திங்கள், 6 ஜூலை, 2020

புத்தகத்த படிக்கிறதுனால என்ன பிரயோசனம்?

"ஏலேய்.. கொமாரு..எப்ப பாரு எதையாவது படிச்சிகிட்டே இருக்கியே.. அப்படி என்ன தான்டா இருக்கு புத்தகத்துல?"

"நிறைய இருக்குடா கோபாலு.. புத்தகத்துல"

"புத்தகத்த படிக்கிறதுனால என்னடா பிரயோசனம்?"

"நமக்கு நிறைய அனுபவம் கிடைக்கும் டா .. கோபாலு"

"ம்க்கும்.. போடா.. அந்த அனுபவத்த வச்சி ஆபாயில் வாங்க முடியுமாடா.. அதனால வேற எதாவது உருப்படியா கிடைச்சாக்கூட பரவால்ல..
டைம வேஸ்ட் செஞ்சிகிட்டு.. "

'இவனக்கு எப்படி விளங்க வைக்கிறது' னு கொமாரு நினைச்சிகிட்டு வரும்போது ஒரு நாய் அவங்க ரெண்டு பேரையும் பார்த்து "கொர்ர்ர்" னு உறும ஆரம்பிச்சது..
கோபாலு சும்மாயில்லாம அதபாத்து "ச்சேய் ஓடு" னு அதட்டுற மாதிரி குரல கொடுக்க.. 
அந்த நாயி வெறி புடிச்சா மாதிரி இன்னும் கொஞ்சம் சத்தமா உறுமிகிட்டே அவங்கள வெரட்ட..
"அய்யய்யோ" னு ரெண்டு பேரும் கத்திகிட்டு ஓடுனானுங்க..

ஒடிகிட்டே இருக்கும் போது கொமாருக்கு ஏதோ ஒரு யோசன மண்டைக்குள்ள விளக்கப்போல எரிய..
திடீர்னு அவன் "ஓஓஓஓ" னு அடித்தொண்டை கிழியிறமாதிரி கர்ணகொடூரமா அலற..
கொமாரு அலறுறத பாத்து கோவாலு கதற..
இவிங்க ரெண்டு பேரோட அலறல், கதறல பாத்து விரட்டிட்டு வந்த நாயி பதறி 'வள்..வள்..ஒய்ங்..ஒய்ங்..' னு கத்திகிட்டு அது தலைதெறிக்க திரும்ப ஒட ஆரம்பிச்சது..

ரெண்டு பேரும்  "அப்பாடா .. நாயி ஓடிடுச்சுடா சாமீ" னு ஒரு மரத்துக்கு கீழ நின்னு மூச்சு விட ஆரம்பிச்சாங்க..

"ஏன்டா கொமாரு கத்துன? நாய் கடிச்சிடுச்சா?"

"இல்லையே.. ஆமா.. நீ ஏன் கத்துன?"

"நீ கத்துனத பாத்து பயந்து கத்திபுட்டேன் டா"

"ம்ம்ம்...புக்கு படிக்கிறத பத்தி நீ கேட்ட கேள்விக்கு இவ்ளோ சீக்கிரம் பதில் கிடைக்கும்னு நான் நினைச்சிக்கூட பாக்கலடா கோபாலு"

"நான் கேட்டதுக்கும்.. இப்ப நடந்ததுக்கும் என்னடா சம்மந்தம்?"

"இருக்கே.. சம்மந்தம் இருக்கே.. 
முன்ன ஒரு தடவ ஒரு புத்தகத்துல படிச்சேன்..  சில நாய்களோட குணம் எப்படினா.. அது மொதல்ல சவுண்டு விடும்.. அதுக்கு எதிரான நாயி ஓட ஆரம்பிச்சிடுச்சுனா இது இன்னும் கொஞ்சம் அதிகமா சவுண்டு கொடுத்து விரட்டிட்டு ஓடும்..
அதுவே இந்த நாய் சவுண்டோட எதிரி நாய் சவுண்டு அதிகமா இருந்தா இவரு பம்மிகிட்டே ஓடுவாரு..
அதே போல இன்னொன்னு என்னனா.. இந்த நாய் கத்திகிட்டே விரட்டும் போது அந்த நாய் ஆவேசமா ஆகி, ஓடுறத நிப்பாட்டிட்டு திரும்ப நின்னு பயங்கர சத்தமா கத்துனா  விரட்டுற நாயி அலறிகிட்டு ஓடிடும்னு படிச்சேன்..
படிச்சத பிராக்டிக்கலா செஞ்சி பத்தா எப்படினு தோனுச்சு.. 
செஞ்சோம்..
இதோ ரிசல்ட் கிடைச்சிடுச்சு.. அவ்ளோ தான்.. இதுதான் அனுபவம் கோபாலு.."

"ஆகா..சூப்பர் டா கொமாரே.. "

"இன்னும் இதுபோல நிறைய விசயங்கள் புத்தகங்கள படிக்கிறதுனால தெரிஞ்சிக்கலாம் கோபாலு..
இப்ப சொல்லு புத்தகம் படிக்கிறதுனால டைம் வேஸ்ட்டா?"

"இல்லவே இல்லடா கொமாரே.. இனிமே நானும் சும்மா இருக்குறப்ப புத்தகத்த படிக்கிறேன்டா.. உன்கிட்ட வேற ஏதாவது புத்தகம் இருக்காடா?"

"ம்ம்.. நிறைய இருக்கே.. வீட்டுல.. வா தரேன்" னு சொல்லிஎட்டு கொமாரு கோபாலோட தோளுல கையைப் போட்டு கூட்டிட்டுப் போனான்.

விஜயகுமார் வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக