வெள்ளி, 7 ஜூன், 2019

ஜூஸுக்கு ஆசைப்பட்டு 2

ஜூஸுக்கு ஆசைப்பட்டு 2
(அப்புத் தாத்தாவும், குப்பு பாட்டியும்)

அப்புக்குட்டித் தாத்தாவின் தலையில் பானை மாட்டிக்கொண்டதை பார்த்த குப்புலட்சுமி பாட்டி ரொம்பவும் கலங்கிதான் போயிட்டாங்க..
அப்பொழுது..
"அப்புத் தாத்தா குப்பு பாட்டி நின்னாலே
அனலு தான பறக்குமடா தன்னாலே" என்று பாட்டு பாடியபடி ஒரு குண்டு மாநிற உருவம் வர..
"ஏ.. சாம்பார் படா(வடா) பாய்.. தேக்கோ நம்பல் தாதாகி மண்டாமேல குண்டான் இருக்கான்.. தாதாவ உட்டு  வரமாட்றான்" என சுண்டக்கா பாண்டி சொல்ல.. அப்படியே சாக்காகி நின்னுபுட்டான் அந்த சாம்பார் வடை..
(சாம்பார் வடை.. இவனும் அப்புத்தாத்தா பக்கத்து வீடுதான்.. குழந்தையில இருந்தே தாத்தாக்கும், பாட்டிக்கும் பழக்கம்.. அவன் பேரு ஏன் #சாம்பார்_வடைனு மாறுச்சுன்னு தாத்தாவுக்கும் மறந்துடுச்சு, அவனுக்கும் மறந்துடுச்சு அதனால நமக்கும் தெரியல.. எனவே நாமலும் மறந்துடுவோம்.. குப்பு பாட்டி மட்டும் அவனை சாம்ப்பால்னு கூப்புடுவாங்க..
நாம சாம்பார் வடைனே கூப்புடுவோம்.. சென்னை பாசைல பேசுவான்.. )

"இன்னாங்கோ பாட்டி.. இன்னாச்சு.. இன்னாத்துக்கு பெர்சு சட்டிய தலீல மாட்டிகினு கீறாரு.. கோவத்துல சட்டிய எட்த்து தலீல அட்சிட்டீங்களா" சாம்பார் கேட்க..

"இல்லப்பா.. சாம்ப்பால் .. அவரே எடுத்துதான் மாட்டிக்கிட்டாரு" என பாட்டி வருத்தத்தோட சொல்ல..

"கவ்லபடாதீங்கோ பாட்டி.. இதெல்லாம் சப்பமேட்டரு, ஜுஜூபி.. இப்ப பாருங்க அப்டி..அப்டினு சொல்றதுக்குள்ள எடுத்து கடாசுரேன் பாருங்கோ"என்று சொல்லிய படி..
" இன்னா..பெர்சே.. பேரப்புள்ளைங்களாண்ட வெளாட்டு காட்டிகினு இருந்தியா? ஒனக்கு ஒளிஞ்சிகினு வெளாட வேற எடமா கெடைக்காம பூட்சு" னு கேட்டபடியே தாத்தா தலை பானைய தட்ட..

"அடேய்.. சாம்பார் வட.. எப்படியாவது இந்த பானைய எடுத்துவுட்றா.. உனக்கு புண்ணியமா போவும்.. நாலு சாம்பார் வடையும் வாங்கித் தரேன்" என்று தாத்தா கெஞ்சுற விதத்துல பேச..

"அட.. இன்னாத்துக்கு பா கெஞ்சுர இப்ப பாரு நம்ம தெறமய" என்று தாத்தா பக்கத்துல ஒரு நாற்காலிய போட்டு ஏறி, தலையின் பானையை அப்படி இப்படி ஆட்டிப்பாத்தான்.. அப்படியே உருவ பார்த்தான்.. தாத்தா தான் உயர்ந்தாரே தவிர பான வரல..
பானைக்கு உள்ள தன்னோட கையை விட்டு மேலே தூக்க பாக்க..
"அய்யோ.. அடேய்..அடேய்..என்னோட மூக்கு..மூக்கு" னு தாத்தா அலற..
"சாரிபா.. மன்ச்சுக்க.. விரலு மூக்குல குத்திடுச்சுப் போல..
அடேய் சுண்டக்கா.. இந்தாண்ட வாடா..
அப்டியே தாத்தாவ படுக்க வச்சிக்க..
நீ கால புடி.. நான் சட்டிய புட்சிக்கிறேன்..
நா சொல்றப நீ வளிக்கனும் சர்யா" என்று சொல்லிவிட்டு,
பானையை நல்லா டைட்டா புடிச்சிகிட்டு "ம்..இழ்றா..ம்ம்..நல்லா வளிடா.." என்று சாம்பார் கத்த..
"அய்யய்யோ.. அய்யய்யோ.. என்னோட கழுத்து..கழுத்து.. வலிக்குதுடா.. விட்றா..விட்றா.." என தாத்தா பயங்கரமா அலற..
ரெண்டு பேரும் விட்டுட்டாங்க..
"அய்யோ.. என்ன கொல்றாங்களே.. அடியே குப்பு.. இந்த பானை என் தலையிலேயே இருந்துட்டு போவுது விடு.. நான் இப்படியே இருந்தாலும் இருந்துக்குறேன்.்
இவனுங்கள மட்டும் வச்சி கழட்டச் சொல்லாத.. பானைக்கு பதிலு என் தலைய பிடிங்கிற போறானுங்க..
அப்பறம் நான் தலையில்லாத முண்டமாதான் அலையனும்" தாத்தா சொல்லியதும்,
"சரி..சாம்ப்பால், பாண்டே விட்டுடுங்க.. நாம டாக்டர வரச்சொல்லுவோம்" என்று பாட்டி சொன்னதும்,
"சர்தான் பாட்டி.. நம்மலாண்ட செமத்தியான ஆளு ஒர்த்தரு இருக்காரு.. நா போய் அவர தள்ளிக்கினு வரேன்" என்று சாம்பார் வடை ஒரே ஓட்டமா ஓடிட்டாப்ல..

பானைக்குள்..
தாத்தா வாய்குள்ளயோ ஏதோ முனுமுனுத்துகிட்டு இருந்தாரு..
அது என்னனு கூர்ந்து கவனிப்போம்..
'அய்யய்யோ.. டாக்டர கூப்புடுறாங்களே.. அவரு வந்து என்ன செய்யப்போறாரோ.. ட்ரில்லிங்மெசின வச்சி ஓட்டப்போடுவாரோ - ஒரு வேள மண்டையில ஓட்டப்போட்டுட்டாருனா..
இல்ல கட்டிங் மிசின வச்சி வெட்டி எடுப்பாரோ, இல்ல கேஸ்கட்டிங்ல கட்பன்னுனா.. நம்ம மூஞ்சி தீஞ்சிப் போயிடுமே.. என்னடாயிது இப்படி ஆகிடுச்சே.. ஒரு ஜூஸுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கிகிட்டோமே.. ச்சேய்.. வயசான காலத்துல நாக்க கட்டுப்படுத்தலனா என்ன ஜன்மம் நாம.' இப்படினு அவரோட எண்ணங்கள் பறக்க..
"வாங்க மாஸ்டர்..வாங்க மாஸ்டர்.. இந்த வூடுதான்" என சாம்பார் யாரையோ கூட்டிட்டு வரும் சத்தம் கேட்டது..
இனி பானைக்கு வெளியே..

"பாட்டிமா.. இவ்ருதான் கராத்தே மாஸ்டரு.. இன்னாடா டாக்டர இட்டாராம கராத்தே மாஸ்டர இட்டாந்துட்டான்னு பாக்குறீங்களா.. இவ்ரு பேரு ஜெயராஜ் மாஸ்ட்ரு.. நம்ப ஏர்யால ரெம்ப பேமஸு.. தலீவருக்கு வர்மா அதான் வர்மகலை தான் மெய்னு.. இப்டிக்கா ஒரு தட்டு அப்டிக்கா ஒரு தட்டு சுலுவா மேட்ர முட்சிடுவாரு.. ஆளு எப்பவும் பிசி.. இன்னிக்கி உங்க நல்ல நேரம் போனவுட்னே ஆளு ஆப்புட்டாரு..
இட்டாந்துட்டேன் பாட்டி'' னு மூச்சுவிடாம கடகடனு வாசிச்சு முடிச்சுட்டான் சாம்பார்..

" ஓ.. நீங்கதான் ஜெயராஜ் மாஸ்டரா..
வணக்கம்.. நான் உங்களபத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.. பட் .. இப்பதான் உங்கள நேர்ல பாக்குறேன்.. வர்மகலையால நிறைய பேரோட நோய்கள குணப்படுத்துறதாகவும், மத்தவங்களுக்கும் பயிற்சியளிப்பதாகவும் அதோட இல்லாமல் அதைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியிருப்பதாகவும் என் பிரன்ட்செல்லாம் சொல்லிரிக்காங்க.. உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சிங்க மாஸ்டர்" பாட்டி சொல்லி முடிக்க,

"ஆகா. ரொம்ப நன்றிங்க மா..  ஏதோ நம்மால முடிஞ்சத செஞ்சிகிட்டு வரோம்..
இப்பக்கூட வெளியில் தான் கிளம்புனேன்.. தம்பி தான் அவசரம்... ரொம்ப வேண்டிய ஆள்னு சொல்லி கூப்புட்டாரு.. வந்துட்டேன்" என்றார் மாஸ்டர்..

