ஞாயிறு, 17 மே, 2020

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள் 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

"அண்ணே..அண்ணே ..பைக்ல போற அண்ணே .. லிப்ட் ..லிப்ட் ..ஒரு உதவி "என்றான் அவன் 
"என்றா தம்பி .."
"அண்ணே .... இன்னைக்கி எனக்கு ஒரு ஆபிஸ்ல இண்டர்வ்யூங்க அண்ணே .. ரொம்ப நாளா முயற்சி செஞ்சி வந்த இன்டர்வியூங்க ண்ணே .. இன்னிக்குனு பார்த்து ஒரு பஸ்சுக்கூட வரல .. ஆட்டோல போற அளவுக்கு காசும் இல்ல .. அதனால போற வழியில இறக்கி விட்டீங்கனா போயிடுவேன் "
"சரிடா தம்பி எங்க போகணும் ?"
"கோயம்பேட்ல அண்ணே "
"அடடே .. அதுக்கு மூணு கிலோமீட்டர்க்கு முன்னாடியே திரும்பிடுவேனே .. சரி உக்காரு அங்க எறக்கி விடுறேன்  எதுவும் வண்டி வந்தால் ஏறி போயிடு "
"சரிங்க அண்ணே ." அவன் ஏறி உக்கார பைக் கிளம்பியது ..
போகும் வழியில் அவனை பற்றி கேட்டுக்கொண்டு வந்தான்  பைக் காரன் ..
தன்னோட நிலைமை குடும்பச்சூழல் எல்லாத்தையும் சொல்லியபடி வந்தான் பின்னாடி உக்காந்து வந்தவன் ..
பைக் காரன் திரும்ப வேண்டிய இடம் வந்ததும் அவன் இறங்கிகொண்டான்..
பைக் காரன் வலது பக்கம் திரும்பி  அங்கிருந்து அவனை பார்க்க .. அங்கே அவன்  வேறு வண்டிகளுக்கு கை காட்ட யாரும் நிற்காமல் சென்றார்கள் .. அவனது முகம் வாடுவது போல தெரிய .. பைக் காரன் மீண்டும் திரும்பி  வந்து , "தம்பி வண்டில ஏறுப்பா ..கொஞ்ச தூரம்தான நானே விட்டுட்டு வறேன் " என்று சொல்ல  அவனின் முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி ..

கொஞ்சம் நாள் கழித்து ..
பைக் காரன் சாலையோரமாக நின்று போகிற வண்டிகளிடம் கை காட்டி உதவி கேட்டபடி நிற்க .. ஒரு பைக் அவனருகில் வந்து நின்றது ..
"சார் போற வழியில் கொளத்தூர்ல விட முடியுமா"
"உக்காருங்க அண்ணே போகலாம் .. என்னை சார்லாம் கூப்புட வேண்டாம்ங்க அண்ணே .. என்னை நினைவு இருக்கா ?"
"தெரியலையே தம்பி ஹெல்மெட் போட்டிருக்கீங்களே .." சொன்னதும் ..
"சரிங்க அண்ணே..உங்களுக்கு அவசரம் இல்லைனா அந்த டீக்கடைல உக்காந்து பேசுவோமா?" அவன் கேட்க 
"சரிங்க தம்பி "
இருவரும் டீக்கடையில்  அமர்ந்தார்கள் ..
"பைக் எங்க அண்ணே ?"
"சர்வீசுக்கு விட்டிருக்கேன்பா "
"சரி இப்ப சொல்லுங்க .. என்னைய யாபகம் இருக்கா ?"
"பார்த்த முகமாத்..தான் ...தெரியுது.. ஆனா .. எங்க பார்த்தேன்னு தான் தெரியல "
"ஒரு மூணு மாசத்துக்கு முன்ன .. எனக்கு நீங்க கொடுத்த லிப்ட்டு .. என்னோட வாழ்க்கையையே உயர்த்திடுச்சு .. அப்போ நீங்க இந்த வழியா போகும்போது நான் கோயம்பேடு இண்டர்வ்யூக்கு போகனும்னு சொன்னப்ப இந்த இடத்துல தான் இறக்கி விட்டீங்க .. அப்பறம் வேற யாரும் வண்டிய நிப்பாட்டாம போகும்போது  மறுபடியும் நீங்க வந்து என்னிய கூட்டிகிட்டு அந்த ஆபிசுக்கே வந்து விட்டுட்டு போனிங்க .. சரியான நேரத்துல போனதுனால அந்த இண்டர்வ்யூல  செலக்ட்டாகி நல்ல சம்பளத்துல வேலையும் கிடைச்சது .. இப்ப என் குடும்பம் நல்ல நிலையில் இருக்குங்க அண்ணே .. அதனால உங்களுக்கு நன்றி சொல்லனும்னு நினைச்சு ரொம்ப நாளாக தேடினேன் இன்னைக்கித்தான் கிடைச்சிங்க .. ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணே " அவன் கையெடுத்து கும்பிட ..
பைக் காரன் நெகிழ்ந்துப் போனான் ..
"ஒ .. அந்த தம்பியா நீங்க .. எதுக்கு தம்பி கையெடுத்து கும்பிட்டுகிட்டு .. எப்பவும் நான் அந்த பக்கம் போகும்போது ஸ்கூல் பசங்க, வேலைக்கு போறவங்க யாராவது நின்னாங்கனா ஏத்திகிட்டு போற வழியில எறக்கி விட்டுட்டுப் போவேன் பா .. ஏதோ  இந்த சின்ன  அணிலால் முடிஞ்ச உதவிப்பா "
"அண்ணே அந்த உதவி சின்னதா இருந்தாலும் .. என்னியப்போல ஆளுங்களுக்கு வாழ்க்கையே கொடுக்குதுனா அது தானுங்க அண்ணே இந்த உலகத்திலேயே பெரிய உதவி " என்று சொல்லிவிட்டு அந்த பைக் காரனை கட்டிக்கொண்டான் அவன் ..

விஜயகுமார் வேல்முருகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக