சனி, 16 மே, 2020

சுகமான சுமை

சுகமான சுமைகள்..

எந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை.. காலை எழுந்து மாலை மறைந்து இரவில் படுக்கையில் புதையும் வரை நிற்காத ஓட்டம் ..

அதற்கு சென்னையில் வாழும் அமுதன் மட்டும் விதிவிலக்கா என்ன ..

காலையில் வாக்கிங் ஜாக்கிங் போகவோ அல்லது யோகா , தியானம் செய்யவோ நேரமில்லாத பிழைப்பு .. காலை ஏழுமணிக்கு எல்லாம் தயாரானால் தான் புறநகர் ரயிலை பிடிக்க முடியும் .. பின்பு அதிலிருந்து உதிர்ந்து  அடுத்து ஒரு ரயில் ..பத்து மணிக்குள்ளாக அலுவலகத்தை அடைய முடியும் .. அதிலும் ரயில்களில் நின்றுகொண்டே செல்லும் பயணங்கள் தான் பெரும்பாலும் அவனுக்கு .. இதே போல் அங்கிருந்து ஏழுமணிக்கு கிளம்பினால் வீடு வர பத்தாகிவிடும் .. ஓய்வில்லா வேலை தான் .. வார விடுமுறையில் முழுவதுமாக, அடித்து போட்டாற்போல தூங்குவான் ..

அதுபோல ஓடுகிறது அவன் வாழ்க்கை ..

எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் ..

இந்நிலையில் தான் அவனுக்கு திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு நடந்து முடிந்தது ..

ஊரிலிருந்த உறவுக்காரப் பெண் ..

இப்பொழுது தான் அமுதன் அதிகபட்சமாக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தான் .. அதிலும் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தே முக்கால்வாசி விடுப்பை தின்றுவிட்டன ..

மீண்டும் வேலை .. அதே ஓட்டம் .. அதே ரயில் வண்டியில் நின்றுக்கொண்டே பயணம்... அவன் உண்டு அவன் வேலை உண்டு என்ற அளவில் ..

மணம் முடித்து வந்த மனைவியிடம் கூட சரியாக பேச இயலாத நிலைமை ..

எத்தனையோ கனவுகள் .. ஆசைகளோடு வந்த அவளுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும் போல .. வாடி தான் போனாள் ..

ஆறேழு மாதங்கள் ஓடித்தான் போய்விட்டன ..

வேலை பார்க்கும் இடத்தில்  அழுத்தம் .. நெருக்கடி என தொடர .. மற்றவர்களிடம் சிரித்து பேசுவதைக் கூட மறந்தான் .

மனதில் சுமைகள் கூடின ..

அவனது நிலையை பார்க்க அவன் மனைவிக்கும் பரிதாபமாகத்தான் இருந்தது ..

ஒரு நாள் .. அவள்  அமுதன் அலுவலகம் சென்று .. மேலாளரிடம் பேசி சில  நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு .. அமுதனை அவர்கள் ஊருக்கு அழைத்துச் சென்றாள்..

மலையடிவார பசுமையான சூழல் ..

பச்சை வயல்வெளிகள் .. அருமையான குளுமையான காற்று ..

ஆழ்ந்து சுவாசிக்க வைத்தாள் ..

அமுதனை மனம் விட்டு பேச வைத்தாள் ..

மனதின் சுமைகளை குறைத்தாள் ..

சின்னஞ்சிறு சிறுவர்களோடு சிறுவர்களாக இருவரும் விளையாடினார்கள் ..

அமுதன் அவளை தன் முதுகில் உப்புமூட்டை ஏற்றி சுற்றி வர .. அவனது மனதின் சுமை மெல்ல மெல்ல கரைந்து இல்லாமல் போக ..

அவன் உடம்பில் மட்டும் சுமையாக அதுவும் சுகமான சுமையாக ..

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக