செவ்வாய், 21 ஜூன், 2016

திகில் காடு

திகில் காடு..

         1

  தூரத்தில் சுடுகாட்டில் எரிந்துக்கொண்டிருக்கும் பிணத்தின் வாடையும், வெளிச்சமும் அங்கு பரவியிருந்தது..
அந்த சுடுகாட்டிற்கு சற்று தள்ளித்தான் வாழவந்தானின் வயற்காடு..
வயலில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்காக காத்திருந்தன.
விடிந்தால் அறுவடை..
அதுவரை வயலுக்கு காவலாக குருவப்பன் இருக்கிறான்..
கருத்த, நடுத்தர உயரம், நல்ல வாட்ட சாட்டமான ஆளாக இருந்தான்..
கையில் லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு, அதை தூக்கி காட்டி வயலினை அப்பப்ப பார்த்துக்கொண்டு இருந்தான்..

அப்படியே பார்த்துக்கொண்டிருந்த போது,
சுடுகாட்டில் எரியும் பிணம் கண்ணுக்குப்பட்டது..
"ம்ம்.. உயிரோட இருக்கும்போது என்ன ஆட்டம் போட்டான் வட்டிக்கட கோவிந்தன்..
அநியாய வட்டிக்கு விட்டு எத்தன பேரு வயித்தெரிச்சலை கொட்டியிருப்பான்..
இப்ப பக்கத்துல வெட்டியான் கூட இல்லாம அனாத பொணமாட்டோம் எரிஞ்சிகிட்டு இருக்கான்.. எத்தனைப் பேர வட்டிப்பணம் கட்டலைனு அசிங்கமா பேசி தற்கொலை பண்ணிக்க வச்சான்.. படு பாவி..
நேத்து யாரோ அவனோட வட்டிக்காச தரலைனு அவங்க வீட்டு வண்டி மாட்ட ஓட்டிகிட்டு வர வழியில வேகமா வந்த மண்ணு லாரியில அடிப்பட்டு வாய பொழந்துட்டான்.. முந்தநாளு இன்னையாரம் மப்புல இருந்தான்.. இன்னைக்கி பொணமா எரியிறான்.. இது தான் மனுசனோட வாழ்க்க"
என தனக்குத தானே பேசிகிட்டு ஒரு பீடிய எடுத்து பற்ற வைத்து அதன் புகையை நிதானமாக இழுத்து தன் நெஞ்சுக்கூட்டில் பரவ விட்டான்..

அப்பொழுது..

தூரத்தில் எங்கோ நாயோ, நரியோ ஊளையிட .. வானத்தில் அரை நிலாவின் அரைக்குறை வெளிச்சத்தில் அந்த இடமே ஒரு திகில் சூழலை தந்தது...

அந்த நேரத்தில் திடீரென ஒரு கொலுசொலி சத்தத்தை கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தான்..
கண்களுக்கு ஒன்றும் தென்படவில்லை..
லாந்தர் விளக்கை எடுத்து அதை பெரிதாக தூண்டிவிட்டு பார்த்தான்..
அப்பொழுது சற்று தூரத்தில் , ஊரின் எல்லையில் ஒரு பெண் வருவது போல இருந்தது..

'யாராயிருக்கும் .. இன்னியாரத்துல இந்த பொண்ணு இங்க ஏன் வருது.. ஊருக்கு வர கடைசி பஸ்ஸும்  ஒம்போது மணியோட போச்சு.. இது எங்க இருந்து வருது..யாருன்னு தெரியலையே.. சரி வரட்டும் கேப்போம்..' என நினைத்து அந்த பெண் வரும் பாதையையே பாத்திருந்தான்.. சல்..சல்..சல்..சல்.. என மிதமான வேகத்தில் அசால்டாக நடந்து வந்தாள்..

  குருவப்பனை நெருங்குகையில்
"யாருமா அது? இன்னேரத்துல .. யார் நீ? எந்த ஊரு ? இங்க எதுக்கு வந்த?" எனக் கேட்டுக் கொண்டே இருந்த குருவப்பன அந்த பெண் சட்டை செய்யாமல் விருவிரு என நடந்தவள் சுடுகாட்டை நோக்கி நடந்தாள்..
"ஏய்..யாரும்மான்னு கேக்குறேன் நீப்பாட்டுக்கு போய்கிட்டே இருக்க.. நில்லுமா" என கத்திக்கொண்டே அந்த பெண்ணின் பின்னால் சென்று கேட்டு, தன் கையிலிருந்த மூங்கில் தடியால் அந்த பெண்ணைத் தடுக்க,
"என்ன விடுடாஆஆ" என மூன்று பெண்குரல்கள் ஒன்றாக இணைந்து பேசுவது போல ஒரு பயங்கரமான குரல்..

அதிர்ந்தே விட்டான் குருவப்பன்..
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து..
மறுபடியும் " நீ யாரு, எதுக்கு வந்திருக்க, ஒழுங்கு மரியாதையா சொல்லிடு.. இல்ல ...
இந்த வேல் கம்பாலையே உன்ன குத்திடுவேன் "என சொல்லி கம்பை ஓங்க..

அந்த பெண் திரும்பாமலேயே அந்தக்கம்பை பிடித்து " ஹாஹ்ஹாஹாஹாஹா" என பயங்கரமாக சிரித்து கம்பை வேகமாக இழுத்தாள்.. குருவப்பன் நிலைத்தடுமாறி அப்பெண்ணின் மேல் இடிக்கப்பபோக, திடீரென அவள் திரும்பி பார்க்க முகம் கர்ணகொடூரமாக இருந்தது..

குருவப்பனின் இதயமே நின்று விடும் அளவிற்கு அதிர்ச்சியில் பயந்துவிட்டான். பின்பு அவனை ஓங்கி ஒரு அடி கிட்டத்தட்ட முப்பது அடிகள் தூரத்திற்கு தள்ளிபோய் விழுந்தான்..
விழுந்தவன் சற்றுத் தலையை தூக்கிப் பார்த்த பொழுது.. அந்த பெண் சுடுகாட்டை நோக்கி செல்வது அவனுக்கு மங்கலாக தெரிந்தது..
'அய்யோ நம்ம ஊருக்கு ஏதோ ஆபத்து வந்திடுச்சு..ஊர் சனங்க என்ன பாடு படப்போறங்களோ' என்று அவன் தலை மண்ணில் சாய்ந்தது..

சுடுகாட்டை நோக்கி வேகமாக நடந்த அந்த பெண் சில நொடி பொழுதினில் சுடுகாட்டு எரிமேடையை அடைந்தாள்..
அடுத்து அவள் செய்த செயல்தான் நெஞ்சையே பதற செய்தது..
எரிந்துக் கொண்டிருந்த வட்டிக்கட கோவிந்தனின் பிணத்தை இழுத்து நெருப்போடு பிய்த்து தின்ன ஆரம்பித்தாள்.

திடீரென
அப்பொழுது....

(தொடரும்)

விஜயகுமார் வேல்முருகன்

ஞாயிறு, 19 ஜூன், 2016

பண்ணையாரும் தலயும்

பண்ணையாரும் தலயும்
~~~~~~~~~~~~~~~~~
பண்ணையார்::
யாருங்க அது வீட்ல?

தல மனைவி:
அடடே! பண்ணையார் அண்ணவா..
வாங்கண்ணே..வாங்க..வாங்க..

பண்ணை:
எங்க மா தல?

த.மனைவி:
அவங்க சாப்டுட்டு இருக்காங்கணே..
நீங்க உள்ள வாங்க..
(உள்ளே திரும்பி)
என்னாங்க .. பண்ணையாரண்ணே வந்திருக்காங்க..
உக்காருங்கண்ணே நான் போயி காப்பி போட்டு எடுத்து வரேன்..

தல:
(சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கிக்கொண்டு ஓடி வந்து..)
வாங்க..வாங்க .. பண்ணையார்.
என்ன இம்புட்டுத் தூரம்..
சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன்ல..
வாங்க..சாப்பிடலாம்..
(உள்ளே திரும்பி)
ஏம்மா.. ஒரு வாழையிலைய அருத்துகிட்டு வா..

பண்ணையார்:
இல்ல..இல்ல.. தல இப்ப தான் டிபன் சாப்டுட்டு வரேன்.. எனக்கு காபியே போதும்..தங்கச்சி காபி போட போயிருக்கு.. ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன்..அதான், அப்படியே உங்கள பாத்துட்டுப் போலாமேனு வந்தேன்..(அப்படியே தலயையும் அவர் தட்டையும் பார்த்துட்டு ' கொஞ்சம் நேரம் இவர கலாய்ச்சா என்ன'என்று நினைத்துக்கொண்டு)
ஆமாம்.. தல இப்ப என்ன சாப்புடுறீங்க?

தல:
இட்லியும், தக்காளி சட்னியும்..

பண்ணையார்: ('அடப் பாவமே இத இட்லினு சொன்னா சட்னியும் நம்பாதே, இப்படியா பிணைஞ்சி சாப்டுவான் மனுசன்' என மனசுக்குள்ள நினைச்சிகிட்டு..)
சரி.. நேத்து நைட்டு என்ன சாப்டீங்க?

தல:
சப்பாத்தியும் , தக்காளி சட்னியும்..

பண்ணையார்:
அப்போ நேத்து மத்தியானம்?

தல:
சாப்பாடும், தக்காளி சட்னியும்..

பண்ணையார்:
ம்ம்ம்..நேத்து காலையில என்ன?

தல:
தோசையும், தக்காளி சட்னியும்..
(என்று சொல்லி விட்டு  தல தலைய தூக்காம இட்லிய த.சட்னியில கொழப்பி ஃபுல் கட்டு கட்டிகிட்டு இருந்தார்)

பண்ணையார்:
(சற்று கடுப்பாகி கோபமாக)
யோவ்.! தல என்ன விளையாடுறீரா?
எப்ப கேட்டாலும் தக்காளி சட்னி,சட்னி,சட்னி.. என்னைய பாக்க எப்படி தெரியுது?

தல:
(பதறியபடி)..
அய்யய்யோ.. பண்ணையாரய்யா அப்படிலாம் இல்லீங்கோ.. உள்ளத தான் சொல்றேன்.. கோவப்படாதீங்க.. நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கனா உங்களுக்கே புரியும் என் வேதன.. சொல்லட்டுங்களா..

பண்ணையார்:
ம்ம்..சொல்லுங்க..(என்று தன் கண்ணாடியை கழட்டி துடைத்து மாட்டிக்கொண்டார்)

தல:
அந்த வயித்தெரிச்சல  ஏங்கேக்குறீங்க..
போன மாசம் நம்ம மாஸ்டர் வீட்ல ஒரு வீசேசம்னு நம்ம வீட்டுக்கு வந்து கூப்டாங்க..
சரின்னு.. நானும் எம்மனைவியும் அவங்க வீட்டுக்குப் போனோமா..
அங்க வீசேசம்லாம் முடிஞ்சி திரும்புறதுக்கு முன்னாடி நான் மாஸ்டர்ட்ட பேசிகிட்டு இருக்கும்போது  இவங்க 'மாஸ்டர் வீட்டம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடுறேங்க'னு உள்ள போனவங்க..
அஞ்சி நிமிசம் ஆச்சு ஆள் வரல,
பத்து நிமிசம் ஆச்சு, பதினஞ்சி நிமிசமா...

பண்ணையார்:
(மறுபடியும் கடுப்பாகி)
யோவ்..எவ்ளோ நேரந்தான் ஆச்சு?

தல:
ஒரு அர மணி நேரம் ஆச்சுங்க..

பண்ணையார்:
இத மொதல்லையே சொல்ல வேண்டியது தான.. சஸ்பென்ஸ் வக்கிறாராம் சஸ்பென்ஸ்..
ஒழுங்கா சொல்லும்..

தல:
  சரிங்கய்யா இனிமே ஒழுங்கா சொல்லிடுறேங்க..
அர மணி நேரமாச்சே ஆளக்காணோமேன்னு நானும் மாஸ்டரும் அவங்க வீட்டுக்குள்ள போனா...
அங்க ஒரு ஆளு ஒசரத்துக்கு ஒரு ஃபிரிட்ஜ் அது பக்கத்துல நின்னுகிட்டு யேவீட்டமாவும், மாஸ்டர் வீட்டம்மாவும் அந்த ஃபிரிட்ஜ் பத்தி பேசிகிட்டு இருந்தாங்க..
அப்பறம்.. நான் யேவீட்டம்மாவ கூப்டுகிட்டு வீட்டுக்கு வந்தேனா..
வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த ஃபிரிட்ஜ்ஜ பத்தி தான் ஒரே புராணம்..
'அது அப்படி, இது இப்படி'னு தொனத்தொனனு(இங்க குரல குறைச்சி சொன்னாரு)
போட்டு கொடஞ்சி எடுத்துட்டாங்க. அப்பறம்
'ஒரு ஃபிரிட்ஜ்ஜ வாங்கி கொடுங்க'னு நச்சரிச்சதுல, நான் நேரா
நம்ம ஈகே வ பார்க்க.. அவர் அவருடைய
நண்பர் கடைக்கு நம்மல கூட்டிகிட்டு போயி  ஒரு ஃபிரிஜ்ஜ அதாவது மாஸ்டர் வீட்ல இருந்த அதே ஒசரம், அதே நிறம்னு பாத்து வாங்கிட்டு வந்தாச்சு..

பண்ணையார்:
சரி..
நீங்க சாப்ட தக்காளி சட்னிக்கும், இந்த கதைக்கும் என்ன சம்மந்தம்..

தல:
அந்தக்கொடுமைய ஏன் கேக்குறீங்க சம்மந்தம் இருக்கேஏஏ..
ஃபிரிஜ் வந்த மறு நாள்ல  இருந்து வாரத்துக்கு ஒரு முறை தான் கொழம்பே வைக்கிறாங்க..
இப்ப மூனு நாளா இந்த தக்காளி சட்னி தான் ஓடுது..

பண்ணையார்:
அடப்பாவமே..!

தல:
இதாவது பறாவாயில்ல போன வாரம் ஃபுல்லா ரசம் ஓடுச்சுங்கோ..

பண்ணையார்:
ச்சுச்சுச்சு.. அய்யோ பாவமே.. இது ரொம்ப கொடுமடா சாமி..
நல்ல்ல்ல வேள தல.. நீங்க சொன்னதுனால நா தப்பிச்சேன்..

தல:
ங்ஙே.. நீங்க தப்பிச்சீங்களா?
ஒன்னும் புரியலையே..!

பண்ணையார்:
  ஒன்னுமில்ல...
நம்ம வீட்லயும் பண்ணையாரம்மா ஒரு ஃபிரிட்ஜ் வாங்கனும்னு சொன்னாங்க..
சரின்னு.. உங்கள பாத்து பேசி கூட்டிட்டு போலாம்னு வந்தாஆஆஆ..
நீங்க என்னடானா இப்படி சொல்றீங்க..
நல்ல வேள சொன்னீங்க..
இல்லனா நம்ம சுகரு பாடி தாங்காதுங்க..(என்று சொல்லிகிட்டு இருக்கும்போதே ஃபோன் பாடியது)
ஹலோ.. ஆ.. சொல்லுமா.. நான் இப்ப தல வீட்ல தான் இருக்கேன்.. ம்ம்..
சொன்னேமா.. அவர் பிரண்டு தான் கடை வச்சிறுக்காராம்.. ஆனா இப்ப அவரு ஊர்ல இல்லையாம் வர ஒரு மாசம் ஆகுமாம்.. அதானால அவரு வந்தவுடனே வாங்கிக்கலாம்னு சொன்னார்மா..ம்ம்..ம்ம்.. ஆமா..ஆமா..
தலயே தான் சொன்னாரு.. சரிமா..
நான் வச்சிடுறேன்..

தல:
(ஒன்னு பேசமா தேமேனு பண்ணையாரையே முழிச்சி.. முழிச்சி பாத்துகிட்டு இருந்தார். தல மனைவி காபி எடுத்துகிட்டு வந்தாங்க).

தல மனைவி:
  இந்தாங்கண்ணே.. காபி எடுத்துக்குங்க.. அண்ணி குழந்தை எல்லாம் எப்படி இருக்காங்க கேட்டதா சொல்லுங்க..

பண்ணையார்:
   ம்ம்ம்.. எல்லாம் நல்லாயிருக்காங்கமா..
போனதும் சொல்றேன்..
அடுத்த வாரம் பையன் பிறந்த நாளு வருது.. புள்ளைங்கள கூப்டுட்டு வாங்க மா.. என்ன தல சரியா?
சரி மா .. நான் கிளம்புறேன்.. தோட்டத்துல  கொஞ்சம் வேலை இருக்கு..
(தலய பார்த்து) அனுபவி ராஜா அனுபவி (என பாடிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் ஃபோன்) ஆஆ..சொல்லுமா.. இல்ல..இல்ல
நான் நம்ம தோட்டத்துக்குப் போயிட்டு அப்படியே மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுறேன்.. சரி.. மத்தியானம் என்ன பதார்த்தம்.. (திடீர்னு அதிர்ச்சியாக)
என்னாது தக்காளி சூப்பும், தக்காளி சட்னியுமாஆஆஆஆஆஆஆ..

பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருந்த தல இப்ப பண்ணையார பார்த்து கிகிகிகி இளிக்க ச்சேய்.. சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு..

திங்கள், 13 ஜூன், 2016

கிட்டு மாமாவும் வரது குட்டியும்

கிட்டு மாமாவும் வரது குட்டியும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

கி்ட்டு மாமா:
தனனானணே.. தன்ன தனனானணே...

வரதுகுட்டி :
அடடே.. வாங்க 'பிட்டு'மாமா..

கிட்டு:
(அதிர்ச்சியாக) என்னடா வரதுகுட்டி..

வரது:
ஓ.. சாரி மாமா.. டங்கு சிலிப்பாயிடித்து.. வாங்க கிட்டு மாமா..
என்ன... காலையிலேயே பாட்டு பாடிண்டு குசியா இருக்கேள்.. மாமி இன்னைக்கி உங்கள துணி தோய்க்க வேண்டாம்னு சொல்லிட்டாளா..

கிட்டு:
ஓ.. அதுவாஆஆ.. ஒங்க மாமி பேஷா ஒரு காப்பி போட்டு தந்தா அது நாக்குலயே ஒட்டிண்டதுடா அம்பி..

வரது:
என்ன.. மாமி காபியில பாலுக்கு பதிலா பெவிகால் கலந்துண்ட்டாளா?

கிட்டு:
அதில்லடா.. அதோட ருசி நாக்குலயே ஒட்டிண்டு சொன்னேன்..
(என்றபடியே நெத்திய தடவினார் மாமா)

வரது:
அச்சச்சோ.. என்ன மாமா நெத்தியில கிரிக்கெட் பந்த போல ஒரு வீக்கம்?

கிட்டு:
அது ஒன்னுமில்லடா வரதுகுட்டி..
நேத்து சேப்பாக்கத்துல ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடந்துச்சுல்லயோ,
அதுக்கு போயிருந்தேனா.. அப்ப ஆகாசத்துல கருடபகவான் வந்துட்டார்.
அவர அன்னாந்து பார்த்து சேவிச்சிட்டிருந்தேனோ (கும்புட்டுகிட்டு)
அப்ப.. நம்ம டோனி படவா எலிக்காப்டர் ஸ்டைல்ல ஒரு சிக்சர் உட்டான்.. அத நா கவனிக்கல.. நேரா வந்து நெத்தியிலேயே ஒரு பன்ச் பந்தாட்டம் வீங்கிடுச்சுடா..

வரது:
ஏங்கானும் மாமா ரீல் சுத்துரீர் .. இந்த தடவ ஐபிஎல் ல சென்னை டீமே கிடையாதேன்னோ..
அதுவுமில்லாம சென்னையில கிரிக்கெட் மேட்சே நடக்கலையோன்னோ..
எனக்கென்னமோ,
நேத்து நீங்க வச்ச வெங்காய சாம்பார்ல உப்பு அதிகமாயிடுத்துனு மாமி பித்தளை சொம்ப எடுத்து அடிச்சதுல வந்த வீக்கம் போல தெரியுது ..
உண்மைய சொல்லுங்க மாமா...

கிட்டு:
(போன் வந்த மாதிரி பவலா காட்டி) ஹலோ! சங்கரய்யரா.. ஓ.. இதோ ஒங்காத்துக்கு தான்.. வந்துண்டு இருக்கேன்..(என நழுவினார் மாமா)

வரது:
உண்மைய சொன்னவுடனே..
வராத போன வந்தமாதிரி பாவ்லா காட்டிட்டு எஸ்கேப் ஆகுறீரா..
போங்க.. போங்க.. ஆத்துல காயப்போட்டுருந்த வடாம்ல நாலஞ்ச காணோம்னு மாமி கையில பூரிக்கட்டையோட காத்திண்டு இருக்கா..