ஞாயிறு, 9 ஜூன், 2019

அப்புக்குட்டி இல்ல இல்ல ஏழு

#அப்புக்குட்டி_இல்ல_இல்ல_ஏழு
(அப்பு தாத்தாவும், குப்பு பாட்டியும்)

"ஏ.. பிளீஸ்..பிளீஸ்.. குப்பு இன்னைக்கி ஒரு நாள் மட்டும்.. பிளீஸ்" என்று அப்புத்தாத்தா பாட்டிகிட்ட கெஞ்சிகிட்டு இருந்தாரு..

"இல்ல.. முடியாது..ஊஹூம்" என்று பாட்டி தலைய ஆட்டுனாங்க..

"என்.. செல்லம்ல.. பட்டுல.. தங்கம்ல.. சொன்னாக் கேளுமா.. பிளீஸ்" தாத்தா கொஞ்ச..

"ம்க்கும்.. உங்கள பத்தி தெரியாதா.. காரியம் ஆகனும்னா கொஞ்சுவீங்க.. ஆனப்புறம் ரொம்ப திட்டுவீங்க.. " பாட்டி சொல்ல..

"இல்லமா.. இனிமே திட்டவே மாட்டேன்.. ப்ளீஸ்..பீளீஸ் மா" என தாத்தா மீண்டும் கெஞ்ச ஆரம்பிக்க..

"பாட்டிமா.. இந்தாங்கோ.. நீங்க மெசின்ல அர்ச்சிகினு வரச் சொன்ன அர்சி மாவு இந்த டப்பாள கீது.. மொள்கா தூளு..சுண்டக்கா பாண்டி கைல கீற டப்பாள கீது" என்று சொல்லிகிட்டே சாம்பர் வடை ஒரு பெரிய டப்பாவையும், சுண்டக்கா ஒரு சின்ன டப்பாவையும் கொண்டு வந்து வச்சாங்க..
"ஓ.. தாங்க்யூ சாம்ப்பால், பாண்டி.. அத அந்த ஓரமா வச்சிடுங்க.. நான் போயி உங்களுக்கு டீபோட்டு எடுத்து வரேன்" என்று பாட்டி சமையல் கட்டுக்குப் போக..
பின்னாடியே "குப்பு..குப்பு.. பிளீஸ்..பிளீஸ்" என்று தாத்தாவும் போக..
"இல்ல..கிடையாது..
சத்த சும்மா இருங்க.. பிள்ளைங்களுக்கும், உங்களுக்கும் டீபோட்டு எடுத்து வரேன்.. நீங்க அவனுங்க கூட பேசிட்டு இருங்க" என்று கண்டிப்புடன் சொல்லி விட்டு உள்ளே போனார்..
தாத்தா முகத்த பரிதாபமாக வச்சிகிட்டு ஏதோ முனுமுனுத்துகிட்டு வந்து சோபாவில் உக்காந்தார்..

"கியா..தாதா இன்னா ஆச்சு போலுங்கோ" சுண்டக்கா அவர் பக்கத்துல உக்காந்து கேக்க..
தாத்தா பேசல..

"இன்னா நைனா.. இன்னாச்சி.. இன்னாத்துக்கு நீயி மூஞ்ச தொங்கபோட்டுகினு கீற.. " சாம்பாரும் அவருக்கு இன்னொரு பக்கத்துல வந்து உக்காந்து கேட்டான்..
அப்பவும் தாத்தா பேசல கம்முனு இருந்தாரு..

சாம்பாரும், சுண்டக்காவும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க..
மறுபடியும் சாம்பார் "நைனா.. இன்னா பிரச்சினைனு சொல்லு .. பாட்டி திட்டுனாங்களா.."

'இல்லை' என்பதைப் போல தலையாட்ட..

"தாதி அட்சிட்டாங்களா'' சுண்டக்கா கேட்க..
தாத்தா அவனை வேகமாக பாத்து மொறைச்சாரு..
" டேய்..கம்முனு கெட்றா.. நைனா சீரியசா கீறாரு.. இப்ப போயி காமடி பண்ணிட்டு.. நீ.. சொல்லு நைனா.." சாம்பார் கேட்டான்..

அந்த நேரம் பாட்டி டீ கொண்டு வந்தபடியே "சாம்ப்பால்.. அவர் தியேட்டர்ல போயி சினிமா பாக்கப் போறாராம்.. அதுக்கு நான் ஒத்துக்கல.. அதான் அப்படி இருக்காரு" சொல்லிவிட்டு ''அடடே.. ஸ்டவ்வ ஆஃப்பண்ண மறந்துட்டேன்.. நீங்க டீய குடிங்க நான் ஆஃப்பண்ணிட்டு வந்துடுறேன்"னு உள்ளே போனாங்க..

"ச்சேய்.. இதுலாம் பெர்ய சமாச்சாரம்னு பீல் பண்றியே நைனா.. இப்போ இன்னா தேட்டருக்குப் போயி படம் பாக்ணும்.. அவ்ளோதானே ..மேட்ர என்னாண்ட வுடு.. நான் பாட்டியாண்ட பேஸ்ரேன்.. இப்ப டீய குடி" என்று சாம்பார் சொல்லிகிட்டே தாத்தாக்கு ஒரு டம்ளர் டீய எடுத்துக் கொடுத்தான்..

தாத்தா முகத்துல லேசான நம்பிக்கை ரேகை தெரிய சிரிச்சபடியே டீயை குடிக்க.. சாம்பாரும், சுண்டக்காவும் சேர்ந்து டீகுடிச்சாங்க..

"பாட்டீமா..பாட்டீமா.. நைனாதான் கொய்ந்தயாட்டம் ஆசப்பட்துல..இன்னாத்துக்கு வுடமாட்றீங்கோ" சாம்பார், பாட்டியிடம் கேட்டான்..

"சாம்ப்பால்.. அவரு சினிமா பாக்கத்தானே வீட்ல டிவிடி பிளேயர், ஸ்ட்ரியோ சரவுண்டிங் 5.1 ஸ்பீக்கர் பாக்ஸ்,  செட்டாப் பாக்சுலாம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.. அவரு கேக்குற படமெல்லாம் நீயுந்தான் வாங்கிட்டு வந்து கொடுக்குற.. அப்பறம் எதுக்கு இவரு தியேட்டர் போகனும்னு அடம்பிடிக்கிறாரு.." பாட்டி கேட்டாங்க..

"அல்லாம் சர்தானுங்கோ பாட்டிமா..
ஒரு வேள தேட்டர்ல ஜனங்களோட ஜனங்களா குந்திக்கினு பாக்ர எபெக்ட்டுக்கு, நைனாஆசப்பட்ரார் போல" சாம்பாரும் தாத்தாக்கு சாதகமாக பேச, பாட்டியின் முகத்தில் லேசாக பதற்றம் ஒட்டிக்கொள்ள..

"அய்யிய்யோ.. இன்னா பாட்டிமா பேஜாரா ஆயிட்டீங்கோ.. நாங்காண்டி தப்பா எதாவ்து பெனத்திட்டேனா?"

"இல்ல..சாம்ப்பால்.. ஏற்கனவே இவரை தியேட்டருக்கு படம் பார்க்க போனப்ப, இவர் செய்த கலாட்டாவ நினைச்சேன் அதான் கொஞ்சம் நர்வசா ஆகிட்டேன்.."

"அடடே..அப்டியா.. அப்டி இன்னா பன்னிட்டாரு நைனா?"

"அதயேங்கேக்குற..மூனு வருசத்துக்கு முன்னாடி...'' பாட்டி சொல்ல ஆரம்பிக்க..

பிளாஷ் பேக்..

" சீக்கிரம்..சீக்கிரம்.. குப்பு.. படம் ஆரம்பிச்சுடப் போறாங்க.. சீக்கிரம் கிளம்பு..கிளம்பு" தாத்தா அவசரப்படுத்தினார்..

"இதோ.. ஒரே ஒரு அஞ்சி நிமிசம்" பாட்டி உள் ரூம்ல இருந்து குரல் கொடுத்தாங்க..

"ம்க்கும்.. இதையே தான் அரமணி நேரமா சொல்லிகிட்டு இருக்க.. இன்னும் கிளம்புனபாட காணோம்..
எங்கையாவது நேரத்துக்கு கிளம்ப முடியுதா? பொம்பளைங்களே இப்படி தாம்பா.. ச்சே.. சீவி மினிக்கி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது'' தாத்தா டென்சல்ல கத்திகிட்டு இருந்தாரு..

" அடடடடா.. என்ன பொலம்பல்..
உங்களப் போலையா சட்டுனு ஜிப்பாவ மாட்டிகிட்டு,வேட்டிய கட்டிகிட்டா வரமுடியும்.. தலைய வாரனும், புடவைய கட்டனும் எம்புட்டு வேலையிருக்கு" என்று பாட்டி சொல்லியபடி உள் ரூமை விட்டு வெளியே வந்தார்..
பச்சை நிறத்தில் புடவை.. லேசாக மஞ்சள் பூசிய முகம், அம்சமாக குங்கும்பொட்டு.. படிய வாரிய தலை .. அழகாய் சுருட்டிய கொண்டை.. அதில் அளந்து வைத்த பூச்சரம் என ஒரு தெய்வ அம்சம் பொருந்திய பெண்மணியாக தெரிந்தார்..

அப்புத்தாத்தா அப்படியே அசந்து போய் நின்னுட்டாரு..
"குப்பு..குப்பு.. நீ மட்டும் எப்படிமா அப்படியே இருக்க.. நம்ம கல்யாணத்தப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க.. என்ன கண்ணையே என்னால நம்ப முடியல..ஹிஹிஹி."

"அய்யே.. நல்லாவே இளிக்கிறீங்க... இந்த ஐஸ் வைக்கிற வேலைலாம் வேண்டாம்.. நம்ப முடியலைனா கண் டாக்ட்டர போய் பாருங்க..
இப்ப கிளம்புங்கோ..
என்னமோ நேரமாச்சுனு வானத்துக்கும், பூமிக்கும் தைய்யா தக்கானு குதிச்சீங்க. இப்ப இப்படி வளியிறீங்களே" என குப்பு பாட்டி சொன்னதும், அப்பு தாத்தா ரெண்டு கைகளால  வாயை பொத்திகிட்டு, சின்னப்பசங்க அடிக்கிட்டே போவுமே அதுபோல போனாரு.. தியேட்டர்ல சினிமா பாக்குற மகிழ்ச்சி அவருக்கு..

தெருமுனைக்கி வந்து ஆட்டோவ்ல ரெண்டு பேரும் போனாங்க..

தியேட்டர்..
ஜாக்கிசான் படம் தமிழ் டப்பிங் போல..
நிறைய சின்னப்பசங்க தலைகளும், அவங்க அப்பா அம்மா தலைகளுமா தான் தெரிஞ்சது..
ரெண்டு டிக்கெட்ட வாங்கிகிட்டு உள்ள போயி உக்காந்தாங்க..
மணி அடிச்சது.. படம் ஆரம்பிச்சாங்க..
ஜாக்கிசான் அறிமுக காட்சி சின்ன பசங்களாம் கைத்தட்டுனாங்க.. தாத்தா ஒரு படி மேலபோய் "உய்ய்ய்..உய்ய்ய்" னு காது 'கொய்ங்'னு சத்தம் வர அளவுக்கு விசிலடிச்சாரு..
பாட்டியும் கண்டுக்காம விட்டுட்டாங்க..

கொஞ்ச நேரம் ஆச்சு.. ஒரு சண்ட காட்சி..
தாத்தா காட்சியோட ஒன்றிப்போயி அந்த கேரக்கட்டராவே மாறிட்டார்..
"ஹா..ஊ..ஹூ..ஐ.." என்று அவரும் கத்தியபடி பக்கத்து சீட்ல இருந்தவர அடிச்சிபுட்டாரு.. "சாரி பா..சாரி பா தெரியாம கை பட்றுச்சுபா" னு அவரே சமாதான படுத்த,, அடி வாங்கினவரும்  'சரி..பெருசுதானே போனாவோவுது'னு விட்டுட்டாரு..
"என்னாச்சு.." பாட்டி கேட்க..
"ஒன்னுமில்ல..ச்சும்மா.. அவரு நம்ம பழைய ஃபிரண்டு.. அதான்" என்று மலுப்பலா சொல்லி சமாளிச்சாரு..

பத்து நிமிசம் கழிச்சு.. மறுபடியும் ஒரு சண்டை .. மறுபடியும் தாத்தா.. இந்த தடவ நம்ம தாத்தா ரொம்ப ஆக்ரோசமா மாறி பக்கத்துல இருந்தவர படுவேகமாக அடிக்க..
அவ்ளோதான்..
அந்த ஆளு பயங்கரமா கோவமாகி "அடேய்.. கெழட்டு முண்டம் என்னையவா அடிச்ச.. நான் யார் தெரியுமா.. அப்படியாக்கும், இப்படியாக்கும்" என்று தாத்தாவ பாத்து திட்டிகிட்டே அடிக்க கிளம்ப.. பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் எந்திரிச்சு அந்த ஆள தடுக்க ஆரம்பிச்சிட்டாங்க..
குப்பு பாட்டிக்கி ரொம்ப தர்மசங்கடமா போச்சு.. அந்த ஆள பாத்து
"தம்பி..தம்பி மன்னிச்சிடுங்க.. அவருக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." என்று கைகள குவித்து மன்னிப்பு கேட்க..
மத்தவங்களுக்கும், அடிவாங்குனவருக்கும் ஒரு மாதிரியாப் போச்சு..
''இதோ பாருயா பெருசு.. தேட்டருக்கு வந்தோமா, படத்த பாத்தோமா.. கைத்தட்டுனோமானு போயிட்டே இருக்கனும்.. அத விட்டுட்டு பக்கத்துல இருக்குறவன் மேலலாம் கையவைக்கக்கூடாது.. இன்னைக்கி ஏதோ  உன்னோட நல்லநேரம்.. இந்தம்மா இருந்ததுனால தப்பிச்ச.. இல்லனா மவனே நீ கைமாதான்" என்று அந்த ஆளு சத்தம் போட்டுட்டு வேற சீட்டுல போய் உக்காந்துட்டாரு..

குப்பு பாட்டியும் கண்ணீர துடைச்சிகிட்டு போக.. ''குப்பு..குப்பு.. சாரி மா..சாரிமா'' என பாட்டியோட பின்னாடியே ஓடுனாரு..
பிளாஸ்பேக் முடிஞ்சது..

"இதுக்குதான்பா நான் வேணாம்னு சொன்னது.. அதோட விட்டாரா.. அன்னைக்கி நைட்டு தூக்கத்துல  "ஆ..ஊ.."னு கராத்தே மாதிரி கைய கால ஆட்ட.. 
நம்ம வீட்ல ஒரு பொமேரியன் நாய் வளத்தோம் ஞாபகம் இருக்கா.. " என பாட்டி நிப்பாட்ட..

"ஓ.ஆமா பாட்டிமா.. புஸுபுஸு நாயி.. அது பேர்க்கூட இன்னாவோ மோனிசானு இர்ந்துச்சே"

"அதே தான்.. அது பாட்டுக்கு  ஓரமா படுத்து இருந்துச்சு காலால வயித்திலேயே மிதிச்சுட்டாரு அதுவும் வலி தாங்காமா இவரு கால நல்லா கடிச்சிட்டு 'வள்வள்ளுனு' கத்திகிட்டே விட்ட விட்டுப் போனது தான் இதுவரைக்கும் வரக்காணோம்.." என்று சொல்லிட்டு பாட்டிமா கொஞ்சம் அமைதியா ஆனாங்க..
சாம்பார் தாத்தாவ பார்க்க.. தாத்தா ஒன்னுந்தெரியாத புள்ளையாட்டம் முகத்த வச்சிகிட்டு இருந்தாரு..

மறுபடியும் பாட்டி "இப்ப புரியுதா சாம்ப்பால்.. நான் ஏன் வேணாம்னு சொன்னேனு" சொல்லிபுட்டு தன்னோட கண்ணாடிய கழட்டி துடைச்சிட்டு மறுபடுயும் மாட்டிகிட்டாங்க..

"சரிங்கோ.. பாட்டிமா ஆனது ஆச்சி.. விடுங்கோ.. ஏதோ பெர்சு மறுக்கா ஆசபட்ராரு.. இந்த ஒர்தபா வுடுங்கோ.. கூட நாங்களும் பெர்ச இட்டுகினு போறோம்.. எந்த பேஜாரும் பண்ணாம பாத்துக்குறோம்.. வயசான கொய்ந்த புத்தினு நீங்கதான சொல்லியிருக்கீங்கோ.. இந்த கொய்ந்தய நாங்க பாத்துக்கறோம் பாட்டீமா.. பர்மிசன் கொடுங்கோ" சாம்பார் கேட்க..

சாம்பார், சுண்டக்கா பாண்டி, தாத்தா மூனுபேரையும் பாட்டி ஒரு பார்வ பாத்துட்டு ''சரிப்பா சாம்ப்பால் பர்மிசன் கிராண்டட்.. இதான் கடைசி.. இனிமேட்டு ஏதாவது பிரச்சினை வந்தா அவரு தியேட்டரையே மறந்துடனும் சரியா.." னு சொன்னாங்க..

"அத்த நம்பலாண்ட உடுங்கோ பாட்டிமா நாங்க பாத்துக்குறோம்.. இன்னாடா சுண்டக்கா.. என்னா சொல்ற" சாம்பார் கேட்க..
"ஆவ் தாதிமா நிம்மல் சோடோ.. நம்மல் தாதாகி பாத்துக்கிறான்" னு சுண்டக்காவும் சொல்ல..

''சரி.. சரி.. பாத்து போயிட்டு வாங்க" என்று சொல்லி பர்சிலிருந்த பணத்தை எடுத்து, பாட்டி சாம்பாரிடம் கொடுக்க..
அதை சாம்பார் வாங்க..
"ஹே..ஹே.. ஜாலி..ஜாலி''னு தாத்தா துள்ளி குதிக்க.. மூனு பேரும் சினிமா தியேட்டருக்கு போனாங்க..

அடுத்து..

(தொடரும்)

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக