வியாழன், 20 டிசம்பர், 2018

அலோ நான் கடவுள் பேசுறேன்.

#அலோ_நான்_கடவுள்_பேசுறேன்..

ட்ரிங்..ட்ரீங்..ட்ரிங்..ட்ரீங்..
டொடக்..

"அலோ.. யார் பேசுறது?"

"அலோ.. நான் கடவுள் பேசுறேன்.."

"யாரப்பா அது விளையாடுறது? எங்க இருந்துபா பேசுற?"

"நான் ஏனப்பா விளையாட வேண்டும்..
உன் அருகில் இருந்து தான் பேசுறேன்.. சதா சர்வகாலமும் 'என்னைய கைவிட்டுட்டியே..கைவிட்டுட்டியே கடவுளே'னு புலம்பியது நீதானே அப்பனே.."

"உண்மையிலேயே சாமீ.. நீதான் பேசுறியா?"

"ம்ஹும்.. என்னடா இது.. எனக்கு வந்த சோதனை.. 'எப்பொழுதும் அசையாமல் இருக்கிறாயே.. பேசமாட்டாயா' என்று கேட்பது..
சரி பேசுவோம் என்று பேசினால் அதையும் சந்தேகப்படுவது..
அய்யனே மனித குலத்திற்கே உள்ள இயல்பு தானே..
நீ மட்டும் விதிவிலக்கா என்ன..
உனக்கு சந்தேகம் வந்ததில் தப்பில்லை தான்..
சரி சொல்லு என்ன உனது பிரச்சினை?"

"என்னை ஏன் இப்படி பரதேசியாக்கி திரியவிட்டாய் ஆண்டவா? என்மேல் உனக்கு என்ன கோபம்?"

"ஹாஹாஹ்ஹாஹ்ஹா.. எனக்கா?
உன் மேல் கோபமா? என்னுடைய படைப்பு தானே நீ..
நான் எப்படி உன்மேல் கோபப்பட முடியும்..
உனக்கு சிரமமில்லாத வாழ்வை தானப்பா கொடுத்துள்ளேன்.. "

"எது.. இப்படி பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதையா நான் கேட்டேன்? மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு சுகபோகமாக வாழ்கிறார்கள்..
நான் மட்டும் ஏன் இப்படி வாழ்கின்றேன்?
எனக்கு ஏன் இந்த வஞ்சனை?"

"அய்யனே.. நானாக கொடுத்தது இல்லையே உன் வாழ்க்கை..
நீயாகா எடுத்துக்கொண்டதல்லவா இது..
அனைவருக்கும் போல் தானே உனக்கும் இரண்டு கை கால்களை கொடுத்தேன்..
நீ உனக்கான வழியில் பயன்படுத்திக் கொண்டதற்கு நான் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்?..
சரி..
சில கேள்விகளை நான் கேட்கிறேன் பதில் சொல்கிறாயா அப்பனே?"

"கேளுங்க கடவுளே"

"மூன்று வேளையும் உணவு இல்லாமல் சிரம்ப்படுகிறாயா?"

"இல்லையே"

"நாளை என்று தேவைக்கு ஏதேனும் எடுத்து வைக்கிறாயா?"

"இல்லை"

"திருமணம் செய்து பிள்ளைகுட்டிகள் பெற்றெடுத்தாயா?"

"இல்லை"

"மாதாமாதம் வீட்டு வாடகை, மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், மளிகை கடை பாக்கி, பால் கணக்கு, தவணை முறை கணக்கு என
நடுத்தர வர்க்க குடும்பம் படும்  சிரமங்களை படுகின்றாயா?"

"இல்லவே இல்லையே"

"என்றைக்காவது ஒருநாள் பட்டினியாக எழுந்து, பட்டினியாக தூங்கியது உண்டா?"

"இல்லைங்க கடவுளே"

"மூன்று வேளையும் உணவு உன்னை தேடி வந்துவிடுகிறதா?"

"ஆமாங்க கடவுளே.."

"பிறகு எப்படி நான் உன்னை வஞ்சித்தேன் என்கிறாய்.. இப்பொழுது கூட பார் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல #போனும்_இயர்போனுமாக #அப்கிரேட் ஆகியுள்ளாய்..
இவ்வளவு செய்தும் நான் உனக்கு எதுவும் செய்யவில்லை என்கிறாயே.. இது எந்த விதத்தில் ஞாயம் சொல்"

"அய்யகோ.. என்னை மன்னித்துவிடு கடவுளே.. மன்னித்துவிடு.. மன்னித்துவிடு" என அந்த இயர்போன் மனிதர் சத்தமிட..

"யோவ்.. நீ கனவுகண்டு உளறி எங்க தூக்கத்தை ஏன்யா கெடுக்குற " என்றார் பக்கத்தில் படுத்திருந்த மற்றொரு யாசகர்..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக