சித்தம் காத்து நாளுமென்றன்
..சிந்தை நிறைக்கும் குணக்கடலே
புத்தம் புதிதாய்ச் செயல்யாவும்
..புரிய வைக்கும் மெய்யறிவே
கத்தும் மனத்தை மௌனியாக்கிக்
..கவலை கலைக்கும் எம்கோனே
பித்தை உன்னில் நான்வைத்து
..பிடித்து வருவேன் சிவபுரனே.!
குந்தி யிருந்து உன்முன்னால்
..குவித்து கரங்கள் தொழுகின்றேன்
மந்தி போலே தாவுமெந்தன்
..மனதை யமைதி செய்திடுவாய்
முந்திச் செல்லும் வினையாவும்
..முகிலாய் மறையும் படிசெய்வாய்
நந்தி யோடு வீற்றிருக்கும்
..நலத்தைக் காக்கும் அருஞ்சிவனே.!
எங்கும் நிறைந்த நாயகனாம்
..ஏகன் அவனை நினைத்தாலே
பொங்கும் உவகை நெஞ்சத்தில்
..போகும் வினையும் விட்டகன்றே
தங்கும் இடத்தில் பூசித்தால்
..தாவும் மனமும் அடங்கிடுமே
அங்கு மிங்கும் ஆட்டுவிக்கும்
..ஆற்றல் மிக்க எம்சிவமே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக