ஞாயிறு, 28 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 10

காத்திருந்த கண்கள் 10

காசியை, சங்கிலி கறுப்பர் ஒரு சிறிய வீட்டில் அடைத்து வைத்து  குமரனை பார்த்துக்கொள்ள சொல்லி கிளம்ப..
குமரன் காசியை கட்டிப்போட்டுவிட்டு வெளியே மரத்தடியில் முத்து வீரனுடன் உக்காந்திருந்தான்..
சிறிது நேரம் கழிந்தது..
வீட்டின் பின்பக்கம் ஏதோ சத்தம் கேட்க..
குமரன் "அந்த துளை வழியே என்ன நடக்குதுனு பார்த்து வா" என்று முத்து வீரனிடம் மெதுவாக சொல்ல..
முத்து வீரனும் சென்று அதில் எட்டிப்பார்க்க..
காசி தன்னை கட்டிப்போட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, பின்பக்க கதவை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி  திறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான்..

வேகமாக திரும்பி வந்த முத்து வீரன் "அண்ணே.. அந்த ஆளு தப்பிக்க முயற்சி செய்யுறாரு.. நான் போய் பிடிக்கவா?" என்று குமரனிடம் சொல்ல..
குமரன் வேண்டாம் என்பதை போல தலையாட்டி , வீட்டின் பின்புறம் சற்று தள்ளியிருந்த ஒரு பெரிய மரத்தைக் காட்டி அதன் மேல் ஏறி மறைந்துக்கொண்டு காசி வெளியே வந்ததும் எந்த திசை நோக்கி போகிறான் என்பதை கவனிக்கும்படி மெல்லச் சொல்ல, முத்து வீரனும் மெதுவாக நடந்துச் சென்று மரத்தின் மீது சத்தமின்றி ஏறி அடர்ந்த கிளை ஒன்றில் அமர்ந்துக்கொண்டான்..

குமரன், சங்கிலி கறுப்பர் குதிரை 'சிப்பி'யின் கடிவாளம் , சேணம் போன்றவற்றை கழட்டி, ஒரு துணியில் வைத்து தன் முதுகோடு சேர்த்து கட்டிக்கொண்டான்..
காசி அவ்வீட்டின் கதவை ஒரு வழியாக உடைத்துவிட்டு வேகமாக வெளியேறினான்.. இதை கவனித்த முத்து வீரன் மெல்ல மரத்தை விட்டு இறங்கவும், குமரனும் அவன் அருகே வரவும் சரியாக இருந்தது..
"என்ன முத்து வீரா கவனித்தாயா.." என்றதும்..
"அந்தாளு வடக்குப் பக்கமாக ஓடுனாருங்க ணே" என அந்த பக்கம் கைகாட்டிச் சொல்லவும்..
தன் இடையிலிருந்து ஒரு சின்ன குப்பியை எடுத்து, அதிலிருந்து கறுப்பு மைப்போன்ற களிம்பை எடுத்து குதிரையின் மூக்கில் லேசாக தடவி,
அதன் முதுகில் லேசாக தட்டிக்கொடுத்துவிட்டு வடக்குப் பக்கம் நோக்கி அனுப்ப குதிரை வேகமாக நடக்க ஆரம்பித்தது..
  குதிரையை தொடர்ந்து இருவரும் நடக்க ஆரம்பித்தனர்..

அதே நேரம் கோவிலில்..

  பெரிய சங்கிலியும், சங்கிலி கறுப்பரும்
கோவிலில் சுவற்றில் உள்ள சிறு சிறு சந்துகளில் சிலம்ப தடிகளை மறைத்து வைத்துபடி இருந்தனர்..
சிறிது நேரத்தில் வேலை முடிந்ததும்,
நந்தியப்பர், தர்மகர்த்தா, பூசாரி இவர்களோடு ஆலோசனை மண்டபத்தில் மீண்டும் சேர்ந்தார்கள்..
"இனி எப்பொழுதும் போல அவங்கவங்க வேலைய பார்க்கலாம்..
கோவிலுக்கு புதிதாக வரவங்கள நோட்டம் பார்த்து வைத்து என்னிடமோ, சங்கிலி கறுப்பிடமோ சொல்ல வேண்டியது பூசாரி அய்யா பொறுப்பு.." என்று பெரிய சங்கிலி சொல்லவும்,
ஊர்த்தலைவர் நந்தியப்பரும்,
தர்மகர்த்தா நீலகண்டரும், பூசாரியும் ஆமோதிப்பதாய் சொல்ல..
ஆலோசனை முடிந்து அனைவரும் கிளம்ப சங்கிலி கறுப்பர் மட்டும் கோவில் வாசலில் நின்றுக்கொண்டார்..
என்னவோ இன்று கோவிலின் மண்டபத்தில் உறங்க வேண்டும் என்ற எண்ணம் சங்கிலி கறுப்பருக்கு வர..
விறுவிறு என்று கோவிலை ஒருமுறை சுற்றிவந்து பார்த்துவிட்டு கோவில் மண்டபம் நோக்கி நடந்துச்சென்றார்..
மண்டபத்தின் ஒரு ஓரமாக தனது மேலங்கி, வேல்கம்பு மற்றும் சிறு ஆயுதங்களை வைத்துவிட்டு,
படுத்துக்கொண்டார்.. மண்டபத்து கற்தரையின் குளிர்ச்சியும், மிதமான காற்றின் தாலாட்டும், அக்காற்றில் கலந்து வந்த மூலிகை மணமும் அவரை ஏதோ இனம்புரியாத மகிழ்வு நிலையை தந்தது.. அப்படியே படுத்தபடியே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்..

இருளில் பல மின்மினி பூச்சிகளை அள்ளித் தெளித்தது போல இருந்தது வானமும், விண்மீன்களும்..
சுற்றிலும் கேட்கும் சில்வண்டுகளின் ஒலி என்னமோ அந்த விண்மீன்களிலிருந்து வருவதைப்போலவே இருந்தது..
சில விண்மீன்கள் அதிக ஒளியையும், சில விண்மீன்கள் மந்தமான ஒளியையும் தெளித்துக்கொண்டு இருந்தன..

அப்பொழுது திடீரென வானத்தில் மூன்று விண்மீன்கள் வடக்குப்பக்கம் வேகமாக நகர்ந்து  மறைந்தன..
அதைக்கண்டதும் சங்கிலி கறுப்பர் திடீரென்று எழுந்து உட்கார்ந்தார்..
அவர் முகத்தில் லேசான மர்ம புன்னகை எழ.. வானிலிருந்து சட்டென்று ஒரு ஒளிக்கீற்று உருவாகி சங்கிலி கறுப்பரின் நெஞ்சில் பதிந்து மறைந்ததும் சங்கிலி கறுப்பின் முகத்தில் மேலும் மர்ம புன்னகை அதிகரிக்க அப்படியே சாய்ந்து உறங்கிப்போனார்..

கிழக்கில் எழும் செங்கதிர்களால்
இரவின் கருமை மெல்ல கரைந்து கொண்டிருந்தது..
கரைகின்ற இருளிலும் கரைக்கின்ற ஒளியிலும் இரைத்தேட கிளம்பும் பறவை கூட்டங்கள்..
பாவையர் கைவளையல்கள்
எழுப்பும் இன்னிசை ஒலியோடு
வீட்டின் வாசலில் கோலங்கள் வரைந்தனர்..
கோலத்தின் அழகைக் காண
ஆதவன் உதிக்கவே கோர்வையாய்ப் பொழுதும் விடிந்தது..மறுநாள்..
சங்கிலி கறுப்பு தன்னோட காவல் பணியை முடித்துவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
அப்பொழுது  குழந்தையின் விடாத அழுகை ஒலியை கேட்டவர் சட்டென்று வலப்பக்கம் திரும்பியவர் கண்களுக்கு ஒரு பெண்மணி தனது அழும் குழந்தையை சமாதானம் படுத்த முயற்சி செய்துக்கொண்டு இருக்க.. அவர் அருகே சென்று "என்ன தாயி.. பிள்ளை அழுகிறான்.. என்னாச்சு?"என கேட்க..
" என்னனு தெரியலைங்க ணே.. விடிஞ்சதுல இருந்து அழுதுகிட்டே இருக்கு.. நானும் என்னனவோ செய்து பாத்துட்டேன்.. ஒன்னும் ஆகல.. அதான் வைத்தியர்கிட்ட போகலாம்னு கிளம்புறேனுங்க ணே" என்று அந்த பெண்மணி சொல்ல..
சங்கிலி கறுப்பரும் சிரித்துக்கொண்டே "அடடே.. ராசா.. கண்ணு,, அய்யா.. இந்த மாமாகிட்ட வாங்க..வாங்க" என்று கைநீட்டி  அந்தம்மாவிடம் இருந்து குழந்தையை வாங்க..
அந்த குழந்தையும் லேசாக அழுகையை நிறுத்தியபடி அவரிடம் சென்றது..
அந்த குழந்தையை கொஞ்சியபடி அதன் வயிற்றுப் பகுதியை தடவிவிட்டு, முதுகை லேசாக தட்ட , அந்த குழந்தை லேசாக 'ஏவ்' என்று ஏப்பம் விட்டதும் அழுகையை நிறுத்தியது..
"பிள்ளை நேத்து சாப்பிட்டது செமிக்கில தாயி.. அதான்.. இப்ப சரியாகிடுச்சு" என்று சொல்லியபடி தன் இடையில் இருந்து பையில் சிறிது மூலிகை திருநீறை எடுத்து குழந்தையின் நெற்றியில் பூசி, சிறிதளவை எடுத்து "தாயி இதை பிள்ளைக்கு தண்ணீரில் கலந்து கொடு" என்று அந்த பெண்மணியின் கையில் கொடுக்க அதை வாங்கிகொண்ட அந்தம்மா சங்கிலி கறுப்பரின் காலில் விழுந்து கும்பிட்டு குழந்தையை வாங்கிச் சென்றார்..
சங்கிலி கறுப்பரின முகம் லேசாக மாறியது..
விறுவிறுவென தன் வீட்டிற்குச் சென்றவர் பெரிய சங்கிலியை பார்த்து "அய்யா.. நம்ம ஊர் குடிதண்ணீர் குளத்தில் யாரோ மருந்தை கலந்திருக்காங்க.. உடனே நாம அங்க போயாகனும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே..

சங்கிலி கறுப்பர் வீட்டை நோக்கி ஒருவர் வேகமாக ஓடிவந்துக்கொண்டு இருந்தார்..
அப்பொழுது...

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

முந்தைய பதிவுகள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 9

காத்திருந்த கண்கள் 9

பொழுது இருண்டதும் நந்தியப்பர் தன் வீட்டை விட்டு கிளம்பி, தர்மகர்த்தா நீலகண்டன் வீட்டை நோக்கி நடக்க அவரை ஒரு கருப்பு போர்வை போட்ட உருவம் பின்தொடர்ந்தது..
நீலகண்டர் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்து விவரத்தை சொல்ல இருவரும் கோவில் நோக்கி நடந்தனர்..
கோவில் ஆளரவம் இன்றி அமைதியாக இருந்தது..
கோவிலின் முன்புறம் விளக்குத் தூண் எரிந்துக்கொண்டு இருந்தது..
அதன் ஒளியின் அசைவில் கோவில் வாசலில் உள்ள காவல் சிலைகளின் முகம் அசைவதைப் போலவே இருந்தது..
பக்கத்தில் இருந்த அகல் விளக்கின் சுடர் அதன் கண்களின் வளவளப்பில் எதிரொளிக்க.. அந்த சிலையின் கண்கள் ஒளிவீசுவது போல தத்ரூபமாக இருந்தது..
இதை பார்த்த தர்மகர்த்தா நீலகண்டர் அந்த சிலையை தடவிப் பார்த்தார்..
அதை பார்த்த நந்தியப்பர் ஒரு சின்ன சிரிப்புடன்
"என்ன நீலகண்டரே.. கோவிலில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு எல்லாருக்கும் எச்சரிக்கை உணர்வு வந்துடுச்சுப் போலையே.. " என்று சொல்ல..
"இருக்காதா தலைவரே.. அந்த சிலைய பாருங்க அச்சு அசலா ஒரு ஆள் நிக்கிறாப் போலவே இருக்கு.. இத்தனை நாளாக இதை பார்த்திருப்போமா.. எவ்வளவு சிறப்பாக இருக்கு நம்ம முன்னோர் கைவண்ணம்" என்று தர்மகர்த்தா சொல்ல..
அதை ஆமோதிப்பதை போலவே தலையாட்டினார் நந்தியப்பர்..

"அடடே.. வந்து ரொம்ப நேரம் ஆச்சுங்களா நந்தியப்பரே..
வணக்கம் உங்களுக்கும், நீலகண்டருக்கும்" என்ற பெரிய சங்கிலியின் குரலை கேட்டு இருவரும் திரும்ப..அங்கே சங்கிலி கறுப்பரும் உடன் நின்றிருந்தார்..
"இப்ப தான் வந்தோம்.. சங்கிலியாரே" என்று நீலகண்டர் சொல்ல..
நான்கு பேரும் கோவிலுக்குள் போனார்கள்..
உள்ளே பூசாரி , சாமி நடையை சாத்திக்கொண்டிருக்க..
"ஆகா.. நல்லதா போச்சு நம்ம பூசாரி முத்தண்ணனும் இருக்காங்களே" என்று நந்தியப்பர் சொல்ல..
எல்லாருக்கும் வணக்கம் வைத்தப்படி "ஆகா.. வாங்க..வாங்க.. ஊர் பெரியவங்களாம் வந்திருக்கீங்க.. ஏதும் முக்கியமான விசயமா?" என்று பூசாரி கேட்க..
ஆமாம் என்பதைபோல தர்மகர்த்தா தலையசைத்தார்..
ஐந்து பேரும் , கோவிலின் மண்டபத்திற்கு சென்று உயரமான தரையில் அமர்ந்தார்கள்.. சங்கிலி கறுப்பர் மட்டும் அமராமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தார்..

பெரியவர்கள் நான்கு பேரும் கோவிலில் நடந்த சம்பவத்தை பேச ஆரம்பித்து , அதை தொடர்ந்து என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என விவாதிக்க ஆரம்பிக்க..
பெரிய சங்கிலி தனது ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில், சட்டென்று சங்கிலி கறுப்பரை பார்த்து கண்களால் சைகை காட்ட..
சங்கிலி கறுப்பரும் மெல்ல நகர்ந்து நடக்க ஆரம்பித்து.. மண்டப தூண்களில் சற்று பெரிதான தூணுக்கு பின்னால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சட்டென பாய்ந்து ஒரு உருவத்தை ஓங்கி அடித்தார்.. அந்த உருவம் மயக்கம் அடைந்து கீழே விழுந்தது..
கருப்பு போர்வைசுற்றியிருந்த அந்த உருவத்தை தூக்கி வந்து பெரியவர்கள் முன் கிடத்தி போர்வையை எடுக்க..
"ஏ.. இவன் காசி.. நஞ்சப்பனோட நண்பனாச்சே" என தர்மகர்த்தா சொல்ல..

"ஆமா.. அவனே தான்.. கொஞ்ச நாளா நம்ம ஊருக்குள்ளையே இல்ல.. இவனும், நஞ்சப்பனும் அடிக்கடி வெளியூர் போயிட்டு வருவாங்க.. போன தடவ போகும்போது போனவன் அதுக்கப்பறம் வரவேயில்ல.. நஞ்சப்பனும், இவனும் ஏதோ உளவு வேலை பாக்குறாங்கனு அப்பவே எனக்குத் தோனிச்சு.. நேத்து தான் நம்ம ஊருக்குள்ள மறுபடியும் வந்திருக்கான்..
அனேகமா தப்பிச்சிப் போன நஞ்சப்பன் இருக்குற இடம் இவனுக்குத் தெரியும்.. அவன் தான் இவன் உளவு பாக்க அனுப்பியிருப்பான்.. நேத்து சாய்ங்காலத்திலிருந்து தலைவர் வீட்டையும், தர்மகர்த்தா வீட்டையும் தீவிரமா கவனித்து வந்திருக்கான்.. தலைவர் அவர் வீட்ல இருந்து கிளம்பும்போதே பின்தொடர்ந்து வந்ததா நம்ம குமரன் நாங்கள் கோவிலுக்கு வரதுக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லிட்டு போனான்" என்று சங்கிலி கறுப்பர் சொல்லவும் ..
மற்றவர்கள் சங்கிலி கறுப்பையும், காசியையும் மாறி மாறி பார்த்தார்கள்..

"ஆமாம்.. இப்போ இவனை என்ன செய்யலாம்" என நந்தியப்பரும், பூசாரியும் ஒரே நேரத்தில் கேட்க..

"இவனை வைத்து தான் நம்ம குமரனுக்கு ஒரு வேலை கொடுக்கப் போறேன்" என்று ஒரு மர்ம புன்னகை சிரித்தார் சங்கில கறுப்பர்.. அதனைப் பார்த்து பெரிய சங்கிலியும் சிரிக்க..
தலைவர், தர்மகர்ர்தா, பூசாரி இவர்களின் முகத்தில் குழப்பத்தோடு அமைதியாக..
"எது செய்தாலும் சங்கிலிகறுப்பு நம்ம ஊரோட நல்லதுக்குத் தான் செய்யும்" என்று பூசாரி அமைதையை உடைக்க..
மற்ற மூவரும் "ஆமாம்" என்றார்கள்..

"சரி.. நீங்கள் ஆலோசனையை தொடருங்க.. நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்" என்று சங்கிலி கறுப்பர் சொல்லியபடி மயக்கமடைந்த காசியை தன் தோளில் தூக்கிக்கொண்டு கோவிலிருந்து சற்றுத் தள்ளி.. வயல்வெளிக்கு வந்து அங்கு ஒரு சிறிய வீட்டை நோக்கி நடந்துப் போனார்..
அங்கு இரு இளைஞர்கள் கையில்
வேல் சொருகியிருந்த சிலம்பத்தோடு காவலுக்கு இருந்தார்கள்..
"கந்தப்பா.. நீ மேற்கு பகுதி காட்டுல காவலுக்கு நில்லு. அங்க நிக்கிற குமரன உடனே இங்க வரச்சொல்லு.. சீக்கிரமா வரனும்.. இந்த குதிரையை எடுத்துட்டுப் போய் குமரனிடம் கொடுத்து அனுப்பு.. இனிமேல் நமக்கு நிறைய வேல இருக்கு.. ம்..சீக்கிரம்" என்று அனுப்பி விட்டு  மயக்கமான காசியை அந்த வீட்டிற்குள் படுக்க வைத்துவிட்டு வந்து ஒரு திண்டின் மீது அமர்ந்தார்..
  சிறிது நேரத்தில் குமரன் குதிரையில் வந்து இறங்கினான்..
"கறுப்பண்ணே.. சொல்லுங்க ஏதும் முக்கியமான வேலையா? அவசரமா வரச்சொன்னீங்களே" என்று கேட்க..

"ஆமாம்.. குமரா.. இனிமேல் தான் நமக்கு வேலையே ஆரம்பம்.. அந்த காசிய மயக்கமடைய வச்சி வீட்டுக்குள்ள படுக்க வச்சிறுக்கேன் நீ என்ன செய்யிற" என சொல்லியபடியே குமரனின் காதில் மெதுவாக ஏதோ சொல்ல..
குமரனின் கண்கள் பிரகாசமாகி "சரிங்கண்ணே" என்று சொல்ல..

"குமரா.. இந்த முத்து வீரனையும் உன்னுடனேயே வைத்துக்கொள்.. கவனம்.. நான் கிளம்புறேன்" என்று இன்னொரு இளைஞனை காட்னி சொல்லிவிட்டு சங்கிலி கறுப்பர் கோவிலை நோக்கி நடந்தார்..

குமரனும், முத்து வீரனும் வீட்டிற்குள் நுழைந்து காசியை ஒரு கயிற்றால் லேசாக கட்டிப்போட்டுவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தனர்..
சிறிது நேரங்கழித்து ஒரு சப்தம் கேட்க..

அப்பொழுது..

(தொடரும்)

திங்கள், 22 அக்டோபர், 2018

முனி

"டேய் காசி உண்மையா தான் சொல்றியாடா.."

"ஆமான்டா.. பரமா .. எங்க தாத்தாக்கூட நிறைய தடவ சொல்லியிருக்காங்க.. எங்க தாத்தாவும் நிறைய தடவ அதுக்கூட பேசியிருக்காங்களாம்..
கும்புட்டுப் போறவங்கள அது ஒன்னும் செய்யாதாம்.. ஆனா அதுக்கு எதாவது தொல்லைக் கொடுக்குறவங்கள சும்மா விடாதாம் டா"

"அடடா.. அப்படியா?"

"ஆமான்டா.. போன மாசங்கூட மாசானத்தோட அப்பா யார் பேச்சையோ கேட்டுகிட்டு கையில அறுவால எடுத்துகிட்டு வெட்றதுக்காக பக்கத்துல போயிருக்காங்க.. மறுநாளு பாத்தா அவரு வாயில் நுரைத்தள்ளி செத்துக் கிடந்தாரு.. பாத்தா அவர் கால்ல பாம்பு கடிச்ச தடம் இருந்துச்சுல..."

"ஆமான்டா.. எங்க அப்பாக்கூட சொல்லிருக்காங்க.. பகல்ல கூட கெட்ட எண்ணத்துல போனா .. போறவங்க நிலமை அதோகதிதான்.. ஆனா நல்ல எண்ணத்தோட ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு...  சரி வா.. நாம அங்க போயி கும்புட்டுட்டு விளையான்டுட்டு வரலாம்" காசி சொல்ல..
"சரிடா வாடாப் போலாம்" என்று பரமாவும் சொல்லியபடி அந்த இரட்டைப் பனை மரங்கள் இருந்த இடத்திற்குச் சென்று இருவரும் விளையாடினார்கள்..
அப்பொழுது யாரோ ஒரு ஆள் கையில் கோடாரியோடு வந்து பனை மரங்களை ஏறயிறங்க பார்த்துக் கொண்டு இருந்தான்..
காசியும், பரமனும் அவனிடம் சென்று விசாரிக்க, அவன் அந்த மரங்களை வெட்ட வந்ததாகச் சொல்ல..
இருவரும் அதிர்ச்சியாகி, அதில் சாமி குடியிரிப்பதாகவும், ஏற்கனவே இரண்டு மூன்று பேர்கள் அங்கே இறந்துவிட்டதாகவும் கூறி வெட்ட வேண்டாம் என்றுச் சொன்னார்கள்..
அவனும் பயந்த மாதிரி திரும்பி போக.. முகம் சற்று கேலி புன்னகையோடு மாறியது..
இருவரும் விளையாடிவிட்டு மாலை இருட்ட ஆரம்பித்ததும் வீட்டிற்குப் போனார்கள்..
இன்னும் சற்று இருட்ட..
அதே கோடாரி மனிதன் வந்தான்..
அவன் முகத்தில் கண்கள் பேராசையில் இருப்பது போல விரிய.. ஒரு மர்ம சிரிப்பு சிரித்தபடியே பனை மரத்தின் அருகே சென்று கோடாரியால் ஓங்கி வெட்ட ஆரம்பித்தான்..
மறுநாள் விடிந்தது..
ஊரே பரபரப்பாகி இரட்டை பனை மரம் இருக்கும் இடத்தை நோக்கி போய்கொண்டிருக்க..
காசியும், பரமனும் ஒன்றும் புரியாமல் ஊர் மக்களோடு சேர்ந்து ஓடினார்கள்..
அங்கே..
பனைமரத்தின் அடியில் மொத நாள் பார்த்த கோடாரி மனிதன் தலையிலும், காது, மூக்கிலும் இரத்தம் வழிந்து காய்ந்துப்போய் செத்துக் கிடந்தான்..
"மரத்த வெட்ட வந்தவன் #முனி அடிச்சி செத்துப் போயிட்டாம்பா" என ஊர் பெரியவர் ஒருவர் பேச..
ஊரே கையெடுத்து அந்த இரண்டு பனைமரங்களையும் பார்த்து கும்பிட்டனர்..
சற்றுத் தள்ளி நான்கைந்து பெரிய அளவு பனம்பழங்கள் விழுந்து கிடந்தன..

விஜயகுமார் வேல்முருகன்

சனி, 20 அக்டோபர், 2018

வேட்டைக்காடு 2

#வேட்டைக்காடு 2

மணிமாறன் ஆவேசம்  அடங்கி தன் முகத்தில் வழிந்த இரத்தத்துளிகளை தன் கைகளால் துடைத்து விட்டு சற்றே இருளான பகுதியை நோக்கி நகர..
பசி வயிற்றைக் கிள்ளியது...
ஊருக்கு ஒதுக்குப்பரமான பகுதி.. வீடுகளும் இல்லை.. ஆள் நடமாட்டமும் இல்லை..
தொடர்ந்து நடக்க எதிர்பட்டது ஒரு சுடுகாடு.. ஏதோ ஒரு உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி சிறிய அளவில் புகை மட்டும் வந்து கொண்டிருந்தது..

உள்ளே நுழைந்த மணிமாறன் அங்கு தெரிந்த வெட்டியான் குடிசை நோக்கி சென்றார்.. குடிசையருகே பனையோலை பாயில் வெட்டியான் முழு போதையில் தூங்கி கொண்டிருந்தது, வீசிய சாராய நாற்றத்தில் தெரிய.. வெட்டியானை எழுப்பி பயனில்லை என்று குடிசைக்குள் நுழைந்து எதையோ தேட.. மண்பாத்திரங்கள் மட்டும் காலியாக இருந்தன..
ஒரு சிறிய மண் குடுவையில் சிறிதளவு நீர் மட்டும் இருக்க அதை குடித்துவிட்டு வெளியே வந்தார்..
சற்றுத் தள்ளி ஒரு புதர் அருகே ஏதோ ஒரு சலசலப்பு சத்தம் கேட்டதும்.. சற்று கவனமாகவும், மெதுவாகவும் அந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து போனார்...
அங்கே..
ஒரு கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது..
அதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்..
திடீரென அவரது முகத்திலும், கண்களிலும் ஒரு கொடுற புன்னகை.்
"ஹஹ்ஹா...ஹா ஹா ஹா ஹா" என சத்தமாக சிரிக்க.. சண்டையிட்டுக் கொண்டிருந்த கீரி நிலைத் தடுமாறி கீழே விழுந்து அலறிய படி ஓடியது.. பாம்பும் மறுபக்கம் ஓட முயல.. திடீரென மணிமாறன் பாய்ந்து பாம்பின் வாலைப் பிடித்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அருகிலிருந்த கல்லறையின் மீது வேகமாக அடிக்க.. "சொத்" என ஒரு சத்தம் .. செத்தது பாம்பு..
மணிமாறனின் முகம் சற்று அகோரமாக மாற.. பாம்பின் தலையை கடித்து துண்டாக்கி போட்டுவிட்டு.. மீதியை மென்று தின்ன ஆரம்பித்தார்..

அப்பொழுது..

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

வியாழன், 18 அக்டோபர், 2018

காத்திருந்த கண்கள் 8

காத்திருந்த கண்கள்.8

  குருநாத பெரியவர், செங்கோடன் உட்பட்ட அனைவருக்கும்  ஒரு யோசனை சொல்லிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில்..

இரண்டு குதிரை வீரர்கள் சங்கிலிபுரத்தில் உள்ள ஊர்த்தலைவர் நந்தியப்பர் வீட்டுக்கு அருகில் வந்து, குதிரையிலிருந்து இறங்கி, வாசலில் நின்று குரல் கொடுக்க, உள்ளிருந்து நந்தியப்பர் வந்தார்..
"அடடே.. வாங்க..வாங்க.. அரண்மனை வீரர்களே.. என்ன இது இந்தப்பக்கம்.. ஏதும் முக்கிய செய்தியா?" என்று கேட்டப்படியே இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று இருக்கைகளில் உட்கார வைத்தார்..
"அய்யா.. ஒரு முக்கிய தகவல்.. சிறைக்காவலின் உயரதிகாரி தங்களிடம் தெரிவிக்க சொன்னார்..  தாங்கள் பிடித்துக்கொடுத்த கைதிகளில் நஞ்சப்பன் என்ற ஒருவன் தப்பி விட்டான்.. அவனைத் தேடும் பணிகள் வேகமாக முடக்கி விடப்பட்டுள்ளது.. அவன் இங்கே வந்தாலும் வரலாம்.. அதானால் தாங்கள் கவனமுடன் இருக்கும்படியும், அப்படி தங்கள் ஊருக்கு வந்தால் தகவல் தரும்படியும் சொல்லிவிட்டு வரச் சொன்னார்கள் அய்யா" என்று அரண்மனை வீரர் சொல்ல..
நந்தியப்பர் கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க..
"சரிங்க ஐயா.. நாங்கள் கிளம்புறோம்" என்று இரண்டு பேர்களும் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்ப.. நந்தியப்பர் அவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு நின்றார்..

அப்பொழுது அவரின் மகன் குமரன் வந்தான்.. 'குமரா.. பெரிய சங்கிலி ஐயாவை உடனே நான் கூப்பிட்டதாகச் சொல்லி அழைச்சிட்டு வா" என்று சொன்னதும், குமரன் கிளம்பி நேராக கோவிலில் உள்ள பயிற்சித் திடலுக்குச் சென்றான்..
அங்கே பெரிய சங்கிலி ஊர் இளவட்ட பிள்ளைகளுக்கு சிலம்பம் சுழற்றியபடி சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்..
இத்தனை பெரிய வயதிலும் , ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்பாக சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்..
நேராக அவரிடம் சென்று குமரன் விவரம் சொல்ல..
உடனே தனது சிலம்பத் தடியை அருகிலிருந்தவனிடம் கொடுத்துவிட்டு தொடரும்படி சொல்லிவிட்டு கிளம்பினார்.. அந்தேரம் பார்த்து சங்கிலி கறுப்பர் எதிரில் வர, அவரையும் அழைத்துக் கொண்டு குமரனோடு வீட்டுக்குச் சென்றார்..

அங்கு.. வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த நந்தியப்பர் , பெரிய சங்கிலியிடம் , அரண்மனை வீரர்கள் சொன்ன தகவலைச் சொல்ல..
"நந்தியப்பரே.. நஞ்சப்பன் தப்பியிருந்தாலும் நம்மூருக்கு உடனே வர வாய்ப்பில்லை.. அப்படி வந்தாலும் நம் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது.. அவன் நிச்சயம் கொள்ளை கும்பல் இருக்கும் இடத்திற்குத் தான் போயிருப்பான்.. " என்று பெரிய சங்கிலி சொல்ல..

"அதைத்தான் நானும் நினைத்தேன் பெரிய சங்கிலியாரே..  நீங்களும், நம்ம சங்கிலி கறுப்பரும் உள்ளவரை நம்மூருக்கு எந்த பாதிப்பும் வர பயப்படுமே.. சரி உங்கள் பயிற்சி பட்டறை எப்படி போகிறது?" நந்தியப்பர் கேட்க..

"இப்பொழுது நம்மூர் பிள்ளைகள் காவல் பயிற்சியில் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.. குமரனும் சிறப்பாக செயல்படுகிறான்.. அந்த காவல் குழுவின் தலைமை பொறுப்பை குமரனுக்கு கொடுக்க இருக்கிறேன்.. இன்றிலிருந்து சங்கிலி கறுப்பனுடன், குமரனும் இரவு காவலுக்குச் செல்வான்.. பல நுணுக்கங்களை சங்கிலி அவனுக்கு கற்றுத் தருவான்..
இன்னொரு முக்கியமான விசயம்.. நம் இளைஞர்களில் சிலரை பகலில் நம்ம ஊரை கண்காணிக்கவும், சிலரை இரவில் கண்காணிக்கவும் என இரண்டு குழுக்களாக பிரித்துவிட்டேன் நந்தியப்பரே.. அதே நேரத்தில் எங்களுக்குத் தெரிந்த சில சித்து விளையாட்டுகளை குமரனுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.." என்று ஒரு சிரிப்போடு சொல்ல..
அந்த சிரிப்பின் அர்த்தத்தை புரிந்தது போல சங்கிலி கறுப்பரும் ரகசிய சிரிப்பு சிரிக்க..
குமரன் இருவரையும் கைகுவித்து கும்பிட்டு, பெரிய சங்கிலியின் கால்களில் விழ.. காம்பீரமாக அவனை எழுப்பி, தன் இடையில் இருந்த பையிலிருந்து திருநீற்றை எடுத்து குமரனுக்குப் பூச..
சங்கிலி கறுப்பர் குமரன் தோளில் தட்டிக் கொடுத்தார்..
நந்தியப்பரும் மகிழ்ச்சியில் குமரனை வாழ்த்தினார்..

"ஆனால்.. நந்தியப்பரே.. இனி நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்..என என் உள்ளுணர்வு அடிக்கடி சொல்கிறது..
இனி முழுப் பொறுப்பும் சங்கிலியிடமும், குமரனிடமே..
நம்மூரிலிருந்தே ஒரு துரோகி எதிரியாகிவிட்டான்..
நம் ஊரின் அனைத்து விபரங்களையும் தெரிந்தவன் நஞ்சப்பன்.. நாளையிலிருந்து சில மாற்றங்களை செய்ய வேண்டும்...
அதற்கு நம்ம தர்மகர்த்தா நீலகண்டரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்..
அதனால் நீங்களும் , நீலகண்டரும் மாலை சூரியன் மறைவிற்குப் பின்பு வெள்ளி முளைக்கும் நேரத்தில் கோவிலுக்கு வாருங்கள்" என்று பெரிய சங்கிலி பேசி முடிக்க..

"சரிங்க.. பெரிய சங்கிலியாரே.. வந்துவிடுகிறேன்" என்று நந்தியப்பர் சொல்ல ..
பெரிய சங்கிலியும், சங்கிலி கறுப்பரும் கிளம்பினார்கள்..

சூரிய மறைவுக்குப் பிறகு..
இருட்ட ஆரம்பிக்க.. வானில் வின்மீன்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தன..
நந்தியப்பர் தன் வீட்டிலிருந்து கிளம்பி தர்மகர்த்தா திருநீலகண்டர் வீட்டை நோக்கி நடக்க..
அவரை ஒரு கருப்பு அங்கி உருவம் பின்தொடர ஆரம்பித்தது..

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்