வெள்ளி, 14 ஜூன், 2019

தாஸ்

#தாஸ்_தாஸ்_பெரியப்ப_தாஸ்_தாஸ்
(பாஸோ பெயிலோ அத அப்பறம் பாத்துக்கலாம்)- தலைப்பு

"உலகம் சமநிலைப் பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்..
உலகம் சமநிலைப் பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்..'' (காலர்டியூனும், ரிங்டோனும் இதுதான்) போன் கூப்புட..
''டொடக்.. வணக்கம்.. அலோ சொல்லுங்க"
"வணக்கம் தம்பி கொமாரே.. பண்ணையார் பேசுறேன்.."

"ஆ..சொல்லுங்க..சொல்லுங்க .. பண்ணையார்"

"ஒரு முக்கியமான தகவல்.. நம்ம ஈகே சொல்லச் சொன்னார்"

"அப்படியா.. வெரசா சொல்லுங்க. பண்ணையார்"

"நம்ம தாஸ் இருக்கார்ல.. அவரு நம்ம மாஸ்டர்கிட்ட #லேகியம்_தயாரிப்பது_எப்படி'ங்கிற ரெண்டு மாச கோர்ச, ரெண்டு நாள்ல மட்டும் கத்துகிட்டு சுத்திகிட்டு திரியுறாராம்.. லேகியத்த செஞ்சி நமக்குத் தெரிஞ்சவங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணுறாராம்..
சாப்புட்டவங்களுக்கு முன்னாடியும், பின்னாடியும் பிச்சிகிட்டு போகுதாம்..
பாத்து.. நீங்க உசாரா இருக்கனும்னு சொல்லச்சொன்னாருபா"

"அய்யய்யோ.. பண்ணையார்.. இத மொதல்லையே சொல்லக்கூடாதா"

"யப்பா.. கொமாரே.. உனக்கு நான் அரை மணிநேரமா டிரை பண்ணிட்டு இருந்தேன் ..போன் முழு ரிங்க் போச்சு ..நீதான் எடுக்கல..
ஆமா.. இப்ப என்னாச்சு?"

"டூ..லேட்டுங்க பண்ணையார்..
முக்கால் மணி நேரத்துக்கு முன்னாடி தான் தாஸண்ணன் வந்து அவரு வீட்டுக்கு கூட்டிட்டுப்போய் 'தம்பீ.. மாஸ்டர்கிட்ட லேகியம் தயாரிக்கிறத முழுசா கத்துகிட்டு வந்துட்டேன்.. அவர்ட்டையே லேகியத்துக்கான பொருட்கள வாங்கிட்டு வந்து ஒரு சூப்பர் லேகியம் செஞ்சிருக்கேன் சாப்புட்டு பாரு.. அப்பறம் நீ ஜம்முனு ஆகிடுவ.. அதுக்கு முன்னாடி போனை சைலண்டுல வையி'னு சொல்லி கொடுத்தாரு.. நானும் சாப்புட்டுட்டேன்.."

"அய்யய்யோ.. இப்ப எங்கயா இருக்க?"

"வீட்டுக்குத்தான் போயிட்டு இருக்கேனுங்க பண்ணையார்"

"சரி போயா.. நான் வீட்டுக்கு வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு போன வச்சிபுட்டாரு..

குமாரு வீடு..
"வீட்ல யாருமில்லையா" னு பண்ணையார் குரல் கொடுக்க..
பதில் குரல் வரல.. கதவு மட்டும் திறந்து இருந்தது.. குமாரின் சைக்கிள் ஓரமா இருந்துச்சு.. 'அப்போ குமாரு உள்ள தான் இருப்பாப்ல'னு நினைச்சிகிட்டு உள்ள போனாங்க..

குமாரோட மனைவி அதிர்ச்சியில நின்னுகிட்டு பக்கத்துல இருந்த சோபாவ கண்ணு கொட்டாம பாத்துகிட்டே இருந்தாங்க..
'என்னடாயிது நாம குரல் கொடுத்ததக்கூட காதுல வாங்காம அப்படி என்னத்த பாக்குறாங்க' னு முனுமுனுத்துகிட்டே அவரும் அங்க பாத்தாஆஆஆஆஆஆ...
குமாரு சாஞ்சி உக்காந்துகிட்டு, அவரோட காலைத் தூக்கி தலைய சொரிஞ்சிகிட்டு இருந்தாரு..

பண்ணையாருக்கும் அதிர்ச்சி..
"தங்கச்சிமா" னு பண்ணையார் கொஞ்சம் சப்தமாக கூப்பிட..
''வ..வாங்க.. பண்ணையாரண்ணே.. பாத்தீங்களா இந்த கூத்த.. இவருக்கு என்னாச்சுனே தெரியலையே.. யாராவது சூனியம்கீனியம் வச்சிட்டாங்களா.. யாரையும் ஒறண்ட இழுக்காதீங்கனு சொன்னா கேக்குறாரா" குமாரின் மனைவி அழாதகுறையா கேட்க..

"அடடே.. இந்தளவுக்கு ஆகிடுச்சா.. கவலப்படாதீங்க.. நம்ம மாஸ்டர்கிட்ட போனால் சரியாகிடும்.. நான் கூட்டிட்டுப் போறேன்" என்று சொன்னபடியே குமார் பக்கத்துல போயி உக்கார..
"அடடே.. வாங்க பண்ணையார்" என்று குமார் சொன்னபடியே பண்ணையார் கையை பிடித்து தன் பக்கத்தில் உக்கார வச்சாப்ல..
அப்படியே மனைவியிடம் "ஏமா.. பண்ணையாருக்கு காபி கொண்டு வா.. அப்படியே எனக்கு ஒரு பால் நல்லா ஆத்தி கொண்டு வாமா" சொல்ல.. அவர் உள்ளே சென்றார்..

"என்னையா ஆச்சு கொமாரே"

"அதையேங்கேக்குறீங்க பண்ணையார்..
கரண்டு கம்பத்த பாத்தா கால தூக்கனும்னு தோனுது..
மரக்கிளைய பாத்தா தாவனும்னு தோனுது..
கடற்கர மண்ண பாத்தா 'டொடக்கு டொடக்கு'னு ஓடனும்னு தோனுது..
பேப்பர பாத்தா பரட்டுனு கிழிச்சி திங்கனும்னு தோனுது..
மூஞ்சில வேற தும்பிக்கை வளர்ரா மாதிரி ஒரு பீளிங்கு..
நல்ல வேள இதுவரைக்கும் வால்தான் வளரல" என்று குரங்கு மாதிரியே பக்கவாட்ல சொரிஞ்சபடியே குமாரு சொன்னாப்ல..
'இத நினைச்சி சிரிக்கிறதா, அழறதானு தெரிலையே'னு நினைச்சு பண்ணையார் முகம் மாறுச்சு..
குமார் மனைவி டம்ளர் தட்டோட வந்து காபிய பண்ணையார்கிட்ட கொடுத்தாங்க..
பாலை குமாரிடம் கொடுக்க ''இப்படி கொடுத்தா எப்படி குடிக்கிறதாம்.. உள்ள போயி ஒரு அகலமான கிண்ணம் எடுத்துட்டுவாமா" சொல்ல..
கிண்ணம் வந்ததும் அதில் பாலை ஊற்றி கீழே வைத்து நாங்கள் நக்கி நக்கி குடிக்க.. குமார் மனைவி அழுதே விட்டார்..
குமார் செய்யும் எத்தனையோ கோமாளி தனங்களை ரசித்த பண்ணையாரால் இதனை ரசிக்க முடியவில்லை..
அவருக்கும் ஏதோபோல் ஆகிவிட்டது..
உடனே..
"தங்கச்சிமா.. இப்படியே விட்டா நல்லாருக்காது.. இப்பவே மாஸ்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் சரிபண்ணிடனும்..
நான் என்னோடயே கூட்டிட்டுப் போறேன்.. நீங்க கவலப்படாம இருங்க" என்று சொல்லிவிட்டு குமாரை பண்ணையார் தன் வண்டியில் 
அழைத்துப் போனார்..

மாஸ்டர் வீடு..
விசயம் கேள்விப்பட்டு ஈகேவும், தாஸும் வந்துட்டாங்க...
மாஸ்டர்..பண்ணையார்.. ஈகே.. தாஸ் நாலுபேரும் சோபாவுல உக்காந்திருக்க குமாரு மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் தாவிகிட்டு இருந்தாரு..

"யய்யா.. ராசா.. புண்ணியவானே உமக்கு என்னயா குமாரு மேல கோபம்?"  தாஸை பண்ணையார் கேட்க..
"அய்யய்யோ.. அப்படிலாம் ஒன்னுமில்லைங்க.. லேகியந்தானே ஒன்னுஞ்செய்யாதுனு நினைச்சி தான் கொடுத்தேன்.. இந்தாளுக்கு இப்படியாகும்னு நான் நினைக்கலையே" னு சிரிச்சபடி சொல்ல.. அத பாத்து குமாரு கெக்கபிக்கனு சிரிக்க..
அவரு சிரிக்கிறத பாத்து மத்த நாளு பேரும் சிரிக்க..
"அய்யோ..அய்யோ.. இந்த பயபுள்ளைய வச்சிகிட்டு நாம படுற பாடு இருக்கே.. மிடியல" மாஸ்டர் சொல்லிவிட்டு
"ஆமா..தாஸ் அவருக்கு அப்படி என்ன லேகியம் கொடுத்தீங்க?" மாஸ்டர் கேட்டார்..

"ம்ரிதுல மல்ட்டிமேனரிசால்ய சூரண லேகியத்தையும், தருதல ச்சேய்.. த்ரிதுல மிருகாஷ்யக கல்ப லேகியத்தையும் மிக்ஸ் பண்ணி கொடுத்தேனுங்க மாஸ்டர்"

"அடப்பாவமே.. ம்ரிதுல கூட த்ரிதுலய கலக்கக்கூடாதே.. பயங்கர எபெக்டாச்சே.. ஆமா என்ன அளவுல அதாவது எத்தனை உருண்டை கொடுத்தீங்க தாஸ்?"

"ஒரு உருண்டதாங்க கொடுத்தேன்..
சாப்புட்டுபுட்டு 'ஐ டேஸ்ட் நல்லாயிருக்கே'னு இந்த ஆளுதாங்க நாலஞ்சு உருண்டைய 'லபக்கு..லபக்கு' எடுத்து முழுங்கிட்டாருங்க மாஸ்டர்"

"ம்க்கும்.. சரியான பரக்காவெட்டி தின்னபய பா.. இந்தாளு" ஈகே சொல்ல..
"ஹிஹிஹி.. போங்க ஈகே.. என்னிய புகழாதிங்க" என்று குமாரு வழிய..
ஈகே "கடவுள்ளே" னு தன் நெத்தியிலயே தட்டிகிட்டார்..

"மாஸ்டர்.. ஒன்னும் பயப்படும்படிலாம் இல்லையே.. குணமாக்கிடலாம்ல" பண்ணையார் கேட்க..

"உசுருக்கு ஒன்னுமில்லைன்னுதானே கேக்குறீங்க.. அதெல்லாம் ஒன்னுங்கிடையாது..
இந்த ஆளு இம்சையால நம்ம சீவன் தான் போவும்.. புள்ளைய வளர்க்கச் சொன்னா தொல்லைய வளத்து வச்சிருக்காங்க..
ஒரு உருண்ட, ரெண்டு உருண்டனா ஒரு வாரத்துல குணமாகிடும்.. இந்த பயபுள்ள என்னடானா அஞ்சாறல்ல உள்ள தள்ளியிருக்கு  எப்படியும் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களாகும்"  மாஸ்டர் சொல்லி நிறுத்தினாரு..

"அப்போ குமாருக்கு, சுயநினைவு இழக்குறது, ஞாபகமறதி.. இப்படி எதாவது வர வாய்ப்பிருக்கா? பேச்சு, பழக்க வழக்கத்துல ஏதாவது மாற்றம் இருக்குமா?" ஈகே கேட்டாரு..

"அப்படி இருந்துட்டா தான் புண்ணியமா போவுமே.. இந்தாளு இம்சையில இருந்து தப்பிக்கலாமே..
நினைவுலாம் நல்லாதான் இருக்கும்.. நார்மலா பேசுறா மாதிரி பேசுவார்..
ஆனா உடலசைவுதான் அப்பப்ப மாறும்..
தீடீர்னு ஆடுவார்.. திடீர்னு ஓடுவார்.. அப்பப்ப தாவுவார், தவளுவாரு, உருளுவாரு பொறளுவாரு..."

"அய்யய்யோ.. போதும் மாஸ்டர் .. இப்படிலாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா இந்த குமாருக்கு கொடுத்திருக்கவே மாட்டேன்.. தேவையில்லாம ஒரு இம்சைய பேரிம்சையா ஆக்கிட்டேனே" என்று தாஸ் புலம்ப..

("இப்ப புரியுதா நான் ஏன் லேகியத்த கண்டா தலைதெறிக்க ஓடுறேன்னு" என்று ஈகே லேசாக பண்ணையாரின் காதில் சொன்னார்)

"சரி..சரி.. பொலம்பாதிங்க தாஸ்.. இந்த ஒரு மண்டலத்துக்கு நீங்களும் கூடவே இருந்து லேகியம் தயாரிக்கிறத முழுசா கத்துக்கோங்க.. அதுவரைக்கும் லேகிய டெஸ்ட்ல இறங்கிறாதீங்க" என்று மாஸ்டர் சிரித்தபடியே சொல்ல..

"அய்யய்யோ.. பட்டதே போதும்பா.. இனிமேட்டு நோ டெஸ்ட்" தாஸ் சொல்ல
அனைவரும் சிரிக்க..
திடீரென பார்த்தால் குமாரை காணவில்லை..
"அய்யய்யோ.. என்னபாயிது எங்க போனான்னு தெரியலையே" என்று ஆளாளுக்கு சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் தேட...

"பறட்டு..பறட்டு''னு மண்டைய சொரியுற சத்தம் வர அந்தப்பக்கம் நாலுபேருமே பார்க்க..
சீலிங் பேன்ல தலைகீழாக தொங்கிகிட்டு தலைய சொறிஞ்சிகிட்டே
" ணே.. தாசண்ணே.. நாம்பாட்டுக்கு சும்மா கிடந்தேன்.. என்னிய இப்படி ஆக்கிபுட்டீங்களே"கேட்டபடி குமார் அழுவார்னு பார்த்தா மறுபடியும் கெக்கபெக்கேனு சிரிக்க..
குமார கீழ கொண்டு வரது்குள்ள
நாலு பேருக்கும் நாக்குல தண்ணி தள்ளிபுடுச்சு..
ஒரு வழியா அவர ஒரு ரூம்ல போட்டு அடைச்சி ட்ரீட்மெண்ட் பாக்க ஆரம்பிச்சாங்க..
நாளொரு இம்சையும்
பொழுதொரு சேட்டையும் குறைஞ்சி கொமாரு மெல்ல மெல்ல குணமாக ஆரம்பிச்சாரு.. பண்ணையாரும், ஈகேயும் மாறிமாறி வந்து பாத்துட்டுப் போனாங்க.. சுத்தமா குணமாகிட்டாரு..

48 வது நாள்..
"மாஸ்டர்..மாஸ்டர்.." தாஸ் பதட்டத்தோட ஓடிவந்தாரு..

"என்னாச்சுங்க தாஸ்.. ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க?"

"மாஸ்டர் குமார காணோம்.. கூடவே ஒரு லேகிய டப்பாவையும் காணோம்"

"என்னாது நல்லா தேடிபாத்துட்டீங்களா"

"சல்லடபோட்டு சலிக்காத குறையா தேடியாச்சு"

"அப்படி எந்த லேகிய டப்பாவ காணோம்"

"த்ரிதுல சர்வபட்சியாசக சூரண கல்ப லேகியம்ங்க மாஸ்டர்" தாஸ் சொல்ல

மாஸ்டர் அப்படியே தலையில கைய வச்சிகிட்டு உக்காந்துட்டாங்க..

"என்னங்க மாஸ்டர்.. ஏன் இப்படி உங்காந்துட்டீங்க.. அப்படி என்ன லேகியம் அது?"

"என்ன லேகியமாஆஆஆ..
முதல்லையாவது விலங்குகள் குணம்.. அதனால நம்ம கண்ணு முன்னாடியே திரிஞ்சிகிட்டு இருந்தாப்ல..
ஆனால் இது
உலகத்துல இருக்குற எல்லா பறவைகளோட குணமும் நிறைஞ்சது..
இப்ப எங்கிட்டு எங்கிட்டு கிறுக்கா அலையப் போறானோ.. நம்மலையும் அலைய வைக்கப் போறானோ.. நம்ம பண்ணையாருக்கும், ஈகேவுக்கும் போன போடுங்க" என மாஸ்டர் சலிச்சுகிட்டே சொன்னாரு..

தாஸும் போன போட்டாரு..

அங்கே...
லேகியம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு போல.
கொமாரு உக்கடம் ஏரியில #வாத்துபோல நீஞ்சிகிட்டு இருந்தாரு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக