#இயற்கை_சூழலியல் 2
புத்தகத்தின் பெயர்: #கடல்புரத்தில்
எழுத்தாளர்:
#வண்ணதாசன்
வகை : நாவல்
கிண்டில் பதிப்பாய் வாசித்தது..
முதன்முதலாக நான் (சு)வாசித்த வண்ணதாசன் அவர்களின் நூல்..
வாசித்தேன் என்பதை விட அதில் கரைந்தேன் என்பதே பொருத்தமானது..
கடல் இயற்கையன்னையின் அளவிடமுடிதா அருட்கொடை.. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்..
அதன் கரையினில் அதனோடே வாழ்ந்து.. அதனோடே புழங்கி.. அதனோடே கரைந்துப் போகும் பிள்ளைகளாய் மீனவர்கள்.. அவர்களின் செயல் ஒவ்வொன்றிலும் கடல் கலந்திருக்கும்..
முதன்முதலாக பிறக்கும் பிள்ளைக்கு கடலின் உவர்ப்பை உவப்பாக கொடுப்பார்கள்..
அவர்களின் காதல்.. திருமணம்.. நல்ல/கெட்ட நிகழ்வுகளெல்லாம் கடலின்றி முடியவே முடியாது..
அத்தகைய கடற்புரத்தோடு உறவாடி வாழும் மக்களைப் பற்றிய கதை தான் இது..
எனக்கும் கடற்கரையை நெருங்கிய பகுதிதான் என்பதால் மீனவ மக்களோடு நெருங்கிய தொடர்பு..
எனக்கு சிறுவயது நினைவு..
சிறுவயதில் குடும்ப கஷ்டமான சூழ்நிலை என்பதால், அம்மாவுடன் மீன் வாங்க மீன் அங்காடிக்குச் செல்வேன்.. ஒவ்வொரு கடையாக மீனின் விலையை மட்டும் கேட்கொண்டு வருவார் அம்மா..
நானும் இருப்பதிலேயே பெரிய மீனாக கையை காட்டுவேன்.. அம்மாவிடம் சொற்ப அளவு பணம் மட்டும் இருப்பதால் அதற்கு ஏற்றார் போல தான் பார்ப்பார்..
அந்த அளவுக்கு உண்டான மீன் இருக்காது..
ஒரு முறை இப்படித்தான் அம்மா விலை கேட்கும் போது அந்த மீன் விற்கும் அம்மா, என் அம்மாவை திட்டிவிட்டார்..
அம்மாவின் கண்கள் கலங்கிவிட்டது..
யாரிடமும் சத்தமாக பேசாத கிராமத்து வெள்ளேந்தி அம்மா..
அம்மாவின் கலக்கத்தை பார்த்து எனக்கும் அழுகை வர, அம்மாவின் கையை பிடித்து வேகமாக அழைத்துக்கொண்டு அங்காடியை விட்டு வெளியேற நடக்கத் தொடங்க..
அந்த மீன் விற்கும் அம்மாவுக்கு என்ன தோன்றியதோ எனத் தெரியவில்லை.. விறுவிறு என்று நடந்து வந்து அம்மாவின் கையையும், எனது கையையும் ஒரு சேர பிடித்துக்கொண்டார்.. ஏதோ பேசினார்.. சென்னை மீனவ பாசையில்.. அம்மாவிடம் மன்னிப்பு கேட்பது போல தெரிந்தது.. எங்கள் குடும்பச் சூழலை அறிந்த அவர்.. அம்மாவிடமிருந்த பணத்திற்கும் கூடுதலான மீன்களை கொடுத்தார்..
அன்றையிலிருந்து அந்தம்மாவும், அம்மாவும் சினேகிதம் ஆனார்கள்..
மூர்க்க குணமும் அதை விட அதிகமாக இரக்க குணமும் அதிகமுள்ளவர்கள் கடலின் மைந்தர்கள்..
ஜவ்வாக இழுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் விரைவில் முடித்து விடுகிறேன்.. எனது அனுபவத்தை ..
அந்த மீனம்மாவின் வீட்டிற்குப் போய் வரும் அளவுக்கு அம்மாவின் சினேகிதம் வளர்ந்தது..
அந்தம்மாவிற்கு திருமண வயதில் ஒரு மகள்.. என்னைவிட ஐந்து வயது கூடிய மகன்..
அந்த மகள் எனக்கு அக்காவாகிப் போனார்..
அவர்களுக்கும் ஒரு காதல் இருந்தது..
எனக்கு பத்து வயது இருக்கும்..
மதிய உணவு வேளையில் அந்தக்கா, கடற்கரையோரம் வலை பின்னிக்கொண்டிருக்கும் அவங்க அப்பாவுக்கு உணவு கொண்டு போவார்கள்.. துணையாக என்னை அழைத்துக்கொண்டு..
வலை பின்னிக் கொண்டிருக்கும் அப்பாவின் அருகில் ஒரு இளைஞன்..
அவரும் வலை பின்னிக்கொண்டிருக்க..
அவர் மீது இந்தக்கா மனதிற்குள் காதல் வலை பின்னிக்கொண்டு இருந்தது.. அந்த இளைஞனும்...
எனக்கு அது காதல் அறியா வயது..
இருவரும் சாடைமாடையாக ஏதாவது பேசிக்கொள்வார்கள்..
அதனை நானும்., சற்று தள்ளியிருந்து கடலும் பார்த்துக்கொண்டு இருப்போம்..
அந்த அக்கா ஏதாவது கொடுத்தனுப்பும் நான் அவரிடம் கொண்டு கொடுப்பேன்..
அவர் ஏதாவது கொடுப்பார் அக்காவிடம் வந்து கொடுப்பேன்.. ஏதாவது என்றால் தின்பண்டம்.. பரிசு பொருள்.. காதல் கடிதம் இப்படி..
அதற்கு நமக்கு அன்பளிப்பாக வறுத்த சதைப்பற்றுள்ள மீனாகவோ சில்லரை காசோ கிடைக்கும்..
இவர்கள் பின்னிய காதல் வலை அந்தக்கா அப்பாவுக்குத் தெரிய.. அதற்கு தூதுன் நான் தான்னு தெரிந்து.. வலை பின்னும் கையால் என்னை பின்னி எடுத்துவிட்டார்..
மீனம்மாள் ஓடி வந்து 'நம்ம பொண்ணு செஞ்ச தப்புக்கு இந்த பச்ச மண்ண ஏ அடிக்கிற'னு தடுத்து விட்டார்..
அடியின் தாக்கம் கேவி கேவி அழுகையாக பொங்கி எழ.. வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த கடல் அலைகளால் கால்களை தடவி ஆறுதல் பேசிக்கொண்டு இருந்தது தலை கோதியதைப்போல்..
நாவலுக்குள் வருகிறேன்..
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்புர கிராமமொன்றில் நிகழும் காதல்,பாசம்,அன்பு,நேசம், கோவம், குரோதம் என அனைத்தும் கலந்த வாழ்க்கையாய் நகர்கிறது கதை..
பிலோமி குட்டி கதையின் முக்கிய பாத்திரம்.. கதை முழுவதும் கடலோடு பிரியா அலையாக படர்ந்து வருகிறாள்
அந்த வயதுக்கே உரிய காதலில் மூழ்கியுள்ளாள்.. அவளின் அப்பா குரூஸ் மிக்கேல் தன் பாட்டன் காலத்து வல்லம் அதாவது படகு, தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் பழமையான குடிசை வீடு, எந்நேரமும் சிடுசிடுப்பை கொட்டும் மரியம்மை அவளது அம்மா..
குரூஸ் மிக்கலின் வல்லத்தையும், பழைய வீட்டையும் விற்றுவிட்டு தன்னோடே பக்கத்து நகரத்தில் வந்து தங்கும்படி சொல்லும் வாத்தியார் வேலை செய்யும் செபஸ்தி..அவளுடைய அண்ணன்..
பால்ய காலத்திலிருந்தே அவளது சினேகிதியாக இருந்து வரும் ரஞ்சி..
தரகனராக வரும் ஒரு முஸ்லீம் பாய்..
பிலோமியின் அம்மாவின் சினேகிதர் வாத்தி.. ஊர் பெரியவர் பாட்டா..
ஒரு முக்கியமான ஆள விட்டுட்டேன்.. பிலோமியின் காதலன் சாமிதாஸ்.. இவர்களோடு, அவர்களின் சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்ளும் கடலும், கடல் பறவைகளும், தென்னைமரங்களும்,கருவாடுகளும், இரவு நேர நிலுவும் என கதைகளத்தோடு பின்னிப் பிணைந்து வருகிறார்கள்..
பிலோமி என்ற பெயரை படித்ததும் 90களில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் வந்த ஒரு கடற்புரம் சார்ந்த நாடகத்தின் நினைவு தான் வருகிறது..
ஒரு வேளை இந்த கதையாகக்கூட இருக்கலாம்..
நாவலில் இரு நிறைவேறாத காதல் பிலோமி,ரஞ்சி அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள்..
தன் வல்லத்தையும்,வீட்டையும் இழக்க விரும்பாத குரூஸ் லாஞ்ச்களும், பைபர் படகுகளும் அதிகரித்து மற்ற நாட்டுப்படகு, வல்லங்கள் வைத்திருப்போரின் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு கடல் விதிகளை மீறும் செயல்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து சண்டையிடுகிறார்..
இன்றும் அதைப்போன்ற சண்டைகள் தென்மாவட்ட கடற்கரை ஊர்களில் அவ்வபோது நடைபெறும் செய்திகளை செய்திகளில் பார்க்கலாம்..
பிலோமியின் காதல் கனவு பொருளாதார வேறுபாட்டால் நிராசையாகிவிடுகிறது..
பிலோமி சாமிதாசிடம் உணர்வின் மயக்கத்தால் தன்னை இழந்திருந்தாள்..
இருந்தாலும் சாமிதாசின் மீது வெறுப்போ கோபமோ படாமல் தன் நெஞ்சில் போட்டு பூட்டிவிட்டாள்..
அந்த நினைப்பின் வேதனை தோழி ரஞ்சியின் மூலம் தீர்க்கப்பட்டு வாழ்வின் அர்த்தங்களை மெள்ள மெள்ள புரியவைக்கிறது..
அதே நேரத்தில் பிலேமியின் அம்மாவின் மரணமும் அவளை நிலைகுலைய செய்தாலும் மனதினை பக்குவப்படுத்தும் நிலைக்கு அவளை அழைத்துச் செல்கிறது வாழ்க்கை..
மனைவியின் மீது எப்பொழுதும் கோபத்தோடே இருக்கும் குரூஸ் அவள் இறந்தப் பிறகு ஆளே தடுமாறி விடுகிறார்.. தன் மனவையின் மீது இதயத்தின் எங்கோ ஆழத்தில் புதைந்திருந்த அன்பு பீறிட்டு எழுகிறது..
எந்த நிலை வந்தாலும் வல்லத்தையும்,வீட்டையும் விற்க இயலாது என்ற பிடிவாதத்தில் இருந்தவர் அவற்றை விற்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்.. அப்படி விற்று விட்டு வந்து வல்லம் கைவிட்டுப் போனதையும், இதுவரை தான் குழந்தையாய் தவழ்ந்த கடலுக்குள்ளும் போகமுடியாது என்ற நிலையில் சித்தம் கலங்கி போய் தன்னை சுற்றியுள்ளோரை அடையாளம் தெரியாமல் மறதி நோயில் தள்ளப்படுகிறார்.. அவர் மனதில் வெறும் கடலைத் தவிர வேறெதுவும் இல்லை..
படிக்கப்படிக்க மனது நெகிழ்ந்து விழி கசிய செய்கிறது..
அதே போல தந்தையின் சொத்தை விற்றேத் தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆடிய பிலோமி அண்ணன் செபஸ்தியையும் மனம் மாறச் செய்துவிட்டது, தாயின் இறப்பும், தந்தையின் நிலையும்..
வாழ்க்கைத்தான் எத்தனை சாமர்த்தியங்களையும், ரகசியங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது ஒரு கடலைப் போலே..
பிலொமிக்கும் தன்மீது அக்கறையுள்ளவரை அடையாளம் காணும் மனநிலை வந்துவிடுகிறது..
எத்தனை ஆழமான உணர்வுகளை தாங்கிக்கொண்டு நகர்கிறது கதைகளம்..
அளவுகடந்த காதலின் பாசத்தால் தன்னை யாரிடம் பறிகொடுத்தோமோ அந்த சாமிதாஸ் தன் திருமணத்திற்கு அவளை அழைக்கிறான்.
அதற்கு பிலோமியும் மௌனத்தோடு தலையசைத்து சம்மதிக்கிறாள் அமைதிநேர கடலைப்போல.. இப்படியாக முடிகிறது கதை..
நிகழும் நிகழ்வுகள் அனைத்துக்கும் சாட்சியாக அமைகிறது கடற்கரை..
மணமாலையில் முடிந்த காதல்களையும்
பிணமாலையில் முடிந்த காதல்களையும் அந்த கடல் மட்டுமே அறியும் ரகசியங்கள்..
இன்னும் நிறைய எழுதலாம்.. ஆனால் அதற்குள் எனக்கு அவசர வேலை வந்ததால் நிறைவு பெருகிறேன்..
கடைசியாக..
மனிதர்களுள் அசல் , போலி என்பதெல்லாம் அதற்குத் தெரியாது..
அதற்குத் தெரிந்ததெல்லாம் தன் கரையில் அமர்ந்திருப்போருக்கு அமைதியை தரவே மீண்டும் மீண்டும் கரைக்கு தன் அலைகளை அனுப்ப மட்டுமே தெரியும் அந்த கடலுக்கு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக