வியாழன், 20 டிசம்பர், 2018

அலோ நான் கடவுள் பேசுறேன்.

#அலோ_நான்_கடவுள்_பேசுறேன்..

ட்ரிங்..ட்ரீங்..ட்ரிங்..ட்ரீங்..
டொடக்..

"அலோ.. யார் பேசுறது?"

"அலோ.. நான் கடவுள் பேசுறேன்.."

"யாரப்பா அது விளையாடுறது? எங்க இருந்துபா பேசுற?"

"நான் ஏனப்பா விளையாட வேண்டும்..
உன் அருகில் இருந்து தான் பேசுறேன்.. சதா சர்வகாலமும் 'என்னைய கைவிட்டுட்டியே..கைவிட்டுட்டியே கடவுளே'னு புலம்பியது நீதானே அப்பனே.."

"உண்மையிலேயே சாமீ.. நீதான் பேசுறியா?"

"ம்ஹும்.. என்னடா இது.. எனக்கு வந்த சோதனை.. 'எப்பொழுதும் அசையாமல் இருக்கிறாயே.. பேசமாட்டாயா' என்று கேட்பது..
சரி பேசுவோம் என்று பேசினால் அதையும் சந்தேகப்படுவது..
அய்யனே மனித குலத்திற்கே உள்ள இயல்பு தானே..
நீ மட்டும் விதிவிலக்கா என்ன..
உனக்கு சந்தேகம் வந்ததில் தப்பில்லை தான்..
சரி சொல்லு என்ன உனது பிரச்சினை?"

"என்னை ஏன் இப்படி பரதேசியாக்கி திரியவிட்டாய் ஆண்டவா? என்மேல் உனக்கு என்ன கோபம்?"

"ஹாஹாஹ்ஹாஹ்ஹா.. எனக்கா?
உன் மேல் கோபமா? என்னுடைய படைப்பு தானே நீ..
நான் எப்படி உன்மேல் கோபப்பட முடியும்..
உனக்கு சிரமமில்லாத வாழ்வை தானப்பா கொடுத்துள்ளேன்.. "

"எது.. இப்படி பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதையா நான் கேட்டேன்? மற்றவர்கள் எல்லாம் எவ்வளவு சுகபோகமாக வாழ்கிறார்கள்..
நான் மட்டும் ஏன் இப்படி வாழ்கின்றேன்?
எனக்கு ஏன் இந்த வஞ்சனை?"

"அய்யனே.. நானாக கொடுத்தது இல்லையே உன் வாழ்க்கை..
நீயாகா எடுத்துக்கொண்டதல்லவா இது..
அனைவருக்கும் போல் தானே உனக்கும் இரண்டு கை கால்களை கொடுத்தேன்..
நீ உனக்கான வழியில் பயன்படுத்திக் கொண்டதற்கு நான் எப்படி பொறுப்பாக இருக்க முடியும்?..
சரி..
சில கேள்விகளை நான் கேட்கிறேன் பதில் சொல்கிறாயா அப்பனே?"

"கேளுங்க கடவுளே"

"மூன்று வேளையும் உணவு இல்லாமல் சிரம்ப்படுகிறாயா?"

"இல்லையே"

"நாளை என்று தேவைக்கு ஏதேனும் எடுத்து வைக்கிறாயா?"

"இல்லை"

"திருமணம் செய்து பிள்ளைகுட்டிகள் பெற்றெடுத்தாயா?"

"இல்லை"

"மாதாமாதம் வீட்டு வாடகை, மின்கட்டணம், தண்ணீர் கட்டணம், மளிகை கடை பாக்கி, பால் கணக்கு, தவணை முறை கணக்கு என
நடுத்தர வர்க்க குடும்பம் படும்  சிரமங்களை படுகின்றாயா?"

"இல்லவே இல்லையே"

"என்றைக்காவது ஒருநாள் பட்டினியாக எழுந்து, பட்டினியாக தூங்கியது உண்டா?"

"இல்லைங்க கடவுளே"

"மூன்று வேளையும் உணவு உன்னை தேடி வந்துவிடுகிறதா?"

"ஆமாங்க கடவுளே.."

"பிறகு எப்படி நான் உன்னை வஞ்சித்தேன் என்கிறாய்.. இப்பொழுது கூட பார் கால மாற்றத்திற்கு ஏற்றார் போல #போனும்_இயர்போனுமாக #அப்கிரேட் ஆகியுள்ளாய்..
இவ்வளவு செய்தும் நான் உனக்கு எதுவும் செய்யவில்லை என்கிறாயே.. இது எந்த விதத்தில் ஞாயம் சொல்"

"அய்யகோ.. என்னை மன்னித்துவிடு கடவுளே.. மன்னித்துவிடு.. மன்னித்துவிடு" என அந்த இயர்போன் மனிதர் சத்தமிட..

"யோவ்.. நீ கனவுகண்டு உளறி எங்க தூக்கத்தை ஏன்யா கெடுக்குற " என்றார் பக்கத்தில் படுத்திருந்த மற்றொரு யாசகர்..

விஜயகுமார் வேல்முருகன்

புதன், 14 நவம்பர், 2018

தந்தையாறு தண்டி ஓட்டும் டிரைதர்

#தந்தையாறு_தண்டி_ஓட்டும்_டிரைதர்

பால முருகனோட ஃபோன் அடிச்சிது..

"அலோ.. யாரு?"

"ணே.. நா.. தந்தையாறு பேசுறேன்ணே"

"தந்தையாறா? ஏலேய் அப்படினு யாரும் தெரியாதே''

'அய்யோ.. அண்ணே.. தந்தை ஆறு ணே.. தண்டி ஓட்டுறேனே.. டிரைதர்..டிரைதர்.."

"தண்டியா,? டிரைதரா? ஏலேய் யாருடே நீ.. என்னைய ஏண்டா இம்ச பண்ணுற வைடா போன" அப்படினு சொல்லிட்டு போன வச்சிட்டாப்ல..

மறுபடியும் போன் அடிக்க.. மீண்டும் அதே நம்பரு.. மறுபடியும் துண்டிச்சிட்டாப்ல.. இப்படியே நாலஞ்சி தடவ ஆச்சு..

ஒரு அஞ்சி நிமிசம் கழிச்சி மறுபடியும் போனடிக்க.. கடுப்பான பாலா.. ''எவண்டா அவன் காலங்காத்தாலையே டென்சன் ஆக்குறது.. அவனஅஅஅ.." னு சொல்லிகிட்டே போன பார்க்க.. வேற நம்பர் வந்துச்சு..
"அலோ.. யாரு?" கொஞ்சம் சத்தமாக கேட்க..

"தம்பி நாந்தான்.. திஜயகுமார் பேசுறேன்.. ச்சேய்.. விஜயகுமார் பேசுறேம்பா..''

''அட விஜியண்ணே.. சொல்லுங்க ணே?"

"தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தந்தையாறுனு யாராவது போன் செஞ்சாங்களா?"

"ஆமாங்க ணே.. காலங்காத்தாலையே ஒரு இம்சை புடிச்சவன் .. எவன்னு தெரியல டென்சன் ஏத்திபுட்டான்"

"தம்பி நீ சொன்ன அந்த இம்சை புடிச்சவன் வேற யாருமில்ல நம்ம வந்தை ஆறுதான்"

"என்னணே.. சொல்றீங்க?"

"ஆமாப்பா..நம்ம வந்தை ஆறு க்கு என்னாச்சுனு தெரியல.. 'வ' எழுத்து வராம போச்சு அதுக்கு பதிலா 'த' எழுத்த பேசுறான்..
உதாரணத்துக்கு..
வந்தை ஆறு னு சொல்றதுக்குப் பதிலு
தந்தை ஆறு னும், வண்டிக்குப் பதிலு தண்டினு பேச ஆரம்பிச்சிட்டான்..
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி
போலீஸ் ஸ்டேசன்ல இருந்து போன்கால் வந்துச்சு..
என்னைய வரச் சொன்னாங்க..
'என்ன விசயம்?'னு கேட்டேன்
'உங்க தெரிஞ்சவரு ஒருத்தரு ஏதோ மாதிரியா இருக்காரு சீக்கிரம் வாங்க'னு சொல்ல.. நான் அவர்கிட்ட போன கொடுக்க முடியுமானு கேட்க.. அவரும் கொடுக்க.. பேசிட்ட பொறவு தான் தெரியுது அது வந்தை ஆறுனு..
முதல்ல உனக்குப் போட்டிருக்கான்.. நீ எடுக்கல .. பிறகு எனக்கு வந்துச்சு?"

"ஓ.. அப்படியா.. அய்யய்யோ.. இப்ப வந்தை எங்கணே?"

"செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன்ல.. உடனே வா.. என்னானு பாத்துட்டு வந்துடுவோம்" னு சொல்லிபுட்டு போன வச்சிட்டாப்ல..
பாலா அவரோட வண்டிய எடுத்துகிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போக.. விஜயகுமாரும் வந்துட்டாப்ல..

ரெண்டு பேரும் உள்ள போயி ஏட்டுகிட்ட கேக்க.. அவரு இன்ஸ்பெக்டர் அறைய கை காட்டுனாரு..
"வணக்கம் சார்.. நாந்தான் விஜயகுமாரு, இவரு பாலமுருகன் வந்தையாறோட அண்ணன்கள்" னு சொல்ல..
"வணக்கம்.. உக்காருங்க..
விசயம் என்னனா.. நம்ம செங்கல்பட்டு டோல் பக்கத்துல வந்தையாறு பாதி மயக்கத்துல இருக்குறதா தகவல் வந்துச்சு.. நாங்க போய் பாத்து விசாரிச்சதுல உங்கள பத்தி சொன்னாரு அதான் போன் போட்டோம்..
நீங்க பேசிமுடிச்ச கொஞ்ச நேரத்துல  மயக்கம் போட்டுட்டாரு.. அதனால அவர ஜிஎச்சுக்கு அனுப்பியிருக்கோம்..
அங்க ரெண்டு பிசிங்க இருப்பாங்க.. நீங்க அங்கபோயி பாருங்க.. நான் போன் செஞ்சு சொல்லிடுறேன்" னு தன்னோட போன எடுக்க..
விஜயும், பாலாவும் மறுபடியும் வணக்கம் சொல்லிட்டு கிளம்புனாங்க..

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை..
ரெண்டுபேரும் வண்டியை நிப்பாட்டிட்டு..
ஆஸ்பத்திரியோட முதல் தளத்துக்குப் போனாங்க.. வார்ட் நம்பர் 22..
உள்ள நுழையுறதுக்கு முன்னாடி அங்க ரெண்டு போலீஸ்காரவங்க இருந்தாங்க அவங்க கிட்ட விவரம் சொல்ல.. அவங்களே கூட்டிட்டுப் போய் காட்ட.. வந்தை ஆறுக்கு குளுக்கோஸ் ஏத்திகிட்டு இருந்தாங்க..
விஜய், பாலா ரெண்டு பேரையும் பாத்ததும் வந்தை லேசா சிரிச்சாப்ல..
'என்னடா ஆச்சு'னு கேக்கப்போக..

ஒரு போலீஸ்கார் "சார் பயப்படும்படியா ஒன்னுமில்லனு டாக்டர் சொல்லிட்டாங்க.. குளுக்கோஸ் ஏத்தி முடிஞ்சவுடனே கிளம்பிடலாம்னு சொல்லிட்டாங்க.. அதனால இவர உங்ககிட்ட ஒப்படைச்சிட்டு வரச்சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்லிட்டாங்க.. இந்த பேப்பர்ல ரெண்டு பேரும் கையெழுத்து மட்டும் போட்டுடுங்க போதும்.. நாங்க கிளம்புறோம்" னு சொல்ல..
சரின்னு விஜயும்,பாலாவும் தலையாட்ட..
"சரி.. இவரோட விவரங்களை படிக்கிறேன் சரியானு பாருங்க
பெயர் : தந்தை ஆறு" போலீஸ் படிக்க

"சார்.. தந்தை ஆறா.. இவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே சார்.. அதுக்குள்ள தந்தையா ஆகிட்டானா?
இவன் பேரு வந்தை ஆறுங்க சார்" பாலா சொல்ல..

"ஓ.. அவரு அப்படிதாங்க சொன்னாரு.. அடுத்து
வயது : 25
முகவரி : நம்பர் 15,
#தெள்ள#நாதாரிதாக்கும்" போலீஸ்கார் வாசிக்க..

"என்னாது தெள்ளநாதாரி தாக்குமா? சார் .. அது 'வெள்ள நாவாரி வாக்கம்' சார்.. அடுத்து" னு விஜய் அதிர்ச்சியாக..

"#தந்ததாசி_தட்டம்"

"ஊம்"

"#திருதண்ணாமலை_மாதட்டம்" னு போலிஸ்கார் படிச்சி முடிக்க..

"கிழிஞ்சிது லம்பாடி லுங்கி.. அது 'தந்ததாசி தட்டம்' இல்லைங்க சார் #வந்தவாசி_வட்டம்..
அதே போல #திருவண்ணாமலை_மாவட்டம்
'திருதண்ணாமலை மாதட்டமா ஆகிடுச்சு..
இன்னும் என்னென்ன கொடுமைய எல்லாம் சொல்லி வச்சிருக்கானோ அந்த பய" என்று விஜய் சொல்லிவிட்டு அந்த பேப்பர்ல விவரங்களை திருத்தி கையெழுத்துகள் போட போலீஸ்காரர்கள் நகர்ந்தாங்க...

  போலீஸ்காரவங்க போனதும் விஜயும், பாலாவும் வந்தையகிட்ட போக.

"தாங்க ணே" வந்தை சொல்ல.

"என்னடா தரனும்.. அடியா? உதையா?" பாலா கேக்க..

"பாலா.. வாங்கனு கூப்புடுறான் போல..அப்படித்தான வந்தை?" விஜய் கேக்க 'ஆமா' என்பதைப் போல தலையசைத்தான் வந்தை.

"ஓகோ.. அப்படியா.. இனிமேட்டு இந்த இம்சைய வேற தாங்கனுமா?..
அப்போ..சரி..
தந்தோம்..தந்தோம்.. வந்தை.. சொல்லு.. என்னாச்சு?" பாலா கேட்க..

"ணே.. தந்ததாசில இருந்து தண்டி ஓட்டிட்டு தந்தேனா..இங்க டோல்கேட் தாண்டுனப்போ தமிழு அவங்க அப்பாதோட தந்தா"..வந்தை சொல்லிகிட்டு இருந்தப்ப..

" என்னாது தமிழோட அப்பா தோடு மாட்டியிருப்பாரா.. அப்படி மாட்டியிருந்தாலும் அதயேன் தமிழு உன்கிட்ட தந்தா?" பாலா கேக்க

"அய்யோ.. கடவுளே.. இந்த ரெண்டு இம்சையில எத நான் சமாளிப்பேன்..
யோவ் பாலா.. தோடுமில்ல.. கீடுமில்ல.. 'தமிழு அவங்க அப்பாவோட வந்தா' னு சொல்றாப்ல.. ஒரு நிமிசம் குறுக்க குறுக்க பேசாம சும்மாயிருக்கியா.. நீ சொல்றா வந்தை" என விஜய் டென்சனாக..
பாலா ஒரு விரலால வாயமூடிகிட்டு சிரிப்ப அடக்க முடியாம  நின்னாப்ல.

"ஐ.. தமிழு தராளேனு பாக்கலாம்னு, தண்டிய ஓரங்கட்டி நிறுத்தி.. கதத தொறந்து கீழே இறங்கி நடந்தேனா ..
தாழப்பழ தோலு  தழுக்கி தண்டிமேலையே திழுந்திட்டேன்..
லேசான அடி.. தலையில தலி.. மயக்கம் தந்துச்சா படுத்துட்டேன்.. அப்பறம் கண்முழிச்சி பாத்தா காதல் நிலையம்" வந்தை சொல்ல..

"என்னாது.. காதல் நிலையமா??
ஓஓஓஓ.. காவல் நிலையமா?" பாலா வாயை பிளக்க.. விஜய் முறைக்க..
'இனிமேட்டு கேக்க மாட்டேன்.. நீங்களே கேளுங்க'னு சொல்ற மாதிரி ஒரு கையை வாயில வச்சிகிட்டு, இன்னொரு கையால ஆட்டி சைகை செய்தாப்ல..

"இப்ப அவன் சொன்னது உனக்கு புரிஞ்சுதா? இல்லையா?" விஜய் கேட்க..

"நல்லாவே புரிஞ்சதுங்க ணே.. தாழப்பழத்தோலு.. ச்சேய்.. வாழப்பழத் தோல் வழுக்கி, விழுந்து மண்டையில அடி.. அதான.. இவங்கூட இன்னும் பேசிட்டு இருந்தோம் நாமலும் 'வ' வ மறந்துட வேண்டியது தான்'' னு பாலா ..

" ஏம்பா.. வந்தை வந்தவாசிக்கு எதுக்குப்  போன?" விஜய்..

"தமிழையும், அத அப்பாதையும் திட்டுட்டு தர" னு வந்தை சொல்லி முடிச்சதும்..
''அண்ணே.. என்னால சிரிப்ப அடக்க முடியலணே"னு குபீர்னு சிரிச்சிட்டு வாயை மூடிகிட்டே ஒரே ஓட்டமா வெளியே ஓடிட்டாரு பாலா..

"அட கூறுக்கெட்ட குக்கரு.. அதான் வந்தவாசியில ரெண்டு பேரையும் விட்டுட்டு வந்தல.. அப்பறம் எப்படியா அவங்க இங்க வருவாங்க?" விஜய் கேட்க..

"அட ஆமால்ல..
ணே.. தர தழியில எல்லாம் தமிழ் யாபகமா தந்தேனா.. அதான் ..
ஒரு அப்பாதையும், பொண்ணையும் சேர்த்து பாத்ததுடனே என் கண்ணுக்கு அதங்க ரெண்டு பேருமா தெரிஞ்சாங்க போல.. ம்ம்ம்" என்று வந்தை சொல்லி நிறுத்தினான்..

"அடேய்.. பக்கி.. இப்படியே போயிட்டு இருந்து.. ஒரு நாளைக்கி எந்த பொண்ணையாவது தமிழுன்னு நினைச்சி கட்டிபிடிக்க.. அன்னைக்கி ஊரெல்லாம் சேர்ந்து உன்ன மொத்தி எடுக்கப் போறாங்க பாரு" னு விஜய் சொல்லிகிட்டு இருக்கும் போதே டாக்டர் வந்தார்..

"வணக்கம் டாக்டர்.. வந்தை ஆறோட சொந்தக்காரன் நானு.. இவனுக்கு பயப்படும் படியா ஒன்னுமில்லையே"

"இல்ல..இல்ல.. அப்படி ஒன்னுமில்ல.. ஜென்ரல் வீக்னஸ் தான்..சாப்புடாமா வண்டி ஓட்டிட்டு வந்திருக்காரு.. அதனால கீழ விழுந்ததுனால மயக்கமாயிட்டாரு.. வேறொன்னுமில்ல.. குளுக்கோஸ் ஏத்திருக்கேன்.. முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம்" னு டாக்டர் சொன்னார்..

"அப்பறம் இன்னொரு விசயம் டாக்டர்..
இவனுக்கு பேசும் போது 'வ' ங்கிர எழுத்து வராம 'த' னு தான் பேசுறான்.."

"புரியலையே.. எப்படி?"

"அவன்  ஊர் பேர கேளுங்களேன்.." விஜய் சொல்ல

"தம்பி  எந்த ஊரு?" டாக்டர் வந்தைய கேட்க..

"ஊரு தந்ததாசிங்க சார்" வந்தை சொல்லிபுட்டு மண்டைய சொரிஞ்சிகிட்டான்..

"என்னாது தந்த தாசியா? என்ன சார் சொல்றாப்ல?" டாக்டர் விஜய்ட்ட கேக்க

''இத தான் சார் நாஞ்சொன்னேன்..
இப்படி பேசியே இவ்வளவு நேரம் எங்கள கொன்னுபுட்டான்.. இத சரிபடுத்த முடியுமா?"

"ம்ம்ம்.. கீழ விழுந்ததுல எதோ ஒரு நரம்புல பாதிப்பு வந்திருக்கு.. அதனால தான் இந்த எழுத்துப்பிழை.. ஸ்கேன் எடுத்துப் பார்த்தா தெரிஞ்சிடும்.. உடனே ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வந்துடுங்க.. நான் பார்த்துட்டு சொல்லிடுறேன்.." னு டாக்டர் ஒரு சீட்ட எழுதிக்கொடுக்க..

முக்கால் மணி நேரத்துல ஸ்கேன் ரிப்போட்டோட டாக்டர பாக்க விஜயும், பாலாவும் போனாங்க..
டாக்டர் பாத்துபுட்டு "மூளைக்குப் போற லச்சக்கணக்கான குட்டி நரம்புல ஒரு நரம்பு லேசா விலகி இன்னொரு நரம்போட, அதாவது 'வ' நரம்பு போய் 'த' நரம்போட சிக்கிகிச்சு அதனால தான் இந்த தந்தையாறு, தந்ததாசிலாம்" னு டாக்டர் சொன்னாரு..

"அப்போ இத எப்படிங்க சார் குணப்படுத்துறது" பாலா கேட்க..

"ஆபரேசன்லால் செய்ய முடியாது.. அதுவே சரியானா தான் உண்டு.. அதாவது மீண்டும் கீழ விழுந்து லேசா அடிப்படனும்.. அப்பனா சரியாக வாய்ப்பு இருக்கு'' னு டாக்டர்..

" அப்போ அதுவரைக்கும்?" பாலா கேட்க

"இந்த இம்சைய சகிச்சுகிட்டு தான் இருக்கனும் பாலா" விஜய் சொல்ல..

அந்த நேரம் பார்த்து "சா..சுய்யோ..சும்மா" னு ஒரு குரலு என்னாடானு எல்லாரும் திரும்பி பார்க்க..
வந்தை ஆறு ஆஸ்பத்திரி கட்டில்ல இருந்து இறங்குறேன்னு கீழே விழுந்து கட்டில் கம்பியில லேசா இடிச்சி மயக்கமாகிட்டாப்ல..
டாக்டர், விஜய், பாலா மூனு பேரும் வந்தைய நோக்கி ஓடுனாங்க..

அடுத்து என்னாச்சுன்னு.. அப்பறம் பாப்போம்..

விஜயகுமார் வேல்முருகன்

திங்கள், 12 நவம்பர், 2018

காத்திருந்த கண்கள் 13

#காத்திருந்த_கண்கள்_13

காசியை பின்தொடர்ந்து போன இடத்தில் நுழைந்த குகையில் நஞ்சப்பன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்ட குமரனின் முகத்தில் ஒரு சிரிப்பு..

நஞ்சப்பன் யாரிடமோ பேசுவது தெரிந்தது..
மெல்ல மெல்ல சுவரில் ஒட்டியபடியே பின்பக்கம் வந்து முத்து வீரனுக்கு சைகை காட்டி குதிரையை அழைத்துக்கொண்டு சற்று முன்னோக்கி வரச்சொன்னான்..
முத்துவீரன் குதிரையை அழைத்துக்கொண்டு முன்னோக்கி வந்தான்..
நஞ்சப்பனின் பேச்சுக் குரல் தெளிவாக கேட்டது..
"அஞ்சப்பா.. என்னோட நண்பன் காசி சங்கிலிபுரத்தில், சங்கிலி கறுப்பிடம் மாட்டி, பிறகு எப்படியோ தப்பிச்சு வந்துட்டான்..  அவன் அந்த அறையில தான் இருக்குறான்.. கொஞ்சம் அவனை பாத்துக்க.. ஊர் தகவல்கள் அவனுக்கு நிறைய தெரியும்.. நம்ம வேலைக்கி ரொம்ப உதவியா இருப்பான்..
உங்க தலைவர் செங்கோடன சந்திக்க ஏற்பாடு செய்.. அடுத்தக்கட்டமா என்ன செய்யலாம்னு ஆலோசிப்போம்..
இந்த தடவ எப்படியோ காரியம் முடியாம போச்சு.. அடுத்த தடவ நிச்சயம் முடிச்சே ஆகனும்.. சீக்கிரம் தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்" என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே ஏதோ சத்தம் கேட்பது போல இருக்க.. அஞ்சப்பனை பார்த்து 'யாரோ இருக்குறா மாதிரி தெரியுது.. கத்திய கையில தயாரா எடுத்து வச்சிக்க' என்பதை போல சைகையால் சொல்லியபடி அவனும் ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு,
நஞ்சப்பன் பேச்சை நிறுத்தாமல் ஏதேதோ பேசியபடி குமரன் நின்றிருக்கும் இடத்தை நோக்கி வேகமாக வந்து கத்தியை வெட்டுவது போல நீட்ட..
அங்கே..
குதிரை சிப்பி நின்றிருந்தது..
"சேய்.. காட்டு குதிரை.. எப்படியோ இந்த வழியில நுழைஞ்சி வந்திருக்குப் போல..
குதிரையும் நல்லா திடமாத்தான் இருக்கு.. அஞ்சப்பா. இங்க வா.. இந்த குதிரைய கூட்டிப்போய் , மத்த குதிரைங்களோட சேர்த்து நிப்பாட்டி வை .. பழக்கிட்டு நாம பயன்படுத்திக்கலாம்" என்று நஞ்சப்பன் சொல்ல..
"சரிங்க நஞ்சப்பா.. அப்படியே நீங்களும் கூட வாங்க.. தலைவரை இப்பவே சந்திக்க போவோம்" என்று அஞ்சப்பன் சிப்பியை அழைத்துக்கொண்டு செல்ல..

"சரி.. நீ முன்னே போ.. நான் காசியை கூட்டிட்டு வரேன்" என்று நஞ்சப்பன் சொல்லிவிட்டு அந்த குகையின் பக்கவாட்டை நோக்கிப் போனான்..
அவன் நகர்ந்ததும் ஒரு பெரிய தூணின் மறைவிலிருந்து குமரன் வெளிவர.. தூணின் மேற்புறம் இருந்த மரத்தின் தடிமனான வேரிலிருந்து குதித்தான் முத்துவீரன்..
(நஞ்சப்பன் இவர்களை நோக்கி வரும்பொழுதே குதிரையை முன்பக்கமாக தள்ளிவிட்டு முத்துவீரன்,
குமரன் தோளின் மீது ஏறி மேல்பக்கமாக தாவி மரத்தின் வேரை பிடித்துக்கொண்டான்..
குமரன் தூணின் மறைவில் தன் முதுகில் கட்டியிருந்த குதிரை சேணம் மற்றும் கடிவாளம் இவற்றை அங்கே மறைத்து வைத்தபடி ஒளிந்துக்கொண்டான்..)

குமரன் மெதுவாக முன்னோக்கி நகர,
முத்து வீரனும் அவனுடனேச் சென்றான்..
சற்றுத் தள்ளிப் போனதும் அந்த குகையில் நான்கைந்து பாதைகள் தெரிய.. உடனே குமரன் முத்துவீரனை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு திரும்பி பின்புறம் வந்து, அவர்கள் வந்த குகையின் வழியின் சுவற்றில் சின்ன குறியீட்டை வைத்துவிட்டு வந்து, முத்துவீரனோடு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்..

அஞ்சப்பன் குதிரையை ஓட்டிச் சென்ற பாதையிலேயே இருவரும் கவனமாக நடந்தனர்..
நான்கைந்து அறைகளை கடந்துச் செல்கையில்..
ஒரு அறையிலிருந்து நஞ்சப்பனும், காசியும் வெளிவர .. இருவரும் பதுங்கிக்கொண்டனர்..
காசி வேறு உடையில் சென்றுக் கொண்டிருந்தான்..
சில அறைகளை தாண்டிச் சென்றதும் காவல் காக்கும் பணியில் சிலர் இருந்தார்கள்..
அதை கவனித்த
இருவரும் அங்கேயே நின்றுவிட்டார்கள்..
  என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுது சீறுடை அணிந்ம இருவர் ஒரு அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் திரும்ப அவர்கள் உடை மாறி இருந்தது..
திடீரென குமரனுக்கு ஒரு யோசனை
வர, முத்து வீரனை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று அங்கிருந்த சீறுடைகளை மாட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள்..
இப்பொழுது பார்க்க அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலவே தோற்றமளிக்க வேகமாக நடக்க ஆரம்பித்தனர்..
காவலுக்கு இருந்தவர்கள் அவர்களை கவனிக்கவில்லை..
சிறிது நேர நடைக்குப் பின் வெளிச்சம் அதிகமாக இருந்த ஒரு கூடத்திற்குள் நுழைந்தார்கள்..
கூடத்திற்கு வலது பக்கமாக ஒரு சாளரம் (சன்னல்) அதன் வழியாக பார்க்க.. குதிரைகள் கட்டிப் போடப்பட்டுள்ள கொட்டடி..
அங்கே சிப்பி கட்டிப்போடபட்டிருந்தது..
அதற்கு எதிர்பக்கம் இடதுபுறம் சற்றுத்தள்ளி ஒரு அறையில்
ஆட்களின் பேச்சுக் குரல் கேட்டது..

குமரன், முத்துவீரனின் காதில் ஏதோ சொல்ல , அவனும் தலையை ஆட்டியபடி நேராக குதிரை சிப்பி இருந்த கொட்டடி பக்கம் சென்றான்..
பின்பு
குமரன் ஆட்களின் பேச்சுக் குரல் வந்த அறைக்கு அருகில் செல்ல அங்கு ஒருவன் காவலுக்கு நின்றிருந்தான்..
நேராக அவனுக்கு பின்புறமாகச் சென்று, தன் இடுப்பிலிருந்த ஒரு குப்பியிலிருந்து பொடியை எடுத்து அந்த காவலனின் மூக்கருகே சற்றென்று தெளித்துவிட, சில நொடிகளில் அந்த காவலன் நின்றபடியே தூங்க ஆரம்பித்தான்..
அவனை அப்படியே நகர்த்தி ஒரு தூணின் பக்கம் நிற்க வைத்துவிட்டு
காவலன் நின்றிருந்த இடத்தில் நின்றுகொண்டு அந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தான்..
திடீரென்று உள்ளிருந்து ஒருக்குரல் ''மருதப்பா இங்கிருக்கிற தீவட்டி அனைஞ்சிடுச்சு.. சீக்கிரமா வெளியில் இருக்குறத எடுத்து வந்தை பத்த வை" என அந்த குரல் சொன்னதும்,
குமரன் எதிர்புறமிருந்த தீவட்டியை எடுத்துக்கொண்டு தன் முகம் யாருக்கும் சரியாக தெரியாத வண்ணம் சென்று அனைந்திருந்த தீவட்டிகளை பற்ற வைத்தபடி சுற்றிலும் ஓரக்கண்ணால் பார்க்க,
நஞ்சப்பனும், அவனது நண்பன் காசி,
குதிரையோடுச் சென்ற அஞ்சப்பன், மற்றும் தாடி மீசையோடு ஒரு பெரியவரும், வாட்டசாட்டமான மொட்டைத் தலை ஆள் ஒருவனுமாக ஐந்து பேர் இருந்தார்கள்..
அப்படியே கவனித்துக்கொண்டு வந்து வாசலருகே நின்றுக்கொண்டான் ..
உள்ளே அவர்கள் பேச ஆரம்பிக்க மெல்ல மெல்ல குமரனின் முகம் மாற ஆரம்பித்தது..
அந்த ஐவரின் ஆலோசனை முடிந்தது..
ஐவரும் வாசல் வழியாக வெளியே வரும் நேரத்தில் "அய்யோ..நெருப்பு.. நெருப்பு.. குதிரை கொட்டடியில் நெருப்பு   எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க " என்று குரல் வர.. ஐவரோடு சேர்ந்து குமரனும் ஓடினான்..
அங்கே இருந்த அனைவரும், காவலுக்கு இருந்தோரும்  உட்பட குதிரை கொட்டடிக்கு ஓடி வந்து பானைகளில் தண்ணீரை அள்ளி தீயில் ஊற்ற, குமரனும், முத்துவீரனும் குதிரைகளை அவிழ்த்துவிட்டபடி இருவரும் பார்த்து சிரித்துக்கொண்டனர்..
அனைவரும் பரபரப்பாக இயங்க..
குமரன் , முத்து வீரனைப் பார்த்து தலையாட்ட..
இருவரும் மெதுவாக யாருக்கும் தெரியாதபடி குதிரை சிப்பியை அழைத்துக்கொண்டு வந்த பாதையே திரும்ப.. அவர்களை பின்தொடர்ந்து இன்னொரு குதிரையும் வந்தது..
முத்துவீரன் திரும்பி அதனை விரட்ட.. போகாமல் சிப்பியுடனே வந்ததது..
குமரன், முத்துவீரனை தடுத்து "பரவாயில்லை வரட்டும்.. நாம இங்க இருந்துப் போக அது தேவப்படும்" என்று சொல்ல அந்த குதிரையையும் அழைத்துக்கொண்டு திரும்பி குகைக்குள் நுழைந்தார்கள்..

நான்கைந்து பாதைகளை பார்த்துக்கொண்டே வர.. ஒரு பாதையில் குமரன் கொண்டிருந்த குறி தெரிய அந்த வழியே   அங்கிருந்த தீவட்டியில் ஒன்றை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.. ஒரு தூணின் மறைவிலிருந்த குதிரை சேணையையும் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினார்கள்..

குகையை விட்டு வெளியே வந்ததும்,
குதிரை சிப்பியின் மீது கடிவாளத்தை பூட்டிவிட்டு குமரன் அதன் மீது ஏறிக்கொள்ள, மற்றொரு குதிரையில் முத்துவீரன் ஏறி ஊரை நோக்கி விரைந்தார்கள்..

"இது தானங்க ணே நடந்தது " என்று சங்கிலி கறுப்பிடம் குமரன் சொல்லியபடி, காதுக்குள் ரகசியமாக ஏதோ சொல்லச் சொல்ல சங்கிலி கறுப்பின் முகம் மாறி கண்கள் கோவைப்  பழம் போல சிவக்க ஆரம்பித்தது..

(தொடரும்)