"மவராசி.. காலையிலேயே முடியலைனு படுத்திருந்தா..
நேத்து வேலையாளுக நிறயபேரு வராததால கருக்கல் வரைக்கும் இடுப்பு நிமிராத வேல..
புள்ளைங்களும் இங்க சிரம்ப்பட்டு உழைச்சும் அதுக்கேத்த பலன் இல்லனு பட்டணத்துப் பக்கம் கூலி வேலைய பாத்துட்டு போயிட்டாங்க..
என்னத்த செய்யிறது கஷ்டமோ, நஷ்டமோ தாங்கிகிட்டு தான ஆகனும்..இது நம்ம மண்ணாப் போச்சு..
நாமலும் விவசாயத்த கைவிட்டா அப்பறம் என்ன செய்யிறது.. வயிறுன்னு ஒன்னு இருக்கே.. வேளாவேளைக்கு பசிக்குமே.. அதுக்கு யாரு சோறு போடுறது..
உசுரு இருக்குற வரைக்கும் இந்த மண்ணுலேயே விவசாயம் செஞ்சிபுட்டு போனதுக்கப்பறம் இங்கேயே புதைஞ்சி போயிடனுந் தம்பி" என்று சொல்லியபடி வாய்க்கால்ல ஓடுன தண்ணியில முகம் கைகால் கழுவிபுட்டு, கையில அள்ளி அந்த தண்ணிய ரெண்டு மிடரு குடிக்க தூரத்துல அவரோட மனைவி கையில தூக்குவாளிய தூக்கிகிட்டு மெல்லமெல்ல நடந்து வர.. இவரு உடனே ஓடிப்போயி தூக்குவாளிய கையில வாங்கிகிட்டு , ஒரு கையில அந்த அம்மாவையும் புடிச்சிகிட்டு அந்த மர நிழல்ல போயி , தலையில கட்டியிருந்த துண்ட ஒதறி விரிச்சி அந்தம்மாவ உக்காரவச்சி பக்கத்துல தானும் உக்கார.. அவரோட வேர்வை துளிகளை அந்தம்மா தன்னோட சேலை தலைப்பால துடைச்சி விட்டாங்க..
தூக்குவாளிய திறந்த ஐயா "நீ.் சாப்ட்டியாமா?" னு கேக்க , அவங்க இல்லைனு தலையாட்ட..
இவரு கஞ்சிய அள்ளி அந்தம்மாவுக்கு ஊட்டிவிட்டு, தானும் சாப்பிட்டாரு..
காட்சியை கண்ட எனக்கு பார்வைய மறைச்சது கண்ணுல பெருக்கெடுத்த ஈரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக