சனி, 22 ஆகஸ்ட், 2015

மாறா மனமே

மாறா மனமே
~~~~~~~~~

ஏழ்மையில் அருள் மனம்
வளமையில் இருள் மனம்
அருளதை கொல்லுதே இருள்

பதவியில்லை அடங்கியிருப்பர்
பதவியினில் ஆடத ஆட்டமெலாம்
பகட்டுடனே ஆடிடுவர்

வரவது சிறிதெனினும் பெருகிய மனம்
வரவது பெருகியதும் குறுகியதேனோ மனம்
ஊருக்கு உரைத்திடலில் பெருமை
தனக்கென கொள்வதில் சிறுமை

அன்பினில் அறம் வளர்த்த 
வாழ்க்கை-கௌரவ
வம்பினில் தரம்தாழும் வாழ்க்கை

எந்நிலை கொண்டாலும்
தன்னிலை மாறாத
மனமே மாமருந்து..

     விஜயகுமார் வேல்முருகன்...

அன்பை வளர்ப்போம்

அன்பை வளர்ப்போம்
~~~~~~~~~~~~~~~

நெஞ்சமெலாம் ஈரமதைக்கொண்டு
பஞ்சமிலா நட்பதைகொள்வோம்
வஞ்சமிலா வாழ்வதை வாழ்ந்து
கஞ்சமிலா அன்பதை வளர்ப்போம்

பணம்சேர்க்கும் ஆர்வமதை குறைத்து-நல்
மனம்சேர்க்கும் ஆர்வமதை வளர்ப்போம்
குணம்தனை மதியினில் வைத்தே-தலை
கனம்தனை வீதியில் எறிவோம்

அருள்தரும் வார்த்தைகள் கொண்டே
இருள்தரும் பகையினை வெல்வோம்

   விஜயகுமார் வேல்முருகன்..

கவிதாய்களை போற்றிடுவோம்

கவிதாய்களை போற்றிடுவோம்..!

கேடுநிறை மாந்தர்களின்-குணக்
கேடுநிறை எண்ணங்களினால்
பாடுஅது பெரும்பாடு கவியெழுதும்
கவிமகள்கள் படும்பாடு

கவிதை எதுவென்றறியாமல்
கவிதை இதுதானென்று வீன்வாதம் புரிந்து
கவிதையினை கொல்வோர் நடுவில்
கவிதையை கவிதையாய் படைக்கும்
கவிதாய்களை காயப்படுத்தாதீர் கயவரே

மகளிரவர் மாண்புதனை பண்புடனே
போற்றிட்ட கவிகள் உதித்த நாடது நம்நாடாம்
அம்மி அரைத்த மங்கையவள் மகத்துவத்தை
கும்மி பாட்டிலுரைத்த கவிநம் மகாகவியாம்

     விஜயகுமார் வேல்முருகன்

கள்ளிச்செடியின் கண்ணீர்

கள்ளிச்செடியின் கண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
என்ன பாவம் செய்தேனோ
கள்ளிச்செடியாய் வந்து பிறந்துவிட்டேன்
முள்ளுச்செடியாய் பிறந்திருந்தால்
முல்லையவள் வீட்டில் வேலியாய் இருந்திருப்பேன்
சுள்ளியாய் பிறந்திருந்தால் 
ஏழையவள் வீட்டில் அடுப்பில் விறகாய் எரிந்திருப்பேன்
கள்ளியாய் பிறந்ததினால் அவளுயிரைப்போக்கி சுடுகாட்டிலெரிய வைத்துவிட்டேன்
தாய்பாலுக்கு என்றும் தனிமரியாதை
கள்ளிப்பாலுக்கு என்றும் அவமரியாதை
பாழ்நெஞ்சில் ஏனோ ஈரமிருப்பதில்லை
ஈரமிருக்கும் இடத்தில் நானும் வளர்வதுமில்லை
நஞ்சையென்னில் வைத்து
பிஞ்சை உயிர்போக்கும்
நிலையென்னில் ஏன் வைத்தாய் ஆண்டவனே..

              விஜயகுமார் வேல்முருகன்..

இணையத்தில் இணைந்தோம்

இணையத்தில் இணைந்தோம்
இனியத்தமிழ் நட்பால்
இனியவை பகிர்ந்தோம்
இன்னாரென்று அறிந்தோம்..

புதிய உறவுகள் இங்கே 
புதிய வரவுகள் இங்கே-தினம்
புது புது முயற்சிகள் இங்கே 
புது புது அனுபவங்கள் இங்கே

அன்பு காட்டும் அன்பாளர்கள் 
பண்புமிக்க பண்பாளர்கள்
படித்தவர் படிக்காதவர் 
பேதமில்லாதவர்கள்

இன்னும் சொல்ல 
இருக்கு நிறைய 
இணையத்தில் இணைந்தோம்-நல்
இதயத்தால் இணைந்திடுவோம்

           விஜயகுமார் வேல்முருகன்

தமிழதை நினைத்திடுகையில்

உடலது தளர்வுற்றாலும்
உள்ளமது தளர்வடைவதில்லை
எந்தாய்மொழியாம்
தமிழ்மொழியை நினைத்திடையிலே..

உற்சாகம் கரைபுரண்டோடுதே
உன்னத தமிழினை படிக்கையிலே

பரவசம் பரவசம் எம்தமிழ்கவிகளின் கவிதை தேனை ருசிக்கையிலே

ஆனந்தம் ஆனந்தம் அருந்தமிழ் இலக்கியங்களை படிக்கையிலே

ஆகா என்னச் சொல்வேன் இனிமைத்தமிழின்
இலக்கியங்களை

பேரானந்தம் பேரானந்தம்
எம் புரட்ச்சிக்கவியின் கவிதையினிலே

மறுபடியும் ஒரு பிறப்பென்றால் மங்காத்தமிழனாய் பிறந்திடல் வேண்டுமே அய்யா

    விஜயகுமார் வேல்முருகன்

மனிதனாய் உயர்வாய்

அனைத்துயிரும் 
ஆருயிரே அன்புடனே
இதயம்தனில்
ஈரம்கொண்டால்..
உள்ளத்திலே ஒளியதுகொண்டால்
ஊர்க்குருவியும் உனக்காகும் நட்பாய்
எவ்வுயிரையும் காக்கவே
ஏனிரக்கமில்லை மானிடனே
ஐம்புலனிலும் இரக்கம்கொண்டால்
ஒருவனில்லை நீ
ஓராயிரம் உயிர்களாவாய்நீ
ஔடத தாயன்பு கொண்டு
எஃகு மனதிலும் மனிதனாய் உயர்வாய்..

விஜயகுமார் வேல்முருகன்...

நிலையற்ற உலகில்

நிலையற்ற இவ்வுலகில்
நிலைத்திருப்போம் என்று
நிலையற்ற மனிதன் 
நினைக்கின்றான்.
நிலைத்திருந்த வரை
நீ செய்தது என்ன என்பதை
நீ அறிந்தால் மானிடா
நிலைபெருமே உன்புகழ் இங்கே.
நிலையற்ற கேடுகெட்ட எண்ணங்கள்
நீ வளர்த்தால் 
நீங்கா கேடுகள் வத்தடையும் 
நீங்கா கறையாக..

விஜயகுமார் வேல்முருகன்

உனதாகும்

உனதாகும்
~~~~~~~~
நதிபோல் ஓடும்வாழ்வில்
விதியே என்று ஓடாமல்
மதியதை துணைக்கொண்டு
கதியே தன்னம்பிக்கையாய்
ஆதிமுதல் முயற்சியுடன் முன்னேறு வெற்றியது உனதாகும்!

என்றும் தயக்கம்
எதிலும் தயக்கம்
என்றில்லாமல்
எல்லாவற்றிலும் ஆர்வமாய்
எப்பொழுதும்
எழுச்சியுடன்
ஏற்றமிகு சிந்தனையுனை
ஏற்றம்பெற வைக்கும்
என்றென்றும் வாழ்வில்!

விஜயகுமார் வேல்முருகன்

வாழ்க தமிழ்

வாழ்க தமிழ் 
~~~~~~~~~

அன்னைத் தமிழின்பால் உள்ள
அன்பால் இணைந்தோமே
அருந்தமிழ் சிந்தனைகள் பல
அன்புடனே பகிர்ந்தோமே-தமிழ்
ஆன்றோர்கள் சொன்னவழி நடப்போமே
இனியதமிழையே நாவினில் உரைப்போமே
ஈடில்லாமொழியது எம்மொழி-என்றும்
உளம்தனிலே கொண்டதை வளர்ப்போமே
ஊக்கங்கள் அளித்திடுமே எம்மொழி
என்றென்றும் எமக்கது செம்மொழி-என்றும்
ஏற்றமே பெறவேண்டும் நம்மொழி
ஐந்தாயிரம் ஆண்டுகளாயிது கன்னிமொழி
ஒருச்சொல்லே உரைத்தாலும் அதில்
ஓராயிரம் பொருளுணர்த்தும் அழகுமொழி
ஔவையவள் வளர்த்திட்ட அற்புதமொழி
எஃகினைப்போல் உறுதியாக இதை உளம்தனிலே கொண்டிடுவோமே..!

விஜயகுமார் வேல்முருகன்.

உழைப்பு

உழைத்து உழைத்தே ஓடாய்போன 
காலம் கப்பலேறிப் போச்சே
உழைப்புக்கேத்த கூலி எனும்
நிலைமை மாறியாச்சே
உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்
பிழைக்கும் வர்க்கமாச்சே
உழைப்பை நம்பி தாழ்ந்த கூட்டம்
ஏதும் இல்லாமல் போச்சே
உழைப்பின் அருமை உணர்ந்தவர்
வாழ்வில் வருமை  ஓடிப்போச்சே
உழைப்பவர் வாழ்வில் என்றும்
சளைத்தவர் இல்லை என்பதாச்சே

விஜயகுமார் வேல்முருகன்

தமிழை வளர்த்திடுவோம்

தமிழை வளர்த்திடுவோம்
~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் தமிழில் பேச தயக்கம் ஏனடா 
தாய்மொழி உனக்கு தமிழே தானடா 
தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா 
தமிழை தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா 
தமிழகத்திலேயே தமிழிலில்லையென்றால் 
தமிழ் வளர்வது ஏதடா 
தமிழ்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரடா 
தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா 
தமிழக பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா 
தமிழ்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா
தமிழைபடி என்றநிலை போனதடா
தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
தற்கால நிலையது மாறவேண்டுமடா
தன்னிகரில்லா தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா..!

        விஜயகுமார் வேல்முருகன்..

பரிசம்போட வாரேன்

பரிசம் போட வாரேன்
~~~~~~~~~~~~~~~
ஒத்தகடைக்குபோற 
நேர்மண்ணுபாத போல-ஏ(என்)
அத்தமக மேல என்னோட
கண்ணு பார்வ தானே

கோயிலுக்கு நேந்துகிட்டு
கட்டிவச்ச காசபோல
அவ நெனப்பதானே 
நெஞ்சுக்குள்ள
கட்டிவச்சேன் பாசத்தால

வெறும் ஆசையெல்லாம்
அவமேல இல்ல
உயிர் நேசமெல்லாம் அவமேல 
நான் என்னத்த சொல்ல

வேசமெல்லாம் போட்டதில்ல
பாசாங்கும் செஞ்சதில்ல
நெசமெல்லாம் பேசுறேனே
பாசமாக பாக்குறேனே
நேசமுள்ள அவகிட்டதானே

ஆத்தங்கர மேட்டுலையும்
மஞ்சகிழங்கு காட்டுலயும்
ஒதுங்கி நாம பேசவேணாம்
உரிமையுள்ள மச்சாங்கிட்ட
வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே

வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
பரிசம் போடும் நாளுமாச்சு
கரிசக்காட்டு குயிலுங்கூட
பரிகாசம் காட்டி கூவியாச்சு
மாரிமாசம் கழிஞ்சபின்னே
மணமுடிக்க போறேன் உன்ன

       விஜயகுமார் வேல்முருகன்..

தம்பிக்கு ஒரு பாட்டு

தம்பிக்கு ஒரு பாட்டு
~~~~~~~~~~~~~~
கபடியாட்டம் பாண்டியாட்டம் ஆடி ஏறியாச்சே அப்போ
கணினியாட்டம் கைப்பேசிஆட்டம் என்று மாறியாச்சே இப்போ
தம்பி ஆட்டமெல்லாம் மாறியாச்சே இப்போ!

குதிச்சிப்போட்ட ஆட்டத்தாலே நோயே ஓடிப்போச்சே அப்போ
கணினிபார்த்து ஆட்டத்தாலே கண்ணுப் பார்வை போச்சே இப்போ
தம்பி கண்ணுல பார்வை போச்சே இப்போ!

தொங்கியாட ஆலம்விழுது இருந்ததடா அப்போ 
எங்கும் பார்க்க அலைபேசிகம்பியா இருக்குதடா இப்போ
தம்பி மரமெல்லாம் கம்பியா இருக்குதடா இப்போ..

கேப்பகூழு கம்பங்கூழு குடிச்சதெல்லாம் அப்போ
நொறுக்குத்தீனி துரிதஉணவு மாறிப்போச்சு இப்போ
தம்பி மாறிப்போச்சே இப்போ!

காலாற நடந்துபோன காலமடா அப்போ
கார்ல கடைக்கு போற கோலமடா இப்போ
தம்பி கலிகாலமடா இப்போ!

ஆடியோடி செஞ்ச வேலையால உடம்பு உறுதியாச்சு தம்பி
அசையாம நீயும் கிடந்தால உடம்பு ஊதியாச்சு தம்பி

முன்ன போனதெல்லாம் போகட்டுன்டா தம்பி
இனி வளர்ச்சியத உருப்படியா
பாத்துக்கோடா தம்பி

ஓடியாடி விளையாடிடடா தம்பி
கூழும் சோறும் சாப்பிடுடா தம்பி
மரங்கள நட்டுவச்சி நலமா வாழுடா தம்பி
ஆரோக்கியநலத்தப் பேணுடா தம்பி-இப்போ
வரும் காலமும் உள்ளங்கையில் தம்பி
உலகமே உன் கையில் தம்பி!

விஜயகுமார் வேல்முருகன்..

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

நினைவுகள் பாகம் 6

நினைவுகள் - பாகம் - 6

உலகின் அனைத்து நிழல்களின் நிறங்களும் கருப்பாக
வறுமையின் நிறம் மட்டும் ஏனோ சிவப்பாக..

    இரண்டாம் வகுப்பிற்கு சென்றாகிவிட்டது. பசங்களிடையே ஒருப்பேச்சு பரபரப்பாக இருந்தது. என்னவென்றால்- 'டேய்! இரண்டாம் வகுப்புல நமக்கு அந்த குண்டு டீச்சர் மட்டும் வரக்கூடாதுடா (மேரி டீச்சர் சற்று கூடுதல் உடல் பருமனானவர்கள். உருவத்தைப் பார்த்து அனைவருக்கும் பயம்) பயங்கரமா அடிப்பாங்களாண்டா.. நாலாம் வகுப்புல ஒரு அண்ணா சொன்னாருடா'னு சும்மா இருந்த எங்கள பயமுறுத்தி விட்டுட்டான் சங்கர்.
"அப்பனா எந்த டீச்சர்டா அடிக்க மாட்டாங்கடா கேட்டியாடா"இது நான்.
(அடிக்காத டீச்சர் நல்ல டீச்சர்னு நாங்க இரண்டு டீச்சருக்கு பட்டம் கொடுத்திருந்தோம் ஒருவர் பத்மா டீச்சர் ஒல்லியா உயரமா இருப்பாங்க. இன்னொருவர் கஸ்தூரி டீச்சர் கருப்பா கண்ணாடி போட்டிருப்பாங்க).
'ஒன்னு பத்மா டீச்சர் இல்லனா கஸ்தூரி டீச்சராம்டா நாம சாமிய கும்புட்டுப்போம் இந்த ரெண்டுப் பேர்ல ஒருத்தங்கதான் வரனும்னு' எல்லாரும் வேண்டிக்கிட்டோம். கடவுள் கண்ணத் திறந்துட்டார். எங்களுக்கு பத்மா டீச்சர் தான் வந்தாங்க.
ஆரம்பத்துல நல்லா தான் போயிட்டு இருந்திச்சு. ஆனால் போகப்போக வீட்டுப்பாடம் எழுதலைனாலோ, இல்லை சேட்டைத் தனம் செய்தாலோ அடி பின்னி எடுத்திடுவாங்க. அவங்க மகனும் பெயர் மணிகண்டன் எங்களுடன் தான் படித்தான். அவனும் அடி வாங்குவான்.
அய்யயோ நாம நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு ஆகிடிச்சேனு நொந்துகிட்டோம்.
ஒழுங்கா இருந்தா ஏன் அடிவாங்கப் போறோம். முகமது ரசூலைத் தவிற மற்ற நாங்க நாலுபேருமே அருந்தவாலுங்க.
அடிக் கிடைக்காம வேற என்ன கிடைக்கும்.
அப்படியேப் போயிட்டு இருந்துச்சு காலம்.
அரையாண்டுத் தேர்வுனு நினைக்கிறேன் முடிஞ்சி, விடுமுறையும் முடிஞ்சி பள்ளிக்கூடம் வரும்பொழுது பத்மா டீச்சர் வரவில்லை. கொஞ்ச நாளைக்கு வரமாட்டாங்கனு மற்ற டீச்சரெல்லாம் பேசிகிட்டு இருந்தாங்க. நாங்களெல்லாம் சந்தோசப்பட்டுகிட்டு இருந்தோம்.
இனிமே அடிவிழுகாது இல்லையா.
ஆனால் சந்தோசம் கொஞ்சம் நேரந்தான் நீடிச்சது.
(தொடரும்)

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நினைவுகள் பாகம் 3

நினைவுகள் - பாகம்-3

கொடுமையிலும்
கொடுமை
இளமையில்
வறுமை.!

'உங்கள் பிள்ளைகளை சேர்த்துக்க முடியாதம்மா..காது எட்டவில்லையே' என பள்ளி த.ஆசிரியர் சொன்னதும் ஏமாற்றமாக தான் இருந்திருக்கும் அம்மாவிற்கு.
அம்மா அவரிடம் "அய்யா! சிலேட்டு குச்சியெல்லாம் வச்சிகிட்டு ஏதேதோ கிருக்குறான் அய்யா. வேற ஏதாவது வழியில்லையா? பாத்து சேத்துக்கோங்க அய்யா"னு கேட்க, சங்கரோட அம்மாவும் இதைப் போல கேட்க ஆசிரியரும் சிறிது யோசித்து, சன்னல் வழியாக பள்ளியின் பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டி
'வேணும்னா ஒன்னு செய்யலாங்கமா அதோ தெரியுதே பால்வாடி (அங்கன்வாடி அல்லது சத்துணவுக்கூடம்) அங்க ஒரு வருசம் ரெண்டுபேரும் படிக்கட்டும். அப்புறமா இங்க சேத்துக்கலாம்'னு சொல்லி, சங்கர் அம்மாவிடம் 'அங்க ஒரு டீச்சர் இருப்பாங்க அவங்கள நான் கூப்டேனு் கூட்டிட்டு வாங்க'னு அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு உயரமான பெண்மணியுடன் சங்கர் அம்மா வந்து நின்றார்கள். த.ஆசிரியர் அவர்களிடம்
'சரிதா டீச்சர் இவங்க ரெண்டு பேரையும் இன்னைக்கே சேத்துக்கங்க மற்ற விவரத்த இவங்க கிட்ட கேட்டுக்கங்க, 
சரிங்கம்மா உங்க பிள்ளைங்க ரெண்டுபேரும் ஒரு வருசம் அங்க படிக்கட்டும் அப்பறமேட்டு இங்க சேத்துக்கலம் சரியா.. போயிட்டி வாங்கனு'
அந்த பால்வாடி ஆசிரியையுடன் அனுப்பிவைத்தார்கள். அம்மாவும், சங்கரோட அம்மாவும் அவருக்கு நன்றியை சொல்லிவிட்டு எங்களையும் அழைத்துக்கொண்டு பால்வாடிக்குச் சென்றார்கள்.
அங்கே ஒரு பத்து பதினைந்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடன் என்னையும் சங்கரையும் அமரசொல்லி விட்டு, சரிதா டீச்சர் எங்கள் பெயர் மற்றும் மற்றத் தகவல்களை கேட்டு ஒரு பெரியநோட்டு புத்தகத்தில் எழுதிக்கொண்டார்கள்.
பின்பு எங்களுடைய அம்மாக்களிடம்
'இதோ பாருங்க அம்மா தினமும் காலைல இந்த ஆயாம்மா வந்து உங்க பிள்ளைங்கள கூப்பிட வருவாங்க அனுப்பிடுங்க, மத்தியான சாப்பாடும் இங்கையே கொடுத்திடுவோம். மதியம் ரெண்டு மணிக்கு (இரண்டு மணியா மூன்று மணியா சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் இரண்டு மணியே வைத்துக்கொள்வோம்) பள்ளி விட்டுடுவோம் மறுபடியும் ஆயாம்மா கூப்பிட்டு வந்து விட்டுடுவாங்க சரிங்களா'னு சொன்னார்.

அம்மாவும், சங்கர் அம்மாவும் "ரொம்ப சந்தோசங்கம்மா நன்றிங்க அம்மா புள்ளைங்கள பாத்துக்கோங்கமா'னு சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து "ஒழுங்கா நல்லாப்படிக்கனும், பள்ளிக்கூடம் விட்டா ஆயாம்மாக்கூட ஓரம வரனும் சரியா" அப்படி சொல்லிட்டுத் திரும்பி வெளியே அம்மாக்கள் இருவரும் போகும் போது பயபுள்ள சங்கர் அழுதான் பாருங்க ஒரு அழுகை வகுப்பில் இருந்த கொஞ்ச நஞ்சம் அழுதுகிட்டு இருந்த பசங்களும் சேர்ந்து மொத்தமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க..

நான் மட்டும் அழவில்லைனு சொன்னா என்ன நம்பவா போறீங்க. நானும் தான்..

(தொடரும்)

நினவுகள் பாகம்-2

ஆழ்ந்த நினைவுகளில்
மூழ்கியிருக்கும் பொழுது
தன்னிச்சையாக வெளிப்படுகிறது
உதட்டில் சிறு புன்னகையும்
விழிகளில் சிறுதுளி கண்ணீரும்.!

எனது பள்ளிக்கூட நினைவுகள்-
பாகம் - 2

1986 அப்பொழுது எனக்கு வயது ஐந்து பூர்த்தியாகிவிட்டது என்பதற்காக என்னை என் பெற்றோர் பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்ப்பதற்காக,எங்கள் வீட்டின் அருகிலிருந்த அரசுப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார்கள். அதேப்போல் என் அத்தையும் மாமாவும் என் மச்சினன் மாரிக்கண்ணனையும்(என் மனைவியின் அண்ணன்) அழைத்து வந்தார்கள்.
அதேப்போல் அன்றுதான் சங்கரையும் அவன் பெற்றோர் அழைத்து வந்தார்கள்.

எங்கள் மூவரில் என் மச்சினன் மட்டும் எங்களைவிட கொஞ்சம் உயரம் அதிகம்.
(ஆனால் இப்பொழ்து ஒரு கொடுமை என்னவென்றால் இன்று எங்கள் மூவரில் அவன் தான் உயரம் குறைவு. அவனைப்பற்றி அடுத்த நினைவில்..)
பிறகு பள்ளித் தலைமையாசிரியர் எங்கள் மூவரையும் பார்த்துவிட்டு அதில் எங்கள் இருவரையும்(நான்,சங்கர்) சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு எங்கள் பெற்றோரிடம் 'இவங்க ரெண்டுப்பேருக்கும் அஞ்சி வயசு ஆகிடுச்சா' னு கேட்டார். பெற்றோரும் ஆகிவிட்டது என்றார்கள்.
பிறகு த.ஆசிரியர் எங்கள் மூவரையும் வலதுக்கையை தலைக்குமேல் தூக்கி  தலைமேலல் மடக்கி இடது காதை தொடச்சொன்னார்கள். என் மச்சினனுக்க எட்டிவிட்டது. எங்களிருவருக்கும் எட்டவில்லை. உடனே ஆசிரியர் 'இவங்க ரெண்டுப்பேருக்கும் காது எட்டலையேமா..
இவங்கள சேர்த்துக்க முடியாதே'னு சொல்லிவிட்டு என் மச்சினனை மட்டும் சேர்த்துக்கொண்டார்.(இத்தனைக்கும் என் மச்சினன் என்னைவிட ஐந்து மாதங்கள் சிறியவன்)..

'உங்கள் பிள்ளைகளை சேர்த்துக்க முடியாதம்மா..காது எட்டவில்லையே' என பள்ளி த.ஆசிரியர் சொன்னதும் ஏமாற்றமாக தான் இருந்திருக்கும் அம்மாவிற்கு.
அம்மா அவரிடம் "அய்யா! சிலேட்டு குச்சியெல்லாம் வச்சிகிட்டு ஏதேதோ கிறுக்குறான் அய்யா. வேற ஏதாவது வழியில்லையா? பாத்து சேத்துக்கோங்க அய்யா"னு கேட்க, சங்கரோட அம்மாவும் இதைப் போல கேட்க ஆசிரியரும் சிறிது யோசித்து, சன்னல் வழியாக பள்ளியின் பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டி
'வேணும்னா ஒன்னு செய்யலாங்கமா அதோ தெரியுதே பால்வாடி (அங்கன்வாடி அல்லது சத்துணவுக்கூடம்) அங்க ஒரு வருசம் ரெண்டுபேரும் படிக்கட்டும். அப்புறமா இங்க சேத்துக்கலாம்'னு சொல்லி, சங்கர் அம்மாவிடம் 'அங்க ஒரு டீச்சர் இருப்பாங்க அவங்கள நான் கூப்டேனு் கூட்டிட்டு வாங்க'னு அனுப்பினார்.

சிறிது நேரத்தில் ஒரு உயரமான பெண்மணியுடன் சங்கர் அம்மா வந்து நின்றார்கள். த.ஆசிரியர் அவர்களிடம்
'சரிதா டீச்சர் இவங்க ரெண்டு பேரையும் இன்னைக்கே சேத்துக்கங்க மற்ற விவரத்த இவங்க கிட்ட கேட்டுக்கங்க, 
சரிங்கம்மா உங்க பிள்ளைங்க ரெண்டுபேரும் ஒரு வருசம் அங்க படிக்கட்டும் அப்பறமேட்டு இங்க சேத்துக்கலம் சரியா.. போயிட்டி வாங்கனு'
அந்த பால்வாடி ஆசிரியையுடன் அனுப்பிவைத்தார்கள். அம்மாவும், சங்கரோட அம்மாவும் அவருக்கு நன்றியை சொல்லிவிட்டு எங்களையும் அழைத்துக்கொண்டு பால்வாடிக்குச் சென்றார்கள்.
அங்கே ஒரு பத்து பதினைந்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடன் என்னையும் சங்கரையும் அமரசொல்லி விட்டு, சரிதா டீச்சர் எங்கள் பெயர் மற்றும் மற்றத் தகவல்களை கேட்டு ஒரு பெரியநோட்டு புத்தகத்தில் எழுதிக்கொண்டார்கள்.
பின்பு எங்களுடைய அம்மாக்களிடம்
'இதோ பாருங்க அம்மா தினமும் காலைல இந்த ஆயாம்மா வந்து உங்க பிள்ளைங்கள கூப்பிட வருவாங்க அனுப்பிடுங்க, மத்தியான சாப்பாடும் இங்கையே கொடுத்திடுவோம். மதியம் ரெண்டு மணிக்கு (இரண்டு மணியா மூன்று மணியா சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் இரண்டு மணியே வைத்துக்கொள்வோம்) பள்ளி விட்டுடுவோம் மறுபடியும் ஆயாம்மா கூப்பிட்டு வந்து விட்டுடுவாங்க சரிங்களா'னு சொன்னார்.

அம்மாவும், சங்கர் அம்மாவும் "ரொம்ப சந்தோசங்கம்மா நன்றிங்க அம்மா புள்ளைங்கள பாத்துக்கோங்கமா'னு சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து "ஒழுங்கா நல்லாப்படிக்கனும், பள்ளிக்கூடம் விட்டா ஆயாம்மாக்கூட ஓரம வரனும் சரியா" அப்படி சொல்லிட்டுத் திரும்பி வெளியே அம்மாக்கள் இருவரும் போகும் போது பயபுள்ள சங்கர் அழுதான் பாருங்க ஒரு அழுகை வகுப்பில் இருந்த கொஞ்ச நஞ்சம் அழுதுகிட்டு இருந்த பசங்களும் சேர்ந்து மொத்தமும் அழ ஆரம்பிச்சுட்டாங்க..

நான் மட்டும் அழவில்லைனு சொன்னா என்ன நம்பவா போறீங்க. நானும் தான்..

(மிகச்சிறிய வயது நினைவுகள் எப்படி என்று கேட்பது புரிகிறது.. அதை பின்வரும் பாகங்களில் விளக்குகிறேன்)

தொடரும்.....

விஜயகுமார் வேல்முருகன்

நினைவுகள் பாகம் 1

வறுமை

சிலரை சிந்திக்க வைத்து
சீர்படுத்துகிறது..
சிலரை சீரழித்து அவர்களை
சிறையிலடைக்கிறது..

நினைவு பாகம் - 1

நீஈஈஈஈண்ட.. இடைவெளிக்குப்பிறகு எனது பள்ளி நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது.
பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது அப்படி ஒரு அதிர்ச்சி. ஏனென்றால் அவனை நான் பார்த்தது திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம் அருகில். கைதியாக கையில் விலங்குடன். காவல் வண்டிக்கு அருகில் ஒரு காவலருடன் நின்றிருந்தான். அந்தக் காவலரும் நமக்குத் தெரிந்தவர்தான். நம் கடை இருக்கும் பகுதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்து சில மாதங்களுக்கு முன் பக்கத்தில் வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
அவ்வபோது நம் கடைப்பக்கம் வரும்போது வந்து பார்த்துவிட்டுப் போவார். இனிமையாக பழகக்கூடியவர்.

சரி, நம் நண்பனைப் பார்ப்போம்.
'என்ன மெடிக்கல் இந்தப்பக்கம்'னு காவலர் கேட்டார்..
"அய்யா! இங்க பெரிய மருந்துக்கடையில மருந்து வாங்க வந்தேங்க அய்யா"னு அவரை பார்த்துச் சொல்லாமல் நண்பனையே பார்த்துக்கொண்டு சொன்னேன்..
உடனே அவர் 'இவர உங்களுக்குத் தெரியுமா மெடிக்கல்'னு கேட்டார்.

அவனும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆள் தாடியும் மீசையுமாக.. முகத்தில் உணர்ச்சியே இல்லாத சிரிப்புடன்.
எப்படி மறக்க முடியும் அவனை ஒரு வருடமா இரண்டு வருடமா..
'மெடிக்கல் குமார்' மறுபடியும் அழைத்தார் காவலர். "ஆங்..சொல்லுங்கய்யா"
'இவர உங்களுக்குத் தெரியுமானு கேட்டேன்'
"ஆமாங்க அய்யா.. இவன் என் பள்ளிக்கால நண்பன் அய்யா.. இவனும் நானும் ஒன்னாம் வகுப்பிலிருந்து இல்ல இல்ல அதுக்கு முன்னாடி பால்வாடியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம் அய்யா.. என்னங்கய்யா ஆச்சு?" என்றேன்.
'அய்யோ கொடுமைடா சாமி'னு லேசா நெற்றியின் மேல் தட்டிக்கொண்டு, 'அவரையே கேளுங்க தம்பி' சொல்லிவிட்டு தலையிலிருந்த தொப்பிய கழட்டி வியர்வையை துடைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த மரத்திண்டில் உட்கார்ந்துக்கொண்டார்.
நான் நேராக அவனைப்பார்த்ததும் நெஞ்சம் கனத்தது, வாய்ப்பேச வார்த்தை வரவில்லை. ஒரு பக்கம் கண்ணீர் ஒரு பக்கம் அழுகை சோகமே என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. எப்படியோ அவற்றை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவனிடம், "என்னடா ஆச்சு சங்கர்.. ஏன் நீ இப்படி ஆகிட்ட? ஏன் என்னாச்சு.." என்று கேள்வி மேல் கேள்வி.
மறுபடியும் அவன் உணர்ச்சியே இல்லாமல் சிரித்துக்கொண்டு ' நீ நல்லாருக்கியாட விஜி, அப்பா அம்மாலாம் எப்படியிருக்காங்க?
நம்ம தங்கச்சி எப்படி இருக்கு? அதுக்கு கால்யாணம் ஆயிடுச்சா? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? பசங்க இருக்கா?
தம்பி நாகராஜ் எப்படி இருக்கான்?' இப்படி பல கேள்விகள். அவன் என்னைப் பார்த்து..

உடனே அந்த காவலர் எழுந்து வந்து அவனையும், என்னையும் மாறி மாறி பார்த்தார். நான்"என்னங்க அய்யா?" என்றேன். அவர் 'தம்பி.. அவர் உங்ககிட்ட நல்லா பேசுறாரே.. ஜெயில்லயும் சரி, வண்டியில வரம்போதும் சரி அவர் யார்கிட்டையும் சரியா பேசமாட்டாரே..' என்றார்.
நான் "அய்யா.. ஒரு வருசமா ரெண்டு வருசமா பதினொரு வருசங்களா நாங்க நெருங்கிய நண்பர்கள் அய்யா.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இன்னொரு காவலர் வந்ததும் இவர் சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு, சங்கரை கைவிலங்கை கழட்டிவிட்டு அவருடன் அனுப்பி வைத்தார்.
என் மனது அடித்துக்கொண்டது அய்யயோ மறுபடியும் அவனைப் பார்க்க முடியுமா என்று. அவன் போகும்போதே இங்கேயே இருஎன்று சைகைக்காட்டிவிட்டுச் சென்றான்.
மறுபடியும் நம் காவலர் என்னிடம் வந்து 'இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார் தம்பி. ஜட்ஜ்அய்யா முன்னாடி விசாரணை நடக்கும் முடிஞ்சவுடனே வருவார்.. அப்பறம் சொல்லுங்கத் தம்பி சங்கர் எப்படி பழக்கமுன்னு'

என் நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன..
                               (தொடரும்)