"இங்க ஒருத்தன் பானையும், தலையுமா மாட்டிகிட்டு இருக்கேன்.. அங்க குசலம் விசாரிச்சிகிட்டு இருக்கீங்களே ஞாயமா" என்று  தாத்தா பரிதாப குரல் பானையிலிருந்து வந்தது..

"ஒ.. சாரிங்க ஐயா.. பானை எப்படி தலையில மாட்டுச்சு" மாஸ்டர் கேக்க..
தாத்தா அவரை தடவி தன்கிட்ட வரசொல்லி, அவருக்கு மட்டும் கேக்குற மாதிரி நடந்தத சொன்னாரு..
மாஸ்டரும் லேசாக சிரித்துவிட்டு.. குப்பு பாட்டிகிட்ட போயி காதுல ஏதோ சொல்ல.. அவங்களும் சரீனு தலையாட்டுனாங்க..
"அம்மா.. பானைய வெட்டிதான் எடுக்கனும் .. எடுத்துடுவோமா?"என்று மாஸ்டர் கேட்க..

" இன்னாங்கோ மாஸ்டர் வர்மத்துல ரெண்டு தட்டு தட்டுவீங்கனு பாத்தா கட்பண்ணனும்னு சொல்றீங்கோ" சாம்பார் வடை கேட்க..
மாஸ்டர் கண்ணடித்து சும்மாயிருனு சைகை காட்ட, சாம்பாரும் வாயை கையில் மூடிகிட்டு தலையை ஆட்டினான்..

"அய்யய்யோ.. வேண்டாம்ங்க மாஸ்டர்.. எனக்கு அந்த பானை வேணும்" பாட்டி சொல்ல..
'ம்க்கும்..புருசன் இங்க தலைக்காக போராடிகிட்டு இருக்கேன்.. என் தலையோட இந்த பானை முக்கியமாகிப் போச்சா.. அடியே கல்நெஞ்சக்காரி'என தாத்தா முனுமுனுத்துகிட்டு இருந்தார்..

"ஏனுங்கமா.. இந்த பானை ராசியான பானைனு வெட்ட வேணாம்னு சொல்றீங்களோ" மஸ்டர்..

"அப்படிலாம் இல்லைங்க மாஸ்டர்" பாட்டி..

"அப்போ நீங்க சீதனமா கொண்டு வந்ததோ?"

"அப்படி இருந்தாதான் வெட்ட சொல்லியிருப்பேனே.."

"அப்போ எதுக்குத்தான் வெட்டவேணாம்னு சொல்றீங்க.. அப்படி என்ன செண்டிமென்ட் இந்த பானையில இருக்கு" மாஸ்டர் கேட்டாரு..

"இவரு வாழ்க்கையிலேயே ஒரு உருப்படியான வேலை செஞ்சாருனா அது இந்த பானைய ஒரு போட்டியில  ஜெயிச்சது தான்.. பத்து வருசத்துக்கு முன்னாடி ஏதோ 'சாப்பாட்டு ராமன்' போட்டினு எங்க தெருவில் நடந்துச்சு..
30 பேரு பங்கேத்தாங்க.. அந்த திங்கிற போட்டில  இவரு தான் மொத ஆளா வந்தாரு.. அப்ப வாங்குன பானை தான் இது" என்று பாட்டி சொல்லி முடித்தார்..

பாட்டி சொன்னது தாத்தாவின் காதிலும் விழ.. அவர் நினைவு அப்படியே அந்த சாப்பாட்டு போட்டிக்குச் சென்றது..
ஊரே நின்னு கைத்தட்டி ஆராவரம் செய்ய, தாத்தா பலகாரங்களை 'லபக் லபக்' னு வாயில் அள்ளிப்போட்டு ஃபுல்கட்டு கட்டிகிட்டு இருந்தாரு..
'குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமாக சாப்பிட்ட நம்ம அப்புக்குட்டி சாருக்கு முதல் பரிசாக இந்த வெண்கல பானையை வழங்குகிறோம்' என்று மைக்கில் அறிவிக்க.. தாத்தா இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டியபடியே போய் வாங்கியது' காட்சியாக வந்து மறைந்தது..
'ஆகா.. குப்புவ அவசரப்பட்டு திட்டிட்டோமே.. நம்ம மேல என்னா அன்பு.. என்னா பாசம்..
ச்சேய்.. நாம வாங்குன பானையே நம்மல பலி வாங்குதே' தாத்தா மனசுக்குள்ள நினைச்சிகிட்டாரு..

"சரிங்க மா.. அப்போ பானைய வெட்டாம எடுக்க முயற்சி செய்யிறேன்" என்று மாஸ்டர் அவரோட பெட்டியை திறந்து ஒரு எண்ணெய் பாட்டிலை எடுத்தார்..
அதை திறந்ததும் நல்ல மூலிகை வாசம்.. அதை கையில் ஊற்றி தாத்தாவின் கழுத்தை சுற்றிலும் தடவினார்..
"ஆமாங்க மா.. ஐயாவுக்கு ஏன் பாதி டம்ளர் ஜூஸ் கொடுத்தீங்க.. அது எப்படி அவருக்கு பத்தும்?" மாஸ்டர் கேட்க..

"அதனால தான் அவருக்குத் தனியா ஜூஸ் செஞ்சிகிட்டு இருந்தேன்.. அதுக்குள்ள இவரு இப்படி செஞ்சி.. பெரிய கூத்தா ஆக்கிட்டார்" என்று பாட்டி சொன்னதும்,

"என்னாது எனக்குத் தனியா ஜூஸ் செஞ்சியாஆஆ" என்று தாத்தா சத்தம் போட்டபடியே பானையை வேகமாக இழுக்க பானை தனியா கையோட வந்திடுச்சு..

"ஹைய்யா.. தாதா மண்டே குண்டான் வுட்டுட்டான்" என சுண்டக்கா கைதட்டிகிட்டே குதித்தான்..

"நைனா.. சோக்கு..சோக்கே.." என தாத்தாவை தூக்கி சுத்தினான் சாம்பார்..

"ஆகா... ரொம்ப நன்றிங்க மாஸ்டர்.. நானும் ஆயில் போட்டேன் வரல..  நீங்க போட்டதும் வந்திடுச்சே" பாட்டி மாஸ்டருக்கு நன்றி சொல்ல...

"நான் போட்டது ஸ்பெசலான மூலிகை எண்ணெய்ங்க மா.. மெட்டல கொஞ்சம் இலக  வச்சிடும்... அது மட்டும் வேலை செய்யல .. நீங்க சொன்ன வார்த்தையும் அதான் 'அவருக்கும் ஜூஸ்' னு சொன்னீங்களே அதுவும், அவருக்கு அந்த ஜூஸ் மேல இருந்த அலாதி பிரியமும் வேலை செஞ்சது.. சரிங்க மா நான் வரேன்" னு மாஸ்டர் கிளம்ப.

"ஒரு நிமிசம் இருங்க மாஸ்டர்" னு சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றார் பாட்டி..
வெளியே வரும்பொழுது ஐந்து டம்ளரில் ஜூஸ் எடுத்து வந்தார்..
அதில் ஒரு டம்ளர் மட்டும் கொஞ்சம் பெருசாக (ஒரு லிட்டர் இருக்கும் போல)

அதை பார்த்ததும் தாத்தாவின் கண்கள் அகல விரிந்தன.. காது தடுத்ததால் அதோடு பார்வை நின்றது..
தாத்தாவின் பார்வையில் பாட்டி ஜூஸாய் பொழியும் தேவதையாக தெரிந்தார்..
பாட்டி ஆளுக்கொரு டம்ளரை கொடுத்து விட்டு.. கடைசியில் அந்த பெரிய டம்ளரை தாத்தாவை நோக்கி எடுத்து வர.. தாத்தா தன்னையே மறந்தார்..
கால்கள் பூமியில் நிக்காம வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு.. பாட்டி அந்த டம்ளரை தாத்தாவிடம் நீட்ட.. நிறைய நாள் கழிச்சி காதலியை பார்க்கும் ஒரு காதலன் அவளின் கையை பிடிப்பது போல அந்த டம்ளரை இருக  பிடித்தார்.. அப்படியே அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் கொட்ட ..  குப்பு பாட்டி சிரித்தபடியே அதை தன் கைகளால் துடைத்து விட்டார்..
"குப்பு.. நீ எனது ஜூஸ்பூரணி, ஜூஸ்சுரபி, ஜூஸாயினி.. நீ வாழ்க..
நின் ஜூஸ் போடும் கை வாழ்க.. " என வாய்க்கு வந்தபடி புலம்பியபடியே டம்ளருக்கு முத்தமிட்டு மெல்ல மெல்ல ஜூஸை குடிக்க ஆரம்பித்தார்..

அதை பார்த்து சுண்டக்காவும், சாம்பாரும் கண்கலங்க..

இந்த செய்கையை பார்த்த மாஸ்டருக்கும், குப்பு பாட்டிக்கும் சிரிப்பு தான் பொத்துகிட்டு வந்துச்சு..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக