சனி, 16 மே, 2020

பொங்கச்செலவு

பொங்கச்செலவு..

"அக்கா .. செவ்வந்தி அக்கா .." என்று அழைத்த குரலுக்கு ..

"என்னமா செல்வி " என்று பனையோலை தட்டிக்கு  (பனை ஓலைகளை கொண்டு அமைக்கப்படும் வீட்டு வேலி) மேலே தலையை தூக்கி, கைகள் பாத்திரங்களை துலக்கியபடியே கேட்டாள் ..

"ரேசங்கடைல பொங்கச்செலவு கொடுக்குறாங்களே.. ஆம்பள வரிச கொறைச்சலா இருக்கமே செந்தில அனுப்பலாம்ல கா .." செல்வி இடுப்பில் தண்ணிகுடம் தாங்கிக்கொண்டு சொல்ல ..

"ஓ..அப்படியா ..தம்பி பள்ளிக்கூடம் போயிட்டானே செல்வி .."

"அவங்க அப்பாவ அனுப்பலாம்ல " செல்வி சொல்ல ..

"அவருக்கு மேலுக்கு முடியலைன்னு ரெண்டு நாளா வேலைக்கு போகாம படுத்து கிடக்காரு .. கேட்டு பாக்குறேன் இல்லனா நாந்தான் போகணும் செல்வி.." என்று பாத்திரம் துலக்குவதை பாதியிலேயே நிறுத்திவிட்டு.. கையை தன் புடவையில் துடைத்து விட்டு வீட்டுக்குள் சென்றாள்..

"ஏங்க..ரேசங்கடை வரைக்கும் போயிட்டு வரமுடியுமா.. பொங்கச்செலவு தராங்கலாம்.." செவ்வந்தி குரலுக்கு மறுப்பதை போல தலை ஆட்டினார் அவளோட 'ஏங்க'.. 

"சரி தூங்குங்க .. நான் போய் வாரேன் .. அடுப்புல சுடு காஞ்சி இருக்கு .. பக்கத்துல கார துவையல் இருக்கு " என்று சொல்லியபடி ஒரு தம்ளரில் பழைய சோத்து தண்ணிய மட்டும் எடுத்து குடிச்சுபுட்டு, பழைய இரும்பு பொட்டில இருந்து ஒரு மஞ்ச துணிப்பை ல இருந்த ரேசன் அட்டையையும், ஆதார் அட்டையையும் எடுத்து பாத்துட்டு பைய்யோட வெளியே வந்தாள் .. வாசல்ல விளையாடிட்டு இருந்த தன் மகள் லட்சுமிய இடுப்புல தூக்கிகிட்டு வேக வேகமா ரேசன் கடையை நோக்கி நடந்தாள்..

அவள் போன கொஞ்ச நேரத்தில் "முருகேசு அண்ணே.. முருகேசு அண்ணே " குரல் வந்ததும் .. வீட்டுக்குள் இருந்து செவ்வந்தி கணவன் வெளியே வந்தான் .. "என்னடா ..சொடல.. என்ன விசயம் ?'' 

"அண்ணே கையெல்லாம் ஒரே ஒதரலா இருக்கு .. சரக்கு எதாவது வசிருக்கியானே .."

"இல்லடா ..சொடல .. எனக்கும் அப்படித்தான் இருக்கு .. கையில காசு வேற இல்ல .."

"அண்ணி புள்ளைய தூக்கிட்டு எங்க போகுது ..?"

"ரேசங்கடைக்கு ...  ஆகா .. சொடல .. உங்க அண்ணி காசு வாங்கிட்டு வருவா .. அத வாங்கிட்டு வரேன் .. நீ எங்கியும் போயிடாம கடை பக்கத்திலேயே இரு வரேன் " னு அவன் சொல்ல .. இவன் சிரிசுகிட்டே போனான் ..

ரேசன் கடை ..

கூட்டம் .. கோ கோ னு .. இருந்தது .. செல்வி சொன்னது போல ஆம்பளையாளுங்க வரிசை ரொம்ப கொரைச்சலாதான் இருந்தது ..

பெண்கள் வரிசை ரொம்ப அதிகமாகவும் கூச்சலும் கொலப்பமாகவும் இருந்தது ..

அந்த கூட்டத்தோடு கூட்டமா நெரிசல்ல அல்லாடியபடி இருந்தாள் செவ்வந்தி ..

நேரம் ஆகா ஆகா வெயிலும் அதிகமானது .. 

மதியம் உணவு நேரம் ஆனது.. 

காலையில் ஒரு தம்ளர் நீராகாரம் மட்டும் குடித்ததால் வயிறு பசி கிள்ளியது .. 

வரிசையை விட்டு போகவும் முடியாது ..

கையிலிருந்த குழந்தை லட்சுமியும் பசியால் அழுக ஆரம்பித்தால் ..

அங்கிருந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு "தம்பி..பாபாக்கு பசிக்கிது ஒரு பாக்கட் ரொட்டி (பிஸ்கட் )வாங்கிட்டு வரியாப்பா .. நீ ரெண்டு ரூபா எடுத்துக்க " என்று சொன்னதும் 

அந்த சிறுவன் சிட்டாக பறந்து சென்று ரொட்டியோடு வந்தான் .. அதை பிரித்து குழந்தைக்கு கொடுக்க .. அது அழுகையை நிறுத்தி சாப்பிட ஆரம்பித்தது ..

அந்த நேரம் பார்த்து உணவு இடைவேளை என்று கடையின் கதவை அடைத்து விட்டார்கள் .. கூடம் கொஞ்சம் அமைதி காத்தது. 

கிட்டதட்ட முக்கால் மணி நேரம் கழித்து திறக்க

மறுபடியும் பரபரப்பு .. இடித்துக்கொண்டு சண்டையிட்டு கொண்டார்கள் .. ஒரு குண்டு பெண்மணி செவ்வந்தியின் காலை மிதித்து விட .. வலியால் துடித்துவிட்டாள் ..

அதையும் தங்கிக்கொண்டு நின்றிருந்தாள்..

நேரம் மூன்றை தாண்டியது .. பெண்களுக்குள் தள்ளுமுள்ளு என சண்டை ஆரம்பிக்க .. பொங்கல் செலவு கொடுக்கும் பணி நிறுத்தப்பட்டது ..

பிறகு காவல்துறை ஆட்கள் வந்து வரிசையை முறைபடுத்தி நிற்க வைத்த பிறகு .. மீண்டும் வழங்கும் பணி தொடங்கியது ..

ஒரு வழியாக மாலை ஐந்து மணி அளவில் பொங்கச்செலவை வாங்கி வீட்டுக்கு திரும்பினாள்..

குண்டு பெண்மணி மிதித்த கால் வேறு வீங்கிகொண்டு வலியெடுத்தது .. காலை சற்று ஊண்டியபடி நடந்தாள்..

வீட்ற்கு வந்ததும் அவளின் கணவன் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு நடுங்குவதை போல படுத்துக்கொண்டு இருந்தான் ..

"ஏங்க என்னாச்சு ?" என்று கேட்க ..

"ரொம்ப குளிருது உள்காய்ச்சல் அடிக்கிராமாதிரி இருக்கு" என சொன்னான் ..

"இருங்க கசாயம் வச்சி தாரேன் " என்று சொல்லி அடுப்படிக்கு போக .. அங்கு கசாயம் செய்ய வேண்டிய பொருள்கள் இல்லாமல் போக .. 

"ஏங்க கசாயம் சாமான்கள் இல்ல .. நான் போயி மொன கடையில் வாங்கிட்டு வந்திடுறேன் " சொல்லிபுட்டு  பொங்கல் செலவுக்கு கொடுத்த பணத்தை தன் ரவிக்கையில் இருந்து எடுத்து உரிபானையில் (சிறு மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கோல் பிரியில் செய்த கையிற்றால் கட்டி வீட்டின் கூரை கம்பில் கட்டி வைத்திருப்பார்கள் ) எடுத்து வைத்து விட்டு சில சில்லறை காசுகளை மட்டும் எடுத்துக்கொண்டு , தன மகளையும் தூக்கிகொண்டு செல்ல .. 

படுத்துக்கொண்டே நோட்டம் விட்ட செவ்வந்தியின் கணவன் முகத்தில் ஒரு சிரிப்பு ..

படுத்திருந்தவன் எழுந்தான் ..

வாசலில் வந்து எட்டி பார்த்தான் .. செவ்வந்தியின் தலை மறைந்ததும் ..

உள்ளே சென்று உரிப்பானையில் கையை விட்டான் ...

சிறிது நேரம் கழிந்தது ..

கண் விழித்து பார்த்தான் செவ்வந்தியின் கணவன் .. மருத்துவ மனையில் இருப்பதை கண்டு திடிக்கிட்டான் ..

"நல்ல வேளங்க செந்தில் அப்பா ..உங்க  பையன் பள்ளிக்கூடம்  விட்டு வந்து சொன்னதால தெரிஞ்சது .. உங்கள கொத்துனது கட்டுவிரியன் பாம்பாம் .. நேரத்துக்கு கூட்டிட்டு வந்ததனாலகாப்பத்த முடிஞ்சது .." என்று பக்கத்துக்கு வீட்டு செல்வி சொன்னதும் லேசாக நினைவு வந்தது அவனுக்கு ..

சின்ன பானையில்  கைய விடப்போக கயிறுக்குமேல இருந்து ஏதோ ஒன்று கையில் கடித்தது போல இருந்தது .. உடனே மயக்கம் போட்டு விழுந்திருக்கான்..

அப்பா வந்த அவன் மகன் அய்யய்யோ அப்பானு அலற அக்கம் பக்கம் எல்லாரும் சேர்ந்து மருத்துவமனைக்கு தூக்கிட்டு வந்திட்டாங்க ..

செவ்வந்தி மட்டும் ஏதோ அர்த்த பார்வையோடு அவனை பார்க்க .. தலை குனிந்து போனான் அவன்..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக