#ஒரு_கிராம_தேவதனின்_கதை..
நல்ல மழை பெய்து கம்மா,ஊருணி எல்லாம் தண்ணீர் நிறைந்து தளும்பிக்கொண்டு இருந்தன..
ஐந்து ஆண்டுகள் கழித்து அடர்த்தியாக பெய்த மழை.. ஊர் மக்களின் முகங்களில் மகிழ்ச்சி..
கறுப்பண்ணன் தன் குதிரையை நடந்தபடி அழைத்து வந்து கண்மாய் நிறைந்து வழிவதை புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தார்..
ஊருக்குள் தண்ணீர் வராத படி தடுக்க லேசாக கண்மாயின் மதகை திறந்து விட்டு அந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக அடுத்த கண்மாயை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது..
"இம்முறை விவசாயம் நல்லபடியாக இருக்கும்.. ஈசனே எல்லாம் உன் கருணை" வானை நோக்கி வணங்கிவிட்டு தன் குதிரையை அழைத்துச் சென்றார்..
இரவு..
ஊர் காவலுக்கு தன் சிலம்பத்தடியை எடுத்துக்கொண்டு குதிரையின் மீது கிளம்பினார் கருப்பண்ணன் ....
உடன் அவரது தம்பி வெள்ளைச்சாமியும்..
நடுநிசியை தாண்டிய பொழுது..
கண்மாய் கரையில் இரும்பு சாமான்களின் சத்தம் வந்தது..
தண்ணீரின் தவளை சத்தங்களுக்கு இடையே அந்த சத்தம் கேட்க கருப்பண்ணனின் காதுகள் கூர்மையாகின..
உடனே ஆந்தை அலறலைப் போல வித்தியாசமா குரல் கொடுக்க சற்றுத் தொலைவில் இருந்த வெள்ளைச்சாமியும் வந்துவிட்டார்..
"என்னங்க ணே.. என்ன பிரச்சனை?" என்று கேட்க..
"காதை கூர்மையாக்கு.. தவளைக்கு இரட்டை குரல்" என்றதும்..
"அடடே.. அண்ணே யாரோ கம்மாயோட கரையை உடைக்கிறாப்போல இருக்கு" என்றதும்..
இருவரும் தங்கள் சிலம்பத்தடிகளை எடுத்துக்கொண்டு, குதிரைகளை அங்கேயே நிறுத்தி விட்டு..
கண்மாய் கரையை நோக்கி வேகமாக போனார்கள்..
அங்கே..
கார்கோடகன் அவனது கூட்டாளிகளோடு சேர்ந்து கரையை கடப்பாரையால் குத்திக்கொண்டு இருந்தான்..
கார்கோடகன்.. பெரும் கொள்ளைக்காரன்.. அந்த ஊரின் சுற்று வட்டாரங்களில் எக்கச்சக்க கொள்ளையில் ஈடுபட்டதுடன் கொள்ளையடிப்பதை தடுப்போரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று போட்டுள்ளான்..
ஆனால் அவனது ஜம்பம் கருப்பண்ணன் இருக்கும் ஊரில் எடுபடவில்லை..
எத்தனையோ முறை கருப்பண்ணனாலும், வெள்ளைச்சாமியினாலும் அடித்து விரட்டப்பட்டுள்ளான்..
அதனால் ஏற்பட்ட கோபத்தினாலும், வெறியினாலும்..
அந்த ஊரை எப்படியாவது நாசமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றித் திரிந்து வந்தான்..
இப்பொழுது மழை பெய்து வெள்ளம் நிறைந்ததால்.. கரையை உடைத்து ஊரை வெள்ளத்தால் மூழ்கடிக்கலாம் என்ற கொடூர எண்ணத்துடன் தன் சகாக்கலோடு மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களால் கண்மாயை உடைக்க ஆரம்பித்து இருந்தான்..
இதை நேரில் கண்டதும்
கருப்பண்ணனின் கண்கள் கோவைப்பழமாக சிவந்தது..
மீசை துடிக்க ஆரம்பித்தது..
கையிலிருந்த சிலம்பத்தடியை வேகமாக சுழற்றி வீச, அது பறந்துச் சென்று கும்பலில் ஒருவன் மீது பட்டு அவனை சற்று தூரத்திற்கு தூக்கி எறிந்தது..
மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார்கள்...
வெள்ளைச்சாமியும் தன்பங்கிற்கு சிலம்பத்தை வேகமாக சுழற்றியபடி அந்த கும்பலில் நுழைந்தார்..
நான்கைந்து பேர்கள் ஆங்காங்கே சிதறி விழுந்தார்கள்..
கார்கோடனுக்கும் கோவம் அதிகரித்து "டேய் .. முதல்ல இவங்க ரெண்டு பேரையும் தீர்த்தா தான் நமக்கு நிம்மதி.. ஆளாளுக்கு கடப்பாரைகளை கையிலெடுத்து இவனுங்கள பிச்சிப் போடுங்கடா" என கத்த..
"ஹாஹாஹாஹ்ஹா" என்ற பயங்கர சத்தத்துடன் கருப்பண்ணன் சிரிக்க அந்த இடமே இடி முழங்கியது போல இருந்தது..
"அடேய்..கார்கோடகா யார் இடத்துக்கு வந்து யார்கிட்ட குரல் கொடுக்குற.. இப்ப சிதறப. போறது யார்னு இப்பத் தெரியும்''என்று சொல்லியபடி தன் சிலம்பத்தை எடுத்து படு பயங்கரமாக சுழற்றினார்.. அந்த ஈசனே ருத்ர தாண்டவம் ஆடுவது போல இருந்தது..
சிலம்பத்தின் ஒவ்வொரு வீச்சிலும் மோதியவர்களின் உடற் சதைகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன..
எப்படியும் அவர்கள் ஐம்பது பேர்கள் இருப்பார்கள்..
அனைவரையும் பஞ்சு பொதியாக பறக்க விட்டார் கருப்பண்ணன்..
உடன் வெள்ளைச்சாமியும் அண்ணனுக்கு சலைத்தவர் இல்லை என்று கார்கோடனின் ஆட்களை துவம்சம் செய்தார்..
இறுதியாக கார்கோடன் மட்டும் நின்றிருக்க மற்றவர்கள் "அய்யோ அம்மா" வென்று குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்தார்கள்..
"அடேய .. கார்கோடகா.. உன்னை எத்தனையோ முறை எச்சரித்து தண்டித்து அனுப்பியும் நீ திருந்துவதாக இல்ல....
நாங்க உயிரோட இருக்குற வரை இந்த மண்ணுல ஒரு துரும்பக்கூட அசைக்க முடியாது... எங்க உயிர் போனாக்கூட எங்க மூச்சுக் காத்தும் இந்த மண்ணை சுத்தி சுத்தி வரும்டேய்..
இத்தன நாளு உன்ன சும்மா விட்டாச்சு..
எப்ப என்னோட ஊரு மக்கள அழிக்கிறதுக்கு தயங்கலையோ உன்னை சும்மா விடுறதா இல்லை" என்று கருப்பண்ணன் கர்ஜிக்க...
வெள்ளைச்சாமி ஆவேசமாக பாய..
கார்கோடனும் கையில் பெரிய கத்தியோடு பாய்ந்தான்..
கருப்பண்ணன் தன் சிலம்பத்தை எடுத்து லாவகமாக சுழற்றி வீசினார்..
அது கார்கோடனின் கை மணிக்கட்டை தாக்க.. அவன் கையிலிருந்து விடுபட்ட கத்தி பறந்து வந்து கருப்பண்ணன் கையில் தஞ்சமடைந்தது..
அந்த கத்தியால் ஒரே வீச்சு..
ரத்தம் "சளக்" என்று கருப்பண்ணனின் முகத்தில் தெறித்து விழுந்தது.. கார்கோடனின் தலை துண்டமாகி தொலைவில் போய் விழுந்தது..
இரத்த கறையோடு "ஹா ஹா ஹா ஹா" என்று மீண்டும் ஒரு பயங்கர சிரிப்பு ..பின்பு கார்கோடனின் தலையை ஒரு ஈட்டியில் சொருகி ஊர் எல்லையில் வைத்தார்..
"இனிமேல் என் ஊருக்கு தீங்கு நினைக்கிறவனுக்கு இது தான் கதி " என்று சொல்லிவிட்டு தன் குதிரையில் ஏறி வேகமாக எங்கோ மறைந்துவிட்டார்.. உடன் வெள்ளைச்சாமயும்..
"இது தாம்பா இந்த கிராம எல்லைசாமிகளோட கதை.. இப்பவும் இவங்க இந்த ஊரை தம்ம கண்ணுக்குத் தெரியாத சுத்தி சுத்தி பாதுகாத்துட்டு வராங்க..
அவங்க இருக்கும் போது என்ன கட்டுக்கோப்போட இருந்துச்சோ
அதே கட்டுக்கோப்போட தான் இன்னும் இருக்கு.. எந்த திருட்டு பயமும் இதுவரை இல்லைங்க தம்பி" என்று அந்த பெரியவர் சொல்லிவிட்டு நகர..
அந்த இரண்டு அய்யனார் சிலைகளும் கம்பீரமாக தோற்றமளித்தன..
படமும், எழுத்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக