. நான் காசியை கூட்டிட்டு வரேன்" என்று நஞ்சப்பன் சொல்லிவிட்டு அந்த குகையின் பக்கவாட்டை நோக்கிப் போனான்..
அவன் நகர்ந்ததும் ஒரு பெரிய தூணின் மறைவிலிருந்து குமரன் வெளிவர.. தூணின் மேற்புறம் இருந்த மரத்தின் தடிமனான வேரிலிருந்து குதித்தான் முத்துவீரன்..
(நஞ்சப்பன் இவர்களை நோக்கி வரும்பொழுதே குதிரையை முன்பக்கமாக தள்ளிவிட்டு முத்துவீரன்,
குமரன் தோளின் மீது ஏறி மேல்பக்கமாக தாவி மரத்தின் வேரை பிடித்துக்கொண்டான்..
குமரன் தூணின் மறைவில் தன் முதுகில் கட்டியிருந்த குதிரை சேணம் மற்றும் கடிவாளம் இவற்றை அங்கே மறைத்து வைத்தபடி ஒளிந்துக்கொண்டான்..)

குமரன் மெதுவாக முன்னோக்கி நகர,
முத்து வீரனும் அவனுடனேச் சென்றான்..
சற்றுத் தள்ளிப் போனதும் அந்த குகையில் நான்கைந்து பாதைகள் தெரிய.. உடனே குமரன் முத்துவீரனை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு திரும்பி பின்புறம் வந்து, அவர்கள் வந்த குகையின் வழியின் சுவற்றில் சின்ன குறியீட்டை வைத்துவிட்டு வந்து, முத்துவீரனோடு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்..

அஞ்சப்பன் குதிரையை ஓட்டிச் சென்ற பாதையிலேயே இருவரும் கவனமாக நடந்தனர்..
நான்கைந்து அறைகளை கடந்துச் செல்கையில்..
ஒரு அறையிலிருந்து நஞ்சப்பனும், காசியும் வெளிவர .. இருவரும் பதுங்கிக்கொண்டனர்..
காசி வேறு உடையில் சென்றுக் கொண்டிருந்தான்..
சில அறைகளை தாண்டிச் சென்றதும் காவல் காக்கும் பணியில் சிலர் இருந்தார்கள்..
அதை கவனித்த
இருவரும் அங்கேயே நின்றுவிட்டார்கள்..
  என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுது சீறுடை அணிந்ம இருவர் ஒரு அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் திரும்ப அவர்கள் உடை மாறி இருந்தது..
திடீரென குமரனுக்கு ஒரு யோசனை
வர, முத்து வீரனை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று அங்கிருந்த சீறுடைகளை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள்..
இப்பொழுது பார்க்க அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலவே தோற்றமளிக்க வேகமாக நடக்க ஆரம்பித்தனர்..
காவலுக்கு இருந்தவர்கள் அவர்களை கவனிக்கவில்லை..
சிறிது நேர நடைக்குப் பின் வெளிச்சம் அதிகமாக இருந்த ஒரு கூடத்திற்குள் நுழைந்தார்கள்..
கூடத்திற்கு வலது பக்கமாக ஒரு சாளரம் (சன்னல்) அதன் வழியாக பார்க்க.. குதிரைகள் கட்டிப் போடப்பட்டுள்ள கொட்டடி..
அங்கே சிப்பி கட்டிப்போடபட்டிருந்தது..
அதற்கு எதிர்பக்கம் இடதுபுறம் சற்றுத்தள்ளி ஒரு அறையில்
ஆட்களின் பேச்சுக் குரல் கேட்டது..

குமரன், முத்துவீரனின் காதில் ஏதோ சொல்ல , அவனும் தலையை ஆட்டியபடி நேராக குதிரை சிப்பி இருந்த கொட்டடி பக்கம் சென்றான்..
பின்பு
குமரன் ஆட்களின் பேச்சுக் குரல் வந்த அறைக்கு அருகில் செல்ல அங்கு ஒருவன் காவலுக்கு நின்றிருந்தான்..
நேராக அவனுக்கு பின்புறமாகச் சென்று, தன் இடுப்பிலிருந்த ஒரு குப்பியிலிருந்து பொடியை எடுத்து அந்த காவலனின் மூக்கருகே சற்றென்று தெளித்துவிட, சில நொடிகளில் அந்த காவலன் நின்றபடியே தூங்க ஆரம்பித்தான்..
அவனை அப்படியே நகர்த்தி ஒரு தூணின் பக்கம் நிற்க வைத்துவிட்டு
காவலன் நின்றிருந்த இடத்தில் நின்றுகொண்டு அந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தான்..
திடீரென்று உள்ளிருந்து ஒருக்குரல் ''மருதப்பா இங்கிருக்கிற தீவட்டி அனைஞ்சிடுச்சு.. சீக்கிரமா வெளியில் இருக்குறத எடுத்து வந்தை பத்த வை" என அந்த குரல் சொன்னதும்,
குமரன் எதிர்புறமிருந்த தீவட்டியை எடுத்துக்கொண்டு தன் முகம் யாருக்கும் சரியாக தெரியாத வண்ணம் சென்று அனைந்திருந்த தீவட்டிகளை பற்ற வைத்தபடி சுற்றிலும் ஓரக்கண்ணால் பார்க்க,
நஞ்சப்பனும், அவனது நண்பன் காசி,
குதிரையோடுச் சென்ற அஞ்சப்பன், மற்றும் தாடி மீசையோடு ஒரு பெரியவரும், வாட்டசாட்டமான மொட்டைத் தலை ஆள் ஒருவனுமாக ஐந்து பேர் இருந்தார்கள்..
அப்படியே கவனித்துக்கொண்டு வந்து வாசலருகே நின்றுக்கொண்டான் ..
உள்ளே அவர்கள் பேச ஆரம்பிக்க மெல்ல மெல்ல குமரனின் முகம் மாற ஆரம்பித்தது..
அந்த ஐவரின் ஆலோசனை முடிந்தது..
ஐவரும் வாசல் வழியாக வெளியே வரும் நேரத்தில் "அய்யோ..நெருப்பு.. நெருப்பு.. குதிரை கொட்டடியில் நெருப்பு   எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க " என்று குரல் வர.. ஐவரோடு சேர்ந்து குமரனும் ஓடினான்..
அங்கே இருந்த அனைவரும், காவலுக்கு இருந்தோரும்  உட்பட குதிரை கொட்டடிக்கு ஓடி வந்து பானைகளில் தண்ணீரை அள்ளி தீயில் ஊற்ற, குமரனும், முத்துவீரனும் குதிரைகளை அவிழ்த்துவிட்டபடி இருவரும் பார்த்து சிரித்துக்கொண்டனர்..
அனைவரும் பரபரப்பாக இயங்க..
குமரன் , முத்து வீரனைப் பார்த்து தலையாட்ட..
இருவரும் மெதுவாக யாருக்கும் தெரியாதபடி குதிரை சிப்பியை அழைத்துக்கொண்டு வந்த பாதையே திரும்ப.. அவர்களை பின்தொடர்ந்து இன்னொரு குதிரையும் வந்தது..
முத்துவீரன் திரும்பி அதனை விரட்ட.. போகாமல் சிப்பியுடனே வந்ததது..
குமரன், முத்துவீரனை தடுத்து "பரவாயில்லை வரட்டும்.. நாம இங்க இருந்துப் போக அது தேவப்படும்" என்று சொல்ல அந்த குதிரையையும் அழைத்துக்கொண்டு திரும்பி குகைக்குள் நுழைந்தார்கள்..

நான்கைந்து பாதைகளை பார்த்துக்கொண்டே வர.. ஒரு பாதையில் குமரன் கொண்டிருந்த குறி தெரிய அந்த வழியே   அங்கிருந்த தீவட்டியில் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.. ஒரு தூணின் மறைவிலிருந்த குதிரை சேணையையும் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினார்கள்..

குகையை விட்டு வெளியே வந்ததும்,
குதிரை சிப்பியின் மீது கடிவாளத்தை பூட்டிவிட்டு குமரன் அதன் மீது ஏறிக்கொள்ள, மற்றொரு குதிரையில் முத்துவீரன் ஏறி ஊரை நோக்கி விரைந்தார்கள்..

"இது தானங்க ணே நடந்தது " என்று சங்கிலி கறுப்பிடம் குமரன் சொல்லியபடி, காதுக்குள் ரகசியமாக ஏதோ சொல்லச் சொல்ல சங்கிலி கறுப்பின் முகம் மாறி கண்கள் கோவைப்  பழம் போல சிவக்க ஆரம்பித்தது..

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக